Thursday, July 17, 2014

மூங்காரு மளே (பருவமழைக்கு முந்தைய மழை) - கன்னடம்Mungaru Male - Kannada Movie Review

முதன் முதலாக ஒரு கன்னட ரிவியூ. 2006ல் ஐதராபாத்தில் வேலையில் இருந்தபோது வெளிவந்த படம். எனக்கு தெரிந்து பல காலம் கழித்து கன்னட படம் ஒன்று ஐதராபாத்தில் வெளிவந்தது இதுவாகத்தான் இருக்கும். ஆனால் என் அதிர்ஷ்டம் படத்தை பாதியில் விட்டுவிட்டு வரவேண்டியதாகிவிட்டது...கிளையண்ட்டுக்கு ஃபைல் அப்லோடிங்கில் ஏற்ப்பட்ட எரரால் புராஜக்ட் மானேஜராகிய என்னை கூப்பிட்டத்தால் படத்தை பார்க்காமலே சென்றுவிட்டேன். வேலையை ரிசைன் செய்ய இந்தப்படத்தை பார்க்க முடியாமல் செய்ததும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

சிலபடங்கள் நம்முடன் பல நாட்கள் நினைவில் தங்கியிருக்கும். படம் வந்து 8 வருடங்கள் ஆனாலும் எனக்கு பிடித்த 10 படங்களில் இதுவும் ஒன்று எனச்சொல்வேன். சாதாரண சீரியல் ஆக்டராக இருந்த கனேஷின் இரண்டாவது படம் அவரை கன்னடத்தில் எங்கோ கொண்டுச்சென்றப்படம். ராஜ்குமாரின் வாரிசுகளையும், உபேந்தரா, சுதீப் மற்றும் தர்ஷன்களை ஒரே இரவில் வயிற்றில் புளியை கரைத்தப்படம். கன்னட படங்களில் மிகப்பெரிய வசூலை ஒரு சாதாரண ஹீரோவுக்கு கொடுத்து இன்று கணேஷ் உச்சத்தில் இருக்க காரணமான படம்.

இந்தியாவில் வெளிவந்த எல்லாப்படங்களிலும் முதன் முதலாக மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் 500 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை செய்தப்படம். ராஜ்குமாரின் மகன் புனீத் ராஜ்குமாருக்காக எழுதப்பட்டு அவர் கதைசரியில்லை என ஒதுங்க வெறும் 75 லட்சத்தில் கணேஷை வைத்து எடுக்கப்பட்டு சுமார் 80 கோடிகள் அள்ளியப்படம். படத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் ஒன்று கர்நாடகத்தின் மடிக்கீரே மற்றும் ஜோக் ஃபால்சின் அழகும், இரண்டாவது படமுழுக்க பெய்யும் மழையும் ஹீரோ கூடவே வரும் தேவதாஸ் என்கிற முயலும் ஹா ஹா கொள்ளை அழகு. படத்தின் எல்லாப்படல்களும் மிகப்பிரபலம்.

சரி கதைக்கு வருவோம்...

முதல் காட்சியில் பணக்காரரான ஹீரோ கணேஷ் பெங்களூரின் மாலில் ஒரு அழகான பெண்ணை (பூஜா காந்தி) சந்திக்கிறார்...தவறுதலாக அவளைப்பார்த்துக்கொண்டே திறந்துக்கிடக்கும் சாக்கடையில் விழ அந்தப்பெண் கணேஷை கைக்கொடுத்து காப்பாற்ற தவறுதலாக அவளின் கடிகாரத்தை விட்டுச்செல்கிறாள். தன் அம்மாவின் உயிர்த்தோழியின் மகள் கல்யாணத்திற்க்கு... அம்மாவுடன் ஒரு வாரம் முன்னதாகச்செல்ல அங்கே அவன் பார்த்தப்பெண்தான் மணமகளாய் இருக்கிறாள். முதலில் கணேஷை வெறுக்கும் பூஜா பின்னர் அவனை காதலிக்கத்தொடங்க, மகளின் காதலை அறிந்து கணேஷிடமே மணமகளின் அம்மா மகள் யாரையோ காதலிக்கிறாள் என அழுது மகளின் மனசை மாற்றி கல்யாணத்திற்க்கு சம்மதம் வாங்கிக்கொடு என கையேந்துகிறார், மணப்பெண்ணின் மிலிட்டரி அப்பாவின் உயிரை காப்பாற்றிய சோல்ஜர் கௌதம்தான் மணமகன் என அறிந்து அவர்கள் யாருக்கும் பிரச்சனை கொடுக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார் ஹீரோ, பின்னர் கல்யாணம் நடந்ததா கணேஷின் நிலை என்ன என்பதே மனதை உருக வைக்கும் கிளைமாக்ஸ்.

இடையில் காமெடி, சஸ்பென்ஸ், பிரமாண்டமான மலைப்பள்ளத்தாக்கு, இயற்கை கொஞ்சும் கர்நாடகா முக்கியமாய் மனதை வருடும் ஆறு பாடல்கள் என படம் இன்றுப்பார்த்தாலும் நீங்கள் ரசிப்பீர்கள்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் நாயகி பூஜா காந்தி. கொஞ்சம் வயதான தோற்றம், அழகும் நடிப்பும் அவ்வளவாக கவரவில்லையெனினும் படத்தை முழுக்க முழுக்க தூக்கி நிறுத்தி ஸ்கோர் செய்வது கணேஷ்தான். சிறிய பட்ஜெட் படம் என்பதால் பிரபல நடிகைகளும் நடிக்க முன்வராததால் மும்பையிலிருந்து பூஜா காந்தி. அனந்த நாக் நாயகியின் அப்பாவாக சிறப்பாக செய்திருக்கிறார். இயக்குனர் யோக்ராஜ் பட்டுக்கு ஆயிரம் பூக்கள் வாழ்த்துக்களாய்.

உண்மைக்காதல் என்பது சேர்வதல்ல, விட்டுக்கொடுத்தல்!!! என்கிற வரிகளை படித்துவிட்டு தியேட்டரை விட்டு கண்ணீருடன் வந்த மக்களைப்பார்த்தாலே தெரியும் இந்தப்படம் எப்படி வென்றது என்று.

முடிந்தால் டோரண்ட் டவுன்லோட் செய்து பாருங்கள். சப்டைட்டிலுடன் டோரண்ட் உண்டு.

மூங்காரு மளே - மழையில் கரைந்த உண்மைக்காதல்!!!

No comments:

Post a Comment