Monday, November 3, 2014

முன்னறியிப்பு - மலையாளம்Munnariyippu


"மற்றவர்களை நாம் வெளித்தோற்றத்தையும், அவர்களின் பேச்சையும் மட்டும் வைத்து எடைப்போடுவது நல்லதா" என்பதை வித்தியாசமாக சொல்லியிருக்கும் படம்.

சமீபத்தில் பார்த்து வியந்த உச்சக்கட்ட திரில்லர். பாடல்கள், சண்டைக்காட்சிகள், ஆராவாரங்கள், அதிசியங்கள், கவர்ச்சி காட்சிகள், பன்ச் வசனங்கள், சூப்பரான ஹீரோ என்ட்ரி என ஒன்றுமே இல்லாமல் அமைதியாக நகரும் திரில்லர் படத்தை இப்படி கொடுக்க முடியுமா? என ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்.

மம்மூக்காவின் நடிப்பில் இன்னொரு மணிமகுடம். மனுஷன் அனாயசமாய் வாழ்ந்துவிட்டுபோயிருக்கிறார். முக்கியமாய் எல்லாப்படங்களிலும் நடந்த சம்பவத்திற்க்கு பிளாஷ்பேக் மூலமோ அல்லது கிளைக்கதையின் மூலமோ சஸ்பென்ஸை உடைப்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் படம் முடிந்து வெளியே வரும்போதும் விடைத்தெரியாமல் மனதில் ஆயிரமாறியம் சிந்தனைகளுடன் போகிறோம். அதுதான் படத்தின் மிகப்பெரிய வெற்றி. ஏன்? எதற்கு? எப்படி? என்பது அந்த டைரக்டருக்கேக்கூட தெரிந்திருக்கவாய்ப்பில்லை. நச்சென்று நம் சிந்தனைக்கே விட்டுவிடுகிறார். அதுவும் அந்த கடைசி "5 நொடி கிளைமாக்ஸ் காட்சி" நம்மை கதிகலங்க வைக்கும். எனக்குத்தெரிந்து மிகக்குறுகிய மணித்துளியில் ஒரு அட்டாகாசமான யாருமே எதிர்ப்பார்க்காத முடிவு. வாவ் அட்டகாசம்.

ஃபிரீலான்ஸ் எழுத்தாளரான அஞ்சலி அராக்கல் (அபர்னா கோபினாத்) அடுத்த மாதம் ரிட்டய்ர்ட் ஆகப்போகும் போலீஸ் அதிகாரி ராம மூர்த்தியின் (நெடுமுடி வேணு) சுயசரிதையை எழுத முன்வந்து அவரை சந்திக்கிறார். அவரின் அனுபங்களை இன்னும் சிறப்பானதாக எழுத மறக்கமுடியாத சில நினைவுகளையும், நபர்களையும் பற்றி கேட்க ராம மூர்த்தி அவர்கள் தனக்குப்பிடித்த சி கே ராகவன் (மம்முட்டி) எனும் ஆயுள் கைத்தியை அறிமுகப்படுத்துகிறார். தனது மனைவியையும், மார்வாடிப்பெண்ணையும் கொலை செய்து எரித்த வழக்கில் 14 வருடம் தண்டனைப்பெற்று தண்டனைக்காலம் முடிந்தும் வெளியே செல்லாமல் சிறையிலேயே இருக்கிறார். அவரைப்பேட்டிக்காணும் அஞ்சலி அவரின் அசாத்திய பேச்சுத்திறமையையும், ஷார்ப்பான கருத்துக்களையும் கேட்டு நெகிழ்கிறார். "நான் கொலை செய்யவில்லை" "நான் கொலை செய்யவில்லை" என அடிக்கடி ராகவன் சொல்வதை கருத்தில் கொண்டு அவரைக்காப்பாற்ற நினைக்கிறார். அவரின் டைரியில் எழுத்தியிருக்கும் சம்பவங்களைக்கண்டு அதை ஆர்டிகலாக ஆங்கில வார இதழில் வெளியிட இந்தியா முழுக்க அந்தக்கட்டுரை அதிர்வலைகளை ஏற்ப்படுத்து நல்லப்பெயரை அஞ்சலிக்கு பெற்றுத்தருகின்றது. பின்னர் ராகவனிடம் பேசி அவரின் வாழ்க்கை கதையை எழுதி புத்தகமாக வெளியிட விடுதலை செய்து வெளியே கூட்டி வருகிறாள். பெரிய கார்பொரேட் பப்ளிஷிங் கம்பெனியிடம் புத்தகத்தை வெளியிட பெரிய தொகையை அட்வான்ஸாகவும் வாங்குகிறாள்.

