Sunday, June 15, 2014

வரவேல்ப்பு - மலையாளம்


வரவேல்ப்பு - மலையாளம்

கத்தாமா என்றொரு வெளிநாட்டு வேலைக்குப்போய் கஷ்டப்படும் பெண்ணின் படத்தை பார்த்துவிட்டு என் ஹார்ட் டிஸ்க்கில் அடுத்தப்படம் தேடியபோது கிடைத்த இந்தப்பழையப்படம் வரவேல்ப்பு. கத்தாமாவில் இந்தியாவிலிருந்து அரபு நாடுக்கு சென்று கஷ்டப்படும் பெண்மணியின் கதை, இதில் வெளிநாட்டிலிருந்து சம்பாதித்து பிஸினஸ் செய்து இந்தியாவில் கஷ்டப்படும் ஒருவனின் கதை. அட...என்ன ஒரு கோ ஹின்ஸிடெண்ட். அக்கரைக்கு இக்கரை பச்சை!!!

80களின் இறுதியில் கேரளத்தில் இப்படியான ஒரு படம் வந்தது எனக்கு ஆச்சர்யத்தைத்தந்தது. கேரளாவின் தொழிற்சங்கங்களை தோலுரிக்கும் தைரியமான படம். பிசினஸ் செய்பவர்களையும், பிசினஸ் செய்ய வருபவர்களும் தொழிற்சங்கங்க்களின் தேவையற்ற போராட்டத்தால் கேரளாவின் வியாபாரம் செய்ய ஏன் தயங்குகிறார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்லி நெத்திப்பொட்டில் அடிக்கும் படம். இந்த கதைக்கு சொந்தக்காரர் சாத் சாத் நமக்குப்பிடித்த ஸ்ரீனிவாசனே.

படம் கொஞ்சம் பரபரப்பாய் ஆரம்பிக்கின்றது. வெளிநாட்டிலிருந்து 7 வருடம் கழித்து வரப்போகும் தங்கள் தம்பிக்காக இரு அண்ணன்களும், அவர்களின் மனைவிமார்களும் அவனுக்கு பிடித்த சமையல்களை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவனும் வந்து சேராததால் அவர்களே அதை தின்று காலி செய்ய இரவில் லேட்டாய் வருகிறான் தம்பி மோஹன்லால். வெறும் கஞ்சிதான் அவனுக்கு கிடைக்கிறது.

மோஹன்லால் வெளிநாட்டிலிருந்து மொத்த பணத்துடன் வருவதால் இரு அண்ணன்களும் அந்த பணத்தைக்கொண்டு பிஸினசை விரிவாக்கும் பிளானுடன் இருக்கிறார்கள். மூத்த அண்ணன் தனது ஹோட்டல் பிசினசை வளப்படுத்த ஏசி ஹோட்டல் தொடங்கலாம் என்கிறார். இளைய அண்ணன் தனது அராக்கு ஷாப்பைப்போல் இன்னொன்று தொடங்கலாம் என்கிறார். இதற்கிடையில் மோஹன்லாலின் இறந்துப்போன அம்மாவின் அண்ணன் தென்னந்தோப்பை வாங்கி காசு பார்க்கலாம் என்கிறார். எல்லாவற்றிர்க்கும் தலையாட்டும் மோஹன்லால் அடுத்த நாள் பேப்பரில் வரும் ரூட்டுடன் கூடிய பஸ் விறபனைக்கு விளம்பரத்தை கண்டு "கல்ஃப் மோட்டார்ஸ்" என்கிற பஸ் சர்வீசை ஆரம்பிக்கிறார். அடிக்கடி ரிப்பேராவதோடு மட்டுமல்லாமல் அண்ணன் ரெகமண்ட் செய்து வேலைக்கு எடுத்த ஓட்டுனர், நடத்துனர்களின் அலட்சியம், பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த குடிகார அப்பாவின் மகளாய் ரேவதி, பிசினஸ் தொடங்கி பணம் கரைந்ததால் மோஹன்லாலை கழட்டிவிடும் குடும்பம், ஏமாற்றி ஓடிப்போகும் நடத்துனர், பின்னர் மோஹன்லாலே நடத்துனராகும் பரிதாபம், திருடி ஓடிய நடத்துனருக்காக வக்காலத்து வாங்கி அடிமேல் அடி கொடுக்கும் தொழிற்சங்க தலைவர் முரளி, ஆர் டி ஓ ஆபீசராய் இம்சை கொடுக்கும் ஸ்ரீனிவாசன், கடைசி காட்சிகளில் மோஹன்லாலுக்காக போராடும் அரசு அதிகாரி விஜயன்...இப்படி பல சுவாரஸ்ய சம்பவங்கள். பின்னர் அவரின் வியாபாரம் என்னவாயிற்று என்பதை தொழிற்சங்கங்களின் குரூர முகத்துடன் காட்டும் அதிர்ச்சி கிளைமாக்ஸ்.

