Friday, February 13, 2015

பிசாசு - விமர்சனம்.


பிசாசு - விமர்சனம்.

முதல்காட்சியில் கார் மோதி சாகடிக்கப்படும் அழகானப்பெண் தன்னை காப்பாற்ற ஆஸ்பிடலுக்கு கொண்டுப்போன ஹீரோ வயலின் ஆர்டிஸ்ட்டின் கையைப்பிடித்துக்கொண்டு இறக்கிறாள்.

பின்னர் அவன் வீட்டிலேயே பேயாய் தங்கும் அல்லது செய்யும் அட்டகாசங்களும், ஏன் அங்கு தங்கினாள்? தன்னை கொன்றது யார்? என்பதற்கான முடிச்சையும் இறுதியில் அவிழ்த்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.

பக்கா மிஷ்கின் படம். வித்தியாசமான பாத்திர படைப்புக்கள். பாதி நடிகர்கள் வழக்கம்போல் சைக்கோத்தனமான தோற்றங்கள். வித்தியாச கேமரா கோணங்கள், லைட்டிங் என படமுழுக்க திகிலுடனே நகர்கிறது.

கோரம், ரத்தங்கள், வன்முறைகள், அருவருப்பு காட்சிகள் என ஏதுமில்லாமல் படமுழுக்க மெல்லிய சஸ்பென்ஸுடன் எடுத்திருக்கிறார்.

ஆங்காங்கே காமெடிகள் தூவி முதல் பாதியில் படம் பல இடங்களில் சிரிக்கவைத்தாலும் சட்டென்று நிற்க்கும் பிண்ணனி இசை அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு அடுத்து என்ன? என்று நம்மை நினைக்கவைப்பது படத்தின்பலம். அதுவும் முதல் முறை தியேட்டரில் கூட்டத்துடன் பார்க்கும்போது மற்றவர்கள் முன் நம் பயத்தை அலறலாகவோ, கூச்சலாகவோ காட்டாமல் இருக்க கஷ்டப்படவேண்டியதுள்ளது என்பது நிஜம்.பிண்ணனி இசைக்கும், கேமரா கோணங்களுக்கும் முகப்பெரிய ஓ போடாலாம்.

பெண்ணின் அப்பாவைத்தவிர கிட்டத்தட்ட 90 சத நடிகர்கள் எல்லோரும் புது முகங்கள், இசை புதியவர் அதிலும் மிஷ்கின் பேவரைட் வயலின் இசை படமெங்கும்.

மைனஸ் எனப்பார்த்தால் எனக்கு சில கேள்விகள்.

* போன் பேசும்போது வண்டி இடித்ததுக்கூடவா தெரியாது? ஆளே சாகும் அளவுக்கு ஆக்சிடண்ட் ஆகும்போது காரில் அடையாளமோ, கீரலோ தென்படாதா?

* என்ன காரணத்திற்காக இந்த நல்ல பிசாசு ஹீரோ வீட்டில் தங்குகிறது? அப்படியே அவனுக்கு புரியவைக்க தங்கினாலும் அப்படி பயமுறுத்தும் அவசியம் என்ன?

* பெண்ணைக்கொன்றவனை எந்த அப்பா இப்படி சிம்பிளாகவும் ஏற்று செய்த குற்றத்தை மறப்பார்? அதுவும் கத்தியுடன் அலையும் அப்பா ஒரே நிமிடத்தில் மன்னிப்பதென்பது நல்ல காமெடி.

* கடைசி காட்சிகளில் நாயகன் காலை பிடித்து எதற்க்கு தடுக்கிறது?

* பறந்து வரும் இரண்டாவது பேய் யார்? அதுவும் இறந்துபோன உடலை தூக்கிக்கொண்டு கிளைமாக்ஸில் செய்வதெல்லாம் அபத்தம். 

* பேயை விட ஹீரோவின் நடிப்பும், ஆக்டிவிட்டிகளும், முக்கியமாய் அவரின் முடியும் நம்மை எரிச்சல் அடைய வைக்கின்றன. 

ஆனாலும் வித்தியாசமான யாரும் எதிர்ப்பார்க்காத கிளைமாக்ஸையும், திகைக்க வைக்கும் திரைக்கதையையும் கொடுத்த மிஷ்கினையும், தயாரித்த பாலாவையும் வாழ்த்தலாம். இந்தப்படத்தின் மூலம் பேய் இருக்கு என்பதை மிஷ்கின் நம்புகிறார் நம்ப வைக்க முயல்கிறார்.

மனநலம் பாதித்த சிறுவன், மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன், நிறக்குறைப்பாடுக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர், மெய்ஞானம் பேசி காசுப்புடுங்கும் இளைஞன், பார்வையில்லாத சின்னப்பெண் என படமுழுக்க மிஷ்கினின் அட்டகாச டச்.

பிசாசு - வித்தியாசம்!!!No comments:

Post a Comment