Tuesday, August 19, 2014

முகனூல் ஈகோ அரசியல் - வாங்க அலசலாம்!!!
இந்தக்கட்டுரை உங்களை விழிப்படைய வைக்கவே. யாரையும் புண் படுத்த அல்ல மற்றும் யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டது அல்ல.

நான் கடந்த 8 ஆண்டுகளாக முகனூலில் இருக்கிறேன். இன்று வரை வெறும் 2600 நண்பர்களை மட்டும் சேர்த்திருக்கிறேன் கிட்டத்தட்ட பல நூறு நட்பு அழைப்புக்களை நிராகரித்திருக்கிறேன், பலருக்கு நட்பு அழைப்பை அனுப்பாமல் இருக்கிறேன் அல்லது நட்பை ஏற்க்காமல் இருக்கிறேன். அதற்க்கு காரண மில்லாமல் இல்லை....நிற்க.

என்னுடைய நட்புப்பட்டியலில் இருக்கும் 2600 பேரில் கிட்டதட்ட ஒரு முன்னூரு பேர் வரை எனக்கு தெரிந்தவர்கள். ஊர்க்காரர்கள், நண்பர்கள், கல்லூரி தோழர்கள் அல்லது அலுவலக தோஸ்த்துகள். மற்றவர்களை வெறும் முகனூல் பதிவுகளை படிக்கும் அளவிலோ அல்லது அவர்களின் பதிவுகளை ரசிக்கும் அள்விலோ இருக்கக்கூடிய நட்புக்கள்தான். அதுவும் பெண்கள் மிக மிக குறைவே. அதிகமாக சாட் செய்வதும் இல்லை. அதுவும் சுமார் பத்து பணிரெண்டு பேர் வரை மட்டுமே. யாருடைய போன் நம்பரும் என்னிடம் இல்லை நான்கைந்து பேருக்கு மட்டுமே என் நம்பரும் தெரியும். இதற்க்கெல்லாம் காரணமில்லாமல் இல்லை.

கொஞ்ச வருடம் முன் துயர் துடைப்புக்குழு ஆரம்பித்ததால் பிரச்சனை, ஒரு கிரியேட்டிவ் ஆள் மீது சுமத்தப்பட்ட பிரச்சனை, பெண் பத்திரிகை நிருபர் மீதான பிரச்சனை, முகனூல் சந்திப்புக்கூட்டத்தால் வந்தப்பிரச்சனை, பெண் நண்பர்களால் உருவான பிரச்சனை, மற்றவர்களுக்கு உதவிசெய்கிறேன் என்று கிளம்பிய பூதம், இப்போது டிவி மீடியாவில் வருவதற்க்கான பிரச்சனை என்று முகனூலின் தடம் மாறி நட்புக்களுக்குள் நீ பெரியவன், நான் பெரியவன் என்கிற ஈகோவில் நிற்க்கிறது முகனூல் நட்பு.

ஆனாலும் பிரச்சனைகள் யாருக்கு எனப்பார்த்தால் நேற்றுவரை உயிருக்கு உயிராக பழகியவரே பிரச்சனைகளால் விலகும்போது அவர்கள் மீது பழி போடுவதும், அவரை விலக்கியவர்கள் அவர் மீது புழுதி வாறி இறக்கும்போது இரண்டு பேரையும் நட்பு வட்டத்தில் கொண்டவர்களின் நிலை அந்தோ பரிதாபம். பணப்பிரச்சனை, பெண் நட்புப் பிரச்சனை, அரசியல் பிரச்சினை என பலப்பிரச்சினைகளால் நட்ப்புக்கள் அடித்துக்கொள்கிறார்க. அவர்கள் பிரச்சனையில் தங்களின் குடும்பத்தையும் மாறி மாறி சந்தியில் இழுத்து அசிங்கப்படுத்துகிறார்கள்.

