Thursday, May 29, 2014

விருப்பத்தடை!!!

தயவு செய்து
குடையை
வீட்டில் வைத்துவிட்டு வா
தேவதையே.

உன் மேனியை
தழுவமுடியாத ஏக்கத்தில்
மழைக்கு கீழே இறங்கி வர
மனமில்லையாம்!!!


படம் உதவி : கூகுள்

பதில்!!!

பதில்!!!

வழி தவறி தவித்த
ஒற்றை ஆட்டை
இயேசுவின் கூற்றின்படி
ஆட்டுமந்தையுடன் சேர்த்துவிட்டு
நெஞ்சை நிமிர்த்தி
மனைவியிடம் சிலாகித்தேன்.

மேலிருந்து கீழ்
எனைப்பார்த்த மனைவி

வினவினாள்...

"ம்ம்ம்...அது சரி
இன்னக்கி இல்லேன்னா நாளைக்கு
பிரியாணிதானே பண்ணப்போறாங்க?"

திரா (SEA)திரா (SEA)
Thira - மலையாளம்


வினீத் ஸ்ரீனிவாசனின் தட்டத்தின் மறையத்துவின் படத்திற்க்குப்பின் வந்திருக்கும் டோட்டல் காண்ட்ராஸ்ட்டான படம் இந்த திரா.

ஸ்ரீனிவாசன் நம்ம ஊர் பாக்யராஜ் மாதிரி பல்கலை வித்தகர், அவரின் வாரிசுப்பற்றி சொல்லவா வேண்டும்? நடிப்பு, சிங்கர், இயக்குனர் என பல பரிமாணங்களில் அசத்தும் இளைஞர்தான் வினீத் ஸ்ரீனிவாசன். தனது ஒவ்விரு படத்திலும் எல்லோரையும் திருப்தி படுத்தும் குணம் இவருக்குண்டு. அதே மாதிரி ஒவ்வொன்றையும் வித்தியாசமாக அளிப்பதில வல்லவர். கேரள் சினிமா உலகத்தின் இன்னொரு விடிவெள்ளி.

பயங்கர ஸ்பீடில் பறக்கும் ஜெட் விமானம் போன்ற திரில்லிங்க் திரைக்கதை. நடிகை ஷோபனாவின் எக்ஸ்பீரியஸான ரீ எண்ட்ரி, வினீத்தின் தம்பிதான் (தயான் ஸ்ரீனிவாசன்) படத்தின் அறிமுக நாயகன்.

கதை:

வீட்டிலிருந்து ஓடிய மகன் இரண்டு வருடங்களுக்குப்பிறகு தனது தங்கையை கண்டுவிட்டு அவளுடன் வீட்டிற்க்கு திரும்பி செல்ல பெங்களூர் வருகிறான், தன் முன்னால் தங்கையை கடத்திப்போகிறார்கள். அதே வேளையில் தனது கணவரை காணாது தவிக்கும் டாக்டர் ஷோபனாவின் காப்பகத்திலிருந்தும் பெண் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். பின்னர் ஷோபனாவுடன் சேரும் தயான் தனது தங்கையையும் மற்ற பெண்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.

கேரளா, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கோவா என கதை பயங்கர வேகம். அடுதடுத்த சஸ்பெண்ஸ்கள் நம்மை ஆச்சர்ய மூட்டும், அரசு அதிகாரிகளின் மெத்தனம், நீதிபதிகளின் காம வேட்டை, அனாதைகளின் கஷ்டங்கள், அரசு காவல்களின் இயலாமை, மருத்துவ கொள்ளைகள், டிராஃப்ளிக்கிங் என அத்தனை சமாச்சாரங்களையும் தொட்டுச்செல்லும் கதை. ஆரம்பித்த நிமிடம் முதல் முடியும் வரை நம்மை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் இயக்குனர் தனது தம்பியல்லாது  வேறுயாரையாவது நடிக்கவைத்திருக்கலாமோ எனத்தோன்றுகிறது.

ஷோபனா...பல வருடங்களுக்குப்பின் நடித்திருக்கும் படம், பின்னி பெடலெடுத்திருக்கிறார். படத்தில் ஆழமாவ வசனங்கள், அதிகப்படியான ஹிந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகள் இருந்தாலும் அவை கதையுடன் ஒன்ற வைப்பதில் ஆச்சர்யமில்லை.

