Thursday, September 4, 2014

பயன்???கட்டிய மனைவி
கண்வீங்க அழுகிறாள்

பெற்ற மகன்
பெரிதாய் ஓலமிடுகிறான்

அன்பு மகள்
அருகிருந்து கதறுகிறாள்

செல்ல பேரன்கள்
செய்வதறியாது முழிக்கின்றனர்

குடும்ப சொந்தங்கள்
குனிந்தப்படி நிற்கின்றனர்

வளர்த்த ஜிம்மியும்
வழியில் படுத்திருக்க

கிராமத்து பந்தங்கள்
தூரத்து சொந்தங்கள்
அலுவலக நண்பர்கள்

என
உணர்வுகளால் திகைத்திருக்க
என்னோடு உடனிருக்க

நான்
கஷ்டப்பட்டு,ஆசைப்பட்டு
சம்பாதித்து சேர்த்துவைத்து
அனுபவிக்காமல் போன
என்
ரூபாய் நோட்டுகளும்
ஆடம்பர பொருட்களும்
அளவிலா ஆஸ்திகளும்
சலனமில்லாமல் வேடிக்கைப்பார்க்கின்றன
அமைதியாய் கவனித்துக்கொண்டிருக்கின்றன
என் இறுதி ஊர்வலத்தை!!!

முகனூல் ஈகோ அரசியல் - வாங்க அலசலாம்!!!


இந்தக்கட்டுரை உங்களை விழிப்படைய வைக்கவே. யாரையும் புண் படுத்த அல்ல மற்றும் யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல.

நான் கடந்த 8 ஆண்டுகளாக முகனூலில் இருக்கிறேன். இன்று வரை வெறும் 2600 நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கிறேன் கிட்டத்தட்ட பல நூறு நட்பு அழைப்புக்களை நிராகரித்திருக்கிறேன், பலருக்கு நட்பு அழைப்பை அனுப்பாமல் இருக்கிறேன் அல்லது நட்பை ஏற்க்காமல் இருக்கிறேன். அதற்க்கு காரண மில்லாமல் இல்லை....நிற்க.

என்னுடைய நட்புப்பட்டியலில் இருக்கும் 2600 பேரில் கிட்டதட்ட ஒரு முன்னூரு பேர் வரை எனக்கு தெரிந்தவர்கள். ஊர்க்காரர்கள், நண்பர்கள், கல்லூரி தோழர்கள் அல்லது அலுவலக தோஸ்த்துகள். மற்றவர்களை வெறும் முகனூல் பதிவுகளை படிக்கும் அளவிலோ அல்லது அவர்களின் பதிவுகளை ரசிக்கும் அள்விலோ இருக்கக்கூடிய நட்புக்கள்தான். அதுவும் பெண்கள் மிக மிக குறைவே. அதிகமாக சாட் செய்வதும் இல்லை. அதுவும் சுமார் பத்து பணிரெண்டு பேர் வரை மட்டுமே. யாருடைய போன் நம்பரும் என்னிடம் இல்லை நான்கைந்து பேருக்கு மட்டுமே என் நம்பரும் தெரியும். இதற்க்கெல்லாம் காரணமில்லாமல் இல்லை.

கொஞ்ச வருடம் முன் துயர் துடைப்புக்குழு ஆரம்பித்ததால் பிரச்சனை, ஒரு கிரியேட்டிவ் ஆள் மீது சுமத்தப்பட்ட பிரச்சனை, பெண் பத்திரிகை நிருபர் மீதான பிரச்சனை, முகனூல் சந்திப்புக்கூட்டத்தால் வந்தப்பிரச்சனை, பெண் நண்பர்களால் உருவான பிரச்சனை, மற்றவர்களுக்கு உதவிசெய்கிறேன் என்று கிளம்பிய பூதம், இப்போது டிவி மீடியாவில் வருவதற்க்கான பிரச்சனை என்று முகனூலின் தடம் மாறி நட்புக்களுக்குள் நீ பெரியவன், நான் பெரியவன் என்கிற ஈகோவில் நிற்க்கிறது முகனூல் நட்பு.

