Friday, June 26, 2015

நானே நானா???
நானே நானா???

1993 ல் ஊட்டியின் அழகான மலை கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து இறங்கியபோது 17 வயது முடியும் நேரம். மிகப்பெரிய நகரத்தில் இறங்கிவிட்ட ஏலியனைப்போலத்தான். மற்றவர்களைப்புரிந்துக்கொள்ளவும், பழகவும், என்னுடன் பழக வைக்கவும் கிட்டதட்ட மூன்று வருடம் பிடித்தது.

கல்லூரியில் சேர்த்துவிட்டுப்போன அப்பா எங்க ஊர் சீனியரிடம் மூன்றாயிரம் ரூபாயைக்கொடுத்துவிட்டு இவனை கவனிச்சிக்கோ என்று சொல்லிவிட்டு செல்ல அதில் வெறும் முன்னூரு ரூபாய் மட்டுமே எனக்காக செலவிடப்பட்டபோது நகரத்தின் இன்னொரு பக்கம் எனக்கு தெரிய ஆரம்பித்தது.

அடுத்த மாதத்தில் முதல்முறையாக ஏதோ வீட்டு ஞாபகத்தில் ஊருக்கு பஸ் ஏற டிக்கெட் கிடைக்காமல் கிட்டதட்ட 17 மணி நேரம் பயணம் செய்து நள்ளிரவு 12 மணி தாண்டி குன்னூரில் மாமா வீட்டுக்கு சென்ற முதல் பயணத்தில் இருட்டின் பயம் முதன் முதாலாய் எனக்குத்தெரிந்தது.

கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்களின் மிக மட்டமான ரேக்கிங் கொடுமைகள் என்னைப்போன்ற விவரம் அறியாத, தமிழும் அதிகம் பேசிப்பழகியிருக்காத சிறுவனுக்குள் உண்டான பாதிப்புகள் பல. ஒவ்வொரு நாளும் நிம்மதியாய் உறங்க முடியாமல் சீனியர்களின் அட்டகாசங்களைத்தாங்கி, வீட்டுக்கு சொன்னால் கவலைக்கொள்வார்களோ என்று சொல்லாமல் மூடி மறைத்தப்போது கவலைகளை அடக்கி ஏற்றுக்கொள்ளும் அனுபவம் கிடைத்தது.

விடுதிக்கு வரும் வழியில் மற்ற வீடுகளின் சாம்பார் வாசனையோ அல்லது குடும்பமாய் மகிழும் அவர்களின் சந்தோஷங்களை கண்டபோது ஏக்கங்கள் அதிகமாகி மனதினுள் அழுதபோது எல்லாவற்றையும் தாங்கும் பக்குவம் வந்தது.

பண்டிகைகள் இல்லை, கொண்டாட்டங்கள் இல்லை, ஊர் நோக்கிய பயணங்கள் அதிகம் இல்லை, விருந்தினர்களின் வருகை இல்லை என வாழ்க்கையில் வாழ்ந்துக்கடந்த பேச்சிலர் காலங்கள் என்னை ஏதாவது ஒன்றை அடையவேண்டும் என்கிற உத்வேகத்தைக்கொடுத்தது.

ஒரு முறை வீட்டில் கேட்கவேண்டாமென்று ஊர் பெரியவரிடம் கல்லூரிக்கு கட்ட பீஸ் 1500 கேட்க, என்னைப்பார்த்து இதெல்லாம் எங்கிட்டையா கேக்குற, எதை நம்பி உன்கிட்ட பணம் கொடுக்க, போடா என்று சொல்லி விரட்டி அடிக்க அதே பெரியவர் அடுத்த நான்கு வருடம் கழித்து கோயில் திருப்பணிக்கு புத்தகத்துடன் வந்து கையேந்த பத்தாயிரம் ரூபாயை கொடுத்து அவர் வாயடைத்தபோது கொஞ்சம் கர்வமும் வந்தது.

முதன் முறையாய் நானும், நண்பர்களும் தயாரித்த விகடன் மாணவர் பத்திரிகையும், என் போட்டோவும் விகடனில் வந்தபோது என் அம்மா ஊரில் எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தபோது பெற்ற தாயை மகிழ்வித்த தனயனானேன்.