காதல் இல்லை, பயங்கர ஆக்ஷன் காட்சிகள் இல்லையெனினும் மிக நல்ல திரில்லரை பார்த்த மகிழ்ச்சி படத்தை விட்டு வெளியே வரும்போது தோன்றும். படத்தில் இன்னொரு ஸ்பெஷலான விஷயம்...பல வேற்றுமொழி நடிகர்கள் அவர்களின் டப்பிங்கில் மொழியை சிதைக்காத அந்தந்த மொழியாளர்களின் வசன உச்சரிப்புக்கள்.

பல நுணுக்கமான விஷயங்களை படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் வைத்திருக்கிறார். லாஜிக் உதைக்காத கதை, ஆயினும் படத்தின் அதிக மிக வேகத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாமோ எனதோன்றுகிறது.

கட்டாயம் பாருங்கள்...!!!

திரா - பர பர!!

1983 Malayalam Movie


பல படங்கள் நம்மை சிரிக்கவைக்கும், பல படங்கள் நம்மை சிந்திக்க வைக்கும், பல படங்கள் நம்மை அழ வைக்கும். ஆனால் வெகு சில படங்களே நம் உணர்வுகளை தட்டி எழுப்பி நம்மை நம் கடந்தக்காலத்துக்கு அழைத்துச்செல்லும் ஒருவித நிறைவேறா தவிப்புகளோடு.

விளையாட்டைப்பற்றிய படங்கள் வரிசையில் லகான், தோனி மற்றும் கை போ ச்சே க்கு அடுத்து வந்திருக்கும் இன்னொரு கிரிக்கெட் பற்றிய படம். சச்சின் டெண்டுல்கரின் டை ஹார்ட் ரசிகனான போட்டோகிராபர் கம் இயக்குனர் அப்டிர் ஷைனின் முதல் படைப்பு இந்த 1983.

கேரளாவின் பசுமையான பிரம்மாமங்கலம் கிராமத்தில் சிறுவர்களின் கிரிக்கெட் ஆட்டத்துடன் ஆரம்பித்து அவர்களின் 40 வருட வாழ்க்கைப்பயணத்தை சொல்லும் படம். சாதாரண குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஆசைகள் கிட்டத்தட்ட நிறைவேராமலேயே போவதுண்டு...அப்படியான ஒருவனின் கதை.

டிவி பெட்டிகள் இந்தியாவுக்கு அறிமுகமான நேரத்தில் இங்கிலாந்துக்காரன் விட்டுச்சென்ற கிரிக்கெட்டை இந்தியச்சிறுவர்கள் ஆட ஆரம்பித்த 70களிலாகட்டும், பின்னர் 1983ல் கபில்தேவ் தலைமையில் கொம்பன்களாக இருந்த வெஸ்ட் இண்டீஸை தோற்க்கடித்து வெற்றிவாகை சூடிய தருணங்களில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப்படம் திகட்டாத காவியமாய் இருக்கும். பின்னர் சச்சின் என்கிற கிரிக்கெட் கடவுள் உருவாகி உலக கிரிக்கெட்டை ஆட்கொண்ட தருணங்கள் இங்கே இந்தியாவில் எத்தனை சிறுவர்கள் சச்சின் ஆகும் கனவோடு வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் அத்தனைப்பேருக்கு ஆசைப்பட்டது கிடைத்ததா?

அதை அழகாய், ரசனையாய், கொஞ்சம் காமெடி கலந்து நம்மை எல்லோரையும் 25 ஆண்டுகள் பின்னோக்கி நம் வாழ்க்கைகளை அசைப்போடவைத்ததில் இயக்குனர் வென்றிருக்கிறார் சிக்ஸர் அடித்து.

அந்த ஊரும் அந்த டீமும் அதில் அவர்களின் வாழ்க்கைப்போராட்டங்களும் நினைத்ததை சாதிக்கமுடியாத அப்பாக்களின் வலியும், தன் மகன்களின் மூலம் ஆசைகளை பூர்த்தியாக்கும் சுகமும்...அப்பப்பா சாதாரண கதையில் நம் நிஜ வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார் இயக்குனர்.