ஆனாலும் பிரச்சனைகள் யாருக்கு எனப்பார்த்தால் நேற்றுவரை உயிருக்கு உயிராக பழகியவரே பிரச்சனைகளால் விலகும்போது அவர்கள் மீது பழி போடுவதும், அவரை விலக்கியவர்கள் அவர் மீது புழுதி வாறி இறக்கும்போது இரண்டு பேரையும் நட்பு வட்டத்தில் கொண்டவர்களின் நிலை அந்தோ பரிதாபம். பணப்பிரச்சனை, பெண் நட்புப் பிரச்சனை, அரசியல் பிரச்சினை என பலப்பிரச்சினைகளால் நட்ப்புக்கள் அடித்துக்கொள்கிறார்க. அவர்கள் பிரச்சனையில் தங்களின் குடும்பத்தையும் மாறி மாறி சந்தியில் இழுத்து அசிங்கப்படுத்துகிறார்கள்.

ஒருவர் விலகும்போது எழுப்பப்படும் அவதூறுகள் அவர் அவர்களுடன் இருக்கும்போது மறைக்கப்படுகின்றன இல்லையெனில் வளர்க்கப்படுகின்றன அல்லது பெரிதுப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதே அவர் விலகும்போது பழைய அசிங்கங்கள் கிளறி அவரும் பதிலுக்கு அசிங்கப்படுத்தி அரசியல்வாதிகளை விட கேவலமான மட்டமான ஏன் கீழ்த்தரமான செயல்கள் முகனூலில் நடந்து வருகின்றன. பின்னர் பிரச்சனைகள் வந்தவுடன் தனி மனித தாக்குதல் இரண்டு பக்கமும் வெடிக்கின்றன. அதைப்பார்த்து இரண்டு பக்கத்து நண்பர்களும் இரண்டு பக்கமும் ஜால்ரா அடித்து நெருப்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கின்றனர்.

போட்டோஷாப்பை கண்டுப்பிடித்தவரே இவர்களின் ஸ்கிரீன் ஷாட் அவலங்களை கண்டு திக்கற்று நிற்க்கின்றார். டெக்னாலஜியை வைத்து பிளாக் மெயில் செய்யும் முகனூல் தீவிரவாதிகளின் தீவிர ஈகோ அரசியல் மிகப்பெரியது.

எதையுமே அளவோடு வைத்திருப்பது நலம். அது நட்பானாலும், முகனூலானாலும். காரணம் காரியம் ஆகும்போது காலைப்பிடிப்பதும், ஆனவுடன் தள்ளிவிடுவதும் இங்கே சகஜம். மொத்தமாக களவாணித்தனத்தை செய்துவிட்டு சில நேரங்களில் அவைகள் மாறி மாறி கைக்காட்டப்பட்டு வசைமாறி பொழியப்படுகின்றன.

முகம் தெரிந்த சொந்தங்களையே நம்ப முடியாத இந்தக்காலத்தில் வெறும் அழகான கவர்ச்சிகரமான பதிவுகளை கண்டு ஒருவரை நம்புவதென்பது முட்டாள்தனம். இங்கே இடப்படும் பதிவுகள் எல்லாம் அவரவரின் கற்பனைகளேயன்றி சொந்தக்கதைகள் அல்ல அப்படியிருக்க அந்தப்பதிவுகள் பொதுவாக மற்றவர்களை கவர்ந்து லைக் வாங்க மட்டுமே.

படித்தவர்களே இப்படி ஏமாறும்போது மற்றவர்களை எப்படிக்காப்பாற்றுவது? இப்போது புரிகிறதா...முகனூலில் நான் ஏன் அதிக நட்புக்களை வளர்க்கவில்லையென்று? இப்போது புரிகிறதா முகனூல் நட்புக்கூட்டங்களுக்கு நான் ஏன் செல்லவில்லை என்று? காரணம் இந்த இயந்திர உலகத்தில் எதிர்ப்பார்ப்பின்றி யாரும் ஏதும் உங்களுக்கு செய்துவிடப்போவதில்லை, உங்களால் அவர்களுக்கு ஏதாவது வகையில் பயன் இருந்தால் மட்டுமே நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

இதனால் பாதிக்கப்படுவது யாரெனில் உண்மையான உதவி வேண்டுவோர் அல்லது உண்மையாய் உதவிகள் தேவைப்படுவோரின் பகிர்தல்கள்தான். இவை நம் நம்பிக்கையை சோதிக்கின்றன. அதனால் அவர்களுக்கு பலன் கிட்டாமல் போகவும் வாய்ப்புண்டு.

