Friday, June 26, 2015

இழந்ததை பெறமுடியுமா???


இழந்ததை பெறமுடியுமா???


சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் நீலகிரி மலையென்றால் அங்கே அடர்ந்த காடுகள், வரிசையாய் மலைகள், வானம் பார்க்கும் மரங்கள், ஓடி விளையாடும் மேகங்கள் என அத்தனையும் இருந்தது. ஆனால் இன்று திரும்பிப்பார்க்கின்றபோது மலைகள் மரங்களற்று பொட்டல் காடுகளாய், சிதைந்து மலடாய்ப்போன பூமி என எங்கு காணினும் வெறுமை.

அன்றைய காலங்களில் மக்கள் எப்போதாவது காட்டு யானைகளையோ, காட்டெருமைகளையோ பார்க்க நேரிடும். அவைகள் அதன் வழி போய்க்கொண்டிருக்கும், மக்கள் அவர்களின் வேலையை தொடர்ந்துக்கொண்டிருப்பார்கள். தெளிவாக சொல்லவேண்டுமெனில் விலங்குகள் காடுகளிலும் மக்கள் ஊருக்குள்ளும் நிம்மதியாய் வாழ்ந்துக்கொண்டிருப்பர். ஆனால் எல்லாம் கடந்தக்காலங்களில் மாறிப்போய்விட்டது...

மலையின் அழகில் மயங்கி காசு வைத்திருக்கும் வெளியூர் பண முதலைகள், உள்ளூரில் காசுக்காக ஆசைப்பட்டு சொந்த மண்ணை விற்க துணிந்த திடீர் பணக்காரர்கள் என பலர் மலைகளை விலைக்கு வாங்கி ரெசார்ட்ஸ்களகவும், கெஸ்ட் அவுஸ்களாகவும் மாற்ற விலங்குகளின் நடைப்பாதைகள் தடுக்கப்பட்டு, அவைகளின் வாழ்வாதார காடுகள் அழிக்கப்பட்டு வேறி வழியின்றி மெதுமெதுவாய் ஊருக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

இயற்கை சூழலில் சேர்ந்து வாழும் எங்கள் மக்களால் இப்போது அப்படி வாழ முடியாமல் போனது. காரணம் உணவுக்காகவும், வழி மாறிப்போனதாலும் விலங்குகள் ஊருக்குள் நடமாட ஆரம்பித்துவிட்டன. எப்போதாவது பார்த்த விலங்குகள் இப்போதெல்லாம அடிக்கடி கண்ணில் பட ஆரம்பித்துவிட்டன. அவ்வளவு ஏன் இப்போதெல்லாம் குரங்குகள் வீட்டு கிச்சனுக்குள் வந்து சாதம் இருக்கும் பாத்திரத்தில் சாம்பாரை ஊற்றி தின்றுவிட்டு போகும் அளவுக்கு புத்திசாலிகளாகிவிட்டன.

இன்னொரு கொடுமையான விஷயம்...எங்கள் ஊரில் வீட்டுப்பிராணிகளான பூனையோ அல்லது நாயோ ஒன்றுகூட கிடையாது. எல்லாவற்றையும் இரவில் சிறுத்தைகள் அடித்து தூக்கிக்கொண்டுப்போய்விடுகின்றன. வாரம் ஒரு மாடாவது காணாமல் போய்விடுகின்றது.

காட்டு யானைகள், காட்டெருமைகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் குரங்குகள் என அத்தனையும் இரவில் ஊருக்குள் வருவது சாதாரணமாகிப்போனது. காலை மத்தியான வேளைகளில் மக்களால் தேயிலைப்பறிக்க போகமுடியவில்லை, விவசாயம் பார்க்க விவசாய நிலங்களுக்குப்போக முடியவில்லை. அவ்வப்போது ஏன் அடிக்கடி விலங்குகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

பல தேயிலை தோட்டங்கள் ஆட்கள் இலைப்பறிக்க போவதற்க்கு பயந்து கவனிப்பாரற்று கிடக்கின்றனன். விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் கரடிகளின் அட்டகாசத்தால் காய்கறிகள் காணாமல் போகின்றன. அதனால் மண்ணின் மைந்தர்களாகிய நீலகிரி மக்கள் வேலைத்தேடி மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர் என ஊரை காலிசெய்ததால் ஊரில் கிட்டத்தட்ட பாதி வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. நிலம் வைத்திருந்தவர்களும் நீலகிரியில் இருக்கும் நிலங்களை விற்றுவிட்டு கோயமுத்தூரில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் சாதாரண மக்கள் இப்போது பயந்து பயந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தேயிலை விலை குறைந்துக்கொண்டே வருவதாலும், மலை வாழ் இடத்தில் வேறு ஒன்றும் இல்லாததால் சாதாரண மக்களால் பிழைக்க முடியவில்லை. அரசும் தங்களின் செயல்பாடுகளை தீவிரமாக்காமல், சட்டங்களை விலைக்கு விற்பதால் காடுகளை அழித்து வியாபார நோக்கத்திலான பணமாக்கல்கள் அதிகமாகிவிட்டன.

இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் வாழ்ந்துவிட்டு காலை, மாலையில் வெளியே செல்ல முடியவில்லையெனில் அதனால் என்ன பயன்? இருந்தும் அனுபவிக்கமுடியவில்லையே. எல்லாமே விலங்குகளால் ஏற்ப்பட்ட பயம்தான்.

எது எப்படியோ இழந்தது திரும்பக்கிடைக்கப்போவதில்லை. ஆனால் இருப்பதை காப்பாற்றினாலே போதும். அதை நீலகிரியில் வாழும் படுகர், தோடர், தொதவர் இன மக்கள்தான் முன்னின்று செய்யவேண்டும். சில காலமாக எங்களுக்கும் ஒற்றுமையில்லாததால் பல பிரச்சினைகள் கண்டுக்கொள்ளாமலே விடப்பட்டுவிட்டன.

இல்லையெனில்...வருங்கால சந்ததியினர் நீலகிரி என்றொரு மலைவாழ் பிரதேசம் இருந்தது அங்கே படுக மக்கள் வாழ்ந்தார்கள் என்று பாட புத்தகங்களில் மட்டுமே படிக்க வேண்டியிருக்கும்!!!

No comments:

Post a Comment