சதா கிரிக்கெட் என்று அலையும் ஊர்க்கார சிறுவர்கள் 12 பேர். அதில் நாயகன் நிவின் பாவ்லி (நேரம் ஹீரோ) திறமையான பேட்ஸ்மேன், உள்ளூர் போட்டிகளில் விளாசி வெற்றிப்பெறுகிறார்கள். இவருக்கு பள்ளியில் தன்னுடன் படிக்கும் அழகான பெண்ணுடனான காதல், அவள் படிப்பில் கெட்டிக்காரியாக மேல் படிப்பு படிக்க நிவினால் பத்தாவதில் குறைவான மார்க் வாங்கியும், பனிரண்டாவதில் பெயிலாக, இவரின் அப்பாவின் எஞ்சினியர் கனவு தகர்ந்து அவர்களின்  சிறிய மெக்கானிக் ஷாப்பில் வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார் நிவின். நாளாக நாளாக நண்பர்களும் அவர்களின் தகுத்திக்கேற்ப்ப சின்ன சின்ன வேலைகளை செய்துக்கொண்டு பார்ட்டைமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள். சரியான படிப்பு இல்லாததால் காதலியும் விட்டுப்போக காதலிக்கு வேறிடத்தில் கல்யாணம் ஆகிறது. பின்னர் கிரிக்கெட் வாசனையே இல்லாத ஒருவரை மனைவியாக்கி மகனும் பிறக்கிறான். ஒரு கட்டத்தில் மகனின் கிரிக்கெட் ஆர்வத்தைக்கண்டு தன்னால் சாதிக்க முடியாததை மகன் சாதிப்பான என்கிற ஆவலில் மகனை நல்ல கிரிக்கெட்டர் ஆக்க கஷ்டப்படும் அப்பாவாவின் கதையே இரண்டாவது பாதி. மகன் சாதித்தானா? அப்பாவின் கனவு நிறைவேறியதா?

படத்தில் ஹைலைட்டான விஷயம் பல உண்டு, லுங்கியுடன் ஆடும் கேரள கிரிக்கெட், அழகான பள்ளிக்காதல், அப்பாவியான மனைவி (ஷிரிந்தா அஷாப்), பாம்பே சச்சின், கோச்சாக அனூப் மேனோன் மற்றும் நிவினின் மகனாய் நடித்த சிறுவனின் திறமை...இப்படியே சொல்லிக்கொண்டேப்போகலாம்.

ஒரு கட்சியில் சக்சினை ஒரு கோச் விமர்சிக்க அதற்க்கு பதிலடி கொடுக்கும் அனூப் மேனோனின் வசனங்கள் செருப்படி. நிவின் படத்தில் சிறுவனாக, இளைஞனாக, அப்பாவாக நடித்து அசத்தியிருக்கிறார். மனைவியாக வரும் அந்தப்பெண்ணின் யதார்த்த நடிப்பும், வெகுளியான பாவனைகளும் அழகோ அழகு. பாடல்கள் மற்றும் கேரளத்தின் ரம்மியமான காட்சிகள் படத்தின் பலம்.

ஆக படத்தில் எல்லாமே இருக்கு...இது பரபர 20/20 போட்டி இல்லையெனினும் கொஞ்சம் மெதுவான கடைசிவரை பார்த்து வியக்கும்படியான கூடவே பரபரப்பான கிளைமாக்ஸை எட்டும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டி என்பதில் ஆச்சர்யமில்லை.

ஒன்றும் ஒன்றும்!!!
ஒற்றை வானம்
ஒற்றை நிலா
ஒற்றை கடல்
ஒற்றை பூமி
ஒற்றை தென்றல்

ஓருடல்
ஈருயிர்!!!

Monday, May 12, 2014

கிண்டல் எல்லாம் போதும் உருப்படியா ரிசல்ட்டு பதிவு போடலாம்_5.கிண்டல் எல்லாம் போதும் உருப்படியா ரிசல்ட்டு பதிவு போடலாம்_5.

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அப்பாவிடம் பலமுறை பணம் கேட்டான் அலெக்ஸ் டியூ (Alex Tew). காரணம் தொடர்ந்து பல நாட்கள் ஒரே சாக்ஸை போடுவதால் அதன் கெட்ட நாத்தம் மற்ற மாணவர்களை எரிச்சல் அடைய வைத்தது.