மெரீனா பீச்சில் ஒற்றை ஆளாய் நின்றிருந்தபோது கண் முன்னே என் வயது காதல் ஜோடிகளின் களியாட்டங்களைப்பார்த்தபோது நானும் இதே மாதிரி இங்கே காதலியுடன் உலவவேண்டும் என்று தீயாய் வேலைசெய்து இரண்டு மூன்று பெண்களுடன் சுற்றிய இளவயசு அனுபவங்கள் என்னை நான் எவ்வளவு செல்ஃபிஷ்க்காரனாகா வைத்திருந்தேன் என்கிற கோபம் வந்தது.

முதல் முறை சம்பாதித்து அப்பாவுக்கு 500/- ரூபாய் மணியார்டர் அனுப்ப அடுத்த வாரமே 1000/- ரூபாயுடன் வந்த அப்பாவின் மணியார்டரில், சிரஞ்சீவி மகனுக்கு, உன் பணம் கிடைத்ததில் மகிழ்ச்சி, இனிமேல் நீ சம்பாதிக்கும் பணத்தில் உன் செலவுகளைப்பார்த்துக்கொள், ஆனாலும் என் பணம் மாதாமாதாம் உனக்கு வந்து சேரும். என்கிற என் அப்பாவின் பதிலில் புரிதலின் மேன்மை விளங்கியது.

சென்னை மவுண்ட்ரோடு புகாரி ஹோட்டலின் 14 ரூபாய் கேக்கை கிட்டத்தட்ட 12 வருடம் கழித்து அது 44 ரூபாயாக மாறி இருந்தப்போது குடும்பத்துடன் அதே வகை கேக்கை சுவைத்ததும், மீல்ஸ் 18 ரூபாய் என்று இருந்ததால் சாப்பிடாமலேப்போன ஹோட்டலின் சாப்பாடை பின்னர் சம்பாதித்து நண்பர்களுடன் சென்று ஆறு வருடங்களுக்குப்பின் சாப்பிட்ட சாதனைகளைப்பார்த்தபோது மனமிருந்தால் மார்க்கமுண்டு என்கிற போதனை புரிந்தது.

கல்லூரியிலும், வேலை செய்த இடங்களிலும் அன்பான நட்புக்களால் ஹோட்டலில் சாப்பிட்டு வெறுத்துப்போன என நாக்குக்கு அவர்களின் வீட்டு சாப்பாட்டை கொடுத்தபோதும், உடல் நிலை சரியில்லாத காலங்களில் காட்டிய பரிவுகளிலும் சரி, இக்கட்டான சூழனிலைகளில் உதவிய அவர்களின் மனதும் சரி நட்பில் எத்ர்ப்பார்ப்பு இருக்கக்கூடாது என்கிற மந்திரம் கிடைத்தது.

அன்பாய் மனைவியும், அழகாய் குழந்தையும் இணைந்தபோது வாழ்க்கையின் மொத்த இன்பமும் என்ன்னைச்சுற்றியிருந்ததைப்பார்த்தபோது வாழ்தலின் அர்த்தம் புரிந்தது.

ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தபோது அந்த அலுவலகத்திலிருந்த கல்லூரி நண்பன் கேட்ட முதல் கேள்வி என்னைவிட உனக்கு எப்படி அதிக சம்பளம் எனக்கேட்டபோதும், மனைவியின் தங்க வளையல்களை இன்னொரு நண்பனுக்காக கொடுத்து மூன்று வருடம் கழித்து கேட்டபோது நீ கொடுக்கவே யில்லை என்று சொன்னபோதும், லோன் வாங்க என் ஜாமீன் கையெழுத்தை வாங்கி அவன் கட்டாததால் அதையும் வட்டியுடன் நான் கட்டியதையும், 30 வயதில் கோவையில் சொந்தமாய் கம்பெனி தொடங்கி இரண்டு வருடம் நல்லபடியாய் நடத்தி இன்னொரு பாவப்பட்ட நண்பரின் நிலை அறிந்து அதை நடத்தச்சொல்லிவிட்டுவிட்டு ஹைதராபாத் போக அவனின் சதி என்னை பாதாளத்திற்க்கு கொண்டுச்சென்று என் ஒட்டுமொத்த பத்து வருட சேமிப்பையும் காணாமல் போகசெய்தபோது பணத்தின் முக்கியத்துவம் புரிந்தது.

