Monday, May 12, 2014

அம்மாக்களும் ஆண் மகன்களும்!!!
அம்மாக்களும் ஆண் மகன்களும்


அன்னையர் தினத்திற்க்கு கிட்டதட்ட எல்லோரும் பதிவுகள் போட்டாகிவிட்டது.

நான் இன்னும் தொடங்கவில்லை...அவசரமாக கம்ப்யூட்டரை நோண்டியதில் நான் அல்லது அம்மா தனியாக இருக்கும் போட்டோ இருக்கிறதே தவிர அம்மாவுடன் நான் இணைந்திருக்கும் போட்டோ கண்ணில் படவில்லை. வீட்டில் கிட்டதட்ட அனைத்துப்போட்டோக்களையும் எடுப்பது நான் என்பதால் இந்த நிலமை.

நானும் அனது இரட்டையன் ஹரியும் பிறந்தப்போது அன் அம்மாவுக்கு வயது 16 அல்லது 17 இருக்கும் ஒல்லியாக குழந்தை மாதிரி இருக்கும் என் அம்மாவுக்கு நாங்கள் இரட்டையராய் பிறந்ததில் ஏக மகிழ்ச்சி...ஆனால் அதன் பிறகு எங்கள் இருவரை சமாளிக்க தவித்ததை என் பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன். மார்பில் இருவருக்கும் தேவையான அளவு பால் சுரக்காததால் என் பாட்டியின் மார்பில் பல நேரங்களில் பால்குடிப்பேனாம். பாட்டியும் என் அழுகையை நிறுத்த செய்த அன்பு தந்திரம். என் அம்மா அந்த சின்ன வயதில் எங்கள் இருவரையும் கிட்டத்தட்ட ஐந்தரை கிலோவை பல மாதங்கள் சுமந்தது எப்படி என்பது இன்னும் எனக்கு ஆச்சர்யமே.

என் தம்பி எப்போதும் அம்மாவுடனே ஒட்டிக்கொண்டு இருப்பான். நான் அப்படியில்லை..வீட்டில் நாலு பெண்கள் ஊர்க்கதைப்பேசிக்கொண்டிருந்தால் கூடவே என் அம்மாவின் முந்தாணையைப்பிடித்துக்கொண்டு அவனும் கதைக்கேட்பானாம்.

நான் ஊரை சுற்றிவிட்டு வருவேன் அல்லது விளையாடிவிட்டு வருவேன்.

எனக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். எதற்க்கெடுத்தாலும் சண்டைப்போடுவேன்...வீட்டை சுத்தமாக அம்மா துடைத்து வைத்திருப்பார்கள்...பூரி செய்யவில்லை என்பதற்க்காக வெளியில் இருக்கும் மண்ணை வீடெங்கும் கொட்டிவிட்டு ஓடிவிடுவேன். அவ்வளவு பெரிய வீட்டை அம்மா மறுபடியும் துடைப்பார்கள்.

வீட்டிலிருந்து இருபதடி தூரத்தில் பெரிய நீர் அணை இருக்கு...அதன் மதில் சுவர்மேல் நின்றுக்கொண்டு காசு தருகிறாயா? இல்லை குதிக்கவா? என பயமுறுத்தி அம்மாவை கலங்கடிப்பேன்.

கஷ்டப்பட்டு உண்டாக்கிய சாம்பாரில் என் அம்மா அந்தப்பக்கம் போகும்போது உப்பை அள்ளிக்கொட்டிவிட்டு ஓடிவிடுவேன்.

இப்படி நான் செய்த அக்கிரமங்கள் ஏராளம். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல...

எல்லா ஆண் குழந்தைகளுக்கும் உண்டாகும் அம்மாவுடனான இடைவெளி...ஆமாம்...பத்து பனிரண்டு வயது வரை அம்மாவின் மடியில் தூங்குவோம், அம்மாவுக்கு முத்தம் கொடுப்போம், அம்மாவை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டுக்கொள்வோம்.

ஆனால் நமக்கும் அம்மாவுக்கான இந்தமாதிரியான சந்தோஷங்கள் அதற்க்குப்பின் நின்றுப்போகும்...மிக அரிதாக மேலே சொன்னவைகள் நடக்க வாய்ப்புண்டு. இந்திய வளர்ப்பு முறையில் ஆண் குழந்தைகளின் நிலை இதுவே, இப்போதெல்லாம் அம்மாவுடன் ஆசீர்வாதம் வாங்க காலில் விழுவதுண்டு அதைத்தாண்டி எந்த வித அன்புப்பகிர்தல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு முறை ஊருக்குப்போகும்போதும் என் அம்மாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு உந்தித்தள்ளும்...கூட்டத்தில் என் மகனோ அல்லது மனைவியோ அல்லது என் அண்ணனோ, அண்ணியோ இருந்தால் கொடுக்க நினைத்த முத்தம் தயக்கத்தால் நின்றுப்போகும். அல்லது சென்னைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மாவை ஆரத்தழுவி பை பை சொல்லவேண்டும் என நினைப்பேன்...ஆனால் அதை என் அம்மாக்கூட விரும்புவார்களா என்பதை அறியவில்லை.

இந்தமாதிரியான இடைவெளி நம் அம்மாவுடன் மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் நம் அக்கா, தங்கையும் கூட நம்மைவிட்டு ஒரு இடைவிளியில்தான் இருப்பார்கள்.

மனதில் ஆயிரம் எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் "நீ என்ன குழந்தையா? பிள்ளய பெத்து அப்பா ஆயிட்டே...இன்னுமென்னடா சின்ன குழந்தைங்க மாதிரி ஃபீல் பண்றே" என யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற கூச்சம் நம்மை தடுத்துவிடும். ஆண்குழந்தைகள் மட்டுமல்ல அம்மாக்களும் ஒரு கால கட்டத்திற்க்குப்பின் கொஞ்சம் விலகித்தான் போய்விடுவார்கள்.

அம்மாவின் மடியில் தலைசாய்த்து தூங்கணும், அம்மாவைக்கட்டிக்கொண்டு ஆரதழுவி மகிழணும், அன்பு முத்தங்கள் கொடுக்கணும் என்கிற என் நீண்ட ஆசைகள் இந்த முறை ஊருக்கு போகும்போது கட்டாயம் நிகழும் என நினைக்கிறேன்.

1993ல் வீட்டைவிட்டு படிக்க வெளியே வந்த நான் இந்தவருடத்தோடு 20 ஆண்டுகள் முடிந்து காலம் கடந்துக்கொண்டு இருக்கிறது. நான் செய்த குறும்புகளுக்கு தண்டனையாகத்தான் கடந்த 20 வருடங்களாக ஊரில் ஒரு வருடத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ, இப்படி வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் அம்மாவுவுடன் இருக்க முடிந்தது.

அதுவும் என் தந்தை இர்ண்டுவருடத்திற்க்கு முன் இறந்துவிட என் அம்மா இன்னும் தைரியமானவளாய் எங்களை காத்து நிற்க்கிறாள்.

நான் கோபக்காரனானாலும் பாசக்காரன் என்பது எல்லோருக்கும் நல்லாவே தெரியும். திருமணம் ஆனபின்னும் என் மனைவியை இன்னும் இரண்டாவது இடத்தில்தான் வைத்திருக்கிறேன்.

நாம் யாரை நோகடித்தாலும், கவலைப்பட வைத்தாலும் இந்த உலகில் வாழலாம் நம் அப்பா அப்பாவை கஷ்டப்படுத்தினால் உங்களால் சந்தோஷமாய் வாழவே முடியாது என்பது என் ஆணித்தரமான கருத்து.

படத்தில் நடுவில் என் அம்மா, பாட்டி, அண்ணி, தங்கை, மனைவி இவர்கள் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment