Friday, February 13, 2015

அப்பாவின் நினைவுகள்!!!

இன்று என் தந்தையின் மூன்றாவது நினைவு தினம்.
என் மகனின் அழகில்
என்னைக்கண்டு மகிழ்ந்தவர்
என் தந்தை.
என் தந்தையின் உள்ளத்தை
என் மகனில் கண்டு மகிழ்கிறது
என் மனம்!!!
----------------------------------------------------------------------------------------------------------------------

நான் மூன்றாம் வகுப்பு படித்த நேரம். பள்ளித்தொடங்கி ஒரு வாரம் ஆன நேரம். அன்று பள்ளியில் எதேச்சையாக முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த என் புத்தகத்தை பாடம் நடத்த வாங்கியவர், பக்கங்களை புரட்டிவிட்டு என் புத்தகத்தை என்னிடம் திருப்பி கொடுத்துவிட்டு அடுத்த மாணவரிடம் புஸ்தகம் வாங்கி பாடம் நடத்தினார் ஆசிரியர்.

நான் ஏன் என்று புரியாமல் முழிக்க, இறுதியில் கேட்டபோது "உன் புக்குல படங்கள் சரியா பிரிண்ட் ஆகலை, வேற புக்கு வாங்கித்தரச்சொல்லு உங்கப்பாவை" எனச்சொல்லி நகர்ந்துவிடார்.

என் இரட்டை சகோதரனிடம் புத்தகத்தை வாங்கி பார்த்தபோது "ராபர்ட் கிளைவ், ஜான்சிராணி மற்றும் இன்னும் சில படங்கள்" என் புத்தகத்தில் தெளிவாக இல்லை.

இரவு வீட்டுக்கு வந்த அப்பாவிடம் கத்தி சத்தம்போட, "நாளைக்கு புது புக்கு வந்தாத்தான் ஸ்கூலுக்கு போவேன்" என்று அடம்பிடித்தேன்.

பொறுமையாய் புத்தகத்தை வாங்கியவர் " சரி நீ இப்ப தூங்கு" என சொல்லி அனுப்பிவிட்டார்.

காலையில் நான் எழுந்தவுடன் ஸ்கூலுக்கு போகமாட்டேன், புது புக்கு வேணும் என கதற. என் அப்பாவும் என் புக்கை நீட்டினார்.

புக்கை வாங்கி புரட்டி பார்த்த எனக்கு ஆச்சர்யம். என் இரட்டையரின் புத்தகத்தைப்பார்த்து அப்படியே அச்சு அசலாக இரவு முழுக்க உட்கார்ந்து வரைந்திருக்கிறார் என் அப்பா. ஹரியிடம் புத்தகத்தை வாங்கி கம்பேர் செய்ததில் எது ஒரிஜினல், எது வரைந்தது என்பதே தெரியவில்லை.

பள்ளியில் இந்த முறை "ஆசிரியரிடம், புது புக்கு சார்" என என் புஸ்தகத்தை நீட்ட, அவரும் பாடம் நடத்தி திருப்பிக்கொடுத்துவிட்டுப்போனார்.

அந்த வயதில் எனப்பாவுக்கு நான் தேங்ஸ் சொன்னதில்லை. பின்னர் ஒரு நாள் வங்கி ஊழியரான என் அப்பாவுக்கு அவர் படம் வரைந்த அடுத்த நாள் முக்கிய ஆடிட் இருந்ததாய் என் அம்மா சொன்னார்.

அந்த அளவுக்கு வித்தியாசமே தெரியாமல் அச்சு அசலாக வரைந்த என் அப்பாவின் ஓவிய திறமையில் எனக்கும் கொஞ்சம் கொடுத்துவிட்டுப்போனதால்தான் இன்று மூன்று வேளை நிம்மதியாய் உண்கிறேன், வாழ்கிறேன்.

என் முதல் "ஹீரோவின்" மூன்றாம் நினைவு நாளில் இதை எழுதுவதில் பெருமைக்கொள்கிறேன். இதை பதிந்த நேரம் என் கண்களில் கண்ணீர் வந்ததை தடுக்க மனம் வரவில்லை.

I love u dad. Miss u too!!
------------------------------------------------------------------------------------------------------------------


அப்போதேல்லாம் சென்னை கல்லூரியில் படிக்கும்போது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்துவிடுவேன்.
ஒவ்வொருமுறையும் அப்பாவிடம் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என பணம் வாங்கிக்கொண்டு போவேன்.
அதுவும் சென்னைக்கு போகும் நாளின் காலையில் அப்பாவிடம் காசு கேட்பேன்.
அவரும் போகும்போது ஆபீஸுக்கு வந்து வாங்கிட்டுப்போ என்பார். இல்லையென்று சொல்லமாட்டார். எங்கள் ஊரிலிருந்து சென்னை சென்று படித்த இரண்டாவதோ, மூன்றாவதோ ஆள் நான்தான்.
நானும் ஊட்டி சேரிங்கிராஸில் இருக்கும் அப்பா வேலை செய்யும் கோ ஆப்பரேட்டிவ் பேங்கில் போய் நிற்ப்பேன்.
என்னைப்பார்த்தவுடன் பியூன் அண்ணா... வடையும், டீயும் ஆர்டர் செய்வார். நான் பேங்கில் வருவோர் போவோரை பார்த்துக்கொண்டே இருப்பேன்.
என் அப்பாவும் என்னை உட்காரச்சொல்லிவிட்டு மாடிக்கு போவார், வெளியில் இரண்டு மூன்று முறை போய் வருவார்.
நானும் பணம் கொடுக்க இவ்வளவு லேட்டா என் மனதிற்க்குள் திட்டுவேன் அப்பாவை. அங்கே காத்திருக்கும் ஒரு மணி நேரத்தில் பலமுறை அப்பாவை மனதுக்குள் கடிந்துக்கொள்வேன்.
பின்னர் ஈவினிங்கில் நான் கேட்டதை விட அதிகமாக பணம் கொடுத்து அனுப்புவார்.
90களில் ஆயிரம், இரண்டாயிரம் என்பதெல்லாம் பெரிய தொகை. நடுத்தர குடும்பத்தின் நான்கு குழந்தைகளை படிக்கவைத்துக்கொண்டிருக்கும் வங்கி ஊழியரிடம் திடீர் என்று நான் கேட்கும் தொகை இல்லாது... எனக்காக மற்றவர்களிடம் கடன் வாங்கத்தான் மாடிக்கும், வெளியிலும் சென்று வந்துள்ளார் என்பதும், கஷ்டப்பட்டுத்தான் என்னை படிக்க வைத்தார் என்பதும் என் மர மண்டைக்கு நான் அப்பனான பின்னர்தான் புரிந்தது!!!


No comments:

Post a Comment