Monday, November 3, 2014

முன்னறியிப்பு - மலையாளம்Munnariyippu


"மற்றவர்களை நாம் வெளித்தோற்றத்தையும், அவர்களின் பேச்சையும் மட்டும் வைத்து எடைப்போடுவது நல்லதா" என்பதை வித்தியாசமாக சொல்லியிருக்கும் படம்.

சமீபத்தில் பார்த்து வியந்த உச்சக்கட்ட திரில்லர். பாடல்கள், சண்டைக்காட்சிகள், ஆராவாரங்கள், அதிசியங்கள், கவர்ச்சி காட்சிகள், பன்ச் வசனங்கள், சூப்பரான ஹீரோ என்ட்ரி என ஒன்றுமே இல்லாமல் அமைதியாக நகரும் திரில்லர் படத்தை இப்படி கொடுக்க முடியுமா? என ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்.

மம்மூக்காவின் நடிப்பில் இன்னொரு மணிமகுடம். மனுஷன் அனாயசமாய் வாழ்ந்துவிட்டுபோயிருக்கிறார். முக்கியமாய் எல்லாப்படங்களிலும் நடந்த சம்பவத்திற்க்கு பிளாஷ்பேக் மூலமோ அல்லது கிளைக்கதையின் மூலமோ சஸ்பென்ஸை உடைப்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் படம் முடிந்து வெளியே வரும்போதும் விடைத்தெரியாமல் மனதில் ஆயிரமாறியம் சிந்தனைகளுடன் போகிறோம். அதுதான் படத்தின் மிகப்பெரிய வெற்றி. ஏன்? எதற்கு? எப்படி? என்பது அந்த டைரக்டருக்கேக்கூட தெரிந்திருக்கவாய்ப்பில்லை. நச்சென்று நம் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார். அதுவும் அந்த கடைசி "5 நொடி கிளைமாக்ஸ் காட்சி" நம்மை கதிகலங்க வைக்கும். எனக்குத்தெரிந்து மிகக்குறுகிய மணித்துளியில் ஒரு அட்டாகாசமான யாருமே எதிர்ப்பார்க்காத முடிவு. வாவ் அட்டகாசம்.

ஃபிரீலான்ஸ் எழுத்தாளரான அஞ்சலி அராக்கல் (அபர்னா கோபினாத்) அடுத்த மாதம் ரிட்டய்ர்ட் ஆகப்போகும் போலீஸ் அதிகாரி ராம மூர்த்தியின் (நெடுமுடி வேணு) சுயசரிதையை எழுத முன்வந்து அவரை சந்திக்கிறார். அவரின் அனுபங்களை இன்னும் சிறப்பானதாக எழுத மறக்கமுடியாத சில நினைவுகளையும், நபர்களையும் பற்றி கேட்க ராம மூர்த்தி அவர்கள் தனக்குப்பிடித்த சி கே ராகவன் (மம்முட்டி) எனும் ஆயுள் கைத்தியை அறிமுகப்படுத்துகிறார். தனது மனைவியையும், மார்வாடிப்பெண்ணையும் கொலை செய்து எரித்த வழக்கில் 14 வருடம் தண்டனைப்பெற்று தண்டனைக்காலம் முடிந்தும் வெளியே செல்லாமல் சிறையிலேயே இருக்கிறார். அவரைப்பேட்டிக்காணும் அஞ்சலி அவரின் அசாத்திய பேச்சுத்திறமையையும், ஷார்ப்பான கருத்துக்களையும் கேட்டு நெகிழ்கிறார். "நான் கொலை செய்யவில்லை" "நான் கொலை செய்யவில்லை" என அடிக்கடி ராகவன் சொல்வதை கருத்தில் கொண்டு அவரைக்காப்பாற்ற நினைக்கிறார். அவரின் டைரியில் எழுத்தியிருக்கும் சம்பவங்களைக்கண்டு அதை ஆர்டிகலாக ஆங்கில வார இதழில் வெளியிட இந்தியா முழுக்க அந்தக்கட்டுரை அதிர்வலைகளை ஏற்ப்படுத்து நல்லப்பெயரை அஞ்சலிக்கு பெற்றுத்தருகின்றது. பின்னர் ராகவனிடம் பேசி அவரின் வாழ்க்கை கதையை எழுதி புத்தகமாக வெளியிட விடுதலை செய்து வெளியே கூட்டி வருகிறாள். பெரிய கார்பொரேட் பப்ளிஷிங் கம்பெனியிடம் புத்தகத்தை வெளியிட பெரிய தொகையை அட்வான்ஸாகவும் வாங்குகிறாள்.

