Friday, June 26, 2015

இழந்த பொழுதுகள்நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேங்காய் மூடியில் கொஞ்சம் பால், சர்க்கரை மற்றும் துருவிய தேங்காய் மூன்றும் சேர்த்து மொட்டை மாடியில் வைத்துவிட்டு காலையில் மூஞ்சிக்கழுவாமல் ஓடிப்போய் பார்த்தால் கட்டியான ஐஸ்கிரீம் ரெடி, ஊட்டி குளிருக்கு தொண்டைக்குழியில் சூடாய் இறங்கும் சுகம்.

டிசம்பர் காலக்குளிரில் மார்கழி மாதத்தில் ஊரை சுற்றி பஜனைபாடல்கள் பாடிய காலங்கள், பல வீட்டு பாயாசம், சுண்டல், கேசரியின் சுவைகள்.

சீசனுக்கு ஏத்தமாதிரி கோலிக்காலம், சீட்டுக்காலம், ஃபிலிம் ரோல் காலம், கில்லிக்காலம், பம்பரக்காலம், கிரிக்கெட், புட்பால் காலம், நீச்சல் காலம், எங்கள் ஊர் டேம் வருடத்தில் மூன்று மாதம் வரண்டுப்போயிருக்க அங்கே ஊரே விளையாடும் விளையாட்டுக்காலங்களை மிஸ் செய்வது.

ஊரில் எந்தப்பெரியவர்களைப்பார்த்தாலும் ஓடிப்போய் குனிந்து கும்பிட, அதில் சிலர் தலையை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டு இரண்டு மூன்று நிமிடங்கள் வாழ்த்தி மந்திரம் சொல்ல வேண்டாவெருப்பாய் நெளிந்த நாட்கள் இனி இல்லை.

மாதம் இரு முறை என் அம்மா என் பாட்டி வீட்டுக்கு போக, மாலை நெருங்க நெருங்க அம்மாவுக்காக காத்திருப்போம். ஆனால் அது அம்மாவுக்காக அல்லவே அல்ல...பாட்டி செய்து கொடுக்கும் குண்டு இட்லியும், கார சட்னியும் கூடவே கேசரிக்காகவும்தான். அம்மா வந்தவுடன் ஓடிப்போய் பையை பிடிங்கிய காலங்கள் இனி கிடைப்பது அரிது.

ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கொருமுறை ஊட்டி, குன்னூர் கூட்டிப்போவார்கள், என் ராசிப்படி பலமுறை கிளம்பி பஸ்ஸுக்கு காத்திருக்க பஸ் வரவே வராது அப்படியே அரிதாய் வந்தால் கண்டக்டர் அண்ணனிடம் அண்ணா இன்னக்கி ஊட்டியில மசால் தோசை கிடைக்கும்தானே என்று நாக்கை சப்புக்கொட்டிய உன்னத தருணங்கள் வருமா?

டிவிக்கள் வந்தப்புதிதில் தாத்தா வீட்டில் டிவி வர ஞாயிற்றுக்கிழமைகளில் ராமாயணம் பார்க்க ஊரே திரண்டு நாப்பது நாப்பத்தைந்து பேராய் பார்த்து ரசித்த மறக்க முடியாத இனிய பொழுதுகள்

சனிக்கிழமை அண்ணன் பள்ளிக்கு கலர் டிரஸில் போக நான் அன்று அண்ணனின் யூனிபார்ம் கோட்டை மாட்டிக்கொண்டு, தொள தொள கருப்பு ஷீவையும் தூக்கி சுமந்துக்கொண்டு, மாமா வாங்கிக்கொடுத்த வெள்ளை தொப்பியுடன் கிரவுண்டில் கிரிக்கெட் நடுவராய் இருக்க, திருட்டுத்தனமாய் செய்த விஷயம் ஒரு நாள் அண்ணா கண்ணில் பட்டு துரத்திய ஓட்டங்கள்

டேய் பிளீஸ்டா, இந்த லெட்டரை போய் கொடுடா என கூடவே மிக்சர் பாக்கெட்டையும் அடுத்த தெரு அக்காவுக்கு கொடுக்க சொல்லி எங்க தெரு அண்ணன் கொடுக்க லெட்டரை அந்தப்பெண்ணின் அம்மாவிடமும், மிக்சரை என் வாயிலும் போட்டுக்கொடுத்த காதல் துரோகங்கள்

சித்தப்பாவின் முதுகில் குரங்காய் உட்கார அவரும் முதலையாய் என்னை சுமந்துக்கொண்டு இந்தக்கரை முதல் அந்தக்கரை வரை நீத்திச்சென்ற திக் திக் நிமிடங்கள்.

அவள் நான்காவது படிக்கும்போது வேறு ஊருக்குப்போய்விட இரண்டு மாதம் ஒரு முறை ஊருக்கு வருவாள். இதை எப்படியாவது கேள்விப்பட்டு அன்று மட்டும் மூன்று முறை முகம் கழுவி, அந்தக்குளிரிலும் இரண்டு முறை குளித்து ஸ்மார்ட்டாக அவள் கண்ணில் பட வீடு வழியே பல முறை நடப்போம். இறுதியில் அவளின் அந்த அரை நொடிப்புன்னகை...சொல்ல வார்த்தைகள் கிடைக்காத அறியா குழந்தைக்காதலின்(!) இன்பக்காட்சிகள்.

லீவு நாட்களில் சீசனுக்கு ஒரு பழம் காய்க்க காடு மலைகள் ஏறி வித விதமான பழங்களை சுவைத்தக்காலம். பாதிப்பழங்கள் அடுத்தவர் தோட்டத்திலிருந்து பறிக்கும் திருட்டுப்பழங்களின் சுவையை ரசித்த ரம்மிய நாட்கள்.

வாரம் ஒரு முறை குமுதமும், ஆனந்த விகடனும் வர அண்ணா தம்பிக்குத்தெரியாமல் பேப்பார்காரரிடம் வாங்கி ஒளித்துவிட்டு பள்ளிச்சென்று மாலை வந்தவுடன் முகம் கழுவாமல் படித்த வெட்டிப்பொழுதுகள்

மழை நாட்களில் வீட்டுக்குள் முடங்கி அம்மா செய்த முறுக்கையும், வடையையையும் நாள் முழுக்க சூடான காப்பியுடன் சுவைத்தக்காலங்கள், கதவுக்கு வெளியே "சோ" வென மழைக்கொட்ட பக்கத்து வீட்டு அம்மாக்களும் கதைப்பேச வீட்டுக்கு வர தூங்கிய மாதிரி நடித்து புரளிக்கேட்ட பொழுதுகள்

இன்னும் எத்தனையோ இருந்தாலும்...மேல் சொன்னவைகள் இனி நடக்க வாய்ப்பில்லை. நான் மட்டுமல்ல இந்தத்தலைமுறைக்கும் இந்தமாதிரி நிகழ்வுகளை ரசிக்க ராசியில்லை அல்லது நேரமும் இல்லை. ஒவ்வொரு தலைமுறையோடு சில உன்னத விஷயங்களை மனிதன் இழப்பதும் வாழ்வியலின் ஒரு பகுதி. முடிந்தால் உங்கள் சந்ததியினருடன் பழைய சம்பவங்களை பகிர்ந்து சந்தோஷப்படுங்கள்.

ஆனாலும் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் ஆக்கி மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த நாம் முயலவேண்டும்!!!

No comments:

Post a Comment