முகனூலின் இன்னொரு பலவீனம் யார் வேண்டுமானாலும் எத்தனை பொய் ஐடிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே. இதனால் தன்னை விலக்கியவரின் நட்பில் இன்னொரு பெயரில் இணையலாம் அல்லது தனக்கு பிடிக்காதவர் சுவற்றில் சென்று வேறொரு ஐடியில் கவனிக்கலாம் அல்லது அவர்க்கு எதிராக பதிவிடலாம்.

எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட்டு பின்னர் வருத்தப்பட்டு பயன் இல்லை. ஆகவே முகனூல் நட்புக்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும் அல்லது ஆராய்ந்து தெளிந்து அளவாய் பழக வேண்டும். தேவையில்லாத நட்பில் சிக்கி உங்களை நீங்கள் தாழ்த்திக்கொள்ள வேண்டாம். பின்னர் நட்பு முறிந்தவுடன் இருபக்கமும் வசைமாறும் பழக்கமும் வேண்டாம்.

ஆட்களை பார்த்து லைக்குகள் இடாமல் நல்ல பதிவுகளைப்பார்த்து லைக் இடுங்கள். அதற்க்காக அந்த நல்ல பதிவுகள் போடுபவரை நிஜத்தில் நம்பவேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல விஷயங்களும் முகனூலில் உண்டு அதை அதிக நண்பர்கள் இருந்தால்தான் செய்யவேண்டும் என்பதில்லை. நல்லக்கருத்துக்கள் கொண்ட பதிவுகளும் உண்டு. அதை முகனூல் பிரபலங்கள் மட்டும்தான் சொல்லவேண்டும் என்பதில்லை.

முகனூல் வெறும் வெளி முகத்தின் நூலாக இருப்பதால் அதில் அகத்தை தேடுவது முட்டாள்தனம். நல்ல பதிவுகளை பாலோ செய்யலாமே தவிர அதை பதிவுடும் ஆட்களை அல்ல. இதில் ஒருமுறை உங்களின் பெயரை கெடுத்துக்கொண்டால் மறுபடியும் மீள்வது கடினம். காரணம் முகனூல் ஒரு ஒற்றைவழிப்பாதை மட்டுமே.

ஆண்களை விட பெண்கள் இங்கு இன்னும் கவனமாக இருப்பது நலம். ஃபேஸ்புக் ஒரு மாஸ்க் புக். உள்ளிருக்கும் உண்மை முகம் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. கடைசியாக முகனூல் அக நூல் அல்ல!!!

முகனூலின் உண்மை பயன்பாட்டை சரியாக புரிந்துக்கொள்ளாதவர் வேண்டுமானால் முகனூல் பிரபலங்களாக இருக்கலாம். புரிந்துக்கொண்டவர்கள் முகனூலில் பிராப்ளம் இல்லாதவராக இருப்பார்!!!

ஆல் தி பெஸ்ட்!!!

