Friday, October 24, 2014

கத்தி - தமிழ்
விமர்சனம் எழுதும் முன் "வாட் ஈஸ் விமர்சனம்?" என்பதை சொல்லிவிடுகிறேன். இதை குமுதம், ஆனந்த விகடன் மற்றும் ஃபேஸ்புக் விமர்சனப்புலிகள் அனைவரும் உங்களின் மண்டையில் கத்தியைக்கொண்டு கீறி கல்வெட்டாய் பதிந்துக்கொள்ளுங்கள்.

"விமர்சனம் என்பது யாதெனில், ஒரு படத்தில் அந்த நடிகர் நடிகையினரின் கதாப்பாத்திரங்களையும், கதை அம்சத்தையும் அதனால் அவர்கள் சொல்ல வந்த கருத்துக்களை அலசி ஆராய்ந்து நம் கருத்தை சொல்வதே விமர்சனம். விமர்சனங்களில் கலைஞர்களின் நடிப்பைத்தவிர்த்து அவர்களின் சொந்தக்கதைகளை ஒப்பிடுவது விமர்சனம் அல்ல அவ்வாறு செய்தால் அது தனி மனித தாக்குதல்".

துப்பாக்கி என்கிற மாபெரும் வெற்றிப்படத்திற்க்குப்பின் முருகதாசும், விஜயும் இணைந்திருக்கும் படம் கத்தி. ஏகப்பட்ட பிரச்சனைகள், பரபரப்புகள் மட்டுமல்லாது பல இயக்குனர்களின் அதே ஹீரோவுடனான இரண்டாவதுப்படங்கள் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது என்கிற சென்ட்டிமெண்டுடனும் முக்கியமாய் சமந்தாவுக்கு தமிழில் இனி வாழ்வா சாவா என பலப்பல எதிர்ப்பார்ப்புகளுடன் வந்திருக்கும் படம் கத்தி.

முருகதாஸ் தன்னுடைய படங்களில் ஏதாவது சோஷியல் மெசேஜ் வைத்திருப்பார் அதையும் கமர்ஷியலாக சொல்வார். உலகத்திற்க்கு தேவையான தண்ணீர் தேவையை ஷார்ப்பாய் மக்களின் இதயங்களில் இறக்கியிருக்கிறார். லாஜிக்கெல்லாம் ரொம்பவும் ஆராய்ச்சிசெய்யாமல் படத்தோடு மீண்டும் ஒன்றவைத்திருக்கிறார். அதுவும் சினிமாவிலும் கார்ப்பொரேட் கலாச்சாரம் வந்தப்பின் அதே கார்பொரேட்களின் அடுத்தப்பக்கங்களை 70 எம்எம் ஸ்கிரீனிலும் வெளிச்சம்போட்டு ரோட்டுக்கு இழுத்திருக்கிறார். அதற்க்கும் ஒரு தைரியம் வேண்டும். அதனால்தான் இந்திய சினிமா கார்ப்பொரேட்கள் படமெடுக்க தயங்கியதால் இலங்கையின் "லைக்காவை" நாடியிருப்பாரோ??? இந்த படத்தையும் திமுக வுக்கு எதிராக ஒரு வசனம் வருவதால் சேட்டிலைட் ரைட்ஸை ஜெயா டிவி வாங்கியுள்ளதோ???

கதை: கோலா கம்பெனிக்காக பல நூறு கிராமங்களை விலைக்கு வாங்கினாலும் ஜீவானந்தம் என்கிற இளைஞனால் பூமிக்கு கீழ் நீரோட்டம் இருக்கும் "தென்னூத்து" என்கிற கிராமம் மட்டும் அவர்களுக்கு எதிராகப்போராடுகிறது. ஜீவானந்தத்தை கொல்ல கார்பொரேட் கம்பெனி ஆள் அனுப்ப ரோட்டில் சுட்டுவிட்டு செல்கிறார்கள் குண்டர்கள். கல்கத்தா சிறையிலிருந்து தப்பிய கத்தி என்கிற கதிரேஷன் (இன்னொரு விஜய்) அவரைக்காப்பாற்றி ஆள்மாராட்டம் செய்து ஜீவானந்தத்தை ஜெயில்லுக்கு மீண்டும் அனுப்புகிறார். ஜீவானந்தத்தின் ஹோல்ட் ஏஜ் ஹோமில் தஞ்சமடையும் கதிரேசன் பின்னர் உண்மையான போராட்ட பிரச்சனையைப்புரிந்துக்கொண்டு மக்களுக்கு உதவ சமந்தாவின் காதலும் இணைய, இறுதியில் அந்தக்கிராமத்தின் நிலை என்ன அவர்களின் கனவு பலித்ததா என்பதை மனம் வலிக்க சொல்லி சில காட்சிகளில் அழவும் வைத்துவிடுகிறார் முருகதாஸ்.