வெளியில் வந்த ராகவனை ஒரே மாதத்தில் எழுதி முடிக்கச்சொல்லி தங்கும் இடமும் மூன்று வேளை சாப்பாடும் கொடுக்கிறாள். ஒருக்கட்டத்தில் அஞ்சலிக்கு ராகவன் எதுவுமே எழுதாமல் இருப்பது வெறுப்பை கொடுக்கின்றது. நாட்கள் நகர நகர ராகவன் எதுவும் எழுதாதலாலும், எப்படித்தொடங்குவது என அறியாததாலும் வெறுப்பை சம்பதிக்கிறார். கார்பொரேட் பப்ளிஷிங் கம்பெனியும் அஞ்சலியை நெருக்க அஞ்சலி இறுதியாக வேறு வழியில்லாமல் ராகவணை கண்டிக்கிறாள். இன்னும் நான்கு நாட்கள்தான் இருப்பதாக சொல்ல அந்த நான்காவது நாளும் வருகின்றது. அஞ்சலி ராகவனை கோபமாக பேசி எங்காவதுப்போய் தொலையுங்கள் எனச்சொல்லி கட்டிலின் அருகில் அழுதுக்கொண்டு உட்கார. மெதுவாக வரும் ராகவன் அவளிடம் தான் எழுதிய பேப்பர்களை கத்தையாக கொடுக்கிறான். அதைப்படித்த அஞ்சலி சொல்லமுடியாத முகபாவங்களுடன் அவனை ஏறிட்டுப்பார்க்க அடுத்து நடக்கும் அதிசியத்தை தியேட்டரில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதில் இயக்குனர் வேணு திறமை ராகவன் கொலை செய்த காரணத்தை கடைசிவரை சொல்லாமல் காப்பாற்றுவதோடுமட்டுமல்லாமல் படம் பார்ப்பவர்களின் யூகத்திக்கு விட்டுவிடும் வித்தியாசமான முயற்ச்சியை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். மிக மெதுவாகவும் பரபரப்பில்லாமல் நகரும் கதையில் நம்மை இறுதிவரை சீட்டின் நுனியில் பதபதப்படன் உட்கார வைக்கிறார். இந்தப்படம் கட்டாயம் சமீபத்தில் வந்த அருமையான எக்ஸ்பிரிமெண்டல் மூவி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்தப்படத்தில் நடிக்க முதலில் ஸ்ரீனிவசனை அணுகி அவரின் தேதி பிரச்சனையால் மம்மூக்கா நடிக்க, மம்மூக்காவுக்கு அடித்தது லக். மலையாள ஹீரோக்களால் மட்டுமே முடியும்...எந்த பரபரப்புமில்லாமல், பந்தாவுமில்லாமல் கதைக்குள் தங்களை வடித்துக்கொள்ள. அதுவும் மிகப்பிர்பலாமான ஹீரோ பிரிதிவிராஜ் இரண்டே காட்சிகளில் கேமியோ ரோலில் வருகிறார். நம்ம ஊர் நடிகர்கள் இப்படியான படங்களில் நடிப்பார்களா என்பதும் மலையாளத்தில் ஏற்றுக்கொண்டதைப்போல் வெற்றியடைய செய்வார்களா என்பது கேள்விக்குறியே. மம்மூக்கா 45 வயது ரோலில் தன்னை முழுமையாக உட்படுத்தி ஷார்ப்பான சிந்திக்கத்தோன்றும் வசனங்களை கலக்கலாகப்பேசி அருமையான திரைப்படம் பார்த்த திருப்தியை தருகிறார்.

பத்திரிகையாளராக அபர்னா கோபினாத் எல்லா வித எக்ஸ்பிரஷன்களை அனாயாசமாக காட்டி அசத்துகிறார். தனது இயலாமையையும், பப்ளிஷிங் கம்பெனியின் நெருக்குதலை அறிந்து தவிப்பது யதார்த்தம்.

அமைதியான இசை, பாடல்கள் இல்லாத கதை, நேர்மையான ஒளிப்பதிவு கிட்டத்தட்ட 80 சதம் ஒரு அறைக்குள் என ஒவ்வொன்றும் படத்திற்க்கு பலம். ஒளிப்பதிவிம், இயக்கம், கதை என பல பரிமாணங்களில் முன்னாளைய கேமரமேன் இந்தப்படத்தின் இயக்குனர் வேணுவுக்கு பல அவார்டுகள் காத்திருக்கின்றது என்பது நிச்சயம். படம் உங்களின் மனதை ஒருவாரமாவது டிஸ்ட்ரப் செய்யும் என்பது உண்மை.

நல்ல படங்களை விரும்பவர்கள் இந்த படத்தை மிஸ் செய்யாமல் இந்த கிளாசிக் படத்தை பாருங்கள் என்பது ஆசை!!!No comments:

Post a Comment