வெளியில் வந்த ராகவனை ஒரே மாதத்தில் எழுதி முடிக்கச்சொல்லி தங்கும் இடமும் மூன்று வேளை சாப்பாடும் கொடுக்கிறாள். ஒருக்கட்டத்தில் அஞ்சலிக்கு ராகவன் எதுவுமே எழுதாமல் இருப்பது வெறுப்பை கொடுக்கின்றது. நாட்கள் நகர நகர ராகவன் எதுவும் எழுதாதலாலும், எப்படித்தொடங்குவது என அறியாததாலும் வெறுப்பை சம்பதிக்கிறார். கார்பொரேட் பப்ளிஷிங் கம்பெனியும் அஞ்சலியை நெருக்க அஞ்சலி இறுதியாக வேறு வழியில்லாமல் ராகவணை கண்டிக்கிறாள். இன்னும் நான்கு நாட்கள்தான் இருப்பதாக சொல்ல அந்த நான்காவது நாளும் வருகின்றது. அஞ்சலி ராகவனை கோபமாக பேசி எங்காவதுப்போய் தொலையுங்கள் எனச்சொல்லி கட்டிலின் அருகில் அழுதுக்கொண்டு உட்கார. மெதுவாக வரும் ராகவன் அவளிடம் தான் எழுதிய பேப்பர்களை கத்தையாக கொடுக்கிறான். அதைப்படித்த அஞ்சலி சொல்லமுடியாத முகபாவங்களுடன் அவனை ஏறிட்டுப்பார்க்க அடுத்து நடக்கும் அதிசியத்தை தியேட்டரில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதில் இயக்குனர் வேணு திறமை ராகவன் கொலை செய்த காரணத்தை கடைசிவரை சொல்லாமல் காப்பாற்றுவதோடுமட்டுமல்லாமல் படம் பார்ப்பவர்களின் யூகத்திக்கு விட்டுவிடும் வித்தியாசமான முயற்ச்சியை கட்டாயம் பாராட்டியே ஆகவேண்டும். மிக மெதுவாகவும் பரபரப்பில்லாமல் நகரும் கதையில் நம்மை இறுதிவரை சீட்டின் நுனியில் பதபதப்படன் உட்கார வைக்கிறார். இந்தப்படம் கட்டாயம் சமீபத்தில் வந்த அருமையான எக்ஸ்பிரிமெண்டல் மூவி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இந்தப்படத்தில் நடிக்க முதலில் ஸ்ரீனிவசனை அணுகி அவரின் தேதி பிரச்சனையால் மம்மூக்கா நடிக்க, மம்மூக்காவுக்கு அடித்தது லக். மலையாள ஹீரோக்களால் மட்டுமே முடியும்...எந்த பரபரப்புமில்லாமல், பந்தாவுமில்லாமல் கதைக்குள் தங்களை வடித்துக்கொள்ள. அதுவும் மிகப்பிர்பலாமான ஹீரோ பிரிதிவிராஜ் இரண்டே காட்சிகளில் கேமியோ ரோலில் வருகிறார். நம்ம ஊர் நடிகர்கள் இப்படியான படங்களில் நடிப்பார்களா என்பதும் மலையாளத்தில் ஏற்றுக்கொண்டதைப்போல் வெற்றியடைய செய்வார்களா என்பது கேள்விக்குறியே. மம்மூக்கா 45 வயது ரோலில் தன்னை முழுமையாக உட்படுத்தி ஷார்ப்பான சிந்திக்கத்தோன்றும் வசனங்களை கலக்கலாகப்பேசி அருமையான திரைப்படம் பார்த்த திருப்தியை தருகிறார்.

பத்திரிகையாளராக அபர்னா கோபினாத் எல்லா வித எக்ஸ்பிரஷன்களை அனாயாசமாக காட்டி அசத்துகிறார். தனது இயலாமையையும், பப்ளிஷிங் கம்பெனியின் நெருக்குதலை அறிந்து தவிப்பது யதார்த்தம்.

அமைதியான இசை, பாடல்கள் இல்லாத கதை, நேர்மையான ஒளிப்பதிவு கிட்டத்தட்ட 80 சதம் ஒரு அறைக்குள் என ஒவ்வொன்றும் படத்திற்க்கு பலம். ஒளிப்பதிவிம், இயக்கம், கதை என பல பரிமாணங்களில் முன்னாளைய கேமரமேன் இந்தப்படத்தின் இயக்குனர் வேணுவுக்கு பல அவார்டுகள் காத்திருக்கின்றது என்பது நிச்சயம். படம் உங்களின் மனதை ஒருவாரமாவது டிஸ்ட்ரப் செய்யும் என்பது உண்மை.

