Friday, February 13, 2015

முதல் சம்பளம்.1996 என நினைக்கிறேன். ஓவியக்கல்லூரியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டிருந்தபோது சென்னையில் "தினபூமி" நாளிதழ் தொடங்கப்பட்டு கொஞ்ச காலமே ஆன நிலையில் "லே அவுட் ஆர்டிஸ்ட்டாக" பார்ட்டைம் வேலை. "அதிர்ஷடம்" எனும் லாட்டரி நாளிதழும் தின பூமியின் அங்கம் என்பதால் மாலை ஆறு மணிமுதல் இரவு 10 மணிவரை பத்திரிகை ஆபீஸே பரபரப்பாய் இயங்கும். லே அவுட் வேலையுடன் துணுக்குகளுக்கும், சிறுகதைகளுக்கும், நகைச்சுவைகளுக்கும் படம் வரைவதும் என் வேலை.

முதன் முதலாக தின பூமிதான் வாரத்தில் ஏழு நாட்களும் இலவச இணைப்பாக புத்தகம் கொடுத்து கலக்கிய காலம். லாட்டரி தாதா "மார்டின்" இவர்தான் ஓனர்.

அப்போதெல்லாம் வாரச்சம்பளம், வாரம் என் சம்பளம் 357 ரூபாய். முதல்வாரம் முடிந்து அன்றைய சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் எல்லோர் முகத்திலும் ஹேப்பி, என் முகத்தில் மட்டும் டென்ஷன். காரணம் முதன் முறையாய் வாழ்க்கையில் சம்பளம் வாங்கப்போகிறேன் என்கிற சந்தோஷ டென்ஷன்.

மாலை ஐந்து மணிக்கு சேர்மன் கூப்பிடுகிறார் என்று சொன்னார்கள். நானும் சென்றேன். ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்டிய பில்லில் கையெழுத்து வாங்கிவிட்டு வெள்ளைக்கவர் ஒன்றைக்கொடுத்து "முதல் சம்பளம் சந்தோஷமா வாங்கிக்கோப்பா" என்றார் சேர்மன்.

நானும் பவ்யமாய் வாங்கி வெளியில் வந்துவிட்டேன். பாக்கெட்டில் வைக்க பாக்கெட் கொஞ்சம் வெயிட்டாய் தொங்கியது. எடிட்டர், புரூஃப் ரீடர், ஆபீஸ் அஸிஸ்டெண்ட் என எல்லோரும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு டிரீட் கொடுப்பா, டீ வாங்கிக்கொடுக்கணும், ஈவினிங் பஜ்ஜி உன் கணக்கு என்று ஆளாளுக்கு கலாய்ப்பாய் சொல்லிவிட்டுப்போனார்கள்.

எனக்கு டென்ஷன் குறையவில்லை, பணத்தை எண்ணிப்பார்க்கணும், முக்கியமா முதல் சம்பளத்தை தொட்டுப்பார்க்கணும் என்கிற ஆவல். எல்லோர் முன் கவரைப்பிரித்தால் அது நன்றாக இருக்காது என்பதால் தவித்துக்கொண்டிருந்தேன்.

சட்டென்று ஐடியா உதிக்க பாத்ரூமுக்குள் சென்றேன். கதவை நன்றாக சாத்திவிட்டு வெயிட்டான கவரை மெதுவா வெளியே எடுக்க, அதில் நான்கு நூறு ரூபாய்களும், ஒரு ஐம்பது ரூபாயும், ஏழு ஒரு ரூபாய் காய்ன்களும் மொத்தம் 457 இருக்க எனக்கு திக் என்றது. காரணம் நூறு ரூபாய் அதிகம்.

தவறுதலாக கொடுத்திருப்பார்களோ, அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா? அப்படியே ஆட்டைய போடலாமா என மோட்டுவளையை ஆராய்ந்துவிட்டு, கடைசியில் சேர்மனிடம் சொல்லிவிடலாம் என முடிவு செய்து. அவர் கதவைத்தட்டினேன்.

"வாப்பா" என்றவர், என்ன வேணும்" என்றார் "நான் மெதுவாய் "சார் நூறு ரூபா ஜாஸ்தி கொடுத்திருக்கீங்க" என்று நூறு ரூபாயை நீட்ட, அது உனக்குத்தான் உன் சம்பளம் 457 ரூபா. உன் பெர்பாமன்ஸ் நல்லா இருந்தது, இப்படியே நல்லா தொடரணும் என்றார். நானும் சந்தோஷத்துடன் வெளியில் வந்தேன். (கையெழுத்துப்போடும்போது டென்ஷனில் அமவுண்ட்டை பார்க்க மறந்துவிட்டேன்).

அன்று இரவு வேலை முடிந்தவுடன் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டுக்கு பிபி போன் செய்து அம்மா, அப்பாவை அழைத்து மஞ்சள் நிற பூத்தில் கண்ணீர் விட்டது வாழ்க்கையின் சந்தோஷ தருணங்கள்.

இன்று லட்சம், லட்சமாக பணத்தைப்பார்த்தாலும், நல்ல சம்பளம் வாங்கினாலும் இப்போதெல்லாம் சம்பள நாளில் பணத்தை நமது வங்கிக்கணக்கில் போட்டுவிடுவதால் கையில் சம்பளம் வாங்கும் அந்த இனிமையான நிகழ்வுகள் காணாமல் போனது வருத்தமே. முதன் முறையாக நானே சம்பாதித்த அந்த 457 ரூபாய் புதுத்தாள்களை தொட்ட நிமிடம் அடைந்த மகிழ்ச்சியை இப்போது எத்தனை லட்சம் கிடைத்தாலும் என் மனம் அடையப்போவதில்லை. அந்த சலவைத்தாள்களை கண்களில் ஒற்றி என் அப்பாவைத்தான் முதலில் நினைத்தேன். அந்த தாளின் மணம் இன்றும் என் நினைவில்...

பணம் அதிகம் கிடைக்க கிடைக்க அந்த பணத்தின் மதிப்பு குறைந்துக்கொண்டே வரும் என்பது காலத்தால் நான் உணர்ந்தப்பாடம். மனிதன் பணத்தை நேசித்து மதிப்புக்குடுக்கலாமே தவிர அதன் மீது அதிக ஆசை வைக்கக்கூடாது என்பதில் இன்றளவும் தெளிவாக இருக்கிறேன்!!!


No comments:

Post a Comment