ஒருவர் விலகும்போது எழுப்பப்படும் அவதூறுகள் அவர் அவர்களுடன் இருக்கும்போது மறைக்கப்படுகின்றன இல்லையெனில் வளர்க்கப்படுகின்றன அல்லது பெரிதுப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதே அவர் விலகும்போது பழைய அசிங்கங்கள் கிளறி அவரும் பதிலுக்கு அசிங்கப்படுத்தி அரசியல்வாதிகளை விட கேவலமான மட்டமான ஏன் கீழ்த்தரமான செயல்கள் முகனூலில் நடந்து வருகின்றன. பின்னர் பிரச்சனைகள் வந்தவுடன் தனி மனித தாக்குதல் இரண்டு பக்கமும் வெடிக்கின்றன. அதைப்பார்த்து இரண்டு பக்கத்து நண்பர்களும் இரண்டு பக்கமும் ஜால்ரா அடித்து நெருப்பில் பெட்ரோல் ஊற்றி வளர்க்கின்றனர்.

போட்டோஷாப்பை கண்டுப்பிடித்தவரே இவர்களின் ஸ்கிரீன் ஷாட் அவலங்களை கண்டு திக்கற்று நிற்க்கின்றார். டெக்னாலஜியை வைத்து பிளாக் மெயில் செய்யும் முகனூல் தீவிரவாதிகளின் தீவிர ஈகோ அரசியல் மிகப்பெரியது.

எதையுமே அளவோடு வைத்திருப்பது நலம். அது நட்பானாலும், முகனூலானாலும். காரணம் காரியம் ஆகும்போது காலைப்பிடிப்பதும், ஆனவுடன் தள்ளிவிடுவதும் இங்கே சகஜம். மொத்தமாக களவாணித்தனத்தை செய்துவிட்டு சில நேரங்களில் அவைகள் மாறி மாறி கைக்காட்டப்பட்டு வசைமாறி பொழியப்படுகின்றன.

முகம் தெரிந்த சொந்தங்களையே நம்ப முடியாத இந்தக்காலத்தில் வெறும் அழகான கவர்ச்சிகரமான பதிவுகளை கண்டு ஒருவரை நம்புவதென்பது முட்டாள்தனம். இங்கே இடப்படும் பதிவுகள் எல்லாம் அவரவரின் கற்பனைகளேயன்றி சொந்தக்கதைகள் அல்ல அப்படியிருக்க அந்தப்பதிவுகள் பொதுவாக மற்றவர்களை கவர்ந்து லைக் வாங்க மட்டுமே.

படித்தவர்களே இப்படி ஏமாறும்போது மற்றவர்களை எப்படிக்காப்பாற்றுவது? இப்போது புரிகிறதா...முகனூலில் நான் ஏன் அதிக நட்புக்களை வளர்க்கவில்லையென்று? இப்போது புரிகிறதா முகனூல் நட்புக்கூட்டங்களுக்கு நான் ஏன் செல்லவில்லை என்று? காரணம் இந்த இயந்திர உலகத்தில் எதிர்ப்பார்ப்பின்றி யாரும் ஏதும் உங்களுக்கு செய்துவிடப்போவதில்லை, உங்களால் அவர்களுக்கு ஏதாவது வகையில் பயன் இருந்தால் மட்டுமே நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

இதனால் பாதிக்கப்படுவது யாரெனில் உண்மையான உதவி வேண்டுவோர் அல்லது உண்மையாய் உதவிகள் தேவைப்படுவோரின் பகிர்தல்கள்தான். இவை நம் நம்பிக்கையை சோதிக்கின்றன. அதனால் அவர்களுக்கு பலன் கிட்டாமல் போகவும் வாய்ப்புண்டு.

முகனூலின் இன்னொரு பலவீனம் யார் வேண்டுமானாலும் எத்தனை பொய் ஐடிகளை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே. இதனால் தன்னை விலக்கியவரின் நட்பில் இன்னொரு பெயரில் இணையலாம் அல்லது தனக்கு பிடிக்காதவர் சுவற்றில் சென்று வேறொரு ஐடியில் கவனிக்கலாம் அல்லது அவர்க்கு எதிராக பதிவிடலாம்.

எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்பிவிட்டு பின்னர் வருத்தப்பட்டு பயன் இல்லை. ஆகவே முகனூல் நட்புக்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும் அல்லது ஆராய்ந்து தெளிந்து அளவாய் பழக வேண்டும். தேவையில்லாத நட்பில் சிக்கி உங்களை நீங்கள் தாழ்த்திக்கொள்ள வேண்டாம். பின்னர் நட்பு முறிந்தவுடன் இருபக்கமும் வசைமாறும் பழக்கமும் வேண்டாம்.

