Friday, February 13, 2015

அப்பாவி பெற்றோர்களே கவனம் பிளீஸ்!!!

சன் டிவியில் கடந்த இரண்டு வருடமாகவும், விஜய் டிவியில் கடந்த ஆறேழு வருடமாகவும், ஜீ தொலைக்காட்சியில் ஒரு வருடமும் என தமிழ் நாட்டைப்பொறுத்த வரையில் தமிழ் தொலைக்காட்சிகள் அப்பாவி பெற்றோர்களை எப்படி ஏமாற்றி தங்களுக்கும் தங்களின் விளம்பரதாரர்களுக்கும் சத்தமில்லாமல் கோடிகளை குவிக்கிறார்கள் என்பதைப்பற்றி சொல்லப்போகிறேன்.

ஆமாம் அதே தான் விஜய் டிவியில் ஏர்டல் சூப்பர் சிங்கர் ஜூனியர்/சீனியர், சன் சிங்கர் ஜூனியர் (ரொம்ப வருஷம் முன்னர் சப்தஸ்வரங்கள்) என இரண்டு நிகழ்ச்சிகளை இந்த முட்டாள் தமிழ் மக்கள் விரும்பிப்பார்க்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தங்கள் மகன்/மகள் வென்று ஈசிஆரிலோ, வண்டலூர் தாண்டியோ 60 லட்சத்தில் வீடு வெல்ல வேண்டும் என ஆசைக்கொண்டு நடுத்தர வர்கத்தினர் தங்கள் பிள்ளைகளை அநியாயத்திற்க்கு கெடுக்கிறார்கள். நன்றாக படிக்கும் பிள்ளைகளின் மனதில் ஆசைக்காட்டி அவர்களின் மீது சினிமா மோகத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிகளின் அரசியல் பற்றி உங்களுக்குத்தெரியுமா???

கொஞ்சம் கண்ணைத்திறங்கள்...

முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்களில் பாடும் பாடகர்களிண் எண்ணிக்கை மிகக்குறைவு. பொதுவாக 60களிலிருந்து 90கள் வரை கணக்கெடுத்தால் நமக்குப்பரிச்சியமான ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய அல்லது சில நூறு பாடல்கள் பாடிய பாடகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ரொம்ப முன்னாடிப்போகாமல் 80கள் முதல் 90கள் வரைப்பார்த்தால் எஸ் பி பி, ஜேசுதாஸ், மலேசிய வாசுதேவன், ரவிச்சந்திரன், ஜானகி, வாணி ஜெயராம், ஷைலஜா, சித்ரா, மனோ, ஸ்ரீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சொர்ணலதா என வெகு சிலப்பாடகர்களே இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுமார் 500 க்கு மேல் பாடல்களையும் பாடியுள்ளனர். அதுமட்டுமல்லாது இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என இசை இயக்குனர்களும் பலப்பாடல்களைப்பாடியுள்ளனர். அவர்களும் பாடல்கள் மூலம் நன்றாக சம்பாதித்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

நிற்க...

விஷயத்திற்க்கு வருகிறேன். 90களின் பின் பாதியில் முதன் முதலில் விஜய் சுப்பர் சிங்கர் ஆரம்பித்தபோது இதன் பிரச்சினை அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெரிய ஆரம்பித்துவிட்டது. தமிழகம், கேரளா முழுக்க பலப்பாடகர்களை கொண்டு வந்து வருடத்திற்க்கு எஞ்சினியரிங் மாணவர்களுக்கு சமமாக பாடகர்களை வெளியில் துப்பிக்கொண்டிருக்கின்றது இந்த டிவிக்கள்.

அதிலும் அவர்களின் விளம்பரங்களைப்பார்த்தால் உங்களுக்கு இது எத்தனை மிகப்பெரிய ஏமாற்று வேலை என்பது விளங்கும். உங்கள் மகன் திரைப்பட பாடகர் ஆகவேண்டுமா? 60 லட்சத்தில் வீடை பரிசாய் அள்ளவேண்டுமா? லட்சம் லட்சமாய் சம்பாதிக்க வேண்டுமா? பேமஸ் ஆகவேண்டுமா? இப்படி பல ஆசைக்கனவுகளைக்காட்டி மக்களையும் குழந்தைகளையும் முட்டாளாக்குகின்றனர். தங்களின் டி ஆர் பிக்காகவும், விளம்பரதாரர்களின் பிராண்டிங்குக்காகவும், முக்கியமாய் செல்போன் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்க்காகவும் இந்த மாதிரி நிகழ்சிகள் நடத்தப்படுகின்றன.

