Thursday, September 4, 2014

ஹவ் ஹோல்ட் ஆர் யூ?மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் 90களில் மலையாள சினிமாவை திருப்பிப்போட்ட நாயகி மஞ்சு வாரியாரின் கிராண்ட் எண்ட்ரி, அதுவும் திலீபின் விவாகரத்திற்க்குப்பின் வந்து சக்கை போடு போட்டப்படம். பெண்மையை மையமாக வைத்து எப்போதாவது வரும் படங்களில் இதுவும் ஒன்று.

கல்லூரியில் படிக்கும்போது அறிவிலும், புதுமைகளிலும் சிறப்பாக இருந்து கல்யாணம் ஆனப்பின் அரசாங்க உத்யோகம், குடும்பம் என குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் 36 வயது குடும்பத்தலைவி தன் மகளின் பள்ளிக்கு வந்த ஜனாதிபதியிடம் அம்மா எதேச்சையாக கேட்ட ஒரு விஷயத்தை கேள்வியாக மகள் அவரிடம் கேட்க, பிரமித்துப்போன ஜனாதிபதி உன் அம்மாவை பார்க்கவேண்டும் என அழைக்க, ஜனாதிபதியை சந்திக்கும்போது பயத்தில் மயக்கமடைந்து ஃபேஸ்புக்கிலும், ஊரிலும் நகைப்புக்கு உள்ளாக தன் கல்லூரி நண்பியின் உந்துதலின் பேரில் அவள் செய்யும் ஒரு காரியம் மீண்டும் அவளை ஜனாதிபதியின் முன் நிறுத்துகிறது. அது எதனால்? அவளின் கேள்வி என்னவாக இருந்தது என்பதே கதை.

குடும்பத்தலைவியாக மஞ்சு வாரியர் கிட்டதட்ட பல வருடங்களுக்குபின் ரீ எண்ட்ரி. அழகான மற்றும் திறமையான நடிகையை இழந்துவிட்டோம் என்பதும் இந்தப்படத்தில் கிட்டத்தட்ட எல்லாத்திறமைகள் இருந்தும் குடும்பம் என்று ஆனப்பின் தனது கனவுகள் எப்படி தொலைந்துப்போகின்றன என இரண்டுமே கிட்டதட்ட ஒரே நேர்க்கோட்டில் இருப்பவை. மஞ்சுவாரியாருக்கு வயது ஆனாலும் இன்னும் நடிப்பு குறையவில்லை. துள்ளலான நடிப்பிலும் ஜனாதிபதியைக்கண்டு மயக்கமாவதிலும் அதனால் மற்றவர்கள் கிண்டலை பொறுக்கமுடியாமல் ஓடி ஒளிவதும், மகளுக்காக ஏங்குவதிலும் கணவனின் அன்புக்காக தவிப்பதிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஆனால் படத்தின் மிகப்பெரிய மைனஸ் மஞ்சுவாரியாரின் கணவராக வரும் குஞ்சாகோ போபன் மஞ்சுவுக்கு தம்பி மாதிரி இருக்கிறார். அவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒட்டவேயில்லை. ஆனால் படத்தில் மஞ்சுவுக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கியிருக்கலாம். எனக்கென்னமோ ஜெயராமோ அல்லது முகேஷோ நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். செல்ஃபிஷ் கணவராக போபன், அயர்லாந்துப்போக முயல்வதும் எதிர்ப்பார்க்காமல் ஆக்ஸிடண்ட் ஆக விசா பிரச்சனைக்காக மஞ்சுவை வண்டி ஓட்டியதாக பொய் சொல்லச்சொல்வதும், பின்னர் மஞ்சுவை இந்தியாவியில் தனியாக விட்டுவிட்டு மகளுடன் அயர்லாந்துப்போவதும் கிட்டதட்ட படத்தின் வில்லனாகவே இருக்கிறார் கடைசிக்காட்சி வரை.

மகளாக அம்ரிதா அனில் கொஞ்சம் வித்தியாசமான மகள், அம்மாவை தவிக்க விட்டுவிட்டு அப்பாவுடன் இப்படி செல்வார்களா என்பது சந்தேகம். ஆனாலும் ஜானதிபதியிடம் மயக்கமான அம்மாவை எல்லோரும் கிண்டல் செய்ய அம்மாவை இவளும் அதிகமாக வெறுப்பது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் கடைசியில் மகள் உணர்வது சிறப்பு.

துணைப்பாத்திரங்களில் மஞ்சுவோடு வேலை செய்யும் வினய் ஃபோர்ட், மஞ்சுவின் பழைய கல்லூரி நண்பியாகவும், மஞ்சுவை ஊக்குவிக்கும் நண்பியாஅகவும் கனிகா படத்திற்க்கு பலம்.

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார், சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இந்த நாட்டில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறைவே என்பதை நச்சென்று புரியவைத்திருக்கிறார். அதுவும் அந்தக்கேள்வி "
WHO DECIDES THE EXPIRY DATE OF A WOMEN DREAM?" உண்மையிலேயே கவனிக்கப்படவேண்டியதுதான். கிட்டதட்ட இதுவரை 14 பிரதமர்களில் ஒரு பெண், 15 ஜனாதிபதிகளில் ஒரே ஒரு பெண் இப்படி பெண்கள் குறைவாக உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவத்ற்க்கு என்ன காரணம் என்பதை கிட்டதட்ட தெளிவான முடிச்சுகளுடன் காட்டியிருக்கிறார். அதுவும் மஞ்சு தேர்ந்தெடுக்கும் தொழில் இன்னும் சிறப்பானது நாமும் கவனிக்கவேண்டியது.பெண்மையின் சிறப்பை ஒரு சமூக அக்கறையோடும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். டைட்டில் கார்டில் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் நடிக்க சொல்லித்தருவது அவரின் நுணுக்கமான இயக்கத்திற்க்கு சான்று.

இறுதியில் போடும் டைட்டல் கார்டில் இதுவரை சாதித்த பெண்களின் படங்கள் ஒவ்வொன்றாய் வர கடைசியில் வரும் போட்டோவில் முகமில்லாமால் கேள்விக்குறியுடன் முடிகிறது படம்.

பெண்களை போற்றுவதோடு மட்டுமல்ல அவர்களும் ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதே படத்தின் மையக்கரு. வாருங்கள் பெண்களை மதிப்போம் அவர்களையும் ஊக்குவிப்போம்!!!

கட்டாயம் பாருங்கள்.

No comments:

Post a Comment