நல்ல படங்களை விரும்பவர்கள் இந்த படத்தை மிஸ் செய்யாமல் இந்த கிளாசிக் படத்தை பாருங்கள் என்பது ஆசை!!!அப்போத்திகரி - மலையாளம்Apothecary - Malayalam

மம்முட்டியின் முன்னுயிர்ப்பு பார்த்த பரவசத்திலிருந்து மீளாத எனக்கு அடுத்த பிரமிப்பும் உடனே கிடைத்தது அப்போத்தி கிரி மூலம். "மேல் விலாசம்" (http://www.bluehillsbook.blogspot.com/2014/07/address.html) என்கிற ரியல்டைம் மூவி மேக்கிங்கில் அசத்திய இயக்குனர் மாதவ் ராமதாசத்தின் அடுத்தப்படைப்பு. "அப்போத்திகரி" என்பது பழைய காலங்களில் பொது நலத்தோடு மக்களுக்காக வேலை செய்யும் மருத்துவர்களுக்கான  பாரம்பரிய பெயர்.

மருத்துவ உலகத்தில் கார்ப்பொரேட்கள் நுழைந்து வெளிநாட்டு மருந்துகளுக்காகவும், அந்நிய நாட்டு மருந்துகளின் சோதனைகளைக்காகவும் ஏழை மக்களின் உடலை உயிரோடு இருக்கும்போதே அறிவியல் கூடத்தில் சோதனைக்கு சிக்கிய எலியின் நிலையைப்போல்... இந்திய ஏழைகள் மருத்துவமனைகளின் புது மருந்துகளுக்கு பலியாகும் இன்னொரு பக்கத்தை அருமையான திரில்லர் மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பலப்படங்களில் பார்த்த சுரேஷ் கோபியின் மிகவும் அமைத்தியான மாறுப்பட்ட பாத்திரம் இந்தப்படத்தில், கேரக்டர்களுக்காக தங்களை எந்தநிலைக்கும் மாற்றிக்கொள்ளும் ஜெயசூர்யா மற்றும் ஆசிஃப் அலி என இருவரின் கூட்டணியில் படம் நம்மை அருமையான ஃபிசிகாலிஜிகல் திரில்லர் பார்த்த திருப்தி.

அப்போத்திகிரி எனும் கார்பொரேட் ஆஸ்பிடல் மிகப்பரிய கட்டடமாகவும், எல்லாவித ஐடெக் வசதிகளை கொண்டதாகவும் திறக்கப்படுகின்றது. அதில் மூளை சம்பந்தப்பட்ட மருத்துவ ஜீனியஸ் சுரேஷ் கோபி. அவரின் மனைவி அபிராமி ரீ எண்ட் ரிக்கொடுத்திருக்கும். இரு குழந்தைகளுடன் குடும்பம் இனிமையானதாகக்கழிய...படத்தின் முதல் காட்சியில் ரோட்டில் ஏற்ப்பட்ட ஆக்ஸிடெண்டால் அதே மருத்துவமனைக்கு சுரேஷ் கோபியை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். மருத்துவமனையின் இன்வெஸ்மெண்ட்டை திருப்பி எடுக்க வெளிநாட்டு மருந்துவகம்பெனிகளின் புதிய மருந்துகளை சோதனை செய்ய பணம் கட்டமுடியாத அப்பாவி ஏழைகளை தேர்ந்தெடுத்து ஆராய்சிகள் மேற்க்கொள்ளும் இன்னொரு முகமும் அந்த மருத்துவமனைக்கு உண்டு. நல்ல மருத்துவராக இருந்தும் சுரேஷ் கோபியும் வேறு வழியில்லாமல் அதற்க்கு துணைப்போகிறார். பின்னர் ஒரு கட்டத்தில் சுரேஷ் கோபி விபத்தால் கோமா நிலைக்கு தள்ளப்பட அவரையும் அந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்த மருத்துவ நிர்வாகம் ரகசியமாய் முடிவெடுக்கின்றது. அதே வேளையில் ஜெயசூர்வாயின் அட்டகாச அறிமுகம் சுரேஷ் கோபியிடம் வரும் அவர் அவரின் கைகளைப்பற்றி உங்கள் கை "கடவுளின் கை" ஆனால் என்ன செய்ய மருத்துமனையின் சதியால் எங்களை நீங்கள் அந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தினீர்கள் என சொல்லி தனது கதைகளை சொல்ல ஆரம்பிக்கிறார்.