முருகதாஸ்: இவரைப்பார்க்க சாதாரணமாய் தெரிந்தாலும் இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை எகிரச்செய்யும் இயக்குனர். (மாலத்தீவு வரும் அன்று (ஜனவரி 02, 2014) இவரை நான் சென்னை ஏற்ப்போர்ட்டில் சந்தித்தேன். பாடலுக்கான லொகேஷன் பார்க்க வந்திருந்தார்). இப்போதைக்கு இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர். ரமணாவில் கார்பொரேட் ஹாஸ்பிடல், கஜினியில் குழந்தைகள் கடத்தல், துப்பாக்கியில் கார்பொரேட் தீவிரவாதம், கத்திப்படத்தில் மிக முக்கியமான தண்ணீரின் தேவையையும், விவசாயத்தையும் மறந்துவிட்ட மக்களின் நெஞ்சிலும், அதை அபகரித்த ரியல் எஸ்டேட் மற்றும் கார்பொரேட் கம்பெனிகளின் பிசினஸிலும் கத்தியை ஆழமாக இறக்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புளூபிரின்ட் எஃபக்ட்ஸ் கலக்கல். அப்பாடா...நல்ல வேளை ஜீவானந்தமும், கதிரேசனும் இரட்டையர்கள் என்று சொல்லாமல் இருந்ததற்க்காக முருகதாசை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

விஜய்: ஒரே மாதிரியான டபுள் ரோல், ஜீவானந்தம் அமைதியானவர் கதிரேஷன் ஆக்ரோஷமானவர் ஜெயிலில் இருந்து தப்பிக்கும்போதும், சம்ந்தாவிடம் வழியும்போதும், பிரச்சனையைப்புரிந்துக்கொண்டு பொங்கும்போது மனதில் நிற்க்கிறார். அதிலும் விவசாயிகளின் தற்கொலையைப்பார்த்து கதறி அழும்போது நடிப்பில் மிளிர்கிறார். டான்சில் வழக்கம்போல் ஆர்ப்பாட்டம் முக்கியமாய் செல்ஃபி பாடல். சமந்தா பாவம் ஆடமுடியாமல் தவிப்பது மூவ்மெண்ட்டுகளில் தெரிகிறது. கோலாவுக்கு விளம்பரத்தில் முன்னர் நடித்திருந்தாலும் இனி நடிக்கமாட்டார் விஜய். அவரை மாற்றிய கதையில் அவர் நடித்ததும் பாராட்டவேண்டிய விஷயமே.

சமந்தா: அதிகமில்லையென்றாலும் வந்துப்போகிறார். பெரிதாக ஒன்றும் சொல்ல இல்லை.

நிதின் முகேஷ் : வழக்கமான ஸ்மார்ட் வில்லன். விஜயைக்கொல்ல ஆட்களை அனுப்பியே வேலைக்காகாமல் கடைசியில் செத்துப்போகிறார்.

சதீஷ்: அவ்வப்போது காமெடி செய்கிறார் படமுழுக்க விஜய்க்குதுணையாக வந்துப்போகிறார்.
மற்ற நடிகர்கள்: படத்தில் நான்குப்பேரைத்தவிற மற்றவர்கள் எல்லோரும் அறிமுகமில்லாத நடிகர்கள். அத்தனைப்பெரியவர்களும் படமுழுக்க பரவி தங்களது பலத்தை படத்திற்க்கு சேர்த்திருக்கிறார்கள்.

வசனம்: படத்தில் பல வசனங்கள் நம் நெற்றிப்பொட்டை அறைகின்றன. வசனகர்த்தா முருகதாஸுக்கு பிக் சல்யூட். கம்யூனிசத்திற்க்கு கொடுக்கும் விளக்கமும் அந்த ஆறு நிமிட பேட்டியும் கட்டாயம் யோசிக்க வைக்கின்றன. 

இசை: அனிருத் படத்தின் இன்னொரு தூண். முதல் இரண்டுப்பாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அடுத்தடுத்த பாடல்களில் ஆடவைக்கிறார். பிண்ணனி இசையும் பிரமாதம்.

ஒளிப்பதிவு: வறட்சியான பூமியையும், வயதானவர்கள் மிகுந்த ஹோல்ட் ஏஜ் ஹோம்களையும் ரசிக்கும்ப்படி செதுக்கியிருக்கிறார் வில்லியம்ஸ்.

மை வியூ: கிட்டத்தட்ட பல விஷயங்களை முருகதாஸ் நம் வாழ்க்கையிலிருந்தே எடுத்திருக்கிறார். முதல் காட்சியில் இன்னொரு கைதி எப்படி தப்பித்தார் என காட்டி கதிரேஷன் தப்பிப்பதும் இந்தியாவில் நடந்திருக்கிறது. சிறைச்சாலைகளில் பல விஷயங்களுக்கு கைதிகளே போலீசுக்கு உதவுவதும் ஒரு திருடனின் கோணம் இன்னொரு திருடனுக்கும் தெரியும் என்பதும் நிஜம் என்பதால் இதை லாஜிக் மீறலாக நான் பார்க்கவில்லை. ஆனால் படத்தில் விஜய் பல பேரை அடிப்பதும் காய்ன் சுண்ட சுண்ட மெயின் ஆஃப் செய்து அடிப்பது கொஞ்சம் ஓவர். பல நேரங்கள் வில்லன் ஆள் அனுப்பிக்கொண்டே சண்டைப்போடுவது கொஞ்சம் எரிச்சலைத்தருகிறது. இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம். காரணம் கார்பொரேட்களின் டெக்னிக்குகளுக்கு முன் சாதாரண மனிதர்களால் சமாளிக்க முடியாது.
இரட்டை வேடங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம். அது விஜயின் தவறா இல்லை முருகதாசின் அலட்சியமா என்பது தெரியாது.

இரண்டாவதாக தீர்ப்புக்கு ஐந்து நாள் இருக்கும்போது எல்லா ஏரிகளையும் அடைத்து போராடுவதென்பது இயலாத காரியம். அதேமாதிரி 2500 வெளினாட்டில் இருப்பவர்களிடம் சைன் வாங்கி கேசை இழுத்தடிப்பதென்பதெல்லாம் சினிமாவில்தான் முடியும்.

இந்தியாவைப்பொறுத்தவரை மக்கள் போராட்டமெல்லாம் முருகதாஸ் எதிர்ப்பார்ப்பதுப்போல் எல்லாம் நடந்துவிடாது. அதுவும் நகர மக்களின் பரபரப்புகளுக்கிடையே அவர்களை வெறும் ஐந்து நிமிட பேட்டியில் சேர்ப்பதென்பது நடக்காதக்காரியம். ஊழல்களும், மக்களின் வாழ்வாதாரப்போராட்டங்களும் இறுதியில் "சோறு முக்கியம்" என்பதால் அவரவர் அவர்களின் சொந்தப்பிரச்சினைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதால் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்றாலும் நல்ல பிரச்சனைக்காக மக்கள் வீதிக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இனியாவது வரவேண்டும்.
ஃபைனல் வெர்டிக்ட்: முதலில் கொஞ்சம் சுலோவாக ஆரம்பித்து ஜீவானந்தத்தை கதிரேஷன் சந்திக்கும் இடத்திலிருந்து சூடு பிடிக்க ஆரம்பித்து மொத்தப்படமும் பிரச்சார டாகுமென்ட்ரியாக இருந்துவிடாமல் கமர்ஷியலாகவும் ரசித்து, சிந்திக்கவைத்து தியேட்டரை விட்டு வெளியேறிப்போகும்போது கொடுத்த காசுக்கும் இடைவேளையில் கொஞ்சமேனும் கோக் குடிப்பதை யோசிக்க வைத்ததிலும், வீட்டுக்குப்போய் அரிசியில் கை வைக்கும்போது விவசாயிகளை ஒருமுறையேனும் நினைவில் வரச்செய்ததிலும் முருகதாஸின் வெற்றி நிச்சயமாக்கப்ப்ட்டுள்ளது. ஆனாலும் இன்னும் திரைக்கதையில் லாஜிக் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாய் பேசப்பட்டிருக்கும்.

இனியாவது நம்மை வாழவைக்கும் விவசாயிகளுக்குப்பிரச்சனையெனில் நாம் ஒன்றாக இணைவோம்.

கத்தி - காய்கறிகளையும் வெட்டலாம், தவறு செய்பவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் மிரட்டலாம்!!!

No comments:

Post a Comment