எப்படியாவது சம்பாதித்து ஒரு ஜோடி சாக்ஸை சொந்தக்காசில் வாங்கவேண்டி யோசித்தான். பல மணி நேர யோசனைக்குப்பின் அவனுக்கு ஒரு அருமையான ஐடியா பிறந்தது.

அப்போது http://www.milliondollarhomepage.com/ என்கிற ஒரு விளம்பர தளத்தை உருவாக்கினான். அதை உருவாக்கியது பெரியவிஷயமல்ல அதிலிருந்த அவனின் பிசினஸ் மூளைதான் முக்கியம்.

அதன்படி எல்லா கம்பெனிகளைகளையும் தொடர்புக்கொண்டு படியேறி இறங்கி தனது தளத்தைப்பற்றி சொன்னான். அதில் மொத்தம் ஒரு மில்லியன் பிக்சல் இருப்பதாகவும். ஒரு பிக்சல் அளவு விளம்பரம் செய்ய ஒரு டாலர் கட்டணம் எனவும் சொன்னான். முதலில் தயங்கியவர்கள் பின்னர் மெதுவாக தங்களின் கமெபெனி லோகோவை கொடுக்கலாயினர். நாளடைவில் பல பெரிய நிறுவனங்கள் ஐந்து, பத்து பிக்சல் அளவுகளாக வாங்கிக்கொள்ள கொஞ்ச காலத்தில் அவன் அத்தனை பிகசல்களையும் விற்றுவிட்டான்.

அவனின் கையில் இப்போது ஒரு மில்லியன் டாலர். உலகின் பல முன்ணணி நிறுவனங்கள் தங்களின் லோகோவை அவனின் சைட்டில் வைக்க கியூ இருந்தாலும். அவன் அதை விளம்பரப்படுத்தும்போது ஒரே ஒரு முறை விளம்பரம் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் அந்த பிக்சல் உங்களுக்காகவே இருக்கும் என்று சொன்னதால் இப்போது எத்தனைக்கோடிகள் கொடுத்தாலும் யாருக்கும் அதில் இப்போது இடம் இல்லை.

பணம் கிடைத்தவுடன் அலெக்ஸ் முதலில் பத்து ஜோடி சாக்ஸ்கள் வாங்கினான் என்பது கூடுதல் தகவல்.

படிக்கும் காலத்தில் வெகு சுமாராக படிக்கும் அலெக்ஸின் மூளை அபாரம். ஒரே ஒரு மணி நேரத்தில் அவனின் ஐடியா அவனை எங்கோ கொண்டுசென்றுவிட்டது.

படிப்பு வரவில்லையென்றாலும் வித்தியாசமாக திங்க் செய்யும் அனைவர்க்கும் கட்டாயம் வாழ்க்கை நல்ல பாடத்தைக்கொடுக்கும்.

இன்னொன்று எதைச்செய்தாலும் உடனே செய்யணும்...இல்லையெனில் உங்களின் ஐடியாப்போலவே வேறு யாராவது சிந்திக்கக்கூடும்.

2005 ல் தொடங்கிய அந்த சைட் 2006ல் எல்லா பிக்சல்களும் விற்று அவனை உலகில் இன்னொரு கோடீஸ்வரனாக்கிவிட்டது.

மாணவர்கள் இதைப்படித்து வாழ்க்கையை புரிந்துக்கொள்ளுங்கள்!!! வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்துக்கள்.சுஜாதா!!!சுஜாதா!!!

அன்றைய 1988 முதல் 1993 வரை அதாவது நான் சென்னை ஓவியக்கல்லூரியில் சேர்ந்த வருடம் வரை முழுநேரமும் ஊரில் இருக்கும் லைப்ரரியில்தான் இருப்பேன்.

படிக்கும் பழக்கம் என் அப்பாவால் எனக்கும் தொற்றிக்கொண்டது. காலை 9.30 மணிக்கு லைப்ரரி போனால் மதியம் 12:30 க்கு பத்திரிகைகளை படித்துவிட்டு கூடவே இரண்டு நாவல்களையும் வாங்கிக்கொண்டு வீடு வருவேன். மாலை 4:30 மணிக்கு அடைக்குமுன் அந்த இரண்டு புத்தகங்களையும் திருப்பிக்கொடுத்து வேறு இரண்டு புத்தகங்களை வாங்கிவருவேன்.

முதலில் என்னை மேலிருந்து கீழ் பார்த்த லைப்ரரி பொறுப்பாளர் கொஞ்ச நாட்களில் புரிந்துக்கொண்டு என்னிடமே லைப்ரரி சாவியை கொடுத்துவிட்டு பக்கத்து கிரவுண்டில் அரட்டையடிக்க போய்விடுவார். நானும் எல்லா புத்தகங்களையும் ஒரு பிடி பிடிப்பேன்.

இப்படி வளர்ந்த என் ஆர்வம் முதலில் பாக்யா இதழுக்கு ஜோக் அனுப்பி வெளிவந்தது. பின்னர் குமுதம், ஆனந்த விகடன் என ஒரு பக்கக்கதைகள் சில வெளிவந்தது. இவை அத்தனையும் என் 14, 15 மற்றும் 16 ஆவது வயதுகளில் நிகழ்ந்தவை.

எங்கள் ஊர் லைப்ரரியில் பல புத்தகங்கள் இருந்தாலும்...அதில் பல கிரைம் நாவல்களே அதிகம். ராஜேஷ்குமார், சுபா, தமிழ்வாணன் பட்டுக்கோட்டை பிரபாகர் இவர்களின் புத்தகங்களுடன்...

ஜெயகாந்தன், பாலகுமாரன், சாவி, இந்திரா சவுந்திரராஜன், இந்துமதி, கல்கி, ஜானகிராமன் இவர்களின் சில புத்தகங்களும் இருந்ததன.

அப்போதுதான் சுஜாதா அவர்களின் சில நாவல்கள் லைப்ரரிக்கு புதிதாய் வந்தது. பின்னர் சுஜாதாவின் பயங்கர விசிறியாகிப்போனேன். அவரின் தொடர்கதைகளை குமுதம், ஆனந்தவிகடன்களில் படித்து பாடப்புத்தகங்களை மறந்தக்காலமது.

பின்னர் சுதாதாவின் மீதி யிருக்கும் நாவல்களை படிக்க லைப்ரரியின் சாவியை நான் வங்கிவைத்து விடுமுறைனாட்களில் காலையில் திறப்பதும் படிப்பதும் மாலையிம் மூடுவதுமென என் வாழ்க்கை புத்தகங்களுக்குள் புதைந்துப்போனது. வெள்ளிக்கிழமை லைப்ரரி மூடியிருப்பதால் என் தமி பெயரில் இரு புத்தகங்களும் சேர்த்து எடுத்துப்படித்தா காலங்கள் அவை.

ஒரு வகையில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை புத்தகங்களை எனக்கு அளித்திருக்கின்றது. என் கனவில் அடிக்கடி வந்துப்போன சுஜாதா அவர்களை நான் சென்னை மீடியாகம்பெனியில் வேலை செய்தபோது 2001ல் அனிமேஷன் மூவி சம்பந்தமாக இரண்டுமுறை அவரை சந்தித்தும் இருக்கிறேன். ஒருமுறை அவரின் கையை தொட்டு குலுக்கியிருக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் கவுரவமாக கருதிகிறேன்.

மற்ற எழுத்தாளர்களைவிட எனக்கு இவரைப்படிக்க காரணம்...அவரின் எழுத்துக்குள் யார் படித்தாலும் அவரவர் வயதுகளுக்கு பிடிப்பது மாதிரியே இருக்கும். டெக்னாலஜியை முன்னிருத்தி விஞ்சானத்தை புத்தகங்கள் மூலம் வளர்த்தவர். என்னை எழுத தூண்டியவர்களில் என் அப்பாவுக்கு அடுத்து சுஜாதாவின் எழுத்துக்களே!!!

இவர் வாழும் போது இவரையும் இவரின் அறிவையும் தமிழகம் இன்னும் சரியாக பயன்படுத்தி இருக்கலாமோ என்கிற ஆதங்கமும் உண்டு.

லவ்யூ டாடி!!!

அம்மா சொன்னாங்க...
அப்பா சாமிகிட்ட போறாராம்

எப்பொ வருவீங்க
ரொம்ப தூரமா போறீங்களாம்

சீக்கிரம் வந்திருங்க அப்பா
சம்மருக்கு காஷ்மீர் பனியில
விளையாடலாம்னு சொன்னீங்க?

