Sunday, June 15, 2014

தூவானத்தும்பிகள் - மலையாளம்


தூவானத்தும்பிகள் - மலையாளம்

1987 ல் வெளிவந்து 27 வருடங்கள் கழிந்தாலும் இன்னும் மலையாளிகளின் மனதில் மட்டுமல்ல இந்தியர்களின் மனதிலும் நீங்கா இடம்பெற்றப்படம். 2013 நடத்தப்பட்ட வீக்கெடுப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த படங்களில் 8வது இடத்தை பெற்றிருக்கும் படம்.

போல்டான சப்ஜெக்டை அந்தக்காலத்தில் தைரியமாக தொட்டு படத்தை திரைப்பட வரலாற்றில் வைரக்கலாக இன்னும் ஜொலிக்க காரணமாய் இருந்தவர் இயக்குனர் பத்மராஜன். அதுவும் சில காட்சிகளாலும், கதை கருவாலும் "ஏ" முத்திரையுடன் வந்தாலும், குடும்பத்துடன் அனைவரையும் தியேட்டருக்கு இழுத்தப்படம். இதன் இசையும், பாடல்களும் போன வருடம் வரை பல மலையாளப்படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாய் இருந்திருக்கின்றன.

சிலப்படங்கள் நம்முள் சென்று நம் பழைய நினைவுகளை தட்டி எழுப்பி கடந்தக்காலங்களை அசைப்போடவைக்கும். அப்படியான ஒரு கதை இந்த தூவானத்தும்பிகள். ஆமாம் மழை நேர தூறலில் வரும் தும்பிகள்.

பணக்கார இளைஞரான மோஹன்லால் கிராமத்திலிருந்து அவ்வப்போது நகரத்துக்கு வந்துசெல்வார். கல்லூரி படித்த காலத்திலிருந்து நகரத்துக்கு வந்துசெல்வதால் அவரின் அன்பான மற்றும் உதவும் குணத்திற்க்கு ஏகப்பட்ட நண்பர்கள் நகரத்தில். கிராமத்திற்க்கு வந்துப்போகும் தூரத்து உறவுப்பெண்ணான பார்வதி (தற்போது நடிகர் ஜெயராமின் மனைவி) யை பார்த்து காதல் கொண்டு நேராக அவரின் கல்லூரிக்கு சென்று விருப்பத்தை சொல்ல, பார்வதி கோபமடைந்து பிடிக்கவில்லை என்கிறார். அதே வேளையில் தனது நண்பருக்கு உதவி செய்ய நினைத்து, ஒரு பெண் வீட்டிற்க்கு கடிதம் எழுதுகிறார், மழையும் பெய்கிறது, அந்தபெண்ணும் சம்மதிக்க விலைமாது என நினைத்து அவளுடன் ஹோட்டலில் தங்குகிறார். அன்றைய இரவில் அவள் விலைமாது அல்ல (சுமலதா - தற்போது கன்னட நடிகர் அம்ப்ரீஷின் மனைவி) தனக்குத்தான் முதன் முதலில் உடலை கொடுத்திருக்கு "வெர்ஜின்" என அறிந்து குற்ற உணர்வில் தவிக்கிறார். இதுவரை யாரையும் காதலிக்காத அல்லது பெண்களுடன் பழகாதவர் மோஹன்லால் என்பதும் அவளுக்கு தெரியவர...மோஹன்லாலும் அவளையே திருமணம் செய்வதாகவும் கூறுகிறார்.

அன்றைய இரவில் கடற்கரையில் அவர்களின் சந்திப்பு நீள்கிறது. இரண்டு உடல்களுடன் மனங்களும் இணைகிறது. ஆனால் மோஹன்லாலுக்கு இன்னொரு பெண்ணான பார்வதி மீது ஆசை என்று அறிந்து மறுநாள் காணாமல் போகிறார் சுமலதா. பின்னர் ஊருக்கு வரும் மோஹன்லாலின் நல்ல குணம் அறிந்து பார்வதியும் மோஹன்லாலை காதலிக்கிறார். திடீரென்று வரும் தந்திமூலம் மீண்டும் சுமலதாவை சந்திக்கிறார். இப்படியாக மூன்று சந்திப்புகள் அவர்களுக்குள் நடக்கின்றது. மூன்று சந்திப்பிலும் நல்ல மழைப்பெய்கிறது

இறுதியில் மோஹன்லாலுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் நிச்சயமாக கடைசி சந்திப்புக்கும் தந்தி வருகிறது சுமலதாவிடமிருந்து. மோஹன்லாலுல் எல்லாவற்றையும் ஒளிக்காமல் பார்வதியுடன் பகிர்ந்திருந்தாலும் இந்த முறை பார்வதி சுமலதாவை சந்திக்ககூடாது என கல்யாணத்தை தள்ளிப்போடுகிறார், கிளைமாக்ஸில் பார்வதி திருட்டுத்தனமாய் ரயிவே ஸ்டேஷன் வந்து ஒளிந்து பார்த்தாலும், மோஹன்லால் காத்திருக்க சுமலதாவும் வருகிறார், கூடவே அவரின் கணவரும், குழந்தையும். அதிரும் மோஹன்லாலுக்கு தான் மனைவியை இழந்த ஒருவருக்கு வாழ்க்கை கொடுத்திருப்பதாகவும், பார்வதியை கல்யாணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக வாழச்சொல்லிவிட்டு இனி நாம் சந்திக்கப்போவதில்லை என்று கூறி ரயிலில் ஏறி கையசைக்க இவனிலிருந்து அவளும் ரயிலும் விலகி மறைகிறது. இப்போது மழை இல்லை.

படத்தில் ஹைலைட்டான விஷயங்கள் பல அருமையான பாடல்கள், உணர்வைதொடும் இசை, மனதை தைக்கும் வசனங்கள், காதலை சொல்லும் நெருக்கமான காட்சிகள் என படம் இன்றுப்பார்த்தாலும் திகட்டாத காவியம். அதுவும் அந்த அரவின் கடற்கரையில் அவர்கள் காதல் சல்லாபங்கள் சொல்ல வார்த்தையில்லை.

கட்டாயம் உங்கள் மதை தொடும் காவியம். திருச்சூர் மலையாளத்தின் அழகான ஸ்லாங் படம் முழுக்க. சுமலதாவின் அழகும், வாளிப்பான உடலும் அவள் கனவுக்கன்னி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பப்ளியான மோஹன்லால் எல்லா வகை நடிப்பையும் சிறப்பாய் செய்வார் என்பதற்க்கு இந்தப்படம் ஒரு சாட்சி.

காதலுக்காக இவள் அவனையே விட்டுக்கொடுக்கிறாள். விட்டுக்கொடுத்தலும், பரஸ்பர புரிந்துக்கொள்ளலுமே உண்மையானக்காதல். காதல்வயப்பட்டு காதலனையோ காதலியையோ அடையாதவர்களுக்கு சமர்ப்பணம்.

இந்தப்படத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்து பிறந்த பயனை அடையுங்கள்.

தூவானத்தும்பிகள் - தன்னை காதலித்தவன் சந்தோஷமாய் இருக்க தன்காதலை துறக்கும் தியாகப்பெண்ணின் உண்மைக்காதல்!!!

No comments:

Post a Comment