ஆட்களை பார்த்து லைக்குகள் இடாமல் நல்ல பதிவுகளைப்பார்த்து லைக் இடுங்கள். அதற்க்காக அந்த நல்ல பதிவுகள் போடுபவரை நிஜத்தில் நம்பவேண்டும் என்கிற அவசியமில்லை. நல்ல விஷயங்களும் முகனூலில் உண்டு அதை அதிக நண்பர்கள் இருந்தால்தான் செய்யவேண்டும் என்பதில்லை. நல்லக்கருத்துக்கள் கொண்ட பதிவுகளும் உண்டு. அதை முகனூல் பிரபலங்கள் மட்டும்தான் சொல்லவேண்டும் என்பதில்லை.

முகனூல் வெறும் வெளி முகத்தின் நூலாக இருப்பதால் அதில் அகத்தை தேடுவது முட்டாள்தனம். நல்ல பதிவுகளை பாலோ செய்யலாமே தவிர அதை பதிவுடும் ஆட்களை அல்ல. இதில் ஒருமுறை உங்களின் பெயரை கெடுத்துக்கொண்டால் மறுபடியும் மீள்வது கடினம். காரணம் முகனூல் ஒரு ஒற்றைவழிப்பாதை மட்டுமே.

ஆண்களை விட பெண்கள் இங்கு இன்னும் கவனமாக இருப்பது நலம். ஃபேஸ்புக் ஒரு மாஸ்க் புக். உள்ளிருக்கும் உண்மை முகம் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. கடைசியாக முகனூல் அக நூல் அல்ல!!!

முகனூலின் உண்மை பயன்பாட்டை சரியாக புரிந்துக்கொள்ளாதவர் வேண்டுமானால் முகனூல் பிரபலங்களாக இருக்கலாம். புரிந்துக்கொண்டவர்கள் முகனூலில் பிராப்ளம் இல்லாதவராக இருப்பார்!!!

ஆல் தி பெஸ்ட்!!!
இடைவெளிமெதுவாய் கட்டியணை அன்பே
நமக்கிடையில் சுற்றும்
காற்றுக்கு மூச்சு முட்டிவிடப்போகிறது!!!
இனிப்பு

உனக்கு 
கொடுத்த முத்தம் 
என் உதட்டில் 
மிச்சமிருந்ததால்...

சாப்பிடும் பாகற்காய்
சர்க்கரையாய் 
வாயில் கரைகிறதே!!!

கால் தடம்

இந்த முறையும்
சின்ன கண்ணனின்
கால்தடங்களை நாமே
அழித்து துடைத்தாகிவிட்டது.

இனி அடுத்த
வருடம் வரை
காத்திருக்க வேண்டும்.

அப்போதாவது
வரைந்த கால்தடங்கள்மேல்
அளவை சரிபார்க்க
குறும்புக்கண்ணன் வருவான்
என நம்புவோம்!!!

சுதந்திரம்

என்
அன்பு அம்மாவின் ஓரடி
கருவறைக்குள் மிதந்தபோது
இருந்த சுதந்திரம்

வெளியில்
பலகோடி தூரங்கள்
சுற்றியப்பின்னும்
கிடைக்கவேயில்லை!!!

பயன்???
கட்டிய மனைவி
கண்வீங்க அழுகிறாள்

பெற்ற மகன்
பெரிதாய் ஓலமிடுகிறான்

அன்பு மகள்
அருகிருந்து கதறுகிறாள்

செல்ல பேரன்கள்
செய்வதறியாது முழிக்கின்றனர்

குடும்ப சொந்தங்கள்
குனிந்தப்படி நிற்கின்றனர்

வளர்த்த ஜிம்மியும்
வழியில் படுத்திருக்க

கிராமத்து பந்தங்கள்
தூரத்து சொந்தங்கள்
அலுவலக நண்பர்கள்
என
உணர்வுகளால் திகைத்திருக்க
என்னோடு உடனிருக்க

நான்
கஷ்டப்பட்டு,ஆசைப்பட்டு
சம்பாதித்து சேர்த்துவைத்து
அனுபவிக்காமல் போன
என்
ரூபாய் நோட்டுகளும்
ஆடம்பர பொருட்களும்
அளவிலா ஆஸ்திகளும்
சலனமில்லாமல் வேடிக்கைப்பார்க்கின்றன
அமைதியாய் கவனித்துக்கொண்டிருக்கின்றன

என் இறுதி ஊர்வலத்தை!!!