அம்மாகிட்ட சொல்லி
ஷ்வட்டர் வாங்கி வைக்குறேன்

உங்களுக்கு
ஜர்கீன் வாங்கி வைக்கிறேன்

அம்மாவுக்கு
ஷாலும் வாங்கிக்கிறேன்

சாமிக்கு நானு
உம்மா கொடுத்தேன்னு சொல்லுங்க

மறந்துடாதீங்க அப்பா...
வர்ரப்போ சாமியையும்
கூட்டிகிட்டு வாங்க
அவரையும் கஷ்மீருக்கு கூட்டிட்டு போலாம்
அவரோட நானும் விளையாடணும்!!!

டாட்டா பை பை
லவ்யூ டாடி

அந்த கடவுளுக்கு
இவள் வார்த்தைகள் கேட்குமா???நிதர்சனம்!!!நிதர்சனம்!!!

இதோ பணத்தை ஆண்டவர்
ஆறடி குழிக்குள் அடங்கிக்கிடக்கிறார்.

அவருடன்...

எப்போதும் வைத்திருந்த தங்க பேனா
ஐந்து விரல்களிலும் கட்டியிருந்த ரத்தின மோதிரங்கள்
கற்கள் பதிந்த கோல்டன் ஃபிரேம் கண்ணாடி
அமெரிக்காவில் வாங்கிய சுருட்டுகள்
இங்கிலாந்தின் ஒயின் பாட்டில்
கூடவே அவரின் தங்கப்பல் இரண்டு
சொந்தக்காரர்களின் நீலிக் கண்ணீர்!!!

என
அத்தனையையும் அவருடன் கொட்டியாயிற்று
மனைவி சொன்னபடி

இதுவரை
அவர் ஆண்டதும் அனுபவித்ததும்
இவரை திரும்பிப்பார்க்கப்போவதில்லை

இதோ...
எல்லாமே எனது என்றவர்
எல்லாத்தையும் தனதாக்கிக்கொண்டவர்
போகும்போது எடுத்துச்செல்வது எதுவுமில்லை
எடுத்துச்சென்றாலும் உபயோகப்படப்போவதில்லை!!!
நிறைவேறா ஆசை!!!இதோ...

சேதமான ரயில் பெட்டி
ஓரமாய் கிடத்தப்பட்டு விட்டது

காய்ந்த இரத்தக்கறைகள்
பினாயில் போட்டு கழுவியாய்விட்டது

காக்கிகள் அவசரமாய் வந்து
பொதுமக்களை அதட்டிவிட்டு
சுற்றி நூலை கட்டிவிட்டு
டீ குடித்துக்கொண்டிருக்கிறார்கள்

மோப்ப நாய்கள்
மோப்பம் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றன
காவலனை தரதரவென இழுத்துக்கொண்டு

வெள்ளையும் ச்சொள்ளையும் கொண்ட
அரசியல் அசிங்கங்கள்
மைக்கில் பேட்டிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்

பிய்ந்த செறுப்புகள்
ஒற்றை காலணிகள்
உடைந்த மூக்கு கண்ணாடி
தீய்ந்த கைப்பைகள்
குப்பைத்தொட்டிக்கு வீசப்பட்டுவிட்டது

இறைச்சலுடன் ஒலிப்பெருக்கியில்
பயணிகளுக்கு கனிவாக..
"இன்னும் சற்று நேரத்தில் தில்லியிலிருந்து..."
இனிமையான பெண்குரல்
மீண்டும் மீண்டும்

பரபரப்புகள் அடங்கி
டீ, காபி, டீ காபி விற்க தொடங்கிவிட்டனர்
பரபரப்பாய் மீண்டும் மக்கள்
முண்டியடித்து போய்க்கொண்டிருக்கின்றனர்

செல்போனில் பேசும் காதலி
தண்ணீர் பாட்டிலுடன் கணவன்
ஐந்து ரூபாய்க்காக குடும்பத்தை கூறுபோடும் கூலி
நக்கீரனில் திக் விஜயின் ஜல்சாவைப்படிக்கும் பெருசு
ஐ பேடின் இசைதலுக்கு தலையாட்டும் இளசு
கண்ணில்லாதவரின் "ராமன் ஆண்டாலும்..." பாடல்

கொஞ்சம் தள்ளி...