அதேவேளை சுனாமி பாதித்த குழந்தைகளை தத்தெடுத்து அன்றையக்காலத்தில் என் சக்திக்கு மீறி அவர்களுக்காக உதவியதால் கிடைத்த அந்த அன்புச்செல்வங்களின் அழகு மாறாத சிரிப்பால் பணத்தை விட உலகில் பல உன்னத விஷயங்கள் உண்டு என்கிற ஞானம் பிறந்தது.

சென்னையில் மிகப்பெரிய மருத்துவ மனைக்கு என் புராஜக்டை கொடுத்து அதை அவர்கள் திருட்டுத்தனமாய் என்னை ஏமாற்றி இப்போது கோடிக்கோடியாய் சம்பதித்ததை பார்த்தபோது என் மூன்று வருட உழைப்பை ஒரே நாளில் சித்தைத்ததால் ஏற்ப்பட்ட வலி என் கவனக்குறைவை மூளைக்கு புரியவைத்தது.

அடுத்த மூன்று நாட்களில் மலேஷியன் புராஜக்ட் சைன் ஆக மும்பைக்கு மலேஷியாவில் இருந்த ஆட்கள் வந்துவிட, இன்னும் இரண்டு நாளில் 35 லட்சம் எனக்கு வரும் என்கிற நம்பிக்கையில் திளைக்க அன்றைய நாள் என் இன்னொரு பார்ட்னர் உயிரிழக்க ஒட்டுமொத்தமாய் நண்பனும், அந்த புராஜக்டும் அதனால் கிடைக்கப்போகும் பணமும் இல்லாமல் போக வானத்தைப்பார்த்து நான் சொன்னது இனி எல்லாம் கடந்துப்போகும்.

34 நான்கு வயதில் 45 பேர் கொண்ட கம்பெனிக்கு சிஈஓ ஆகி பாக்கெட் நிறைய பணத்தைப்பார்த்துவிட்டு வஞ்சகத்தால் அவர்கள் கம்பெனியை இரண்டு ஆண்டு கழித்து மூடியபோது நாளை முதல் என்ன செய்வோம் என்கிற சிந்தனை தூக்கி அடிக்க திக்கு தெரியாமல் சென்னையின் சந்துகளில் யோசனையுடன் சுற்றிய ஆறு மணி நேரங்கள், நாளை முதல் வாழ்க்கை என்னகும் என்கிற பயம், மனைவியும், மகனும் நிழல்களாய் வந்து கண் முன் சுழன்ற சில மணித்துளிகள் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்கிற பலத்தை தந்தது.

அடுத்த இரண்டு நாளில் அதை விட பெரிய வேலைக்கிடைக்க அடப்பூ... வாழ்க்கை இவ்ளோதானா என்கிற தைரியம் கிடைத்தது.

நொய்டாவில் ஒற்றை தமிழனாய் புராஜக்டுகளில் 300 பேரை சமாளித்தபோது எனக்கு கிடைத்த தன்னம்பிக்கை அடுத்த கட்டத்துக்கு தயாராகிக்கொள் எனும் ஆர்வத்தை தந்தது.

எனக்கானதை அதிகம் மறைத்தது கிடையாது. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அதனால்தான் முகனூல் என்னைப்பற்றியும், என்னைசுற்றியும் அதிகம் எழுதுகிறேன். இரண்டே நாளில் வெளிநாடு பயணம் நிச்சயமாக இப்போது இங்கே மாலத்தீவில் இருந்தாலும் இன்னும் மூன்று வருடங்களுக்குப்பின் சொந்த ஊரில் செட்டிலாகப்போகும், அதிக சேமிப்பு இல்லாத ஆனால் ஊர் மண்ணை அதிகமாக விரும்பும் நான் சூழ்னிலைகளால் 22 வருடங்களாக ஊருக்கு வெளியேதான் வாழ்க்கை என்றாகிப்போன மாற்றத்தை ஏற்றுக்கொண்டு இப்படியாக புலம்பித்தள்ளுகிறேன் உங்களையும் கஷ்டப்படுத்துக்கிறேன் இதை படிக்கச்சொல்லி!!!

No comments:

Post a Comment