Friday, October 24, 2014

ஷாப்பிங்க் செல்கிறீர்களா? கொஞ்சம் யோசிங்க மக்களே!!!
திருவிழாக்காலம். ஊரெங்கும் கொண்ட்டாட்டங்கள் ஆரம்பம். மக்களும் கூட்டம்கூட்டமாய் பொருட்கள் வாங்க, துணிகள் வாங்க, பட்டாசுகள் வாங்க சாரை சாரையாய் படையெடுக்கிறார்கள். இதில்தான் உங்களுக்கு ஒன்றை ஞாபகமூட்ட வந்திருக்கின்றேன்.

ஆமாம்...துணிகள் வாங்குவதைப்பற்றித்தான். நீங்கள் ஆடம்பரமாக துணிகள் வாங்கச்செல்லும்போது நடக்கும் கூத்துக்கள் ஓராயிரம் உண்டு. காலையில் துணிக்கடைக்குப்போய் மத்தியானம் தாண்டி ஒன்றிரண்டு துணிகளுடன் வருபவர்களும் உண்டு. பொதுவாக பெண்கள் துணிக்கடையில் செலவழிக்கும் நேரம் ரொம்ப அதிகம் என்று கணிப்புகள் சொல்லுகிறது.

அப்படி துணிக்கடைக்குச்செல்லும்முன் நான் சொல்லப்போகும் பாயிண்டுகளை கொஞ்சம் காதில் வாங்கிக்கொள்ளுங்களேன்.

காரணம் நம் திருவிழாக்காலங்களின் நம் மகிழ்ச்சிகளுக்குப்பின் பலரின் இருண்ட பக்கங்கள் உண்டு. நம் சந்தோஷத்திற்க்காக அவர்களின் சந்தோஷத்தை மறந்துவிட்டு நமக்காக வேர்வை சிந்த, 14 மணிநேர கால்வலிக்க ஓய்வின்றி அல்லல் படும் கிராமங்களிலிருந்து நகரம் வந்த ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும்தான். பலமாடி துணிக்கடைகளிளோ அல்லது நகைக்கடையிலோ மட்டுமல்லாது ரோட்டோர கடைகளிலோ தங்கள் குடும்பத்தின் வறுமைப்போக்க இந்தியாவின் பல லட்ச மனிதர்கள் சந்தோஷங்களை மறந்து பொய்யாய் முகத்தில் இன்முகம் காட்டி நமக்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை மகிழ்ச்சிப்படுத்த கீழே எழுதியிருக்கும் நடவடிக்கைகளை மேற்க்கொண்டால் அவர்களும் மகிழ்வார்கள் நாமும் மகிழ்வோம்.

1. துணிக்கடைக்கும் போகும்முன் தயவு செய்து என்ன வாங்கப்போகிறீர்கள் என்பதை தோராய லிஸ்ட்டாகவோ அல்லது மனதிலோ வைத்துக்கொள்ளுங்கள். வரவேற்ப்பறையில் இருக்கும் மானேஜரிடமோ அல்லது சூப்பர்வசரிடமோ எது எது எங்கெங்கு கிடைக்கும் என்பதை கேட்டுத்தெளிந்துக்கொள்ளுங்கள்.

2. என்ன கலரில் துணிகள் எடுக்கலாம் என்பதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள். முன்னமே உங்களின் தேவையை பிரதினிதியிடம் தெளிவாக சொல்லிவிடுங்கள்.

3. அங்கிருக்கும் சேல்ஸ்பெர்சன்ஸ்களிடம் முன்னமே உங்களின் பட்ஜெட்டை சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் நல்ல டிசைன் வேண்டுமென்று 600 ரூபாயிலிருந்து ஆரம்பித்து கடைசியில் இரண்டாயிர விலையில் துணிகள் எடுக்கும்போது செலவாகும் அதிக நேரமும்,  உங்களின் முடிவெடுக்கும் சமயமும் அதிகமாகி குழப்பத்தைக்கொடுக்கும். விற்ப்பனைப்பிரதநிதிகளுக்கும் கஷ்டத்திக்கொடுக்கும்.

4. முதலில் சிறிய விலையிருக்கும் ரக துணிகளை எடுத்துவிட்டு இறுதியாக அதிக விலையிருக்கும் ரக துணிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. பொதுவாக கூட்டமாக சென்றால் பலரின் விருப்பமும், தேர்வும்மாறுப்பட்டு இருப்பதால் நேரமாகி முடிவெடுப்பதில் சிக்கல் உண்டாகி விற்ப்பனைப்பிரதநிதிகளின் கோபத்திற்க்கு உள்ளாக நேரிடும்.

6. இன்முகத்துடன் விற்ப்பனை பிரதநிதியை அணுகுங்கள், அதனால் அவரோ/அவளோ உங்களுக்கு முதலிலேயே நல்ல அழகான துணிகளை காட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

7. மனம் ஒரு குரங்கு அடுத்தவர் ஒரு துணியை எடுத்தால் நமக்கும் அதுப்பிடிக்கும், நாம் செலக்ட் செய்ததை தவிர்க்க நினைப்போம் எனவே அந்தமாதிரி குழப்பங்களை ஏற்ப்படுத்த வேண்டாம்.

8. பொதுவாக திருவிழாக்காலங்களில் மொத்த கூட்டமும் திருவிழாவுக்கு ஒரு நாளோ இரண்டு நாளோ இருக்கும்போது போகாமல் இரண்டு வாரத்திற்க்கு முன்னமே சென்றால் நல்ல டிசைன்களையும் நல்ல தரத்துடனும் வாங்கலாம். அது மட்டுமல்லாமல் விற்பனையாளர்கள் கூட பொறுமையாக துணிகளை காட்டுவார்கள். கூட்ட நெரிசலும் இருக்காது.

9. எந்தப்பொருட்கள் வாங்கினாலும் கடைகளில் விற்ப்பனையாளர்கள் கொஞ்சம் அதிக வர்ணனை கூட்டி கொஞ்சம் அதிகப்படியாக சொல்லுவார்கள் ஆகவே பொருட்களை வாங்குமுன் நாலு இடத்திலோ அல்லது இணையத்திலோ விசாரித்து தெளிவடைந்து பொருட்கள் வாங்க செல்லலாம்.

10. எதற்க்கெல்லாமோ ஊதாரித்தனாமாக செலவு செய்துவிட்டு வாங்கும் துணிகளுக்காக பத்து கடைகள் ஏறி இறங்கவேண்டாம். ஒரு முறை அல்லது இருமுறை சென்றப்பின் எந்தக்கடையில் என்னப்பொறுட்கள் எப்படியான தரத்தில் இருக்கும் என்கிற ஐடியா கிடைத்தவுடன் அடுத்தமுறை அந்தக்கடைக்கு மட்டுமே சென்றால் நேரமும் காலமும் மிச்சமாகும். அப்படியே பல கடைகளில் விலை வித்தியாசம் அப்படியொன்று அதிகமாக இருக்க வாய்ப்பில்லை எனவே சிக்கனப்படுத்த தேவையற்ற அலைச்சல் வேண்டாம்.

11. கைக்குழந்தைகளையோ அல்லது சிறுக்குழந்தைகளையோ கூடவே அழைத்துக்கொண்டு சுற்றாமல் வீட்டில் விடலாம் இல்லையெனில் குடும்பத்தில் யாராவது ஒருவரை கடையின் முன் அறையில் கவனிக்கொச்சொல்லிவிட்டு செல்லலாம்.

12. துணிக்கடை அடைப்பதற்க்கு ஒரு இரண்டு மணி நேரம் முன்னதாக செல்லவும். இல்லையெனில் இரு பக்க அவசரத்தால் நிம்மதியாக வாங்க வாய்ப்பில்லை. கடை பிரதிநிதிகள் வீட்டுக்கு செல்லும் அவசரத்திலிருப்பதால் முன்னமே செல்வது நலம்.

திருவிழாக்காலங்களில் நமக்கு உண்டாகும் அதேயளவு மகிழ்ச்சிதான் கடைகளில் வேலைசெய்பவர்களுக்கும் இருக்கும் என்பதால் நம்முடைய மகிழ்ச்சி என்பது அடுத்தவரின் வெறுப்பிலிருந்து உண்டாவதைவிட அடுத்தவரின் மகிழ்ச்சியிலிருந்து உண்டானால் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியும், திருவிழாவின் உண்மையான அர்த்தமும் கிடைக்கும் என்பதி ஐயமில்லை.

என் கருத்தோடு உங்கள் கருத்தும் ஒன்றானால் இந்தப்பதிவை ஷேர்செய்து ஷாப்பிங் செல்பவர்களின் கண்களில் இந்தப்பதிவைக்காட்டுங்கள்.

No comments:

Post a Comment