சுகம்!!!அந்தி சாயும் மாலை வேளையில்
அசதிப்போக சுடுநீர் ஷவரில் குளித்து
அவசரமாய் கொஞ்சமாய் தலை துவட்டி
ஈரக்கூந்தலுடன் அன்னமாய் நடந்து
சில்லென்று பனித்துளிகள் முகத்தில் 
நீர்த்துளிகளாய் மின்னி சிதறித்தெறிக்க
உடலின் ஈரங்கள் மெல்லிய மேலாடையை நனைக்க
பஞ்சுப்பாதங்களை சோஃபாவில் அழுத்தி ஆசுவாசமாய்...
அருகே அவனும் வைத்தக்கண்வாங்காமல் முறைக்க
அடுத்திருக்கும் டிவியில் மெலிதாய் காதல் கானம் ஓட
மெல்லிய புன்னகையை வீசிவிட்டு, காத்திராமல்
இரண்டுகைகளையும் இருப்பக்க காதில் தவழ்ந்தாடும்
தலைமுடிகளைக் மென்மையாய் தடவி வகிடெடுக்க
கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளழுத்தி இறுக்கிப்பிடித்து
தலையை ஒருபக்கமாய் சாய்த்து கழுத்தை தடவி
கண்களை மூடியப்படி ஒருகையை கீழே கொண்டுவந்து 
வலதும் இடதும் காற்றில் தேடி கையில் தட்டுப்பட்டதும்
ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளே செலுத்தி
மேல் பரப்பை கொஞ்சமாய் விரித்து இன்னும் உள்ளே சென்று
விரல்களை சிக்கிய இரண்டை மட்டும் மெதுவாய் மேலெடுத்து
அழகாய் மேல் கொண்டுவந்து நாவினால் இதழ்களை ஈரமாக்கி
மணம் நாசியில் நுழைந்தவுடன் கீழுதடை கீழிறக்கி
கைகளில் இருக்கும் லேய்ஸ் சிப்ஸை வாயில் திணித்து...

அப்பாடா என்ன சுவை என்ன சுவை!!!

Lemonade Mouth (film) லெமனேய்டு மவுத் - ஆங்கிலம்2011ல் வந்த இசையால் மக்களை மகிழ்வித்த டிஸ்னியின் படம். இது வரை நான் பார்த்த ஆங்கிலப்படங்களில் முத்தக்காட்சி கூட இல்லாது வந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கானப்படம். படத்தின் எல்லாப்பாடல்களிலும் இழை வெகுண்டெழுந்தாளும் முக்கியாமாக அந்த மூன்றுப்பாடல்களில் இசையி கேட்கும்போது என் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்று ரசனையான உச்சத்தை அடைந்தது நிஜம். ஆஹா...சொல்ல வார்த்தைகள் இல்லை.

பள்ளிக்கு வரும் இளவயது ஐந்து நண்பர்கள். ஒருவள் தாயை இழந்து தந்தை சிறையிலிருப்பதால் பாட்டியிடம் வளருகிறாள், நல்ல பாடகி, இன்னொருவர் இந்திய வம்சாவளி ஆனாலும் அமெரிக்காவில் செட்டிலான இந்திய காலாச்சாரத்தை இன்னும் மதிக்கும் தம்பதிகளின் பெண் அருமையான வயலின் ஆர்டிஸ்ட் பிளஸ் பாடகர், வீட்டில் ஹோம்லி வெளியில் மார்டன். மூன்றாவது சீன வம்சாவளிப்பெண் சுதந்திரத்தை விரும்புபவள், ஆனாலும் அதை தடுக்கும் தன் தாய்மீது எப்போதும் கோபத்துடன் இருப்பவள், நான்காவது புட்பாலில் சாதிக்க வேண்டும் என பெற்றோர் நினைத்தாலும் டிரம்ஸில் ஆர்வம் கொண்டவன். கடைசியாக கீபோர்ட் வாசிக்கும் ஆர்வத்தாலும், தனது தந்தையின் இரண்டாவது கல்யாணம் பிடிக்காததாலும் வெறுப்பில் இருப்பவன் என ஐந்துப்பேர்.

இசை வகுப்பில் இவர்களிடம் ஏதோ ஒன்றைக்கண்ட ஆசிரியை இவர்களை ஊக்குவிக்க பின்னர் லெமன் ஜூஸால் இணைகிறார்கள் இவர்கள். அந்தக்கதையும் இவர்களின் குழுவுக்கு Lemonade Mouth என்று பெயர்வரக்காணமும் அழகு. அதுவும் அந்த முதல் பாடல் வரிகளும் சாதாரண பள்ளி அறைக்குள் இருக்கும் பொருட்களை கொண்டு தொடங்கும் இசையும்...உண்மையில் பல நாட்களுக்குப்பின் பாடல் கேட்டு புல்லரித்தது உடல்.