மூளையில் நரம்பு பிரச்சினையால் அடிக்கடி வலியால் துடிக்கும் ஏழை விவசாயியின் மகன் ஜெயசூர்யா அவளின் அன்புக்காதலி மீரா நந்தன், தாய், தந்தை, தம்பி. ஆபரேஷனுக்கு 8 லட்சம் ஆவதால் ஒரு கட்டத்தில் கட்டமுடியாமல்போக இவரையும் ஆராய்சிக்கு உட்படுத்த சுரேஷ் கோபி தள்ளப்படுகிறார், மூளைக்காய்ச்சலால் வரும் ஏழை முஸ்லிம் பெண் சகீரா, படத்தில் திடீரென்று சஸ்பென்ஸ் எண்ட்ரி கொடுக்கும் உச்சக்கட்ட நோயாளி ஆசிப் அலி. பின்னர் இவர்கள் எல்லோரும் யார்? எந்த நிலையில் இருக்குறார்கள் இறுதியில் சுரேஷ் கோபி நலமானாரா? என்பதை திரில்லராய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை காரணம் அவரின் முழு தகுதி அவரின் முழுப்படத்திலேயே தெரிந்துவிட்டது. முதல் படத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியின் ராணுவ வீரரின் நிலையை சொன்னவர் இந்தப்படத்தில் மருத்துவமனையின் கொடூர முகத்தை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சுரேஷ் கோபி பல வருட இடைவெளிக்கும்பின் திரும்பி வந்தாலும் 2013 மற்றும் 2014 வருடங்களில் தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பது சிறப்பு. பலப்படங்களில் கர்ஜித்து போலீஸ் அதிகாரியாக நடித்தாலும் இந்தப்படத்தில் அமைத்தியான கருணை உள்ளம் கொண்ட மருத்துவராய் நடித்திருக்கிறார். தனது இயலாமையால் நம்மை கலங்கவைக்கிறார். படத்தில் முக்கால்வாசி நேரம் படுக்கையிலேயே கிடந்தாலும் கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நடிப்பு ஏ ஒன். அவ்வப்போது தன்னால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பேஷ்ண்ட்டுகளின் நினைவுகள் வந்து மிரட்டும்போது இவரின் நடிப்பு பிரமாதம். அதுவும் அந்த ஃபிரிட்ஜுக்குள்லிருந்து வரும் ஆசிப் அலியின் காட்சி ஒன்றுப்போது.

படத்திற்க்காக மொட்டைப்போட்டும் எப்படிப்பட்ட பாடி லாங்குவேஜ் செய்ய சொன்னாலும் செய்யும் ஜெயசூர்யாவும், ஆசிப் அலியும் மிகப்பெரிய ஃபேன் பேஸ் கொண்டிருந்தாலும் கதைக்காக மாற்றிக்கொள்ளும் அவர்களின் நடிப்புக்கு சரியான தீனி.

இன்னும் படத்தில் பல நடிகர்கள் தங்களின் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பிட்டு சொன்னால் அந்த தமிழ் சிறுமி, முஸ்லிம் நோயாளியாக வரும் பெண், ஜெயசூர்யாவின் தந்தையாக வரும் காமெடி நடிகர் இந்திரன் என எல்லோரும் பாராட்டவேண்டியவர்களே. கேமரா, பிண்ணனி இசை அல்லாமே அழகு.

அறிவியலில் ஆராய்சிகள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. மருத்துவ ஆராய்சிகள் விலங்குகள் மீதும், மனிதர்கள் மீதும் ரகசியமாய் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அந்த ஆராய்ச்சிகள் பணமில்லாத ஏழை நோயாளிகளிடமும், போதுமான அறிவு இல்லாத கிராமத்தினர் மீதும் அவர்களுக்கு தெரிவிக்கப்பாடாமல் செய்வது என்பது மிகப்பெரிய குற்றம். ஃபைவ் ஸ்டார் ஆஸ்பிடலுக்கு நிகராக வசதிகளைக்கொண்ட மருத்துவ உலகம் இதை செய்துக்கொண்டுதான் இருக்கின்றது. அரசு தேவையான நடவடிக்கைகளை சரியானப்படி எடுக்கவில்லையெனில் மக்களின் உயிர் போய்க்கொண்டுதான் இருக்கும். போல்டாக இந்தப்படத்தை கொடுத்த இயக்குனருக்கு ஒரு சல்யூட். இதே மாதிரி தமிழில் "ஈ" படம் வந்திருந்தாலும் மையக்கரு ஒன்றுதான் என்றாலும் பிரசண்ட்டேஷன் இந்தப்படத்தில் அட்டகாசம்.

நல்லப்படம் வேண்டுவோர் கட்டாயம் பாருங்கள். உங்களின் திருப்திக்கு நான் கியாரண்டி.

அப்போத்திகிரி - நோயாளிகள் அங்கு வரும் மக்கள் அல்ல அந்த மருத்துவமனைகளே உண்மையான நோய் பரப்பும் ஆராய்ச்சிக்கூடங்கள்.
          .