Friday, February 13, 2015

கதைச்சொல்லி நாளாயிற்று!!!






உனக்கு எவ்வளவு சொந்தம்?

(10 வயதில் பாட்டி எங்கோ கேட்ட கதையை எங்களுக்கு சொல்ல, நினைவில் நீங்காததை கொஞ்சம் இன்றைய கால நிலைக்கு மாற்றியுள்ளேன்).

கடவுளை ஒருவர் அதிகமாக பிரார்த்தனை செய்தான். கடவுளும் முன் தோன்றினார்.

"என்ன வேண்டும்?" எனக்கேட்டார்.

அவன் "நிறைய நிலம் சொத்தாக வேண்டும்" என்றான்.

கடவுளும், "சரி எவ்வளவு வேண்டும்?" என்றார்

அவனோ தனது கைகளை அகல விரித்து "கண்ணுக்கு எட்டிய தூரம் இருக்கும் நிலம் அத்தனையும்" என்றான்.

கடவுள் சிரித்துக்கொண்டே. "சந்தோஷம். உன் பார்வை அளவை என்னால் சரியாக கணிக்க முடியாது என்பதால், நீ இங்கே இருந்து ஓடத்தொடங்கு, எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ அத்தனை நிலமும் உனக்கே சொந்தம்" என்றார்.

சந்தோஷமாய் ஓட்டத்தை துள்ளலுடன் ஆரம்பித்தான்.

முதலில் அழகான குளம் வந்தது
"இதுவும் எனக்குத்தான், தண்ணீரை விற்று காசாக்கலாம்" என்று ஓடினான்

அடுத்து அழகான சோலை வந்தது
"இதை பூங்காவாக்கி, தீம்பார்க் அமைத்து சம்பாதிக்கலாமென்று இன்னும் ஓடினான்"...கால் கொஞ்சம் வலித்தது...

இன்னும் அடுத்து மிகப்பெரிய வரண்ட பூமி வந்தது
"இதை பிளாட் போட்டு விற்று ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தால் கொள்ளை லாபம்" என்று ஓடினான்.

தாகமெடுத்தது, பசித்தது இன்னும் ஓடினான்...

இப்போது கல் பாறைகள் வந்தது
"அடடா இதில் மார்பிள்கள் வெட்டி கப்பலை விலைக்கு வாங்கலாமென்று" இன்னும் வேகமெடுத்தான்

கால்கள் தள்ளாடியது, நாக்கு வரண்டு உச்சி வெயில் மண்டையை பிளந்தது.

இன்னும்... இன்னும்... ஓடினான்..

இப்போது மணல் மேடு வந்தது
"மணலை விற்று விமானம் வாங்கலாம் என்று ஓடினான்"...தாகமெடுத்தது...

தண்ணி, தண்ணி, என்று ஓடினான்

தளர்ந்தான்...கால்கள் மரத்து வெயிலின் உக்கிரத்தால் விழுந்து சாய்ந்தான். பல மைல்கள் ஓடியதால் மூச்சிறைத்து, தொண்டைக் குழி வற்றி, கண்கள் வெறிக்க இறந்தேப்போனான்.

கடவுள் அவன் முன் நின்று "ஆறடி நிலம்தான் உனக்கு" என்றார்.

ஆசைப்படு, அளவுக்கு மீறி அத்தனைக்கும் ஆசைப்பட்டால் உன் நிலையும் இதுதான்!!!

No comments:

Post a Comment