பள்ளி இசைக்கு முக்கியதுவம் கொடுக்காமல் விளையாட்டுக்கு கொடுக்க பள்ளியில் இன்னொரு இசைக்குழு சிறப்பானதாய் இருக்க அவர்களின் போட்டியை சமாளித்து எப்படி வெல்கிறார்கள் என்பது மீதிக்கதை. இடையில் வரும் செண்ட்டிமெண்ட், மெல்லியக்காதல் கொஞ்சம் காமெடி என படத்தில் நவரசங்களும் உண்டு காமத்தை தவிர.

ரொம்ப நாள் கழித்துப்பார்த்த டீஸண்ட்டான ஆங்கிலப்படம். குழந்தைகளையும் இளைஞர்களையும் இசை, பாடல்களால் மட்டுமல்ல கதையாலும் மகிழ்விக்கும் படம்.

இயக்கம் பாட்ரிக் ரிக்கன், கிரிஸ்டோபர் லென்னிர்ட்ஸ். இதேப்பெயருடன் வெளிவந்த மார்க் பீட்டரின் புத்தகத்தின் திரைப்படமாக்கம் இது.

இசை ரசிகர்களுக்கு சரியான விருந்து இந்தப்படம் என்பதில் வேறுக்கருத்து இல்லை.

உங்களுக்காக பாடல்களின் வரிகள்...படம் பார்க்க நேரம் இல்லையெனினும் இந்தப்பாடல்களையாவதுக்கேளுங்கள்.

1. "Turn Up the Music" Adam Watts, Andy Dodd Bridgit Mendler
2. "Somebody" Lindy Robbins, Reed Vertelney Bridgit Mendler
3. "And the Crowd Goes" Jeannie Lurie, Aris Archontis, Chen Neeman Chris Brochu
4. "Determinate" (featuring Adam Hicks) Niclas Molinder, Joacim Persson, Johan Alkenas, Charlie Mason, Ebony Burks, Adam Hicks Bridgit
5. "Here We Go" Ali Dee, Vincent Alfieri, Zach Danziger Cast of Lemonade Mouth
6. "She's So Gone" Matthew Tishler, Shane Stevens, Christensen Naomi Scott
7. "More Than a Band" Jeannie Lurie, Aris Archontis, Chen Neeman Cast of Lemonade Mout
8. "Don't Ya Wish U Were Us?" Tom Leonard[disambiguation needed], Lindy Robbins, Reed Vertelney Chris Brochu
9. "Breakthrough" Bryan Todd, Maria Christensen, Shridhar Solanki, Adam Hicks Cast of Lemonade Mouth
10. "Livin' on a High Wire" Windy Wagner, Ken Stacey, David Walsh, Joleen Belle, Adam Hicks Cast of Lemonade Mouth

Song Link!!!

http://www.allmusic.com/album/lemonade-mouth-mw0002107402

திருவிழா!!!திருவிழா!!!

தீபாவளி இல்லை என்பதால்
பட்டாசும் இல்லை
சப்தமும் இல்லை

பொங்கல் இல்லை என்பதால்
கரும்பும் இல்லை
பொரியும் இல்லை

விநாயகர் சதுர்த்தி இல்லை என்பதால்
கொழுக்கட்டையும் இல்லை
சுண்டலும் இல்லை

ஆனாலும் மகிழ்ச்சிதான்
நான் வெளி நாட்டிலிருந்தாலும்
நம் நாட்டில் இருக்கும்
என் குடும்பம் சந்தோஷமாய்...

அவர்களின் மகிழ்ச்சியும்
என் மகிழ்ச்சியே!!!

ஹவ் ஹோல்ட் ஆர் யூ?மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் 90களில் மலையாள சினிமாவை திருப்பிப்போட்ட நாயகி மஞ்சு வாரியாரின் கிராண்ட் எண்ட்ரி, அதுவும் திலீபின் விவாகரத்திற்க்குப்பின் வந்து சக்கை போடு போட்டப்படம். பெண்மையை மையமாக வைத்து எப்போதாவது வரும் படங்களில் இதுவும் ஒன்று.

கல்லூரியில் படிக்கும்போது அறிவிலும், புதுமைகளிலும் சிறப்பாக இருந்து கல்யாணம் ஆனப்பின் அரசாங்க உத்யோகம், குடும்பம் என குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் 36 வயது குடும்பத்தலைவி தன் மகளின் பள்ளிக்கு வந்த ஜனாதிபதியிடம் அம்மா எதேச்சையாக கேட்ட ஒரு விஷயத்தை கேள்வியாக மகள் அவரிடம் கேட்க, பிரமித்துப்போன ஜனாதிபதி உன் அம்மாவை பார்க்கவேண்டும் என அழைக்க, ஜனாதிபதியை சந்திக்கும்போது பயத்தில் மயக்கமடைந்து ஃபேஸ்புக்கிலும், ஊரிலும் நகைப்புக்கு உள்ளாக தன் கல்லூரி நண்பியின் உந்துதலின் பேரில் அவள் செய்யும் ஒரு காரியம் மீண்டும் அவளை ஜனாதிபதியின் முன் நிறுத்துகிறது. அது எதனால்? அவளின் கேள்வி என்னவாக இருந்தது என்பதே கதை.

குடும்பத்தலைவியாக மஞ்சு வாரியர் கிட்டதட்ட பல வருடங்களுக்குபின் ரீ எண்ட்ரி. அழகான மற்றும் திறமையான நடிகையை இழந்துவிட்டோம் என்பதும் இந்தப்படத்தில் கிட்டத்தட்ட எல்லாத்திறமைகள் இருந்தும் குடும்பம் என்று ஆனப்பின் தனது கனவுகள் எப்படி தொலைந்துப்போகின்றன என இரண்டுமே கிட்டதட்ட ஒரே நேர்க்கோட்டில் இருப்பவை. மஞ்சுவாரியாருக்கு வயது ஆனாலும் இன்னும் நடிப்பு குறையவில்லை. துள்ளலான நடிப்பிலும் ஜனாதிபதியைக்கண்டு மயக்கமாவதிலும் அதனால் மற்றவர்கள் கிண்டலை பொறுக்கமுடியாமல் ஓடி ஒளிவதும், மகளுக்காக ஏங்குவதிலும் கணவனின் அன்புக்காக தவிப்பதிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஆனால் படத்தின் மிகப்பெரிய மைனஸ் மஞ்சுவாரியாரின் கணவராக வரும் குஞ்சாகோ போபன் மஞ்சுவுக்கு தம்பி மாதிரி இருக்கிறார். அவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒட்டவேயில்லை. ஆனால் படத்தில் மஞ்சுவுக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கியிருக்கலாம். எனக்கென்னமோ ஜெயராமோ அல்லது முகேஷோ நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். செல்ஃபிஷ் கணவராக போபன், அயர்லாந்துப்போக முயல்வதும் எதிர்ப்பார்க்காமல் ஆக்ஸிடண்ட் ஆக விசா பிரச்சனைக்காக மஞ்சுவை வண்டி ஓட்டியதாக பொய் சொல்லச்சொல்வதும், பின்னர் மஞ்சுவை இந்தியாவியில் தனியாக விட்டுவிட்டு மகளுடன் அயர்லாந்துப்போவதும் கிட்டதட்ட படத்தின் வில்லனாகவே இருக்கிறார் கடைசிக்காட்சி வரை.

மகளாக அம்ரிதா அனில் கொஞ்சம் வித்தியாசமான மகள், அம்மாவை தவிக்க விட்டுவிட்டு அப்பாவுடன் இப்படி செல்வார்களா என்பது சந்தேகம். ஆனாலும் ஜானதிபதியிடம் மயக்கமான அம்மாவை எல்லோரும் கிண்டல் செய்ய அம்மாவை இவளும் அதிகமாக வெறுப்பது கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் கடைசியில் மகள் உணர்வது சிறப்பு.