வெள்ளை துணிப்போர்த்தி
மூடிவைத்திருக்கும் சடலம்
சுவற்றோரத்தில் தனியாய்
அமைதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றது
இளம்பெண்ணொருத்தியின் பூத உடல்
அவசரமாய் புறப்பட்டுவிட்ட
நிறைவேறா ஆசைகளுடன்!!!


அம்மாக்களும் ஆண் மகன்களும்!!!
அம்மாக்களும் ஆண் மகன்களும்


அன்னையர் தினத்திற்க்கு கிட்டதட்ட எல்லோரும் பதிவுகள் போட்டாகிவிட்டது.

நான் இன்னும் தொடங்கவில்லை...அவசரமாக கம்ப்யூட்டரை நோண்டியதில் நான் அல்லது அம்மா தனியாக இருக்கும் போட்டோ இருக்கிறதே தவிர அம்மாவுடன் நான் இணைந்திருக்கும் போட்டோ கண்ணில் படவில்லை. வீட்டில் கிட்டதட்ட அனைத்துப்போட்டோக்களையும் எடுப்பது நான் என்பதால் இந்த நிலமை.

நானும் அனது இரட்டையன் ஹரியும் பிறந்தப்போது அன் அம்மாவுக்கு வயது 16 அல்லது 17 இருக்கும் ஒல்லியாக குழந்தை மாதிரி இருக்கும் என் அம்மாவுக்கு நாங்கள் இரட்டையராய் பிறந்ததில் ஏக மகிழ்ச்சி...ஆனால் அதன் பிறகு எங்கள் இருவரை சமாளிக்க தவித்ததை என் பாட்டி சொல்லக்கேட்டிருக்கிறேன். மார்பில் இருவருக்கும் தேவையான அளவு பால் சுரக்காததால் என் பாட்டியின் மார்பில் பல நேரங்களில் பால்குடிப்பேனாம். பாட்டியும் என் அழுகையை நிறுத்த செய்த அன்பு தந்திரம். என் அம்மா அந்த சின்ன வயதில் எங்கள் இருவரையும் கிட்டத்தட்ட ஐந்தரை கிலோவை பல மாதங்கள் சுமந்தது எப்படி என்பது இன்னும் எனக்கு ஆச்சர்யமே.

என் தம்பி எப்போதும் அம்மாவுடனே ஒட்டிக்கொண்டு இருப்பான். நான் அப்படியில்லை..வீட்டில் நாலு பெண்கள் ஊர்க்கதைப்பேசிக்கொண்டிருந்தால் கூடவே என் அம்மாவின் முந்தாணையைப்பிடித்துக்கொண்டு அவனும் கதைக்கேட்பானாம்.

நான் ஊரை சுற்றிவிட்டு வருவேன் அல்லது விளையாடிவிட்டு வருவேன்.

எனக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். எதற்க்கெடுத்தாலும் சண்டைப்போடுவேன்...வீட்டை சுத்தமாக அம்மா துடைத்து வைத்திருப்பார்கள்...பூரி செய்யவில்லை என்பதற்க்காக வெளியில் இருக்கும் மண்ணை வீடெங்கும் கொட்டிவிட்டு ஓடிவிடுவேன். அவ்வளவு பெரிய வீட்டை அம்மா மறுபடியும் துடைப்பார்கள்.

வீட்டிலிருந்து இருபதடி தூரத்தில் பெரிய நீர் அணை இருக்கு...அதன் மதில் சுவர்மேல் நின்றுக்கொண்டு காசு தருகிறாயா? இல்லை குதிக்கவா? என பயமுறுத்தி அம்மாவை கலங்கடிப்பேன்.

கஷ்டப்பட்டு உண்டாக்கிய சாம்பாரில் என் அம்மா அந்தப்பக்கம் போகும்போது உப்பை அள்ளிக்கொட்டிவிட்டு ஓடிவிடுவேன்.

இப்படி நான் செய்த அக்கிரமங்கள் ஏராளம். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல...