7 வருடங்கள் பாலைவனத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்தப்பணம் கரைந்துப்போனதில் வரும் இயலாமை, சரியான தொழிலாளர்கள் அமையாததால் ஏற்ப்படும் பிரச்சனைகள், ரேவதியுடனான இனம் புரியாத நட்பு என பல கோணங்களில் லாலேட்டன் காமெடி கலந்து அசத்தியிருக்கிறார். படத்தில் மிக அதிகமான போராட்ட வாழ்க்கை இருந்தாலும் அதை அளவாக கொடுத்து திரைக்கதையை அமைத்த ஸ்ரீய்னிவாசனின் திறமையை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.

துடுக்குப்பெண்ணாக வந்து, பொய் சொல்லி மோஹன்லாலை ஏமாற்றி இறுதியில் பக்க பலமாய் இருக்கும் பாத்திரத்தில் ரேவதி, தன் அப்பா குடித்து குடித்து எல்லாவற்றையும் அழிக்க தளராது குடும்பத்தை நடத்தும் ஏழைப்பெண்ணின் வாழ்க்கைப்போராட்டம்.

டிரைவராக இன்னசண்ட், மனிதர் அனாயசமாக நடித்துவிட்டுபோகிறார். வண்டியை ஆக்ஸிடென்ட் செய்துவிட்டு சிம்பிளாக எஸ்கேப் ஆகியும், ஆர் டி ஓ ஆபீசரின் முன் வண்டியை நிறுத்தாமல் ஓனரை மாட்டிவிடும் காட்சிகளிலும் மோஹன்லாலை நடிப்பில் முந்துகிறார்.

கோபக்கார தொழிற்சங்க தலைவராக முரளி, தான்தோன்றித்தனமாக கடைசிவரை விட்டுக்கொடுக்காத தலைவன். வியாபாரம் செய்ய வருபவர்களை பிச்சைக்காரராக்கி நடுத்தெருவுக்கு இழுத்துவிடும் சிவப்புக்கொடி தலைவன்.

சத்யன் அந்திக்காடின் சிறப்பான இயக்கம், எல்லாவற்றையும் மிக ஆழமாகப்பார்க்காமல் காமெடியுடன் கதை நகர்த்தும் உத்தி சிறப்பு. அதுவும் அந்தக்கடைசி காட்சி நம்மை கலங்கவைக்கும் என்பதில் ஐய்யமில்லை.

ஆக...என்னதான் பணம் சம்பாதித்தாலும் அதை சரியான படி முதலீடு செய்வது அவசியம். நானும் கோயம்புத்தூரில் அனிமேஷன் இன்ஸ்டிட்யூட் தொடங்கி நிறைய பேருக்கு பீஸ் வாங்காமல் சொல்லிக்கொடுத்து பல லட்சங்கள் இழந்தவன் என்கிற முறையில் "பிஸினஸ் செய்கிறவர்கள் பாவம் பார்க்கக்கூடாது அல்லது பண விஷயத்தில் கறாராக இருக்கணும்" என்பதை உங்களுக்கும் எனக்கும் தெளியவைத்தப்படம் இந்த வரவேல்ப்பு.

யு டியூபில் தாராளமாய் கிடைக்கிறது. முடிந்தால் டவுன்லோட் செய்து பார்க்கவும்.

வரவேல்ப்பு - சொந்த மண்ணில் தோற்றுப்போனவனின் கதை. மோஹன்லாலின் அடுத்த இந்திய பயணத்திற்க்கு காத்திருப்போம்!!!


1 comment:

  1. அருமையான விமர்சனம் படம் பார்க்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete