Saturday, April 12, 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!!!


ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!!!சிம்புதேவனின் ஃபேண்டஸிப்படம். 

படத்தைப்பற்றி சொல்வதற்க்குமுன் சிம்புத்தேவனைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும்.

1996ஆம் வருடம் ஆனந்த விகடனில் கல்லூரி மாணவர்களுக்காக பத்திரிக்கைத்திட்டத்தில் சென்னை ஓவியக்கால்லூரி சார்பாக நானும் என் மூன்று நண்பர்களும் இடம்பெற்றோம்.

பல கல்லூரி மாணவர்களிடம் வந்திருந்த சேம்பிள் இதழ்களின் செலக்க்ஷனில் கடைசியாக பத்துக்கல்லூரிகள் தேர்வாகின. எங்களதும் அதில் ஒன்று.

மூன்றாவது வாரத்தில் எங்களின் இதழ் வரவேண்டியிருந்ததால் மௌவுண்ட் ரோட்டில் இருக்கும் ஆனந்த விகடன் ஆபீஸில் மதன் தலைமையில்  மூன்று வாரம் அங்கே பணிசெய்தோம். அப்போது...

கொஞ்சம் ஒல்லியாக பக்கா கிராமத்து சாயலில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு ஒருவர் வந்து என்னிடம் மதன் சாரைப்பற்றி விசாரித்தார். தான் மதுரையிலிருந்து வந்திருப்பதாகவும் தானும் கல்லூரி மாணவர்களின் சப்ளிமெண்ட் இதழுக்கு செலக்ட் ஆகியிருப்பதாகவும் சொன்னார். அவர்தான் இன்றைய சிம்புதேவன்.

புத்தகம் உருவாக்க குறைந்தது நான்கு பேராவது வேண்டும் என்றதால் நான் கல்லூரியில் என் சீனியர்களை இணைத்துக்கொண்டேன். ஆனால் சிம்புத்தேவன் ஒருவர் மட்டும் வந்திருந்ததால் அவருக்கு வாய்ப்பு முதலில் மறுக்கப்பட்டு பின்னர் மதுரை போய் மற்றவர்களை அழைத்து வரமுடியாது என்பதால் அவர் தனியாக இதழை தயாரித்தார்.

பின்னர் மக்கள் ஒட்டளிப்பினாலும், தன்னந்தனியாக இதழை தயாரித்ததாலும் சிம்புதேவன் இதழ் முதலிடத்திலும் எங்கள் இதழ் இரண்டாம் இடமும் பரிசு வாங்கியது தனிக்கதை.

மதன் என்னை ஆனந்தவிகடன் நிருபாராக அழைத்தார்...நான் ஓவிய ஈடுபாட்டில் செல்லவில்லை ஆனால் சிம்புத்தேவன் அங்கே ஜாய்ன் செய்து ஆசிரியராக நிருபராக வேலைசெய்து பின்னர் அஸிஸ்டெண்ட் இயக்குனராகி இப்போது வித்தியாச இயக்குனராகவும் உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியே. 

ரன் ரோலா ரன், விருமாண்டி மற்றும் ராஷாமோன் படங்களின் சாயல் இருந்தாலும் தமிழுக்கு வித்தியாசமான படம்.

ஒரு நிகழ்வு ஒரு நிமிட தாமதத்திலும், ஒரு நிமிடம் முன்னதாகவும் நடந்திருந்தால் அந்த சம்பவம் என்னென்ன மாற்றங்களை ஏற்ப்படுத்திருக்கும் என்பதே கதை. சிறிய சிறிய நுணுக்கங்களையும் ஆங்காங்கே நகைச்சுவைகளைதூவியும் படத்தை போரடிக்காமல் கொண்டுசெல்கிறார். 

அருள் நிதியும், பிந்து மாதவியும் நண்பனாக பகவதி மற்றும் அஷ்ரிதா ஷெட்டி இவர்களோட பல குணச்சித்திர நடிகர்  பட்டாளம் என கதை சுவாரஸ்யமாக சென்றாலும் இரண்டாவது பாதியில் ஏற்ப்படும் தொய்வை சரிசெய்திருக்கலாம்.

படத்தின் கதையை இதைவிட அதிகம் சொன்னால் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் கட்டாயம் தியேட்டரில் போய் பாருங்கள்.

சமீபத்தில் வந்த படங்களில் இது எவ்வளவோ பரவாயில்லை.

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - ஒரு கதையும் மூணு திரைக்கதையும் சுவாரஸ்யம்!!!

கிரிக்கெட்டும் சிவப்பு சட்டையும்!!!


கிரிக்கெட்டும் சிவப்பு சட்டையும்!!!

நேற்று நடந்த கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுப்போனது இருக்கட்டும்.

சின்ன வயதுகளில் கிரிக்கெட் பார்க்கும்போது நாங்கள் பல சகுனங்கள் பார்ப்போம்.

யாராவது ஒருவர் சிவப்பு சட்டை அணிந்து வருவார். அவர் வேறு கலரில் சட்டை அணிந்து வரும்போது இந்தியா தோற்றுவிடும். அதனால் அவர் எங்கள் வீட்டுக்கு டிவி பார்க்க வரும் நேரத்தில் தம்பி ஓடிப்போய் பார்த்து சட்டை கலரை சொல்லுவான். வேறு கலர் சட்டையெனில் வீட்டுக்குள் சேர்க்காமல் கதவை சாத்திவிடுவதும் உண்டு.

என் அண்ணா படுத்துக்கொண்டே டீவி பார்ப்பார், அவர் உட்கார்ந்துக்கொண்டு பார்த்தபோது இந்தியா பல நேரங்களில் தோற்றதுண்டு. என்னிடம் ஐந்து ரூபாய் கேட்பார் கொடுக்கவில்லையெனில் உட்கார்ந்துக்கொண்டு கிரிக்கெட் பார்க்கபோவதாய் பயமுறுத்துவார். நானும் கொடுத்து தொலைவேன்.

இதை விட இன்னும் சில நேரங்களில் நண்பர் இடத்தை மாற்றி உட்காரப்போக கவஸ்கர் நான்கு ரன் எடுப்பார். உடனே அவனை அந்த இடத்தைவிட்டு நகரவிடமாட்டோம்.

இப்படியெல்லாம் கிரிக்கெட் பார்த்து வியந்த நாங்கள்...

இதோ இப்போது கால் நூற்றாண்டு கடந்தும் நேற்றும் மாலத்தீவில் ஆட்டத்தைப்பார்க்கும் போதும் இப்படித்தான் சகுனக்கள் பல பார்த்தோம். ஒருவர் வீட்டுக்குள் வரும்போது கோய்லி சிக்ஸர் அடிக்க அவரை மூன்றும் முறை வெளியே போய்விட்டு உள்ளே வரச்சொன்னோம்.

இதனால் ஒன்றும் பெரிய மாற்றங்கள் நிகழாத கண்மூடித்தனமான நம்பிக்கைகள்தான் என்றாலும்...இன்னும் எங்கள் ஆசைகள் குறைந்தப்பாடில்லை சகுனம் பார்க்க. சின்ன வயதுகளில் இதை சாதாரணமாக செய்திருந்தாலும் இன்னும் அதை நான் மட்டுமல்லாது பலரும் ஃபாலோ செய்கிறார்கள் என்பதை நேற்றுத்தான் பார்த்தேன்.

நேற்று இந்தப்போட்டியை பார்க்கும்போது என் பழைய நினைவுகளை நினைத்துப்பார்த்தேன் இதை எழுத தோன்றியது. உங்களுக்கும் கட்டாயம் இந்தமாதிரி அனுபவங்கள் இருக்கும் என நம்புகிறேன்!!!

ஆனாலும் நேற்று இந்தியா தோற்றதற்க்கு என் நண்பன் சிவப்பு சட்டைப்போடாமல் ஆட்டத்தை பார்த்திருப்பானோ என்கிற கோபமும் அவன் மீது வந்ததுண்டு

அலறல்!!!

அலறல்!!!

அவன்...

தினமும்
அலாரமை அலறவிட்டுக்கொண்டு 
தூங்கித்தொலைகிறான்.

எழுவதென்னவோ
நான்!!!

செருப்பு!!!
செருப்பு!!!


இவனும் ஒரு நாத்திகன்தான்
கோயில் வரை வந்தாலும்
உள் நுழைவதில்லை!!!


கோர்னேட்டோ!!!தள்ளுவண்டி மணி அடிக்கும்போதெல்லாம்
படித்துக்கொண்டே தலை தூக்குவான் மகன்.