எல்லா ஆண் குழந்தைகளுக்கும் உண்டாகும் அம்மாவுடனான இடைவெளி...ஆமாம்...பத்து பனிரண்டு வயது வரை அம்மாவின் மடியில் தூங்குவோம், அம்மாவுக்கு முத்தம் கொடுப்போம், அம்மாவை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டுக்கொள்வோம்.

ஆனால் நமக்கும் அம்மாவுக்கான இந்தமாதிரியான சந்தோஷங்கள் அதற்க்குப்பின் நின்றுப்போகும்...மிக அரிதாக மேலே சொன்னவைகள் நடக்க வாய்ப்புண்டு. இந்திய வளர்ப்பு முறையில் ஆண் குழந்தைகளின் நிலை இதுவே, இப்போதெல்லாம் அம்மாவுடன் ஆசீர்வாதம் வாங்க காலில் விழுவதுண்டு அதைத்தாண்டி எந்த வித அன்புப்பகிர்தல்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு முறை ஊருக்குப்போகும்போதும் என் அம்மாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு உந்தித்தள்ளும்...கூட்டத்தில் என் மகனோ அல்லது மனைவியோ அல்லது என் அண்ணனோ, அண்ணியோ இருந்தால் கொடுக்க நினைத்த முத்தம் தயக்கத்தால் நின்றுப்போகும். அல்லது சென்னைக்கு கிளம்பும் நேரத்தில் அம்மாவை ஆரத்தழுவி பை பை சொல்லவேண்டும் என நினைப்பேன்...ஆனால் அதை என் அம்மாக்கூட விரும்புவார்களா என்பதை அறியவில்லை.

இந்தமாதிரியான இடைவெளி நம் அம்மாவுடன் மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பின் நம் அக்கா, தங்கையும் கூட நம்மைவிட்டு ஒரு இடைவிளியில்தான் இருப்பார்கள்.

மனதில் ஆயிரம் எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் "நீ என்ன குழந்தையா? பிள்ளய பெத்து அப்பா ஆயிட்டே...இன்னுமென்னடா சின்ன குழந்தைங்க மாதிரி ஃபீல் பண்றே" என யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற கூச்சம் நம்மை தடுத்துவிடும். ஆண்குழந்தைகள் மட்டுமல்ல அம்மாக்களும் ஒரு கால கட்டத்திற்க்குப்பின் கொஞ்சம் விலகித்தான் போய்விடுவார்கள்.

அம்மாவின் மடியில் தலைசாய்த்து தூங்கணும், அம்மாவைக்கட்டிக்கொண்டு ஆரதழுவி மகிழணும், அன்பு முத்தங்கள் கொடுக்கணும் என்கிற என் நீண்ட ஆசைகள் இந்த முறை ஊருக்கு போகும்போது கட்டாயம் நிகழும் என நினைக்கிறேன்.

1993ல் வீட்டைவிட்டு படிக்க வெளியே வந்த நான் இந்தவருடத்தோடு 20 ஆண்டுகள் முடிந்து காலம் கடந்துக்கொண்டு இருக்கிறது. நான் செய்த குறும்புகளுக்கு தண்டனையாகத்தான் கடந்த 20 வருடங்களாக ஊரில் ஒரு வருடத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ, இப்படி வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள்தான் அம்மாவுவுடன் இருக்க முடிந்தது.

அதுவும் என் தந்தை இர்ண்டுவருடத்திற்க்கு முன் இறந்துவிட என் அம்மா இன்னும் தைரியமானவளாய் எங்களை காத்து நிற்க்கிறாள்.

நான் கோபக்காரனானாலும் பாசக்காரன் என்பது எல்லோருக்கும் நல்லாவே தெரியும். திருமணம் ஆனபின்னும் என் மனைவியை இன்னும் இரண்டாவது இடத்தில்தான் வைத்திருக்கிறேன்.

நாம் யாரை நோகடித்தாலும், கவலைப்பட வைத்தாலும் இந்த உலகில் வாழலாம் நம் அப்பா அப்பாவை கஷ்டப்படுத்தினால் உங்களால் சந்தோஷமாய் வாழவே முடியாது என்பது என் ஆணித்தரமான கருத்து.

படத்தில் நடுவில் என் அம்மா, பாட்டி, அண்ணி, தங்கை, மனைவி இவர்கள் அனைவர்க்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.