Friday, June 26, 2015

மகளிர் தின ஸ்பெஷல் - சுனாமியும் என் குழந்தைகளும்

மகளிர் தின ஸ்பெஷல் - சுனாமியும் என் குழந்தைகளும்

நாளை கொஞ்சம் பிசி என்பதால் இதை இன்றே பதிகிறேன்.

2004 சுனாமி விபத்து முடிந்து நான் பெங்களூரில் இருந்த சமயம். வேலை மாற்றத்தின் காரணமாக சென்னைக்கு வந்து, ஆர்வ மிகுதியால் சாந்தோம், டூமிங் குப்பம், மெரினா இப்படி பல இடங்களில் சுமாமியின் பேயாட்டத்தைக்கண்டு மிரண்டுப்போனேன்.

ஒரு வாரம் கழித்து சென்னையில் பிக் பசாருக்கு குடும்பத்துடன் செல்ல...

அங்கே வோல்ட் விஷன் பிரதிநிதிகள் என்னை அணுகி நாகப்பட்டினத்தில் சுனாமி பாதித்த குழந்தைகளுக்கு உதவுங்கள் என்றார்கள். நானும் எனது எண்ணை கொடுத்து வீட்டுக்கு வரச்சொன்னேன்.

அடுத்த ஞாயிறு அவர்கள் வர, நிறைய பேசினார்கள். இறுதியில் நான் இரு குழந்தைகளை தத்தெடுக்க ரெடி என்றும் ஆனால் தாய் தந்தையை சுனாமியில் இழந்த ஆதரவற்ற பெண்களாக இருத்தல் வேண்டும் எனவும் சொன்னேன். அதன் படி...

ஆறு வயது காவியா, மூன்று வயது ரோசம்மா என அழகான இரு குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதார செலவுகளுக்காக வருடம் இருவருக்கும் தலா 32000 மற்றும் 36000 தருவதாய் டாகுமெண்ட்டில் சைன் செய்து கொடுத்தேன். அவர்களின் கூற்றுப்படி அவர்களின் கல்வி மற்றும் உணவுக்கு நான் பொறுப்பு மற்றப்படி எந்த வித சம்பந்தமும் இல்லை.

மூன்றாவது வருடம் ஒருமுறை நான் சரியான உதவியைத்தான் செய்கிறேனா என அறிய நாகப்பட்டினம் கிறிஸ்துவ அமைப்புக்கு சென்று அந்தப்பெண்களைப்பார்த்தேன். கடந்த காலத்து பாதிப்புகள் அனைத்தையும் மறந்து நார்மலாகி என்னைப்பார்த்தவுடன் தயங்கி தயங்கி வந்தார்கள். எனக்கு அவர்களின் போட்டோவும், டீட்டெய்ல்களும் இருந்ததால் அவர்களை காண்பதில் தடை இருக்கவில்லை.

அவர்களுக்கும் என்னை பற்றி சொல்லியிருந்ததால் அவர்களும் என்னுடன் தயக்கமின்றி பழகினார்கள். ரிஷிக்கு அப்போது ஒன்றரை வயதிருக்கும். அவனையும் கொஞ்சி மகிழ்ந்தார்கள்.

இவையெல்லாம் இப்போது எதற்க்கு என கேட்கிறீர்களா?

சுய தம்பட்டம் அடிக்க அல்ல. காரணம் அன்றைய சின்னப்பெண் காவியா இப்போது பிளஸ் டூ பரீட்சை எழுதிக்கொண்டிருக்கிறாள். அவளின் விருப்பப்படி அவள் டாக்டராக ஆசைப்படுகிறாள். கட்டாயம் ஆவாள். உங்களின் ஆசியும் தேவை.

அவளை டாக்டர் படிக்கும் அளவுக்கு என்னிடமே பொருளாதாரம் இல்லையென்பது தெரிந்தால் கட்டாயம் உங்களிடம் வெட்கப்படாமல் கையேந்துவேன்.

நான் இன்னொரு குழந்தைக்கு முயலாததும், மனைவியின் பெண்குழந்தை ஆசைக்கு ஒத்துழைப்புக்கொடுக்காததற்க்கும் இந்தக்குழந்தைகளை என் குழந்தைகளாகவே பாவிப்பதும் ஒரு காரணம்.

இந்த மகளிர் தினத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக என் வாழ்க்கையில் கிடைத்த முத்துக்கள் இன்னும் வாழ்வில் வளர இறைவனை வேண்டி, அவர்களை இன்னும் கொஞ்ச காலமேனும் அவர்கள் சொந்தக்காலில் நிற்கும் வரை உதவி செய்ய எனக்கு பொருளாதாரம் இடமளிக்கும் அதே இறைவனிடம் வேண்டி, பெண்கள் அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்லி நிறைவுசெய்கிறேன்.

குழந்தைகளின் போட்டோ பிரேம் ஊரில் இருப்பதால் கூகுளிலிருந்து ஒரு படத்தை பதிகிறேன் மன்னிக்கவும்!!!

1 comment: