Friday, October 24, 2014

கத்தி - தமிழ்
விமர்சனம் எழுதும் முன் "வாட் ஈஸ் விமர்சனம்?" என்பதை சொல்லிவிடுகிறேன். இதை குமுதம், ஆனந்த விகடன் மற்றும் ஃபேஸ்புக் விமர்சனப்புலிகள் அனைவரும் உங்களின் மண்டையில் கத்தியைக்கொண்டு கீறி கல்வெட்டாய் பதிந்துக்கொள்ளுங்கள்.

"விமர்சனம் என்பது யாதெனில், ஒரு படத்தில் அந்த நடிகர் நடிகையினரின் கதாப்பாத்திரங்களையும், கதை அம்சத்தையும் அதனால் அவர்கள் சொல்ல வந்த கருத்துக்களை அலசி ஆராய்ந்து நம் கருத்தை சொல்வதே விமர்சனம். விமர்சனங்களில் கலைஞர்களின் நடிப்பைத்தவிர்த்து அவர்களின் சொந்தக்கதைகளை ஒப்பிடுவது விமர்சனம் அல்ல அவ்வாறு செய்தால் அது தனி மனித தாக்குதல்".

துப்பாக்கி என்கிற மாபெரும் வெற்றிப்படத்திற்க்குப்பின் முருகதாசும், விஜயும் இணைந்திருக்கும் படம் கத்தி. ஏகப்பட்ட பிரச்சனைகள், பரபரப்புகள் மட்டுமல்லாது பல இயக்குனர்களின் அதே ஹீரோவுடனான இரண்டாவதுப்படங்கள் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது என்கிற சென்ட்டிமெண்டுடனும் முக்கியமாய் சமந்தாவுக்கு தமிழில் இனி வாழ்வா சாவா என பலப்பல எதிர்ப்பார்ப்புகளுடன் வந்திருக்கும் படம் கத்தி.

முருகதாஸ் தன்னுடைய படங்களில் ஏதாவது சோஷியல் மெசேஜ் வைத்திருப்பார் அதையும் கமர்ஷியலாக சொல்வார். உலகத்திற்க்கு தேவையான தண்ணீர் தேவையை ஷார்ப்பாய் மக்களின் இதயங்களில் இறக்கியிருக்கிறார். லாஜிக்கெல்லாம் ரொம்பவும் ஆராய்ச்சிசெய்யாமல் படத்தோடு மீண்டும் ஒன்றவைத்திருக்கிறார். அதுவும் சினிமாவிலும் கார்ப்பொரேட் கலாச்சாரம் வந்தப்பின் அதே கார்பொரேட்களின் அடுத்தப்பக்கங்களை 70 எம்எம் ஸ்கிரீனிலும் வெளிச்சம்போட்டு ரோட்டுக்கு இழுத்திருக்கிறார். அதற்க்கும் ஒரு தைரியம் வேண்டும். அதனால்தான் இந்திய சினிமா கார்ப்பொரேட்கள் படமெடுக்க தயங்கியதால் இலங்கையின் "லைக்காவை" நாடியிருப்பாரோ??? இந்த படத்தையும் திமுக வுக்கு எதிராக ஒரு வசனம் வருவதால் சேட்டிலைட் ரைட்ஸை ஜெயா டிவி வாங்கியுள்ளதோ???

கதை: கோலா கம்பெனிக்காக பல நூறு கிராமங்களை விலைக்கு வாங்கினாலும் ஜீவானந்தம் என்கிற இளைஞனால் பூமிக்கு கீழ் நீரோட்டம் இருக்கும் "தென்னூத்து" என்கிற கிராமம் மட்டும் அவர்களுக்கு எதிராகப்போராடுகிறது. ஜீவானந்தத்தை கொல்ல கார்பொரேட் கம்பெனி ஆள் அனுப்ப ரோட்டில் சுட்டுவிட்டு செல்கிறார்கள் குண்டர்கள். கல்கத்தா சிறையிலிருந்து தப்பிய கத்தி என்கிற கதிரேஷன் (இன்னொரு விஜய்) அவரைக்காப்பாற்றி ஆள்மாராட்டம் செய்து ஜீவானந்தத்தை ஜெயில்லுக்கு மீண்டும் அனுப்புகிறார். ஜீவானந்தத்தின் ஹோல்ட் ஏஜ் ஹோமில் தஞ்சமடையும் கதிரேசன் பின்னர் உண்மையான போராட்ட பிரச்சனையைப்புரிந்துக்கொண்டு மக்களுக்கு உதவ சமந்தாவின் காதலும் இணைய, இறுதியில் அந்தக்கிராமத்தின் நிலை என்ன அவர்களின் கனவு பலித்ததா என்பதை மனம் வலிக்க சொல்லி சில காட்சிகளில் அழவும் வைத்துவிடுகிறார் முருகதாஸ்.

முருகதாஸ்: இவரைப்பார்க்க சாதாரணமாய் தெரிந்தாலும் இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை எகிரச்செய்யும் இயக்குனர். (மாலத்தீவு வரும் அன்று (ஜனவரி 02, 2014) இவரை நான் சென்னை ஏற்ப்போர்ட்டில் சந்தித்தேன். பாடலுக்கான லொகேஷன் பார்க்க வந்திருந்தார்). இப்போதைக்கு இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர். ரமணாவில் கார்பொரேட் ஹாஸ்பிடல், கஜினியில் குழந்தைகள் கடத்தல், துப்பாக்கியில் கார்பொரேட் தீவிரவாதம், கத்திப்படத்தில் மிக முக்கியமான தண்ணீரின் தேவையையும், விவசாயத்தையும் மறந்துவிட்ட மக்களின் நெஞ்சிலும், அதை அபகரித்த ரியல் எஸ்டேட் மற்றும் கார்பொரேட் கம்பெனிகளின் பிசினஸிலும் கத்தியை ஆழமாக இறக்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த புளூபிரின்ட் எஃபக்ட்ஸ் கலக்கல். அப்பாடா...நல்ல வேளை ஜீவானந்தமும், கதிரேசனும் இரட்டையர்கள் என்று சொல்லாமல் இருந்ததற்க்காக முருகதாசை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

விஜய்: ஒரே மாதிரியான டபுள் ரோல், ஜீவானந்தம் அமைதியானவர் கதிரேஷன் ஆக்ரோஷமானவர் ஜெயிலில் இருந்து தப்பிக்கும்போதும், சம்ந்தாவிடம் வழியும்போதும், பிரச்சனையைப்புரிந்துக்கொண்டு பொங்கும்போது மனதில் நிற்க்கிறார். அதிலும் விவசாயிகளின் தற்கொலையைப்பார்த்து கதறி அழும்போது நடிப்பில் மிளிர்கிறார். டான்சில் வழக்கம்போல் ஆர்ப்பாட்டம் முக்கியமாய் செல்ஃபி பாடல். சமந்தா பாவம் ஆடமுடியாமல் தவிப்பது மூவ்மெண்ட்டுகளில் தெரிகிறது. கோலாவுக்கு விளம்பரத்தில் முன்னர் நடித்திருந்தாலும் இனி நடிக்கமாட்டார் விஜய். அவரை மாற்றிய கதையில் அவர் நடித்ததும் பாராட்டவேண்டிய விஷயமே.

சமந்தா: அதிகமில்லையென்றாலும் வந்துப்போகிறார். பெரிதாக ஒன்றும் சொல்ல இல்லை.

நிதின் முகேஷ் : வழக்கமான ஸ்மார்ட் வில்லன். விஜயைக்கொல்ல ஆட்களை அனுப்பியே வேலைக்காகாமல் கடைசியில் செத்துப்போகிறார்.

சதீஷ்: அவ்வப்போது காமெடி செய்கிறார் படமுழுக்க விஜய்க்குதுணையாக வந்துப்போகிறார்.
மற்ற நடிகர்கள்: படத்தில் நான்குப்பேரைத்தவிற மற்றவர்கள் எல்லோரும் அறிமுகமில்லாத நடிகர்கள். அத்தனைப்பெரியவர்களும் படமுழுக்க பரவி தங்களது பலத்தை படத்திற்க்கு சேர்த்திருக்கிறார்கள்.

வசனம்: படத்தில் பல வசனங்கள் நம் நெற்றிப்பொட்டை அறைகின்றன. வசனகர்த்தா முருகதாஸுக்கு பிக் சல்யூட். கம்யூனிசத்திற்க்கு கொடுக்கும் விளக்கமும் அந்த ஆறு நிமிட பேட்டியும் கட்டாயம் யோசிக்க வைக்கின்றன. 

இசை: அனிருத் படத்தின் இன்னொரு தூண். முதல் இரண்டுப்பாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அடுத்தடுத்த பாடல்களில் ஆடவைக்கிறார். பிண்ணனி இசையும் பிரமாதம்.

ஒளிப்பதிவு: வறட்சியான பூமியையும், வயதானவர்கள் மிகுந்த ஹோல்ட் ஏஜ் ஹோம்களையும் ரசிக்கும்ப்படி செதுக்கியிருக்கிறார் வில்லியம்ஸ்.

மை வியூ: கிட்டத்தட்ட பல விஷயங்களை முருகதாஸ் நம் வாழ்க்கையிலிருந்தே எடுத்திருக்கிறார். முதல் காட்சியில் இன்னொரு கைதி எப்படி தப்பித்தார் என காட்டி கதிரேஷன் தப்பிப்பதும் இந்தியாவில் நடந்திருக்கிறது. சிறைச்சாலைகளில் பல விஷயங்களுக்கு கைதிகளே போலீசுக்கு உதவுவதும் ஒரு திருடனின் கோணம் இன்னொரு திருடனுக்கும் தெரியும் என்பதும் நிஜம் என்பதால் இதை லாஜிக் மீறலாக நான் பார்க்கவில்லை. ஆனால் படத்தில் விஜய் பல பேரை அடிப்பதும் காய்ன் சுண்ட சுண்ட மெயின் ஆஃப் செய்து அடிப்பது கொஞ்சம் ஓவர். பல நேரங்கள் வில்லன் ஆள் அனுப்பிக்கொண்டே சண்டைப்போடுவது கொஞ்சம் எரிச்சலைத்தருகிறது. இதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம். காரணம் கார்பொரேட்களின் டெக்னிக்குகளுக்கு முன் சாதாரண மனிதர்களால் சமாளிக்க முடியாது.
இரட்டை வேடங்களில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கலாம். அது விஜயின் தவறா இல்லை முருகதாசின் அலட்சியமா என்பது தெரியாது.

இரண்டாவதாக தீர்ப்புக்கு ஐந்து நாள் இருக்கும்போது எல்லா ஏரிகளையும் அடைத்து போராடுவதென்பது இயலாத காரியம். அதேமாதிரி 2500 வெளினாட்டில் இருப்பவர்களிடம் சைன் வாங்கி கேசை இழுத்தடிப்பதென்பதெல்லாம் சினிமாவில்தான் முடியும்.

இந்தியாவைப்பொறுத்தவரை மக்கள் போராட்டமெல்லாம் முருகதாஸ் எதிர்ப்பார்ப்பதுப்போல் எல்லாம் நடந்துவிடாது. அதுவும் நகர மக்களின் பரபரப்புகளுக்கிடையே அவர்களை வெறும் ஐந்து நிமிட பேட்டியில் சேர்ப்பதென்பது நடக்காதக்காரியம். ஊழல்களும், மக்களின் வாழ்வாதாரப்போராட்டங்களும் இறுதியில் "சோறு முக்கியம்" என்பதால் அவரவர் அவர்களின் சொந்தப்பிரச்சினைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருப்பதால் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்றாலும் நல்ல பிரச்சனைக்காக மக்கள் வீதிக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இனியாவது வரவேண்டும்.
ஃபைனல் வெர்டிக்ட்: முதலில் கொஞ்சம் சுலோவாக ஆரம்பித்து ஜீவானந்தத்தை கதிரேஷன் சந்திக்கும் இடத்திலிருந்து சூடு பிடிக்க ஆரம்பித்து மொத்தப்படமும் பிரச்சார டாகுமென்ட்ரியாக இருந்துவிடாமல் கமர்ஷியலாகவும் ரசித்து, சிந்திக்கவைத்து தியேட்டரை விட்டு வெளியேறிப்போகும்போது கொடுத்த காசுக்கும் இடைவேளையில் கொஞ்சமேனும் கோக் குடிப்பதை யோசிக்க வைத்ததிலும், வீட்டுக்குப்போய் அரிசியில் கை வைக்கும்போது விவசாயிகளை ஒருமுறையேனும் நினைவில் வரச்செய்ததிலும் முருகதாஸின் வெற்றி நிச்சயமாக்கப்ப்ட்டுள்ளது. ஆனாலும் இன்னும் திரைக்கதையில் லாஜிக் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாய் பேசப்பட்டிருக்கும்.

இனியாவது நம்மை வாழவைக்கும் விவசாயிகளுக்குப்பிரச்சனையெனில் நாம் ஒன்றாக இணைவோம்.

கத்தி - காய்கறிகளையும் வெட்டலாம், தவறு செய்பவர்கள் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் மிரட்டலாம்!!!

இயக்குனர் சுசீந்திரனுக்கு என் கேள்விகள் - ஜீவா!!!வாழ்த்துக்கள். ஜீவா படம் நன்றாக வந்திருக்கின்றது. படத்தில் கிரிக்கெட்டின் இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறீர்கள். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் அந்த கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் மிகச்சிறப்பாய் எடுத்திருக்கிறீர்கள்.

முதலில் கபடியை கையிலெடுத்த நீங்கள் ஜீவா படத்தில் தமிழ் நாட்டு கிரிக்கெட் சங்கத்தையும் கிரிக்கெட்டையும் கையிலெடுத்திருக்கிறீர்கள்.

இதுவரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். அதனால் எழுந்த எனக்குள்ளான சிலக்கேள்விகள் உங்களுக்கு.

இந்திய அணிக்கு இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் 16 பேரில் 14 பேர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் என்பது உங்களின் வாதம். அது சரி அப்படியென்றால் இதுவரை இந்திய அணிக்கு இதுவரை வெறும் 16 தமிழர்கள் மட்டுமே விளையாடியதற்க்கு என்ன காரணம் சார்? வெறும் 16 பேர்தான் தமிழ்நாட்டிலிருந்து இந்த 60 ஆண்டு கால கிரிக்கெட்டில் ஆட முடிந்ததா? இங்கே நீங்கள் குறிப்பிடும் ஒருக்குறிபிட்ட ஜாதிதான் காரணம் எனில் இந்திய அளவில் என்னக்காரணம்??? வட நாட்டவர் அதிக எண்ணிக்கையில் பங்குபெற என்ன காரணம்? விளக்கமுடியுமா???

நீங்கள் சொல்லும் பதில் எனக்குத்தெரியும் " சரியான வீரர்களை தமிழகம் அனுப்பவில்லை என்பீர்கள்". சரி நீங்கள் அப்படியே சொன்னாலும் அப்படியே செலக்ட் செய்யப்பட்ட 14 பேரும் திறமையில்லாதவர்களா? எனக்கு தெரிந்து 14 பேரில் கிட்டத்தட்ட 12 பேர் பலகாலம் ஆடியவர்கள் சிறப்பாய் செயல்பட்டவர்கள் இருவர் அல்லது மூவர் என நினைக்கிறேன் இந்திய அணிக்கு  கேப்டனாகக்கூட இருந்தவர்கள்.

நீங்கள் சொல்வதைப்படி பார்த்தால் மற்ற விளையாட்டுகளில் தமிழ் வீரர்கள் ஏன் ஜொலிக்கவில்லை? ஹாக்கியில் சிங்குகளின் ஆதிக்கம், துப்பாக்கி சுடுதலில் வட நாட்டவரின் ஆதிக்கம், ஏன் கபடியில் கூட ஒன்றோ அல்லது இரு தமிழர்கள்தான் அதுவும் அபூர்வமாக. சொல்லிக்கொள்ளும்படியாக தடகளத்தில் தமிழர்களின் பங்கு ஏதாவது இருக்கின்றதா?

பொதுவாக தமிழன் விளையாட்டில் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை என்பதே உண்மை. இதே பஞ்சாப், ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களில் பல விளையாட்டுகளில் சாதிக்கின்றனர். தமிழநாட்டில் மட்டும் அத்திப்பூத்தாற்ப்போல் அவ்வப்போது யாராவது வருவார்கள். கிரிக்கெட்டில்தான் நீங்கள் சொன்னது நிஜம் எனில் மற்ற விளையாட்டுகளில் நீங்கள் சொன்ன ஜாதியல்லாது மற்ற ஜாதியினர் ஜொலித்திருக்க வேண்டுமே. இந்திய அளவில் பிரகாசித்திருக்க வேண்டுமே??? இதோ நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப்போட்டியில் எத்தனை தமிழன் சாதித்தான்? சொல்லமுடியுமா???

சென்னை கிரிக்கெட் சங்கத்தைப்பொறுத்தவரை பல காலமாக கூறப்பட்ட குற்றச்சாட்டு இதுதான் அதையும் தாண்டி பல வீரர்கள் வந்திருக்கிறார்கள். நேற்றுவரை பலருக்கு வாய்ப்பில்லையெனினும் இதோ இப்போதைய ஐபிஎல் போட்டிகளால் கிட்டத்தட்ட கிரிக்கெட் விளையாடும் அத்தனைப்பேருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது, அதில் ஜெயிப்பவர்கள் கோடிகளைப்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒருமுறை வாய்ப்பு கிடைக்காததால் கிரிக்கெட்டை மறப்பவர்களும் அல்லது டிவிஷன் போட்டிகளில் ஆடும்போது அரசு வேலைக்கிடைப்பதாலும் கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்க்குமேல் மற்ற ஜாதியினர் தொந்தி வளர்த்து கிரிக்கெட்டை மறப்பது உங்களுக்கு தெரியுமா??? அதற்க்கு ஆதாரம் என்னிடம் உண்டு. காரணம் நீங்கள் குற்றச்சாட்டு சொன்ன ஜாதிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் அதை கடைசிவரை தொடர்ந்து செய்வார்கள் என்பதும் ஒருக்காரணம்.

நீங்கள் சொல்லும் ஒருகுறிப்பிட்ட ஜாதியினர் அதிகமாக வாய்ப்பளிக்கப்படுகிறது என்பது உண்மையெனினும் அந்த சதவீதத்தைவிட அரசு வேலைக்கிடைத்தவுடன் கிரிக்கெட்டை மறக்கும் மற்றஜாதியினரின் சதவீதம் அதிகம் என்பது உங்களுக்கு தெரியுமா???

டென்னிஸ், கிரிக்கெட், ஸ்குவாஷ் என பல விளையாட்டுகள் அதிக பணம் செலவு செய்து கற்பதாலும் , கற்ப்பிக்கப்படுவதாலும் மற்ற மக்கள் அதிகம் பங்கேற்ப்பது இல்லை அல்லது பாதியில் பாதை மாறிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாது சென்னையில் மட்டும் கிரிக்கெட்டுக்கு கோச்சிங், மற்றும் விளையாட்டு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் சென்னை வாலிபர்கள்தான் அதிகமாக கிரிக்கிட்டில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள் என்பது உண்மை. சாதாரண கிரவுண்டுகளில் டென்னிஸ் பாலைக்கொண்டி ஆடுவதை நீங்கள் கிரிக்கெட் என நினைத்திருக்கிறீர்கள். தமிழ்னாட்டில் மற்ற இடங்களில் எத்தனை ஊரில் கிருக்கெட் பந்தைக்கொண்டு ஆடுகிறார்கள் அல்லது பிராக்டிஸ் செய்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம், டர்ஃபில் விளையாடுபவர்கள் உள்ளார்களா என சொல்லுங்கள் பார்ப்போம்.

அரசியல் என்பது இந்தியாவைப்பொறுத்தவரை எதில்தான் இல்லை? விளையாட்டில் மட்டுமா? இன்னும் எத்தனைக்காலத்திற்க்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியையே தூற்றிக்கொண்டிருப்பது? வெறும் ஒரே ஒரு சங்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் அசிங்கப்படுத்துவது நியாயமல்ல. ஒருவரின் பெயரை வைத்தே கிட்டத்தட்ட ஜாதியை அடையாளம் காணும்போது இன்னுமா முதுகை தடவி அடையாளம் காண்கிறார்கள்???

ஆக இதற்க்கு ஒரே வழி தமிழன் கிரிக்கெட்டில் மட்டுமல்ல மற்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தவேண்டும். இந்திய அளவில் சாதிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை கூட வேண்டும். அதற்க்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் படங்களை எடுங்கள். விமர்சிப்பதை விட்டுவிட்டு சிந்திப்போம். தமிழன் புகழ் பெற ஊக்குவிப்போம்.

மெட்ராஸ் - தமிழ்
(எங்கள் ஓவியக்கல்லூரியின் சீனியர் புருஷோத்தம் நாயகியின் அப்பா, கல்லூரி ஜூனியர் ரஞ்சித் - இயக்குனர், ஒளிப்பதிவாளர் ஜூனியர் - முரளி கோவிந்தராஜன் என பல நண்பர்கள்)

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் கார்த்தி, நம்பி கதாநாயகனாக இல்லாமல் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் படம். வடசென்னை (காசிமேடு, ராயபுரம், ஓட்டேரி அண்டு பெரம்பூர்) அவுஸிங் போர்டு அடுக்குமாடி வீடுகள் இருக்கும் இடத்தின் நடுவில் உயர்ந்து நிற்க்கும் மிகப்பெரிய சுவர்தான் இந்தப்படத்தின் கதாநாயகன். இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த சுவற்றை தங்களின் கட்சிக்கான சின்னங்கள் வரையத்தொடங்க அதனால் ஏற்ப்பட்ட வரிசையான கொலைகளையும், நடக்கும் அசம்பாவிதங்களையும் ராவாக சொல்லியிருக்கும்படம்தான் மெட்ராஸ். மற்றப்படங்கள் போல் மெட்ராஸ் பாஷை என்று சொல்லி ஓவராக லோக்கல் பாசையை சேதப்படுத்தி குலைக்காமல் தெளிவாக மெட்ராஸ் பாஷை பேசியிருப்பது அழகு. கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறை, வஞ்சம், வன்முறை, காதல், நட்பு, பாசம் என மொத்தக்கலவையில் கலந்தடித்திருக்கிறர் இயக்குனர் ரஞ்சித்.

காளி (கார்த்திக்), அன்பு (கலையரசன் ஹரிகிருஷ்ணன்) உயிர் நண்பர்கள். காளி பிரைவேட் ஐடி கம்பெனியில் வேலைப்பார்த்துக்கொண்டே அரசியலில் பெரிய ஆளாகும் கனவுகளுடன் இருக்கும் அன்புவுக்கு உதவுகிறார். அவர்களில் ஏரியாவில் இருக்கும் பெரிய சுவற்றில் இவர்களின் எதிர்க்கட்சிகளின் மறைந்துப்போன தலைவர் நிரந்தரமாக படமாய் உட்கார்ந்துவிட அன்புவின் கட்சித்தலைவர் அன்புவை அவர்கள் கட்சியின் படம் வரவேண்டுமென உசுப்பேத்துகிறார். அன்புவின் அப்பாவையும் அந்த சுவருக்காக காவுகொடுத்து வெறியில் இருக்கும் அன்புவும் நேரம்பார்த்துக்கொண்டிருக்க, காளியும் பக்கத்து தெருப்பெண்ணை டாவு விட முதலில் மறுக்கும் அவள் பின்னர் லவ்வத்தொடங்க பரோட்டா சால்னா கணக்காய் அவர்களின் காதலும் வளர்கிறது.

கோவக்கார காளி உதார் விட்ட அடுத்த கட்சித்தலைவரின் மகனின் (மாரி) தலையை சீவ, நேரம்பார்த்து அவர்களும் அன்புவை காலி செய்ய ஸ்கெட்ச் போட்டு கோர்ட் வளாகத்தில் காலிசெய்கிறார்கள். காளிக்கும் வெட்டுகள் விழ பின்னர் அன்புவைகொன்றது யார்? காளி, அன்புவைக்கொன்றவர்களை எப்படிக்கண்டுப்பிடிக்கிறார் என்பதை மெடராஸ் பாஷையில் சொல்லணும்னா சும்மா கலாசிருக்காங்க பா.

இரண்டாவது நாயகனில் ஒருவனாய் கார்த்தி. காளி கேரக்டரில் மெட்ராஸ் பையனாக கலக்கியிருக்கிறார். ஆனாலும் மெட்ராஸ் பாஷை கொஞ்சம் உறுத்தல். கோவக்கார டெரர் காளி கோபப்படுகிறார், காதலிக்கிறார், சண்டைப்போடுகிறார். நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயங்காத நண்பேன்டா. யதார்த்தமான நடிப்பும் பக்கா மெட்ராஸ் பையானாகி படத்திற்க்கு பலம். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டு நாயகர்களின் கதையில் இவர் நடித்தது நல்ல தொடக்கம்.

இன்னொரு நாயகன் அன்பு. காதல் மனைவியை கொஞ்சுவதும் பின்னர் மிஞ்சுவதும், நண்பனுக்காக ஜெயிலுக்குப்போவதும் பின்னர் அப்பாவைப்போலவே பரிதாபமாக செத்தும்போகிறார். நடிப்பில் ஸ்கோர் செய்வதும் இவரே.

நாயகி (காத்ரின் தெரசா) புதுசு...பக்கா மெட்ராஸ். காளியை துரத்தி துரத்தி காதலிக்கிறார், சில்மிஷம் செய்கிறார், அழுகிறார் பின்னர் காளிக்கு துணை நிற்க்கிறார்.நாயகியின் அப்பாவாக என் கல்லூரி சீனியர் புருஷோத்தம். சுமாரான அப்பாவுக்கு சும்மா டக்கரா பொண்ணு(!)

பல வில்லன்கள். எல்லோரும் படு லோக்கல். முக்கியமாய் ஜானி கேரக்டர் கொஞ்சம் பைத்தியக்காரன் பாடி லாங்குவேஜில்  படபடவென பட்டாசாய் வெடித்திருக்கிறார். வாவ் செம அப்ளாஸ் அவருக்கு.  அடுத்து அந்த டான்ஸ் டீம் அன்புவின் சாவுக்கு ஆடும் ஹிஃபாப் ஆட்டம் கிளாஸ்.

இயக்குனரும் என் கல்லூரி ஜூனியருமான ரஞ்சித். பக்கா மெட்ராஸ் படத்தை ஒரு சுவற்றை மையமாய் வைத்து எடுத்திருக்கிறார். கீழ் மட்ட அரசியலின் அத்தனை அம்சங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார். கவுன்சிலர் லெவல் அரசியலிலேயே இவ்வளுவு மேட்டர் இருக்கும்னா ஸ்டேட் லெவல்ல எம்மாம்ப்பெரிய விளையாட்டு இருக்கும். அதுவும் படத்தின் இரண்டு நிமிடத்தில் பிளாஷ்பேக்கை கச்சிதமாக காட்டி படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கிறார். அதிக வன்முறை, அதிக கவர்ச்சி என ஓவர் டோஸ் கொடுக்காமல் கச்சிதமாய் பயன்படுத்தியிருப்பது அழகு.

மைனஸ் எனப்பார்த்தால்...
படத்தில் கதை சொன்ன விதத்தில் புதுமையும் வித்தியாசமும் இருந்தாலும் படம் கொஞ்சம் மெதுவாகவே நகர்கிறது. இதை தவிர்த்திருக்கலாம். பல காட்சிகளில் ஹவுசிங் ஏரியாவில் ஆள்நடமாட்டமே இல்லை ஆனால் உண்மையில் நடு இரவிலும் ஜேஜேன்னு கலகலன்னு இருக்கும். மற்றபடி பெரிதாக சொல்ல எதுவும் மைனஸ் படத்தில் இல்லை.


லோயர் கிளாஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை அரசியல் கலந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
மெட்ராஸ்
செம மாஸ்!!!

ஷாப்பிங்க் செல்கிறீர்களா? கொஞ்சம் யோசிங்க மக்களே!!!
திருவிழாக்காலம். ஊரெங்கும் கொண்ட்டாட்டங்கள் ஆரம்பம். மக்களும் கூட்டம்கூட்டமாய் பொருட்கள் வாங்க, துணிகள் வாங்க, பட்டாசுகள் வாங்க சாரை சாரையாய் படையெடுக்கிறார்கள். இதில்தான் உங்களுக்கு ஒன்றை ஞாபகமூட்ட வந்திருக்கின்றேன்.

ஆமாம்...துணிகள் வாங்குவதைப்பற்றித்தான். நீங்கள் ஆடம்பரமாக துணிகள் வாங்கச்செல்லும்போது நடக்கும் கூத்துக்கள் ஓராயிரம் உண்டு. காலையில் துணிக்கடைக்குப்போய் மத்தியானம் தாண்டி ஒன்றிரண்டு துணிகளுடன் வருபவர்களும் உண்டு. பொதுவாக பெண்கள் துணிக்கடையில் செலவழிக்கும் நேரம் ரொம்ப அதிகம் என்று கணிப்புகள் சொல்லுகிறது.

அப்படி துணிக்கடைக்குச்செல்லும்முன் நான் சொல்லப்போகும் பாயிண்டுகளை கொஞ்சம் காதில் வாங்கிக்கொள்ளுங்களேன்.

காரணம் நம் திருவிழாக்காலங்களின் நம் மகிழ்ச்சிகளுக்குப்பின் பலரின் இருண்ட பக்கங்கள் உண்டு. நம் சந்தோஷத்திற்க்காக அவர்களின் சந்தோஷத்தை மறந்துவிட்டு நமக்காக வேர்வை சிந்த, 14 மணிநேர கால்வலிக்க ஓய்வின்றி அல்லல் படும் கிராமங்களிலிருந்து நகரம் வந்த ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும்தான். பலமாடி துணிக்கடைகளிளோ அல்லது நகைக்கடையிலோ மட்டுமல்லாது ரோட்டோர கடைகளிலோ தங்கள் குடும்பத்தின் வறுமைப்போக்க இந்தியாவின் பல லட்ச மனிதர்கள் சந்தோஷங்களை மறந்து பொய்யாய் முகத்தில் இன்முகம் காட்டி நமக்காக நேரத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களை மகிழ்ச்சிப்படுத்த கீழே எழுதியிருக்கும் நடவடிக்கைகளை மேற்க்கொண்டால் அவர்களும் மகிழ்வார்கள் நாமும் மகிழ்வோம்.

1. துணிக்கடைக்கும் போகும்முன் தயவு செய்து என்ன வாங்கப்போகிறீர்கள் என்பதை தோராய லிஸ்ட்டாகவோ அல்லது மனதிலோ வைத்துக்கொள்ளுங்கள். வரவேற்ப்பறையில் இருக்கும் மானேஜரிடமோ அல்லது சூப்பர்வசரிடமோ எது எது எங்கெங்கு கிடைக்கும் என்பதை கேட்டுத்தெளிந்துக்கொள்ளுங்கள்.

2. என்ன கலரில் துணிகள் எடுக்கலாம் என்பதை முடிவெடுத்துக்கொள்ளுங்கள். முன்னமே உங்களின் தேவையை பிரதினிதியிடம் தெளிவாக சொல்லிவிடுங்கள்.

3. அங்கிருக்கும் சேல்ஸ்பெர்சன்ஸ்களிடம் முன்னமே உங்களின் பட்ஜெட்டை சொல்லுங்கள். இல்லையெனில் நீங்கள் நல்ல டிசைன் வேண்டுமென்று 600 ரூபாயிலிருந்து ஆரம்பித்து கடைசியில் இரண்டாயிர விலையில் துணிகள் எடுக்கும்போது செலவாகும் அதிக நேரமும்,  உங்களின் முடிவெடுக்கும் சமயமும் அதிகமாகி குழப்பத்தைக்கொடுக்கும். விற்ப்பனைப்பிரதநிதிகளுக்கும் கஷ்டத்திக்கொடுக்கும்.

4. முதலில் சிறிய விலையிருக்கும் ரக துணிகளை எடுத்துவிட்டு இறுதியாக அதிக விலையிருக்கும் ரக துணிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5. பொதுவாக கூட்டமாக சென்றால் பலரின் விருப்பமும், தேர்வும்மாறுப்பட்டு இருப்பதால் நேரமாகி முடிவெடுப்பதில் சிக்கல் உண்டாகி விற்ப்பனைப்பிரதநிதிகளின் கோபத்திற்க்கு உள்ளாக நேரிடும்.

6. இன்முகத்துடன் விற்ப்பனை பிரதநிதியை அணுகுங்கள், அதனால் அவரோ/அவளோ உங்களுக்கு முதலிலேயே நல்ல அழகான துணிகளை காட்டும் வாய்ப்பும் கிடைக்கும்.

7. மனம் ஒரு குரங்கு அடுத்தவர் ஒரு துணியை எடுத்தால் நமக்கும் அதுப்பிடிக்கும், நாம் செலக்ட் செய்ததை தவிர்க்க நினைப்போம் எனவே அந்தமாதிரி குழப்பங்களை ஏற்ப்படுத்த வேண்டாம்.

8. பொதுவாக திருவிழாக்காலங்களில் மொத்த கூட்டமும் திருவிழாவுக்கு ஒரு நாளோ இரண்டு நாளோ இருக்கும்போது போகாமல் இரண்டு வாரத்திற்க்கு முன்னமே சென்றால் நல்ல டிசைன்களையும் நல்ல தரத்துடனும் வாங்கலாம். அது மட்டுமல்லாமல் விற்பனையாளர்கள் கூட பொறுமையாக துணிகளை காட்டுவார்கள். கூட்ட நெரிசலும் இருக்காது.

9. எந்தப்பொருட்கள் வாங்கினாலும் கடைகளில் விற்ப்பனையாளர்கள் கொஞ்சம் அதிக வர்ணனை கூட்டி கொஞ்சம் அதிகப்படியாக சொல்லுவார்கள் ஆகவே பொருட்களை வாங்குமுன் நாலு இடத்திலோ அல்லது இணையத்திலோ விசாரித்து தெளிவடைந்து பொருட்கள் வாங்க செல்லலாம்.

10. எதற்க்கெல்லாமோ ஊதாரித்தனாமாக செலவு செய்துவிட்டு வாங்கும் துணிகளுக்காக பத்து கடைகள் ஏறி இறங்கவேண்டாம். ஒரு முறை அல்லது இருமுறை சென்றப்பின் எந்தக்கடையில் என்னப்பொறுட்கள் எப்படியான தரத்தில் இருக்கும் என்கிற ஐடியா கிடைத்தவுடன் அடுத்தமுறை அந்தக்கடைக்கு மட்டுமே சென்றால் நேரமும் காலமும் மிச்சமாகும். அப்படியே பல கடைகளில் விலை வித்தியாசம் அப்படியொன்று அதிகமாக இருக்க வாய்ப்பில்லை எனவே சிக்கனப்படுத்த தேவையற்ற அலைச்சல் வேண்டாம்.

11. கைக்குழந்தைகளையோ அல்லது சிறுக்குழந்தைகளையோ கூடவே அழைத்துக்கொண்டு சுற்றாமல் வீட்டில் விடலாம் இல்லையெனில் குடும்பத்தில் யாராவது ஒருவரை கடையின் முன் அறையில் கவனிக்கொச்சொல்லிவிட்டு செல்லலாம்.

12. துணிக்கடை அடைப்பதற்க்கு ஒரு இரண்டு மணி நேரம் முன்னதாக செல்லவும். இல்லையெனில் இரு பக்க அவசரத்தால் நிம்மதியாக வாங்க வாய்ப்பில்லை. கடை பிரதிநிதிகள் வீட்டுக்கு செல்லும் அவசரத்திலிருப்பதால் முன்னமே செல்வது நலம்.

திருவிழாக்காலங்களில் நமக்கு உண்டாகும் அதேயளவு மகிழ்ச்சிதான் கடைகளில் வேலைசெய்பவர்களுக்கும் இருக்கும் என்பதால் நம்முடைய மகிழ்ச்சி என்பது அடுத்தவரின் வெறுப்பிலிருந்து உண்டாவதைவிட அடுத்தவரின் மகிழ்ச்சியிலிருந்து உண்டானால் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியும், திருவிழாவின் உண்மையான அர்த்தமும் கிடைக்கும் என்பதி ஐயமில்லை.

என் கருத்தோடு உங்கள் கருத்தும் ஒன்றானால் இந்தப்பதிவை ஷேர்செய்து ஷாப்பிங் செல்பவர்களின் கண்களில் இந்தப்பதிவைக்காட்டுங்கள்.