Thursday, May 29, 2014

1983 Malayalam Movie


பல படங்கள் நம்மை சிரிக்கவைக்கும், பல படங்கள் நம்மை சிந்திக்க வைக்கும், பல படங்கள் நம்மை அழ வைக்கும். ஆனால் வெகு சில படங்களே நம் உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை நம் கடந்தக்காலத்துக்கு அழைத்துச்செல்லும் ஒருவித நிறைவேறா தவிப்புகளோடு.

விளையாட்டைப்பற்றிய படங்கள் வரிசையில் லகான், தோனி மற்றும் கை போ ச்சே க்கு அடுத்து வந்திருக்கும் இன்னொரு கிரிக்கெட் பற்றிய படம். சச்சின் டெண்டுல்கரின் டை ஹார்ட் ரசிகனான போட்டோகிராபர் கம் இயக்குனர் அப்டிர் ஷைனின் முதல் படைப்பு இந்த 1983.

கேரளாவின் பசுமையான பிரம்மாமங்கலம் கிராமத்தில் சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்டத்துடன் ஆரம்பித்து அவர்களின் 40 வருட வாழ்க்கைப்பயணத்தை சொல்லும் படம். சாதாரண குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஆசைகள் கிட்டத்தட்ட நிறைவேராமலேயே போவதுண்டு...அப்படியான ஒருவனின் கதை.

டிவி பெட்டிகள் இந்தியாவுக்கு அறிமுகமான நேரத்தில் இங்கிலாந்துக்காரன் விட்டுச்சென்ற கிரிக்கெட்டை இந்தியச்சிறுவர்கள் ஆட ஆரம்பித்த 70களிலாகட்டும், பின்னர் 1983ல் கபில்தேவ் தலைமையில் கொம்பன்களாக இருந்த வெஸ்ட் இண்டீஸை தோற்க்கடித்து வெற்றிவாகை சூடிய தருணங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப்படம் திகட்டாத காவியமாய் இருக்கும். பின்னர் சச்சின் என்கிற கிரிக்கெட் கடவுள் உருவாகி உலக கிரிக்கெட்டை ஆட்கொண்ட தருணங்கள் இங்கே இந்தியாவில் எத்தனை சிறுவர்கள் சச்சின் ஆகும் கனவோடு வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் அத்தனைப்பேருக்கு ஆசைப்பட்டது கிடைத்ததா?

அதை அழகாய், ரசனையாய், கொஞ்சம் காமெடி கலந்து நம்மை எல்லோரையும் 25 ஆண்டுகள் பின்னோக்கி நம் வாழ்க்கைகளை அசைப்போடவைத்ததில் இயக்குனர் வென்றிருக்கிறார் சிக்ஸர் அடித்து.

அந்த ஊரும் அந்த டீமும் அதில் அவர்களின் வாழ்க்கைப்போராட்டங்களும் நினைத்ததை சாதிக்கமுடியாத அப்பாக்களின் வலியும், தன் மகன்களின் மூலம் ஆசைகளை பூர்த்தியாக்கும் சுகமும்...அப்பப்பா சாதாரண கதையில் நம் நிஜ வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர்.

சதா கிரிக்கெட் என்று அலையும் ஊர்க்கார சிறுவர்கள் 12 பேர். அதில் நாயகன் நிவின் பாவ்லி (நேரம் ஹீரோ) திறமையான பேட்ஸ்மேன், உள்ளூர் போட்டிகளில் விளாசி வெற்றிப்பெறுகிறார்கள். இவருக்கு பள்ளியில் தன்னுடன் படிக்கும் அழகான பெண்ணுடனான காதல், அவள் படிப்பில் கெட்டிக்காரியாக மேல் படிப்பு படிக்க நிவினால் பத்தாவதில் குறைவான மார்க் வாங்கியும், பனிரண்டாவதில் பெயிலாக, இவரின் அப்பாவின் எஞ்சினியர் கனவு தகர்ந்து அவர்களின்  சிறிய மெக்கானிக் ஷாப்பில் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார் நிவின். நாளாக நாளாக நண்பர்களும் அவர்களின் தகுத்திக்கேற்ப்ப சின்ன சின்ன வேலைகளை செய்துக்கொண்டு பார்ட்டைமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள். சரியான படிப்பு இல்லாததால் காதலியும் விட்டுப்போக காதலிக்கு வேறிடத்தில் கல்யாணம் ஆகிறது. பின்னர் கிரிக்கெட் வாசனையே இல்லாத ஒருவரை மனைவியாக்கி மகனும் பிறக்கிறான். ஒரு கட்டத்தில் மகனின் கிரிக்கெட் ஆர்வத்தைக்கண்டு தன்னால் சாதிக்க முடியாததை மகன் சாதிப்பான என்கிற ஆவலில் மகனை நல்ல கிரிக்கெட்டர் ஆக்க கஷ்டப்படும் அப்பாவாவின் கதையே இரண்டாவது பாதி. மகன் சாதித்தானா? அப்பாவின் கனவு நிறைவேறியதா?

படத்தில் ஹைலைட்டான விஷயம் பல உண்டு, லுங்கியுடன் ஆடும் கேரள கிரிக்கெட், அழகான பள்ளிக்காதல், அப்பாவியான மனைவி (ஷிரிந்தா அஷாப்), பாம்பே சச்சின், கோச்சாக அனூப் மேனோன் மற்றும் நிவினின் மகனாய் நடித்த சிறுவனின் திறமை...இப்படியே சொல்லிக்கொண்டேப்போகலாம்.

ஒரு கட்சியில் சக்சினை ஒரு கோச் விமர்சிக்க அதற்க்கு பதிலடி கொடுக்கும் அனூப் மேனோனின் வசனங்கள் செருப்படி. நிவின் படத்தில் சிறுவனாக, இளைஞனாக, அப்பாவாக நடித்து அசத்தியிருக்கிறார். மனைவியாக வரும் அந்தப்பெண்ணின் யதார்த்த நடிப்பும், வெகுளியான பாவனைகளும் அழகோ அழகு. பாடல்கள் மற்றும் கேரளத்தின் ரம்மியமான காட்சிகள் படத்தின் பலம்.

ஆக படத்தில் எல்லாமே இருக்கு...இது பரபர 20/20 போட்டி இல்லையெனினும் கொஞ்சம் மெதுவான கடைசிவரை பார்த்து வியக்கும்படியான கூடவே பரபரப்பான கிளைமாக்ஸை எட்டும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டி என்பதில் ஆச்சர்யமில்லை.





No comments:

Post a Comment