துணைப்பாத்திரங்களில் மஞ்சுவோடு வேலை செய்யும் வினய் ஃபோர்ட், மஞ்சுவின் பழைய கல்லூரி நண்பியாகவும், மஞ்சுவை ஊக்குவிக்கும் நண்பியாஅகவும் கனிகா படத்திற்க்கு பலம்.

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார், சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இந்த நாட்டில் பெண்களுக்கான முக்கியத்துவம் குறைவே என்பதை நச்சென்று புரியவைத்திருக்கிறார். அதுவும் அந்தக்கேள்வி "
WHO DECIDES THE EXPIRY DATE OF A WOMEN DREAM?" உண்மையிலேயே கவனிக்கப்படவேண்டியதுதான். கிட்டதட்ட இதுவரை 14 பிரதமர்களில் ஒரு பெண், 15 ஜனாதிபதிகளில் ஒரே ஒரு பெண் இப்படி பெண்கள் குறைவாக உயர்பதவிகளில் பெண்களின் பங்களிப்பு குறைவத்ற்க்கு என்ன காரணம் என்பதை கிட்டதட்ட தெளிவான முடிச்சுகளுடன் காட்டியிருக்கிறார். அதுவும் மஞ்சு தேர்ந்தெடுக்கும் தொழில் இன்னும் சிறப்பானது நாமும் கவனிக்கவேண்டியது.பெண்மையின் சிறப்பை ஒரு சமூக அக்கறையோடும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். டைட்டில் கார்டில் ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் நடிக்க சொல்லித்தருவது அவரின் நுணுக்கமான இயக்கத்திற்க்கு சான்று.

இறுதியில் போடும் டைட்டல் கார்டில் இதுவரை சாதித்த பெண்களின் படங்கள் ஒவ்வொன்றாய் வர கடைசியில் வரும் போட்டோவில் முகமில்லாமால் கேள்விக்குறியுடன் முடிகிறது படம்.

பெண்களை போற்றுவதோடு மட்டுமல்ல அவர்களும் ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்பதே படத்தின் மையக்கரு. வாருங்கள் பெண்களை மதிப்போம் அவர்களையும் ஊக்குவிப்போம்!!!

கட்டாயம் பாருங்கள்.

சலீம் - தமிழ்சலீம் - தமிழ்

விஜய் ஆண்டனி நடித்த முதல் படத்தின் இரண்டாவது பாகம். அதே டாக்டர் வேடம் அதே மெதுவான வசன உச்சரிப்பு மிக மெதுவான நடிப்பு.

பெயரைவைத்தோ, ஒருவரின் மதத்தைவைத்தோ யாரையும் எடை போடாதீர்கள் என்பதே மையக்கரு.

முதல் பாதியில் கதை எப்போதுதான் வேகமெடுக்குமோ என ஏங்கும்போது வரும் இடைவேளை பின்னர் படம் கொஞ்சம் வேகம் எடுக்கிறது விஜய் ஆண்டனியும் வேகம் எடுக்கிறார். இஸ்லாம் மதத்தை சேர்ந்த டாக்டரான விஜய் ஆண்டனி பொறுமையின் சிகரமாகவும், நல்லவராகவும் உதவும் குணம் கொண்டவராகவும் வாழ்கிறார். தனக்கு பார்த்திருக்கும் கொஞ்சம் குண்டான மைதா மாவுக்கலரில் இருக்கும் பெண்ணை கதலிக்கிறார். அவளும் ஒவ்வொரு சந்திப்பிலும் விஜய் ஆண்டனிக்காக காத்திருக்க விஜயின் பொதுச்சேவைக்குணத்தால் பார்க்கமுடியாமல் காலத்தாமதமாக வெறுப்பின் உச்சியில் கல்யாணத்திற்க்கு நோ சொல்கிறாள். பல காமுகர்கள் ஒரு பெண்ணை கற்பழித்து தூக்கிவீசிவிட்டுப்போக அவளை காப்பாற்றி ஆஸ்பிடலில் சேர்த்தபின் அவளும் கடத்தப்படுகிறாள். அதே வேளையில் மருத்துவ மனையின் ஓனர் விஜயின் காசுப்பார்க்காத குணத்தைக்கண்டு ஹாஸ்பிடலுக்கு வருமானம் குறைந்ததால் இவரை பார்ட்டியில் அவமதித்து வேலையை விட்டு தூக்குகிறார். வாழ்க்கையில் நல்லவனுக்கு அடி மேல் அடி விழ செய்வதறியாது தவிக்கிறார்.