மனம் - தெலுங்கு விமர்சனம்ரொம்ப நாளுக்குப்பிறகு ஒரு தெலுங்கு படம். கொஞ்சம் வித்தியாசமான படம். நாகார்ஜுனா, அவரின் தந்தை நாகேஷ்வரா ராவ், நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா, இளையமகன் அக்கினேனி அகில், மனைவி அமலா என மொத்த குடும்பமும், ஷ்ரேயா, கியூட் சமந்தா, கௌரவ வேடத்தில் அமிதாப், பிரம்மானந்தம் போன்ற சீனியர்கள் என படம் களைகட்டுகிறது.

2013 ல் கதை நடந்தாலும் 1920களின் பிளாஷ்பேக் படம் முழுக்க பாஸிடிவ் அலைகள். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் படத்தில் ஒரிஜினல் மகன் அப்பாவாகவும், அப்பா மகனாகவும், தாத்தா பேரனாகவும் நடித்திருப்பதே. படத்தில் நடித்து முடித்தவுடன் நாகார்ஜுனாவின் தந்தை நாகேஷ்வரராவ் அவர்கள் இறந்துப்போனது வருத்தமான விஷயம்.

மகனின் பிறந்தநாள் விழாவில் ஆரம்பிக்கும் கதை அப்பா நாக சைதன்யா, அம்மா சமந்தா இவர்களுக்குள் அண்டர்ஸ்டாண்டிங் பிரச்சினை ஒரு கட்டத்தில் மகன் அடிப்பட்ட விஷயம் அறிந்து வேகமாக கார் ஓட்ட விபத்தில் இருவரும்  இறக்கிறார்கள். அந்த மகன் வளர்ந்து நாகார்ஜுனாவாக பெரிய பிஸினஸ் மாக்னட் ஆகிறான்.

ஏதேச்சையாக விமானத்தில் போகும்போது தனது தந்தை சைதன்யாவைப்போல் ஒரு இளைஞசனைப்பார்க்க அவனை தன் அன்புப்பிடிக்குள் கொண்டுவருகிறார். அதேமாதிரி தன் அம்மாவைப்போல் இருக்கும் சின்னப்பெண் சமந்தாவை அம்மா அம்மா என்று அன்புக்காட்டி சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் காதல் வர பிளான் போடுகிறார்.

நாகார்ஜுனா காரில் போகும்போது ரோட்டில் ஆக்ஸிடண்ட் ஏற்ப்பட்டதைப்பார்க்க அதற்க்குல் ஷிரேயா வந்து அந்தப்பேரியவரை காப்பாற்ற சொல்லி இவரின் காரில் ஆஸ்பிடல் எடுத்துச்செல்கிறார்கள். அங்கு குணமடையும் பெரியவர் நாகார்ஜுனாவையும், ஷ்ரேயாவையும் பார்த்து இவர்கள் தன் இறந்துப்போன அப்பா, அம்மா மாதிரி இருப்பதை பார்த்து மகிழ படம் 1920ந் பிளாஷ்பேக்குக்கு செல்ல இறுதியில் இவர்கள் அனைவரும் இணைந்தார்களா என்பதை கடைசி 5 நிமிட பரபரப்பில் காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார் (சிம்புவின் அலை, மாதவனின் யாவரும் நலம் இயக்குனர்).

படத்தில் நாகார்ஜுனாவின் மொத்தக்குடும்பத்தையும் தாத்தாவை பேரனாகவும், அப்பாவை மகனாகவும், மகனை அப்பாவாகவும் காட்டி வயிறு வலிக்க நகைச்சுவையுடன் காட்டியிருக்கிறார் இயக்குனர். இன்றைய தேதிக்கு தெலுங்கில் வந்து பலனூறு கோடிகளை அள்ளியிருக்கும் பிரமாண்ட வெற்றிப்படம்.

