Thursday, January 21, 2016

சீரியஸா படிங்க...இதுதான் சங்கதி!!!சீரியஸா படிங்க...இதுதான் சங்கதி!!!

ரொம்ப நாளுக்கு முன்னாடி நம்ம ஊர் பருத்தி விதை இருந்துச்சி.

அமெரிக்காக்காரன் கொடுத்த இலவச மரபணு பருத்தி விதையை வாங்கி விளச்சவனுக்கு முதல் மூன்று முறை இலவசமாய் அவன் விதையை கொடுத்தான் வெள்ளையன். மகசூலும் நல்லா வந்தது.

இரண்டாம், மூன்றாம் முறை கொஞ்சமா காசு வாங்கினான் வெள்ளையன். அடுத்த முறை அதிக காசு கேட்டான், இவன் விதையை பயன் படுத்தியதால் நிலமும் மலடாகி உற்பத்தியும் குறைந்தது. பாரம்பர்ய பருத்தி போய் கலப்பு மரபணு பருத்தி வந்தது. மரபணு பருத்தியின் மகசூலும் குறைந்தது. ஏமாந்தான் விவசாயி.

அடுத்ததாய்...

நாட்டுக்கோழிகளுக்கு பதிலாக பிராய்லர் கோழிப்பண்ணைகள் தொடங்க காசு கொடுத்தான். உடம்புக்கும், சத்துக்கும் உதவாத பிராய்லர், வெறும் கொலஸ்ட்ரால் சதை கோழிகளை சாப்பிட்டு நம் உடலும் வீணானது. அதன் கருவில்லாத முட்டையும் உடலில் சேர்ந்து கொழுப்பானது.

நாட்டுக்கோழியினம் அழிந்தே போனது, நாட்டுக்கோழி முட்டையும் காஸ்ட்லியாகிப்போனது, கிடைப்பதும் அரிதானது.

இதையும் அடுத்து...

வீட்டு, நாட்டு நாய்களை அழிக்க என்ன செய்தான் தெரியுமா?

டாபர்மேன், பொமரேனியன்,அப்பென்பின்ச்சர்,அமெரிக்கன் புல் டாக், ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட், பாக்ஸர் இப்படி பலவகை நாய்களை கொண்டுவந்து இந்திய நாட்டு நாய்களுடன் இணையவைத்து மெது மெதுவாக நம் நாட்டு நாய்களான ராஜபாளையம், கொம்பை, சிப்பி பாரை வகை நாய்களை அழித்தான்.

வெறும் அழகுக்காகவும், பந்தாவுக்காகவும் வெளிநாட்டு நாய்களை வளர்த்து நம் ஊர் நாய்களை காணாமல் போகச்செய்துவிட்டோம்.

கவர்ச்சி நடிகைகளை வைத்து "பீட்டா" விளம்பரங்கள் செய்து காசு பார்த்தான். அப்பாவி தெரு நாய்களை பிடித்துச்சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்து நம் இன நாய்களை அழித்தான். இப்போது அவர்களின் ஜாதி நாய்களை வாங்க குறைந்தது பத்தாயிரமாவது செலவழிக்க வேண்டும். மாதம் அதற்க்கு வெளி நாட்டு பிஸ்கட் வாங்க இரண்டாயிரம் செலவழிக்கவேண்டும்.

பின்னர்...

மரபணு பிடி கத்திரிக்காயை கொண்டுவர பிளான் செய்தான். ஒருவழியாய் எதிர்த்து விட்டோம்.

இப்போது...

வீட்டு காளைகளுக்கு தடை வாங்கி ஆஸ்திரேலிய ஜெர்ஸி பசுக்களை கொண்டுவர பிளான் செய்கிறான். நாளை நம் பசுக்களின் இனப்பெருக்கத்திற்கு காளைகள் இல்லாமல் இனம் அழிவதை கண்ணார காணப்போகின்றோம். சத்தில்லாத ஜெர்ஸி பால் குடித்து நம் பிள்ளைகள் வளரப்போகிறார்கள்.

