Monday, June 9, 2014

Khaddama (House Maid ) - Malayalam


Khaddama (House Maid  ) - Malayalam

கத்தாமா (அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்பவள்)

இரண்டாயிரத்து பதினொன்றில் ரிலீஸாகி நம்மையெல்லாம் கொஞ்சம் உலுக்கிப்பார்த்த படம். அரபு நாடுகளில் வீட்டு வேலைக்குப்போகும் கேரளத்து பெண்ணைப்பற்றிய படம்.

முதல் காட்சியிலேயே ஏதோ ஒன்று நடக்க கூடாது நடக்கப்போவதாய் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி படத்தை நகர்த்துகிறர் சீனியர் டைரக்டர் கமல். விமான நிலையத்தில் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருக்கும் காவ்யா தனது அறிமுகமில்லாத வெளிநாட்டு வேலை மற்றும் பயணத்தின் நினைவுகளில் காத்துக்கொண்டிருக்கிறாள். தான் ஒரு இந்துப்பெண் என்பதை அறிந்து பொட்டை அழித்து இந்த ஃபர்தாவை போட்டுக்கொள் என இன்னொரு கத்தாமா அவளுக்கு சொல்ல உடையளவில் முஸ்லிமாக மாறுகிறாள்.

அரபு வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் அவளுக்கு ஆரம்பித்துவிடுகிறது பிரச்சனைகள். பாஷை தெரியாத இடத்தில் அதிகம் படித்திராத பெண்ணின் இயலாமை அங்கே அவளை முதலில் சிரமத்தைக்கொடுத்தாலும் இன்னொரு இந்தோனேஷிய வேலைப்பெண், மலையாளி டிரைவர் சூரஜ் என கொஞ்சம் ஆறுதல் பிறக்கிறது.

தான் இந்த வேலைக்கு வந்ததற்க்கான காரணங்கள் இயற்க்கை எழில் கொஞ்சும் கேரளத்தில் பிளாஷ்பேக்குகளாய் நகர்கிறது. தினமும் அபீசுக்கு வேலைக்குப்போகும்போது ஜேசிபி டிரைவர் பிஜுமேனனுடன் காதல், பின் கல்யாணம் பிஜுவின் திடீர் இறப்பு, குடும்ப வருமை என சிறிய சிறிய காட்சிகள்தான் எனினும் நம்மை படத்தோடு ஒன்றவைக்கிறது.

வரண்ட பூமியில் இரண்டாவது பாதியின் அவளின் போராட்டங்கள் படம் பார்ப்பவர்களை பரிதாபத்தை அவள் மீது கொட்டச்சொல்கிறது. இறுதியில் தப்பித்தாளா இல்லையா என்பதை படத்தைப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். அமைதியாய் வந்து நடித்துவிட்டுபோகும் சோசியல் வர்க்கர் ஸ்ரீனிவாசன். தனது சொந்தப்பைசாவில் மற்றவர்களுக்காக பாடுபடுவது நெகிழ்வு.

அரபு நாடுகளின் நம்மவர்களின் அட்டகாசங்களையும் தொடத்தவரவில்லை இயக்குனர். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் நாட்டின் மானத்தை வாங்கும் இந்திய இல்லீகல் வர்க்கர்ஸ், வேலை செய்யும் இடத்தில் தனது காம இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் ஆட்கள், எதையும் அவ்வளவாக கண்டுக்கொள்ளாத ஏஜண்ட்கள் என நம்மவர்கள் மீதும் தவறுகள் இல்லாமல் இல்லை.

அதே நேரத்தில் பாலைவனங்களில் அடிமைகளாய் இருக்கும் ஒட்டகம் மேய்ப்பவர்கள், டிரக் டிரைவர் முரளி கோபி, சமூக சேவகர் என நல்லவர்களின் பக்கங்களையும் திறந்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர். அதுவும் அந்த ஆடு மேய்க்கும் நடிகர் நம்மை கலங்க வைக்கிறார்.

காவ்யாமாதவனின் நடிப்பை சொல்லவா வேண்டும். அவள் படும் கஷ்டங்கள் உண்மைதான் எனினும் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தெரிகிறது. ஆனால் கேரளத்து காட்சிகளில் அவளின் பெரிய முட்டைக்கண்களுக்கு நான் அடிமை.

படத்தால் இயக்குனர் சில விஷயங்களை சொல்லவருகிறார். முடிந்த வரை தகுதியான படிப்பறிவு இல்லாமல் கீழ் மட்ட வேலைகளுக்கு வெளிநாடுகள் செல்லவேண்டாம். இந்தியா உன்மையிலேயே சொர்க்க பூமிதான், தவறான ஏஜெண்ட்டின் வார்த்தைகளை நம்பாதீர்கள் வெறும் 250 லிருந்து 300 டாலருக்காக வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள் படத்தில் வரும் அனாதை பிணங்களாட்டம்.

நானும் வெளிநாட்டில் இருப்பதால் இயக்குனர் சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். நம்மவர்களும் இங்கே படும் கஷ்டங்களை கண்களால் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

கேரள அரசின் விருதுகளை குவித்தப்படம், பெண்களை மையமாக வைத்து வந்திருக்கும் இன்னொரு சிறந்தப்படம்.

வெளிநாட்டு வேலையில் பணம் கிடைக்கலாம் பிணமாய் ஜீவிக்கவேண்டும்!!!

கத்தாமா - இந்தியப்பெண்னின் வாழ்க்கை போராட்டம்!!!

No comments:

Post a Comment