படத்தில் சமந்தாவின் கியூட் எக்ஸ்பிரசன்கள் சூப்பர். கொஞ்சலிலும், சிணுங்களிலும் அசத்தியிருக்கிறார். மெச்சூர்டான வேடத்தில் நாகார்ஜுனா, சைதன்யா ரோமியோ கேரக்டர் என படத்தில் சுவைக்கு பஞ்சமில்லை. 1920களின் ஆர்ட் டைரக் ஷனும், படமாக்கலும் சிறப்பு.

ஆபாசம் இல்லை, அசிங்கமான டேன்ஸ் மூவ்மெண்ட் இல்லை, கவர்ச்சி இல்லை, ஃபீல் குட் கதை பார்த்து ரசிக்கலாம் வாங்க.

மனம் - உங்கள் மனங்களை கொள்ளைக்கொள்ளும்.

ஆன்மா சாந்தி அடையட்டும்!!!மரணம் நிச்சயிக்கப்பட்டதுதான் எனினும் அது எப்போது வரும்? யாருக்கு வரும்? எப்படி வரும்? என்று தெரியாதிருப்பதுதான் வாழ்வின் சுவாரஸ்யம்.

அப்படித்தான் போன வாரம் என் குடும்பத்தில் இருந்த நெருங்கிய சொந்தத்தில் ஒருவர் அனாதைமாதிரி ரோட்டில் மதுவுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்ட செய்தி கேட்டு அதிர்ந்துப்போனேன். தற்கொலைசெய்தது என்னமோ முட்டாள்தனமான கோழை செயல் எனினும் தற்கொலை செய்துக்கொண்டவர் யார் என அறிந்தப்பின்னர் என் மனம் என்னில் இல்லை.

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கோடீஸ்வரர் இளைய மகனாய் இருந்தாலும் தன் ஏழெட்டு தங்கைகளையும் அவர்களின் குடும்பத்து வாரிசுகளையும், அண்ணன்களையும் அவர்களின் சொந்தங்களையும் கரையேற்றி அவர் அப்போதுதான் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். சட்டென்று காலம் மாற தங்கைகள் அவரின் சொத்தில் பங்குகேட்டு வந்து நின்றவுடன் எல்லாவற்றையும் பிரித்துக்கொடுத்து ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் சுமாரான பணக்காரரானார். சொந்தங்களும் அவரையும் குழந்தைகளையும் மறந்தனர்.

பாவம் அவரின் குழந்தைகள்தான் இவராவது தனது 40 வயதுவரை செல்வந்தராக வாழ்ந்துவிட்டார் ஆனால் இவரின் குழந்தைகள் சிறுவயது முதலே கஷ்டங்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த குழந்தைகளை நான் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் அவர்களின் அழகு முகம் என் கண்ணில் இன்னும் நின்றுக்கொண்டிருக்கின்றது.

இதுவரை எல்லா வற்றையும் அனுபவித்து செல்வசெழிப்போடு வாழ்ந்தாலும் அவரின் சொந்தங்கள் அவரை மறந்தது, மனம் நொந்து இருந்ததையெல்லாம் குடியில் இழந்தார். அவ்வளவு பெரிய மனிதர் அவ்வப்போது மற்றவர்களிடம் கையேந்தினார்.

பல வருடம் கழித்து அவரை ஊரில் சந்தித்தப்போது மொத்த உருவமும் மாறி அடையாளம் தெரியாதவரானார். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கக்காரணம்...ஒவ்வொரு வீட்டிலும் இப்படியான அண்ணனோ, தம்பியோ அல்லது அக்காவோ தன் உடன் பிறப்புகளுக்காக வாழ்க்கையை கொடுத்தவர்களாகவோ, தொலைத்தவராகவோ இருக்கக்கூடும்.

பணம் மட்டும்தான் வாழ்க்கை என்றாகிப்போனப்பின் மனிதன் இங்கே மனிதனாக இல்லை. சின்ன வயதுகளில் அவர் வருவதைப்பார்க்கவே ஆசையாய் இருக்கும் அந்த கம்பீரமும், அவர் கொண்டுவரும் தின்பண்டங்களும் என்னால் மறக்க முடியவில்லை. வருடம் இருமுறை பழனிக்கும், குருவாயூருக்கும் எங்கள் மொத்தக்குடும்பமும் செல்லும்போது அத்தனை செலவுகளை கணக்கில்லாமல் செய்வார். அவரின் மகன் மகளுக்கு செய்யும் அதே செலவுகளை எங்களுக்கும் செய்வார்.

நடுத்தர குடும்பமாக இருந்த எங்களிடம் அவர்காட்டிய அன்பு அபரிமிதமானது. அவரின் முடியு எனக்கு அவர்மேல் கோபம் ஏற்ப்படவைத்தாலும், அவரை மறந்த சொந்தங்களை நினைத்து நான் கூனிக்குறுகி நிற்க்கிறேன்.

அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரின் மனைவி சாந்தி ஆண்டிக்கு இறைவன் பலத்தை தரவும் வேண்டுவதைத்தவிற இந்த கையாலாகதவனுக்கு வேறு வழியில்லை. இந்தப்பதிவை அவரின் சொந்தங்களும் படிக்கக்கூடும்..அவர்களுக்கும் புரியட்டும்...பணத்தை தாண்டிய வாழ்க்கை ஒன்று உண்டென்று!!!

குடும்பத்திற்க்காக உழைப்பவர்களுக்கும், குடும்பத்திற்க்காக வாழ்வை தொலைத்தவர்க்கும் இந்த பகிர்வு மனநிம்மதியை தரட்டும்.

Sunday, August 10, 2014

கிட்ஸ் - ஆங்கிலம் (1995)


கிட்ஸ் - ஆங்கிலம் (1995)

KIDS - English Movie

1990 களிலேயே ஆரம்பித்துவிட்டார்கள் அமெரிக்க குழந்தைகள். 14 வயதுக்குள் செக்ஸ், டிரக்ஸ், ஆல்கஹால் என அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒருவார நிகழ்வுகளின் கதைதான் இந்தப்படம்.

14 வயதை நெருங்கும் இரண்டு நண்பர்கள் அதில் ஒருவன் தனது 13 வயது கேர்ள் ஃபிரண்டுடன் உடலுறவு கொள்கிறான். உறவுக்கொள்ள அவளிடம் பல பொய்களை அவிழ்த்துவிட்டு அவளை மயக்குகிறான். இன்னொருவன் வெளியில் காத்திருக்க...உறவு முடிந்தவுடன் அவன் நண்பனுடன் நடந்ததை ஷேர் செய்கிறான். பின்னர் அவர்கள் வயதை ஒத்த நண்பர்களின் வீட்டுக்கு சென்று குடிக்கிறார்கள், பேசுகிறார்கள், கும்மாளமிடுகிறார்கள்.

அதே வேளை அதே வயதை ஒத்த பெண் பிள்ளைகளின் அறையில் அதே செக்ஸ் சம்பந்தமான சம்பாஷனைகள் கூடவே சிகரெட்டும் மதுவும். பின்னர் அதில் இரண்டு பெண்கள் மருத்துகரிடம் செல்கிறார்கள். தங்களது இரத்த மாதிரியை பரிசோதனை செய்ய...

முதல்காட்சியில் நண்பனுடன் உறவுக்கொண்ட நாயகிக்கு இதுவரை அவனுடன்தான் முதல் முறையாக உடலுறவுக்கொளிகிறாள். அதுவும் ஒரே ஒரு முறை. தனது நண்பியோ கிட்டதட்ட 10 ஆண்களுடன் பலமுறை உடலுறவு கொண்டவள். ஆனால் பரிசோதனையில் பலமுறை உறவுக்கொண்ட நண்பிக்கு எச்ஐவி நெகடிவ்வாகவும், ஒரே ஒரு முறை உறவுக்கொண்ட இவளுக்கு பாஸிடிவ்வாக ரிசல்ட் வர உடைந்துப்போகிறாள். அவனை தேடி அலைகிறாள்.

