Friday, February 13, 2015

வார்த்தைகள் இல்லை மகளே!!!





இதோ
தந்தையின் உடல் முன் நீ
இறுதி வணக்கத்துடன்

உன் அழுகையில்
உண்மையான இந்தியனையும்
வளமான பாரதத்தையும் காண்கிறேன்.

உன்
அப்பாவின் ஓய்வூதியம் தாமதமாகலாம்
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்காமல் போகலாம்
ஊடகங்கள் இரண்டொரு நாளில் அப்பாவின் வீரத்தை அழிக்கலாம்
மூன்று மாதத்தில் இந்த அரசே உன் அப்பாவின் தியாகத்தை மறந்துப்போகலாம்
அரசியல்வாதிகள் ஓட்டுக்காகவேண்டுமானால் அப்பாவின் படத்தை உபயோகப்படுத்தலாம்
ஒன்றிரண்டு ஆண்டில் ஊர் மக்களே உன் அப்பாவை நினைவில் வைக்காமல் போகலாம்

காரணம்
மறப்பதும், மறக்கடிக்கப்படுவதும்
மனிதனின் அசிங்க குணம்.

ஆனாலும்
இந்த ஒரு காட்சி போதும்...
உன் அப்பா உன்னை சரியாகத்தான் வளர்த்திருக்கிறார்

நாடும், மக்களும் உன்னையும், உன் குடும்பத்தையும் வஞ்சித்தாலும்
உன் அப்பா நாட்டுக்கும், மக்களுக்கும்
உன்னைக்கொடுத்திருக்கிறார்

உன் மரியாதையும், வீரமும் கலந்த அழுகையும்
என்னைப்போல் ஒவ்வொரு இந்தியனையும் இனி மாற்றும்.

சட்டம் போட்டதால் மட்டுமே
வணக்கம் வைக்கும் பலர் மத்தியில்
உன் வாழ்க்கையையே இழந்தப்பின்னும்
நாட்டையும், தியாகத்தையும்
மதிக்கும் உன்னை என்ன சொல்லி வாழ்த்த?
என்னிடம் வார்த்தைகள் இல்லை மகளே.

ஆமாம்...
நீ இந்தியாவின் மகள்
பாரதத்தாயின் வீர மகள்
எங்களின் ஆருயிர் அன்பு மகள்
வாழிய பல்லாண்டு!!!

ஜெய் ஹிந்த்!!!

No comments:

Post a Comment