Friday, June 26, 2015

எனக்கும் ஒரு ரயில் கதை தெரியும்.
அவர் ஒரு படித்த அப்பாவி, மற்றவர்களை நம்பி மோசம்போனவர். தனது அப்பாக்கள் காலம் வரை சுகமாய் ஜீவித்துவிட்டு இவரின் காலத்தில் மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து ஏமாந்துப்போனவர். ஆனால் யார் இவரைப்பார்த்தாலும் இவரின் உண்மை நிலை அறியாது இவரை அவமதிப்பார்கள். ஆனால் இந்த அப்பாவியின் நிலை வேறு தாத்தா அரசு ஊழியராக இருந்தார், இவரின் அப்பாவும் அரசு ஊழியராகத்தான் இருந்தார். இவரின் நிலை வந்தப்போது காலம் மாறிவிட்டது. அரசு வேலை இவருக்கு குதிரைக்கொம்பானது.

இதோ இப்போதுக்கூட தனது 45ஆவது வயதில் அரசு வேலைக்கான நேர்முகத்தேர்வு விஷயமாக சென்னைக்கு செல்ல மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கிடக்கிறார், ஒரு மணி நேரம் முன்னதாகவே. இத்தனைக்கும் சரியாக மூன்றுவாரத்திற்கு முன் முன்பதிவு செய்து ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டும் வைத்திருக்கிறார். கையில் சிறிய தலையணை, பெட்ஷீட், தண்ணீர் பாட்டில், சைவ உணவு பார்சல் கூடவே ஒரு தலை வலி மாத்திரை ஒன்றும், நீலகிரி தைலமும் உண்டு.

ஆறு பத்துக்குத்தான் ரயில் வரும் ஆனால் இவர் 5 மணிக்கெல்லாம் வந்துவிட்டார். நேரம் தவறாமை இவருக்கு முக்கியம். கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறார் யாருக்கும் தொல்லைக்கொடுக்காமல்.

நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கூட்டம் இன்னும் அதிகமாகி சலசலப்பும் ஜாஸ்தியாக எல்லோரும் ரயில் வந்து நிற்க்குமுன்னே முண்டியடித்து ஏற ஆரம்பித்தனர். இவரும் மெதுவாய் தனது கம்பார்ட்மெண்டை தேட இதோ எஸ்4 வந்துவிட்டது. அதற்க்குள் பெரிய சூட்கேஸுடன் வந்த ஒருவர் இவரின் முதுகை சரியாய் முட்ட இவரும் நிலை குலைகிறார். இவரை முட்டியவர் இவரைப்பார்த்து "யோவ்...பாத்து போகக்கூடாதா?" என எரிச்சலுடன் இவரைப்பார்க்க இவரும் "மன்னிக்குடுங்க" என்கிறார். கலிகாலம்.

இவரின் இருக்கை மிடில் பெர்த். தனது பொருட்களை கீழே வைத்துவிட்டு உட்கார திடுமென்று ஒரு கூட்டம் ஏறி இவரின் மடியிலேயே உட்காருகிறது. அந்தக்கம்ம்பார்ட்மெண்ட்டே நிரம்ப இரயில் புறப்பட தயாராகிறது.

"கொஞ்ச தள்ளி உக்காரு சார்" என் அதட்டல் வர இவரும் நகர்ந்து ஜன்னலோடு ஒட்டி உட்காருகிறார். நாலுபேர் உட்காரும் இடத்தில் ஆறுபேர் உட்கார்ந்துக்கொண்டு இவரை அதட்டுகிறார்கள்.

ஒருவர் இவரின் வாட்டர் பாட்டிலை இவரிடம் கேட்காமலேயே எடுத்து வாய்க்கொப்பளித்து துப்பிவிட்டு இன்னும் கொஞ்சம் பான் பராக்கை போட்டு மெல்லுகிறார்.

இன்னொருவர் சார் இந்தப்பையை கொஞ்சம் பிடிங்க என்று ஆறு கிலோ பெரிய பையை இவரின் தொடையின் மேல் வைக்க, இவரும் கொஞ்சம் கீழே இருக்கும் இடத்தில் வைக்க நினைக்க "யோவ் கீழே வைக்காதய்யா ஒரே அழுக்கா இருக்கு" என்கிறார். அவரும் அந்தப்பையை இறுக்கமாய் பிடித்துக்கொள்கிறார்.

