Thursday, June 25, 2015

அப்பா ஸ்பெஷல்

அப்பா ஸ்பெஷல்அப்பா ஸ்பெஷல்#1

ஒரு இரவு 1983ஆம் வருடம் என நினைக்கிறேன்...இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் ஊர் முருகனின் தேர்த்திருவிழா கோலாகாலம்.

நாங்கள் சாப்பிட்டு தூங்கிவிட்டோம். நான் அரைத்தூக்கத்தில் இருந்தேன்.

என் அம்மாவும் அப்பாவும் பண்டிகைக்கு பட்ஜெட் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

பலகார சாமான்கள் போக...

எனக்கும் என் சகோதரர்களுக்கும்
சட்டை பேண்ட்,
தங்கைக்கு பாவாடை தாவணி,
அம்மாவுக்கு புடவை,
அப்பாவுக்கு வேஷ்டி சட்டை...
என எல்லாம் முடிவானது.

அப்பா அம்மாவிடம் கேட்டார் 'சுமார் எவ்ளோ ஆகும்?'

அம்மா சொன்னார்கள் 'மூவாயிரத்து சொச்சம்' என்றார்கள்.

'ஓ... மூவாயிரம்தான் இருக்கு' என்றார் அப்பா கொஞ்சம் கவலையுடன்.

எனக்கோ அடுத்த மூன்று நாட்கள் தூக்கம் இல்லை...காரணம் சட்டை அல்லது பேண்ட் இதில் ஏதோ ஒன்றுதான் கிடைக்கும் என்கிற கவலை. பட்ஜட் இல்லை என்றாரே அப்பா...கொஞ்சம் கோபமும் வந்தது அப்பாவின்மேல்...
திருவிழாவுக்கு இரண்டு நாள் முன் எல்லாவற்றையும் வாங்கிவந்துவிட்டார். உடனே ஓடிப்போய் எங்கள் பொருட்களை எடுத்துவிட்டோம்.

ஆனால் ஒன்று மட்டும் அங்கே இல்லை...அது என் அப்பாவின் வேஷ்டி மற்றும் சட்டை.
பண்டிகை நாளில் ஊரே புதுசு புதுசாய் ஆடைகளுடன் உலாவ...போன வருடத்து பழைய துணியில் எல்லோரையும் விட மிக மிக அழகாய் இருந்தார் என் அப்பா. கோயிலில் அலங்காரம் செய்த முருகனைவிட இன்னும் ரொம்ப அழகாய்!!!

--------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா ஸ்பெஷல்#2

தாத்தாக்களின் காலத்தில் அவர்களின் அப்பாக்களின் முன்கூட நிற்காமல் மறைந்து நின்று பேசுவார்களாம்.
என் அப்பாக்களின் காலத்தில் என் தாத்தா முன் பவ்யமாய் நின்று என் அப்பா பேசுவார்..
எங்கள் காலத்தில் அப்பாவுக்கு சரி சமமாய் உட்கார்ந்து அரட்டை அடிப்போம்.
இன்றைய காலத்தில் என் மீது ஏறி நின்று உதைத்து பேசுகிறான் அன்பாய் என் மகன்.
தலை முறையில் இடைவெளி விழவில்லை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கியே வந்துள்ளது!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#3

உங்களுக்கெல்லாம் உங்க அப்பாதான் ஹீரோ.
ஆனா எனக்கு என் அப்பாதான் வில்லன்.
ஆமாம்...
கேட்டதெல்லாம் வாங்கிதந்து, ஆசைப்பட்டதெல்லாம் நிவர்த்தி செய்து
விரும்பியதை படிக்கவைத்து
அவர் செலவில் கல்யாணமும் செய்துவைத்து
அழகான வீட்டையும் கட்டிக்கொடுத்து
கொஞ்சம் சொத்துக்களும் வைத்துவிட்டு
எல்லாமே கொடுத்து என்னை சோம்பேறி ஆக்கிவிட்ட என் அப்பா எனக்கு பிடித்த நல்ல வில்லன்தான்!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#4

எனது அப்பா எங்கள் ஊர் திருவிழாவில் ஒருமுறை மேஜிக் செய்தார். மண்ணை, பொட்டு கடலையாக மாற்றி காட்டினார்.
ஊரும், நானும் வாயைப்பிளந்து ஆச்சர்யப்பட்டோம்.
அன்றிரவு வீட்டுக்கு வந்தவுடன் எப்படிப்பா மணலை, பொட்டு கடலையா மாத்தினீங்கன்னு கேட்டேன்.
அவர் கூலாய்...எல்லாம் உன் அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன் என்றார்.
நான் என் அம்மாவை பார்க்க, என் அம்மாவும் பாராட்டிய அப்பாவை பார்த்து வெட்கத்தில் நெளிந்தாள்.
அம்மாகிட்ட அப்படி என்ன கத்துட்டீங்க என்றேன்.
நானாவது மண்ணை, பொட்டு கடலையாக்குறேன். ஆனா உங்கம்மா ரூபா நோட்டை புடவையாக மாற்றுவாள், பணத்தை நகையாய் கூட மாற்றுவாள் என்று சொல்லிவிட்டு...எஸ்கேப்!!!
ஹேப்பி ஃபாதர்ஸ் டே :)
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#5

எங்க அப்பாவும் நானும் ரொம்ப குளோஸ். என் அண்ணா, என் தங்கை எங்க அம்மாகிட்ட ஒட்டிக்குவாங்க.
என் கல்யாண நாளில் என் அப்பாவின் கண்கள் கலங்க.
ஏம்பா கண்ணு கலங்குதுன்னு கேட்டேன்
அத விடுப்பா என்றார் கண்ணை துடைத்துக்கொண்டே
தங்கச்சி கல்யாணத்துல கூட நீ அழலையேப்பா. என் மேல அவ்ளோ பாசமா? ஆவலாய் கேட்டேன்.
அதில்லப்பா, நான் பட்ட கஷ்டத்தை நீயும் இனி படப்போறியேன்னு நினச்சேன், அதான் அழுகை வந்திடுச்சுன்னு எங்கம்மாவை ஓரக்கண்ணால் பார்க்க... என் அம்மா பொய்யாய் முறைக்க, அதுக்குள்ள அப்பா எஸ்கேப்!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#6

என் அப்பா 30 வருஷத்துக்கு முன் சொன்ன நகைச்சுவை இன்னும் என் மனதில்.
மானேஜர் - யோவ் உன் பேர் என்னய்யா?
கஷ்டமர் - அடைக்கல சாமி
மானேஜர் - வாங்குன லோனை அடச்சியா?
கஷ்டமர் - அடைக்கல சாமி
மானேஜர் - கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஹேப்பி ஃபாதர்ஸ் டே.
--------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பா ஸ்பெஷல்#7

எங்க ஊர்ல ஒரு பாட்டி என் தங்கச்சி கல்யாணத்துக்கு வந்துட்டு எங்கப்பாகிட்டெ சொல்லிட்டு இருந்திச்சி.
குன்னூருக்கு போயும் பஸ்ஸை விட்டேன்,
எல்லனள்ளிக்கு போயும் பஸ்ஸை விட்டேன்,
கேத்தியிலும் பஸ்ஸை விட்டேன். அதான் லேட்டாயிடுச்சு என்றார்.
எங்கப்பா கூலா கேட்டார், எல்லா இடத்திலையும் பஸ்ஸை விட்டீங்களே, அப்ப டிரைவர் என்னப்பண்ணிட்டு இருந்தார்???
ஹேப்பி ஃபாதர்ஸ் டே!!!

No comments:

Post a Comment