அதற்க்குள் அவனும் இன்னொரு நண்பியை உஷார் செய்ய தீவிரமாக இறங்குகிறான். கஷ்டப்பட்டு அவளை சம்மதிக்க வைத்து ஒரு வீட்டிற்க்கும் அழைத்துச்செல்கிறான். இவளும் அவனைத்தேடி வீதி வீதி யாக தாங்கள் பழகிய இடத்திற்க்கெல்லாம் செல்கிறாள். கடைசியில் அவன் இருக்கும் வீட்டிற்க்கு மிட்நைட்டில் செல்ல அங்கே சிறுவர்களும், சிறுமிகளும் பல கோலங்களில் திளைத்திருக்க, அவனும் இன்னொரு நண்பியுடன் படுக்கையில் கிடப்பதைப்பார்த்து மத்தியானம் தன் நண்பன் கொடுத்த மாத்திரையில் மயக்கமாகி ஷோஃபாவில் விழுகிறாள். அங்கே எச்ஐவி உள்ள நண்பன் இன்னொருவளுடன் உறவுக்கொள்ள எச்ஐவி பாதித்து மயக்கமாய் கிடக்கும் இவளையும் இவளின் பாய்ஃபிரண்டின் நண்பன் இவளின் மயக்க நிலையிலும் உறவுக்கொள்கிறான்...காலையில் எழுந்து "என்ன நடந்துச்சு?" என்கிற வசனத்துடன் படம் முடிகிறது.

படம் வந்த வேளையில் மிகப்பெரிய விமர்சனத்திற்க்கு உள்ளாகி படத்திற்க்கு சென்சார் கொடுக்க முடியாமல் அன் ரேட்டட் மூவியாய் வெளிவந்தப்படம். பலரின் பாராட்டுதலையும் கதைக்காக அவார்டுகளை குவித்தாலும் படத்தில் அமெரிக்க குழந்தைகளின் அவலத்தையும் கேவலத்தையும் சரியாக சொல்லியிருக்கும்படம்.

படத்தில் அதிக கவர்ச்சி காட்சிகள், காதில் கேட்கமுடியாத வசனங்கள் என சிறு வயது குழந்தைகளின் நிலையைப்பார்த்தால் நமக்கு பகீர் என்கிறது. சோஷியல் நெட்வர்க்குகளும், மொபைலும் இல்லாத அந்தக்காலத்திலேயே குழந்தைகள் இப்படி இருந்தபோது இன்றையை நிலையை நினைத்துப்பார்க்கவே பயமாய் இருக்கின்றது.

இந்தப்படம் குழந்தைகள் பார்க்கும் படமில்லையெனினும் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் பார்க்கவேண்டியப்படம். இந்தியாவிலும் கிட்டதட்ட இந்த மாதிரியான செக்ஸ் கலாச்சாரம் பெருகி விட்டமையால் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தப்படத்தைப்பார்த்து குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். அப்படியே உடலுறவு கொள்ளும்பட்சத்தில் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு அறிவுறுத்தவேண்டும். செக்ஸ் கல்வியின் அவசியம் இன்றையக்காலத்திற்க்கு கட்டாயம் அவசியம்.

பேங்களூர் டேய்ஸ்!!!
பேங்களூர் டேய்ஸ்!!!

ஆக்சுவலா பெங்களூரு டேய்ஸ் என்று பெயர் வைத்திருக்கணும். பேங்களூர் பெங்களூரு ஆகி பல வருடம் ஆகிவிட்டது.
விதவிதமான கனவுகள் கொண்ட கேரளத்து மூன்று கஸின்களின் பெங்களூரு வாழ்க்கை பதிவு. துல்கர் சல்மான், நிவின் பவுலி மற்றும் நஸ்ரியா என மூன்றுபேரும் சின்ன வயதுகளில் ஒன்றாய் சுற்றித்திரிந்தவர்கள் பெங்கலூருவில் வாழவேண்டும் என ஆசைப்பட்டவர்கள். திடீரென நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாக கலகலவென  கல்யாணப்பாடலுடன் ஆரம்பிக்கின்றது படம். நிவினுக்கும் பெங்களூருவில் வேலை கிடைக்க, நஸ்ரியாவின் கணவர் பஹத் பாஸிலும் பெங்களூருவில் உயர் பதவியியில் இருக்க துல்கர் மட்டும் கொஞ்சம் பொறுப்பில்லாமல் பைக்கே கதியென இருக்கிறார்.