இரண்டாவது பாதியில் திடீரென்று நட்சத்திர ஹோட்டலுக்கு வரும் விஜய் ஆண்டனி அமைச்சரின் மகனையும் அவர்களின் மூன்று நாண்பர்களையும் கடத்திவைத்து அந்தப்பெண்ணின் சாவுக்கு காரணமான அவர்களை எப்படி தண்டிக்கிறார் அத்துடன் ஹோட்டலில் இருந்து எப்படி தப்பித்து மூன்றாவது பாகத்திற்க்கு அடி போடுகிறார் என்பதுதான் சலீமின் மீதிக்கதை.

சாது மிரண்டால் என்னவாகும் என்பதை கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லமுயன்றிருக்கிறார்கள். அதற்க்காக அவர் சாது என்பதால் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் அவ்வளவு சாதுவாக மிக முதுவாக செயல்படவேண்டுமா என்ன? ஆனாலும் முதல் பாகத்தைவிட இதில் விஜய் ஆண்டனி கொஞ்சம் பரவாயில்லை. குடித்துவிட்டு நடு ரோட்டில் உளறுவதிலும், காதலியின் பின் லோ லோ வென அலைவதிலும் மற்றும் கடைசி காட்சிகளில் நன்றாகவே செய்திருக்கிறார். ஆனாலும் டான்ஸ் மற்றும் எக்ஸ்பிரஷனில் இன்னும் கவனம் தேவை.

இவரை ஹீரோயினாக எதற்க்குப்போட்டார்கள் எனதெரியவில்லை. கொஞ்சம் புசு புசுன்னு குண்டாக இருப்பதால் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொள்ளுவாள் என நாயகி ஆக்கியிருப்பார்கள் என நினைக்கிறேன். நடிக்கவும் வரவில்லை, ஆள்தான் வெயிட் பட்... பாத்திரம் வெயிட்டானதாகவும் இல்லை.

கற்பழித்தது அமைச்சரின் மகன் மற்றும் அவரின் கூட்டாளிகள்தான் என்பது விஜய் ஆண்டனிக்கு எப்படி தெரிந்தது என்பதற்க்கான காட்சியில் பலம்  இல்லை. இன்னும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். இறுதிக்காட்சிகளில் லாஜிக் மீறல் இருப்பதும், கிளைமாக்ஸ் காட்சியில் வெறும் சிறிய துப்பாக்கியை கொண்டு தப்பிப்பதும் கொஞ்சமும் நம்பும் படியாக இல்லை. அதுவும் பல நூறு காவலர்கள் துப்பாக்கியுடன் புடை சூழ இருக்க அமைச்சர் மகனை காரில் கடத்தி செல்வது... என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஆனாலும் கிளைமாக்ஸ் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத திருப்பம்.

இயக்குனர் நிர்மல் குமார் தனக்கான வாய்ப்பை சரியாக செய்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். மிக நல்ல திரில்லரை கொடுத்திருக்கலாம். கொஞ்சம் தவறவிட்டுவிட்டார் என்றே தெரிகிறது. இரண்டு பாடல்கள் அருமை. இசையில் குறைவில்லை. ஆனால் படத்தின் மிகப்பெரிய மைனஸ் கதாநாயகியின் ஒட்டாத கெமிஸ்ட்ரியும் நாயகியின் பாத்திர அடைப்புமே.

ஒரு முறைப்பார்க்கலாம்...அப்படியொன்றும் போரடிக்கவில்லை. ஆனால் படம் சுமார்தான்.