ஒவ்வொரு சிறிய பிரச்சினைக்குப்பின்னும் ஏதோ ஒரு பெரிய சம்பவத்தின் காரணம் இருக்கும். வெள்ளையனின் ஏகாதிபத்யத்தின் அடுத்த கட்டத்தை நம் மக்கள் மீது தொடுக்க தயாராகிப்போன அவர்களுக்கு நம்ம ஊர் அரசியல் நாய்கள் துணைப்போவது வாடிக்கை.

இன்னும் "வால்மார்ட்" மாதிரியான உதாரணங்கள் ஏராளம் சொல்லலாம்...

விழித்துக்கொள்ளவில்லையென்றால் விலைபோகிவிடுவோம் ஒருநாள் நாமும்!!!

அல்லது...

பண முதலைகள் நம்மையே விற்றுவிடுவார்கள் நமக்கே தெரியாமல்

அப்பாவின் வீடு!!!
அப்பாவின் வீடு!!!
(படம் உதவி கூகுள்)

வருடம் ஒருமுறை, அல்லது இருமுறை
நான்கு அல்லது ஐந்து நாட்கள் திறக்கும்
இந்த அழகான அப்பாவின் வீடு - எங்களின்
கருவறைக்கோயில்

80களின் தொடக்கத்தில் வீட்டுக்கு குடிவந்தபோது
முதன்முதலாய் ஊரில் கட்டப்பட்ட டெரஸ் வீடு
கட்டி முடிக்கப்படாத புறா கூண்டு - நாங்கள்
இறக்கை முளைக்காத குஞ்சுகள்.

கோணி சாக்குப்பைகளால் மூடிய சன்னல்கள்
பழைய பலகைகள் சாய்த்து மறைக்கப்பட்ட கதவுகள்
சிமெண்ட் பூசி மெழுகப்படாத செங்கல் சுவர்கள் - பழைய
புடவை சுற்றப்பட்ட தற்காலிக குளியலறை

முதலில் அடித்தளம் போட்டு ஆறு மாதம்
அடுத்து சுவர் எழுப்பி ஐந்து மாதம்
பின்னர் நெலவுகள் வைத்து நான்கு மாதம் - என
கடைசிவரை விட்டு விட்டு கட்டிய மாட மாளிகை

வைப்பு நிதி லோனில் தொடங்கிய அடித்தளம்
சிக்கன குடும்ப பட்ஜெட்டில் நிற்கும் பில்லர்கள்
குருவி சேமிப்பில் வளர்ந்த மொத்த சுவருகள் - அன்பு
அம்மாவின் நகைகளில் கழிந்த கிரகப்பிரவேசம்

குழந்தைகளாய் வீட்டுக்குப்போய்
படித்து, பட்டம்பெற்று, காசு பார்த்து
கல்யாணம் செய்து, சந்தோஷமாய் - வாரிசுகளாய்
பேரன்களை கண்ட ராசியான அப்பாவின் வீடு

ரோட்டோரத்து வீடு என்பதால்...
ஊரார் எப்போதும் நலம் விசாரிப்பார்கள்
சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்துப்போவார்கள்
பெரியவர்கள் திண்ணையில் கதைப்பேசி செல்வார்கள் - அலுக்காமல்
அம்மா காப்பி, தண்ணி கொடுத்தே அசதியாவார்கள்

வார இறுதி நாட்களில்...
சிறிய தங்கை பாட்டு பாட
இரட்டையன் கட்டையில் தாளம் போட
பெரியண்ணன் குதித்து ஆட்டம்போட - ஊரின்
ஓரப்பார்வை ஏக்கத்துடன் வீட்டை கடக்கும்

அப்பா கதைகள் சொல்வார்
அப்பா பாடல்கள் இசைப்பார்
அப்பா பாடம் நடத்துவார்
அப்பா சிரிக்கவைத்து மகிழ்விப்பார்
அப்பா சமைத்து சுடச்சுட பரிமாறுவார்
அப்பா ஓவியங்கள் வரைந்து அசத்துவார் - ஆனாலும்
அப்பா எங்களை அடித்ததே இல்லை அவரின் இந்த வீட்டில்

அப்பாவிடம் மீன்கள் கேட்டால்.., தூண்டில் வாங்கி தருவார்
அப்பாவிடம் காசு கேட்டால்.., செலவழிப்பதையும் கற்றுத்தருவார்
அப்பாவிடம் விவாதம் செய்தால்.., விவரமாய் பதிலளிப்பார் - என்றும்
அப்பாவிடம் அறிவுரை கேட்டால்.., வாழ்க்கை விளங்கும்

பிள்ளைகள் நாங்கள் ஊர் கடந்து உழைக்கப்போக
கடமைகள் ஒருவகையில் முடிந்துப்போனதால்
அப்பா ஒரு நாள் சட்டென்று கண்ணை மூட - ஆளின்றி
காலியானது அப்பாவின் அன்பு வீடு

சிக்கனமாய வாழ்ந்திருக்கிறோம்.., பட்டினிக்கிடந்ததில்லை
சந்தோஷமாய் மகிழ்ந்திருக்கிறோம்.., சண்டைகள் போட்டதில்லை
இடப்பற்றாகுறையில் சிக்கியிருக்கிறோம்.., நிம்மதியான உறக்கம் உண்டு
மருமகனும், மூன்று மருமகள்களும் கண்டிருக்கிறோம் - இன்னும்
அன்புக்குறையவில்லை, பண்பும் மாறவில்லை

அப்பாவின் ஆசையில் பிறந்த வீடு
அப்பாவின் உழைப்பில் வளர்ந்த வீடு
அப்பாவின் உதிரத்தில் கலந்த வீடு
அப்பாவின் வியர்வையில் நனைந்த வீடு - என்றும்
அப்பாவின் ஆசியில் நிலைக்கும் வீடு

வீட்டில் தொங்கும் புகைப்படங்கள் அப்பாவின் கதை சொல்லும்
அப்பா உட்காரும் நாற்காலி அவருக்காக காத்திக்கிடக்கும்
அப்பா உறங்கிய கட்டில் எங்களை அரவணைத்து தவழும் - இங்கே
பூஜை அறை மட்டுமல்லாது மொத்த அறைகளிலும் அப்பாவேதான்

வருடம் ஒருமுறை, வீட்டைப்பூட்டி புறப்படும்போது
போட்டோவில் அப்பா மட்டும் சிரித்தப்படி இருப்பார்
எங்களை ஆசீர்வத்தித்து வழி அனுப்புவார்
நினைவுகளை சுமந்தப்படி அப்பாவின் வீடு அமைதியாய் இருக்கும் - இனி
அடுத்த ஆண்டு விடுமுறை தினத்தில் எங்களை வரவேற்க காத்துக்கிடக்கும்!!!

என்னவள்
அன்பே...

நீ
மென்மையானவள்
என்பது தெரியும்.

ஆனால்...
இவ்வளவு தன்மையானவள்
என்பது தெரியாமல் போனதே.

சிறு தூறல் மழையில்
மழை துளிகள் பட்டு
ரோஜா இதழுக்கு
வலிக்குமென்று
பூந்தொட்டியை
வீட்டுக்குள் ஒளித்து
வைக்கின்றாயே!!!

தற்காலிகம்!!!தற்காலிகம்!!!

விமானத்தில் பறக்கிறேன்
மனம் சிறைப்பட்டுள்ளது

குளிர்சாதன அறையில் உறங்குகிறேன்
தூக்கம் முழித்துக்கொண்டிருக்கின்றது

நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறேன்
வயிறு இன்றும் நிரம்பவில்லை

கடன் அட்டையில் செலவழிக்கிறேன்
காசு என்னுடையதாய் இல்லை

சம்பளத்திற்காக பணியாற்றுகிறேன்
பணியில் ஆத்மார்த்த பிடிப்பில்லை

ஆடம்பரமாய் சுற்றித்திரிகிறேன்
எளிமையின் மகிழ்வு இதிலில்லை

நான்கு பேர் அண்ணாந்து பார்க்கிறார்கள்
உயரத்தில் நானும் இல்லை

எல்லாம் என்னுடையதாய் நினைக்கிறேன்
என்னில் எனை காணாமல்!!!

காவேரி லாட்ஜ் ஹோட்டல்

காவேரி லாட்ஜ் ஹோட்டல்

சென்னை எக்மோரில் எங்கள் ஓவியக்கல்லூரிக்கு எதிரே பல ஆண்டுகளாய் சுவைமாறாது இருக்கும் ஹோட்டல்.

நாடார்களின் உறவுமுறைகள் பலர் சேர்ந்து நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன் ஆரம்பித்த லாட்ஜ் கம் மெஸ்.

90 களில் கல்லூரியில் படித்தபோது மாதம் ஒருமுறை சென்று 17 ரூபாய்க்கு மீல்ஸ் சாப்பிடுவேன். காரணம் அன்றைய என் பட்ஜெட் வாழ்க்கை.

ஊரிலிருந்து யார் வந்தாலும் அங்கேதான் முதலில் அழைத்துசெல்வேன். நான் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்பதால் அவர்களே பில் செட்டில் செய்துவிடுவார்கள்.

என் அப்பா பேங்க் விஷயமாக இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சென்னை வரும் இரண்டு நாட்களும் கொண்டாட்டம்தான். காலையில் மசால் தோசை, பொங்கல், மதியம் மீல்ஸ் என ரவுண்டு கட்டி சாப்பிடுவேன்.

அவர் ஊருக்கு போனவுடன் அந்த ரோட்டைக்கடக்கும்போதெல்லாம் நாக்கு எச்சில் ஊரும். அடுத்த மணியார்டர் வரை காத்திருக்கணும்.

இன்று அதே மீல்ஸ் 80 ரூபாய், பார்சல் எனில் 90 ரூபாய். மனைவி, மகன், நான் என மூன்றுபேருக்கு டிபன் 300 ஐ தொட்டாலும் மதியம் மீல்ஸ் பார்சல் எங்கள் மூன்று பேருக்கு ஒன்று போதும்.

இரண்டு நாட்கள் சென்னையில் இருந்தபோது காவேரியின் பொங்கல், வடை, ரவா தோசை, என் பேவரைட் மசால்தோசை என வெளுத்து வாங்கியதில் மாலத்தீவில் மனைவி சமைக்கும்போதெல்லாம் அடிக்கடிகேட்கிறேன் "காவேரி டேஸ்ட்டில் இருக்கணும் டியர்" என்றால் அதுக்கு அவள்... "ம்ம்கும், அங்கேயே சர்வரா போய்டுங்க, ஓசியில் திங்கலாம் என்கிறாள்".

இருபது இருபத்திரண்டு வருடம் முன் சாப்பிட்டது...இன்றும் அதே இடம், அதே டேபிள்கள் ஆனால் சுவை மட்டும் கூடிக்கொண்டே...

கிராமத்து மணம் என்பார்களே அது இங்கே கொஞ்சம் அதிகம். சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள் என அத்தனை பேரும் ஊர் சைடிலிருந்து வந்தவர்கள்.

நீங்களும் சாப்பிட்டுவிட்டு சொல்லுங்களேன்!!! :)

புது வருடம்
புது வருடம்

வழக்கம்போல்...
ஆணிகள்
சுமக்கப்போகும்
இன்னொரு
புது சுமை!!!