கல்யாணத்திற்க்கு பின் பெங்களூருவில் சந்திக்கும் இந்த மூன்றுப்பேருக்கும் பலபலப்பிரச்சனைகள். நஸ்ரியாவின் கணவர் அன்போடு இல்லை ஆபீஸ் வேலையே கதியாய் கிடக்கிறார், நிவினுக்கு ஹேர் ஹோஸ்டஸ் இஷா தல்வார் பிரண்ட் கிடைக்கிறாள், துல்காருக்கு ஆர் ஜே பார்வதி கிடைக்கிறாள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கிளைக் கதைகள் பஹத் பாஸிலுக்கு முன்னாள் காதலியின் (நித்யா மேனன்) மறைவு, நிவிகனுக்கு ஹேர் ஹோஸ்டஸ் ஏமாற்றம், துல்காரின் ஆர் ஜே காதலி ஆஸ்திரேலியாப்பயணம் என ஒரு கட்டத்தில் அனைவரும் பிரச்சனைகளில் தவித்து பின்னர் சுபமாகிறதா என்பதே மீதி கதை.

ஃபிரஷ்ஷான கதைக்களம் கூத்தும் கும்மாளமுமாய் கதைப்பாத்திரங்கள், ரொம்பவும் கேஷுவலாய் பின்னியெடுத்திருக்கிறார்கள். சமீபத்திய மலையாளப்படங்களில் இந்த அளவுக்கு பல கேரக்டர்களை விவரிக்க முடிந்ததா என்பது தெரியவில்லை. பல கேரக்டர்களுக்கு சரியான நேரத்தை ஒதுக்கி ஒவ்வொன்றையும் தெளிவாக சொல்லி பாராட்டைப்பெறுகிறார் இயக்குனர். அதுவும் அத்தனைப்பேருக்கும் முக்கியதுவம் கொடுப்பதென்பது சாதாரண காரியமா? அதையும் தெளிவாக கொடுத்திருக்கிறார். கூடவே அதில் மென்மையான இரண்டு காதல்கள் தடாலடியாய் முடிந்துப்போகும் இருக்காதல்கள்.

இயக்குனரின் நகைச்சுவை ரசனைக்கு இந்த ஒரு காட்சி போதும் "வீட்டை விட்டு ஓடிப்போகும் அப்பாவின் கடித்ததை சோகமாகப்படித்து வருத்தப்படும் நிவின் பவுலி பின்னர் துல்கார் சொன்னப்பின் விவரமறிந்து அதேக்கடித்ததை சந்தோஷமாகப்படித்துக்காட்டும் இடம்" அட அட அற்ப்புதம்.

பஹத் பாசிலின் மௌனத்திற்க்கான காரணம், ஆர் ஜே பார்வதி மேனனின் (பூ நாயகி) ஆக்சுவல் நிலை, பஹத் பாஸில் தன்னை மாற்றிக்கொண்டு பழக வரும்போது ஏற்ப்படும் தடங்கல்கள் என ஆங்காங்கே டைரக்டர் டச்.

ஆனாலும் படத்தில் கொஞ்ச நேரம் வரும் நித்யா மேனன், தட்டத்து மறையத்து படத்தின் சூப்பர் ஜோடி நிவினுக்கு இஷா தல்வாரை வில்லிமாதிரி காட்டியிருப்பதும் கொஞ்சம் நெருடல். எல்லாவற்றையும் விட பூ நாயகி பார்வதியா என ஆச்சர்யம்படும் வகையில் ஆர் ஜேவாக்கியிருப்பது கிளாஸ். இசை கோபி சுந்தர் மூன்று பாடல்கள் பிரமாதம், மற்ற இரண்டும் ஓகே ரகம்.

அஞ்சலி மேனன் மலையாளத்தின் சிறந்த இயக்குனர் என்பதற்க்கு அவர்களின் முந்தைய மூன்று படங்களே சாட்சி. கேரளா கஃபே, மஞ்சாரக்குடு, உஸ்தாத் ஓட்டல் இப்போது பேங்களூர் டேய்ஸ். அசாத்திய திறமைக்கொண்ட பெண் இயக்குனர். இந்திய திரை உலகில் பெண் இயக்குனார் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத்தெரியும்.

பேங்களூர் டேய்ஸ் - எல்லாவித கலாச்சாரத்தையும் கலவையாய்க்கொண்ட பெங்களூரைப்போலவே எல்லா வித அம்சங்களையும் கொண்ட அழகான கலவை இந்த பேங்களூர் டேய்ஸ். தவிர்க்காமல் பாருங்கள்.