Thursday, January 21, 2016

அப்பாவின் வீடு!!!
அப்பாவின் வீடு!!!
(படம் உதவி கூகுள்)

வருடம் ஒருமுறை, அல்லது இருமுறை
நான்கு அல்லது ஐந்து நாட்கள் திறக்கும்
இந்த அழகான அப்பாவின் வீடு - எங்களின்
கருவறைக்கோயில்

80களின் தொடக்கத்தில் வீட்டுக்கு குடிவந்தபோது
முதன்முதலாய் ஊரில் கட்டப்பட்ட டெரஸ் வீடு
கட்டி முடிக்கப்படாத புறா கூண்டு - நாங்கள்
இறக்கை முளைக்காத குஞ்சுகள்.

கோணி சாக்குப்பைகளால் மூடிய சன்னல்கள்
பழைய பலகைகள் சாய்த்து மறைக்கப்பட்ட கதவுகள்
சிமெண்ட் பூசி மெழுகப்படாத செங்கல் சுவர்கள் - பழைய
புடவை சுற்றப்பட்ட தற்காலிக குளியலறை

முதலில் அடித்தளம் போட்டு ஆறு மாதம்
அடுத்து சுவர் எழுப்பி ஐந்து மாதம்
பின்னர் நெலவுகள் வைத்து நான்கு மாதம் - என
கடைசிவரை விட்டு விட்டு கட்டிய மாட மாளிகை

வைப்பு நிதி லோனில் தொடங்கிய அடித்தளம்
சிக்கன குடும்ப பட்ஜெட்டில் நிற்கும் பில்லர்கள்
குருவி சேமிப்பில் வளர்ந்த மொத்த சுவருகள் - அன்பு
அம்மாவின் நகைகளில் கழிந்த கிரகப்பிரவேசம்

குழந்தைகளாய் வீட்டுக்குப்போய்
படித்து, பட்டம்பெற்று, காசு பார்த்து
கல்யாணம் செய்து, சந்தோஷமாய் - வாரிசுகளாய்
பேரன்களை கண்ட ராசியான அப்பாவின் வீடு

ரோட்டோரத்து வீடு என்பதால்...
ஊரார் எப்போதும் நலம் விசாரிப்பார்கள்
சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்துப்போவார்கள்
பெரியவர்கள் திண்ணையில் கதைப்பேசி செல்வார்கள் - அலுக்காமல்
அம்மா காப்பி, தண்ணி கொடுத்தே அசதியாவார்கள்

வார இறுதி நாட்களில்...
சிறிய தங்கை பாட்டு பாட
இரட்டையன் கட்டையில் தாளம் போட
பெரியண்ணன் குதித்து ஆட்டம்போட - ஊரின்
ஓரப்பார்வை ஏக்கத்துடன் வீட்டை கடக்கும்

அப்பா கதைகள் சொல்வார்
அப்பா பாடல்கள் இசைப்பார்
அப்பா பாடம் நடத்துவார்
அப்பா சிரிக்கவைத்து மகிழ்விப்பார்
அப்பா சமைத்து சுடச்சுட பரிமாறுவார்
அப்பா ஓவியங்கள் வரைந்து அசத்துவார் - ஆனாலும்
அப்பா எங்களை அடித்ததே இல்லை அவரின் இந்த வீட்டில்

அப்பாவிடம் மீன்கள் கேட்டால்.., தூண்டில் வாங்கி தருவார்
அப்பாவிடம் காசு கேட்டால்.., செலவழிப்பதையும் கற்றுத்தருவார்
அப்பாவிடம் விவாதம் செய்தால்.., விவரமாய் பதிலளிப்பார் - என்றும்
அப்பாவிடம் அறிவுரை கேட்டால்.., வாழ்க்கை விளங்கும்

பிள்ளைகள் நாங்கள் ஊர் கடந்து உழைக்கப்போக
கடமைகள் ஒருவகையில் முடிந்துப்போனதால்
அப்பா ஒரு நாள் சட்டென்று கண்ணை மூட - ஆளின்றி
காலியானது அப்பாவின் அன்பு வீடு

சிக்கனமாய வாழ்ந்திருக்கிறோம்.., பட்டினிக்கிடந்ததில்லை
சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கிறோம்.., சண்டைகள் போட்டதில்லை
இடப்பற்றாகுறையில் சிக்கியிருக்கிறோம்.., நிம்மதியான உறக்கம் உண்டு
மருமகனும், மூன்று மருமகள்களும் கண்டிருக்கிறோம் - இன்னும்
அன்புக்குறையவில்லை, பண்பும் மாறவில்லை

அப்பாவின் ஆசையில் பிறந்த வீடு
அப்பாவின் உழைப்பில் வளர்ந்த வீடு
அப்பாவின் உதிரத்தில் கலந்த வீடு
அப்பாவின் வியர்வையில் நனைந்த வீடு - என்றும்
அப்பாவின் ஆசியில் நிலைக்கும் வீடு

வீட்டில் தொங்கும் புகைப்படங்கள் அப்பாவின் கதை சொல்லும்
அப்பா உட்காரும் நாற்காலி அவருக்காக காத்திக்கிடக்கும்
அப்பா உறங்கிய கட்டில் எங்களை அரவணைத்து தவழும் - இங்கே
பூஜை அறை மட்டுமல்லாது மொத்த அறைகளிலும் அப்பாவேதான்

வருடம் ஒருமுறை, வீட்டைப்பூட்டி புறப்படும்போது
போட்டோவில் அப்பா மட்டும் சிரித்தப்படி இருப்பார்
எங்களை ஆசீர்வத்தித்து வழி அனுப்புவார்
நினைவுகளை சுமந்தப்படி அப்பாவின் வீடு அமைதியாய் இருக்கும் - இனி
அடுத்த ஆண்டு விடுமுறை தினத்தில் எங்களை வரவேற்க காத்துக்கிடக்கும்!!!

No comments:

Post a Comment