நீங்களே ஆராயுங்கள் கடந்த 5 வருடங்களில் எத்தனைப்பாடர்கள்கள் தமிழ் திரைப்படங்களுக்கு அறிமுகமாயிருக்கிறார்கள்? அல்லது எத்தனைப்பாடகர்கள் சுமார் 50 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்கள்? 80களின் துவக்கத்திலிருந்து இருக்கும் ஒரு சிலப்பாடகர்களைத்தவிர மற்றவர்கள் அனைவரும் சுமார் பத்து அல்லது பதினைந்துப்பாடல்களிலேயே காணாமல் போயிருக்கிறார்கள்.

டிவி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, புகழ் எனும் மாயையில் கல்வியை மறந்துவிட்டு சினிமாவில் சாதிக்கலாம் என்று எண்ணி வாழ்க்கையைத்தொலைத்தவர்கள் ஏராளம். தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை எனக்குத்தெரிந்து சப்த ஸ்வரங்களில் அறிமுகமாகி கடந்த பத்து ஆண்டுகளாக பாடும் ஒரேப்பாடகர் கார்த்திக் மட்டுமே. கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் டிவியால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிப்பெற்றதின் மூலம் ஏ ஆர் ரகுமான் மூலமோ, யுவன் சங்கர் ராஜா மூலமோ பாடியவர்கள் யாருமே 25 பாடல்களை தாண்டவில்லை என்பது நிதர்சனம்.

உங்களுக்கு தெளிவாக விளக்கவேண்டுமெனில் இதே கீழேப்பாருங்கள்.

தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை வருடத்திற்க்கு 200 படங்கள் ரிலீஸ் ஆகிறது என கணக்கு வைத்துக்கொள்வோம்.

அதில் ஒரு படத்தில் ஐந்து பாடல் வீதம் கணக்கெடுத்தால் மொத்தம் 1000 பாடல்கள் வரும்.

அதில் 200 முதல் 250 பாடல்களை இசையமைப்பாளர்களே பாடுகிறார்கள் (இளையராஜா, ரஹ்மான், யுவன், இமான், தமன், ஜிவி, அனிருத்)

அடுத்து சுமார் 50 பாடல்களை ஹீரோக்களும், தொழில்முறை பாடகர்கள் அல்லாதவரும் பாடுகிறார்கள்.(விஜய், சூர்யா, கமல், சிம்பு, தனுஷ்)

சுமார் 50 பாடல்களை புதுமுக பாடகர்கள் அதாவது எதேச்சையாக இசையமைப்பாளர்களின் கண்ணில் பட்டு பாடுபவர்கள் பாடுகிறார்கள்.(கானா பாலா, திருமுருகன், பறவை முனியம்மா மற்றும் பல கிராமத்து பாடகர்கள்).

மீதி 700 பாடல்களில் 400 பாடல்கள் வளர்ந்த பிரபலமான பாடகர்கள் பாடுகிறார்கள் (நமக்கு அதிக காலமாக தெரிந்த பாடகர்கள் கடந்த ஆறேழு ஆண்டுகளில். அதுமட்டுமல்லாது வேற்றுமொழி பிரபலப்பாடகர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்).

ஆக மீதமிருப்பது 300 பாடல்கள். ஆனால் பாட வந்திருப்பவர்களோ சுமார் 500 பேர். இப்போது சொல்லுங்கள் ஒரு பாடகரால் எத்தனைப்பாடல்களைப்பாடி சம்பாதித்து கார் வாங்கி, வீடுவாங்கி, சொத்து வாங்கி செட்டிலாகிவிட முடியும்??? வருடத்திற்க்கு ஐந்து பாடல்கள் பாடினால் அது பெரிய விஷயம். ஒரு பாடலுக்கு 30,000 ரூபாய் வைத்துக்கொள்ளுங்களேன். அவர்களின் வருட வருமானம்??? நான்கு பாடல் பாடினால் வருடம்.1,20,000 கிடைக்கும். சினிமாவின் பகட்டு வாழ்க்கைக்கு இது போதுமா? ஏதோ மேடைப்பாடல்களால், கலைச்சேவைகளால் இன்னும் கொஞ்சம் காசு கிடைக்கலாம். ஆனால் அதற்க்கும் கடுமையான போட்டி உண்டு.

கணக்குப்போட்டு பார்த்தால் இந்த டிவிக்கள் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. நானும் சினிமாத்துறையில் பழக்கமுண்டு என்பதால் பாடகர்களின் பிரச்சினைகளை அறிவேன். ஒரு பாடலுக்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதனையும் அறிவேன். அதுவும் ஒரு பாடலுக்கு டிராக் பாடிவிட்டு வந்தப்பின் இசையமைப்பாளர் அழைப்பார் என்றுக்காத்துக்கிடப்பதும், படம் ரிலீஸ் ஆனப்பின் தான் பாடிய பாட்டை வேறு சிங்கர் பாடியிருப்பதை அறிந்து மனம் பாதித்தவர்கள் ஏராளம்.

இப்போதுப்பாடப்படும் பாடல்களில் கிட்டதட்ட 80 சதவீதப்பாடகர்கள், பாடகிகளின் பெயரே நமக்குத்தெரிவதில்லை. காரணம் ஒரு சிலப்பாடலோடு அவர்கள் இடத்தை காலிசெய்வதால் அந்தக்குரல்கள் நமக்குப்பிடிப்படாமல் போவது இயற்கை.

இப்போது சொல்லுங்கள் வருடத்திற்க்கு சுமார் 50, 60 பாடகர்களை உருவாக்கி ஆட்டு மந்தைப்போல் சினிமாவுக்கு அனுப்பினால் அவர்களால் எப்படிப்பாடமுடியும் அதிகப்பாடல்களை? எப்படி பிரபலமாகமுடியும் மக்கள் மனதில்?

ஆக உங்கள் குழந்தைகளுக்கு பாட இஷ்டமெனில் பாடல் கற்றுக்கொடுங்கள் அதைவிட்டு சினிமாவில் பாடி சம்பாதிக்கும் ஆசையில் அவர்களை பாடச்சொல்லி வற்புறுத்தி படிப்பையும் கெடுத்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிடாதீர்கள்.

இன்னொன்று முக்கியமாக சொல்லியே ஆகவேண்டும். விஜய் டிவியில் சூப்பர் சிங்கரான பல பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல தமிழ் பேசும் கேரளக்காரர்கள் என்பது எத்தனைப்பேருக்குத்தெரியும்??? ஏன் நடுவர்கள்கூட முக்கால்வாசிப்பேர் மலையாளிகள். ஏன் தமிழில் பாடகர்கள் இல்லையா??? விஜய் டிவியில் நடக்கும் பாலிடெக்ஸும், மக்களின் எஸ்எம்எஸ் மூலம் வெற்றி என்று சொல்லி பலக்கோடி எஸ்எம்எஸ்களால் கோடிகளை சம்பாதித்து விட்டு அதற்க்கு முன்பே வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டு கொடுக்கப்படும் மிகப்பெரிய செக்கில் பிரிண்ட் செய்து அதை அவர்களும் பெறும் காட்சியும் கண்டிருப்பீர்கள்.

இறுதியாக குழந்தைகளை நல்ல முறையில் வளருங்கள், அனைத்தையும் கற்றுக்கொடுங்கள், நல்ல பிள்ளைகளாய் வளரட்டும் அதை விட்டுவிட்டு விளம்பர மோகத்தில் அழிந்துப்போக அனுமதிக்காதீர்!!! போட்டி உலகாக காட்டி அவர்களின் பகிர்ந்துவாழும் முறையை சிதைக்காதீர்கள்!!! அதிலும் இடையிடையே காட்டப்படும் ஊனமுற்றவர்கள் பாடியும், அவர்களை வாழ்த்தியும் அவர்கள் செய்யும் நாடகங்கள் எல்லாம் வெறும் டிஆர்பிக்காக மட்டுமே.

இன்னுமாடா இவனுங்கள நம்புறீங்க??? முட்டாள் மக்களே, உங்க பேராசையில தீய வெக்க!!!

பிடித்திருப்பின் ஷேர் செய்யுங்கள், மக்கள் மனதில் பதியட்டும்!!!

2 comments:

  1. தாங்கள் கூறியது சரி

    ReplyDelete
  2. சினிமாவில பாடிதான் பிரபலம் ஆகவேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் தான் இந்த ஏமாற்றுவேலைகளுக்கு பலிகடா.

    ReplyDelete