கோயமுத்தூர் ஸ்டேஷன் வர இன்னும் கூட்டம் ஏறுகிறது. "யாருதுங்க மிடில் பர்த்?" என புதிதாய் ஏறிய குடும்பம் கேட்கிறது. இவரும் "என்னுது தாங்க" எனச்சொல்ல "நீங்க லோயர் பெர்த்துல படுங்க, என் பொண்டாட்டி மிடில் பெர்த்துல படுக்கட்டும்" என்று சொல்லி இவர் சம்மதம் சொல்லும் முன் மிடில் பர்த்தில் எல்லாவற்றையும் வைக்கிறார். அந்தம்மாவும் மிடில் பர்த்தில் ஏறி காலில் இருக்கும் செறுப்பை கழட்ட அதுவும் இவரின் தலையிலேயே விழுகிறது. இவரும் அதை பத்திரமாக கீழே வைக்கிறார் ஒன்றும் சொல்லாமல்.

கொஞ்சம் குளிரவே தனது தலையணையை தேட அதை அப்போதே ஒருத்தர் கீழே விரித்து உட்கார்ந்திருக்கிறார். "யோவ் தயிர்சாதம் கீழே குண்டி வலிக்குதுய்யா, அட்ஜீஸ் பண்ணிக்கோன்னு" நக்கலாய் சிரிக்கிறார்.

டின்னர் நேரமென்பதால் பலர் சாப்பிட்டுக்கொண்டிருக்க, இவர் தனது சாப்பாட்டு பார்சலை சாப்பிட எடுக்க வயதான ஒருவர் வந்து "பசிக்குதய்யா" என இவரும் தன் சாப்பாடைக்கொடுக்கிறார், சாப்பாடை வாங்கியவருக்கு அது தயிர்சாதம் என்று தெரிந்தவுடன் "யோவ் இதை மனுஷன் தின்பானா, பிரியாணி கட்டிகிட்டு வரக்கூடாதாய்யா!" என்று தூக்கியெறிந்துவிட்டு அடுத்தக்கம்பார்ட்மெண்ட்டில் பிச்சை எடுக்க செல்கிறார்.

ரயில் ஈரோட்டை நெருங்க டிடிஆர் டிக்கெட்களை பரிசோதிக்க வர மெதுமெதுவாய் கூட்டமும் நகர்கின்றது, அந்தக்கம்பார்ட்மெண்ட்டில் இத்தனை நேரம் இம்சைகள் செய்த எவரும் சரியாக முன்பதிவு செய்யாதவர்கள். அனுமதியின்றி ஏறியவர்கள். சிலரிடம் டிக்கெட்டே இல்லை. கொஞ்சப்பேர் கதவருகில் போக, சிலர் டாய்லட் அருகில் போக இவரும் நிம்மதியாய் உறங்கலாம் என நினைக்கையில் டிடிஆர் அந்தப்பக்கம் நகர்ந்ததால் அந்தப்பழையக்கூட்டமும் பழையப்படி வந்து இவரின் இடத்தை அடைக்கிறது. ஆனால் இவரின் சொந்த இடமான மிடில்பெர்த்தில் இன்னொரு ஜீவன் நிம்மதியாய் உறங்க ஆரம்பித்துவிட்டது.

இவருக்கு தெரியும்..."நான் தூங்கணும்" என்று சொன்னாலும் அவர்கள் விலக மாட்டார்கள், "யோவ் அதான் இத்தனைக்காலம் காலை நீட்டி தூங்குனது போதாதா?" "ஒரு நாள் தூங்கலைன்னா என்ன செத்தா போய்டுவே!" என வார்த்தைகப் பறந்து வரும் என்பது இவருக்குத்தெரியும்.

காரணம் இவருக்கு சண்டைப்போடத்தெரியாது. வீண் பிரச்சினைகளுக்கும்போகத்தெரியாது. எனக்கென்னமோ இவர் சென்னை வரை உறங்கப்போவதில்லை, மற்றவர்கள் இவரை உறங்கவிடப்போவதில்லை...நாளைவேலைத்தேர்விலாவது உண்மையான திறமைக்கு மதிப்பளித்தால் இவருக்கு கட்டாயம் அந்த வேலை கிடைக்கும், நல்ல காலமும் பிறக்கும் என உங்களைப்போலவே நானும் எண்ணி எதிர்ப்பார்த்து உறங்காமல் இருக்கிறேன், பிராத்தனைகளுடன்!!!

No comments:

Post a Comment