சைக்கிளின் ரப்பர் ஹார்னில் "ஐஸ்" என்கிற போது
விளையாட்டின் நடுவிலும் உதடை நக்கிக்கொள்வான்.

கலைஞர் டிவி பெட்டியில் விளம்பரம் கண்டால்
நாக்கை சப்பிக்கொண்டு ஏக்கப்பார்வை பார்ப்பான்.

ஆசைப்பட்டு கேட்டதென்னவோ ஐஸ்கிரீம்தான்
அதுவும் "கோர்னெட்டேவாம்" வாயில் நுழையவில்லை...
பெயரைச்சொன்னேன்!!!

நாளை நாளை என்று நாட்கள் நகர்ந்து ஓடி
மாதமும் மூன்று முடிந்துவிட்டது.

ஆசையுடன் வாங்கப்போனபோதுதான் தெரிந்தது
விலையும் என் ஒரு நாளின் சம்பளம் என்று
பாக்கெட்டை தடவிக்கொண்டு வீடு வருவேன்.

ஓவர் டூட்டியில் பார்த்து மிச்சம்பிடித்த பணத்தில்
மகனின் மூன்று மாத ஆசையை தீர்க்க
ஒரு கேர்னேட்டோ கொடுப்பா என்றேன்.

அவன் ஒன்றைக்கொடுக்கும்போது
மனைவியின் முகம் வந்துப்போக 
சரி...இன்னொண்ணு கொடுப்பா என்றது மனம்.

இரண்டையும் வாங்கிக்கொண்டு 
மீதிப்பணம் இல்லாமல் நடந்தே வீடு வந்தேன்.
ஆனாலும் மனம் முழுக்க நான் சுவைத்திராத
கேர்னேட்டோவின் சுவையைப்பற்றித்தான்.

மனைவியிடம் அதன் கவரை கொடுக்க
என்னது என்கிற ஆவலில் மனைவி துளாவ
இரண்டு கோர்னெட்டோவும் எட்டிப்பார்த்தது.
என்னங்க ரெண்டுதானா, உங்களுக்கு? என அவள் வினவ
"வர்ரப்பவே நான் ஒண்ணு சாப்பிட்டுவிட்டேன்" என சமாளித்தேன்.

நாளை வரை தாங்காது உருகிவிடும் என 
ஐஸ்கிரீம் கடைக்காரன் சொன்னதால்
தூங்கிய மகனை அரைத்துக்கத்தில் எழுப்ப...
நானும் முகம்கழுவ கொல்லைப்புறம் சென்றேன்.

தண்ணீர் என் முகத்தில் பட்டு வழிந்தோட
கோர்னேட்டோவின் சுவை காண வாயும், மனமும் துடித்தது
சரி...அடுத்தமாதம் மூன்றாய் வாங்கலாம் என தேற்றிவிட்டு
அடுப்படியில் தட்டுடன் சாப்பாட்டுக்கு காத்திருக்க...

கதவின் பின்புறம் மகனும் மனைவியும்
கன்னமும் வாயும் கேர்னேட்டோவின்
வண்ண சாயங்களில் திளைத்துக்கொண்டிருக்க
பெருமூச்சுடன் சாதத்தை தட்டில் கொட்டினேன்.

ஒரு வாய் சோறு எடுக்குமுன்னே...
ஓடி வந்த மகன் ஒரு காக்கா கடி என எனக்கு கொடுக்க
அடுத்ததாய் மனைவியும் இன்னொரு வாய் ஊட்ட
கோர்னேட்டோவின் சுவை உணரும்முன்னே
ஆனந்தக் கண்ணீரின் உவர்ப்பு சுவையை அறிந்தேன்.

ஆமாம்...
கடைக்காரனின் கோர்னேட்டோ சுவையை விட
அதை ஊட்டும் அன்பு மனங்களின் சுவை அதிகம்தான்!!!

யுவர் அட்டெண்டன்ஸ் பிளீஸ்!!!
யுவர் அட்டெண்டன்ஸ் பிளீஸ்!!!உங்களின் 
பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு
பிரதிபலனாய்

நீங்கள்
கடவுளுக்கு 
திருப்பி செய்வதாய் சொன்ன

உங்களின்
வாக்குறுதிகளை
கடவுளும்
திருப்பிக்கேட்கத்தொடங்கினால்

கோயில்களில்
கூட்டம்
ஈயாடும்!!!

Saturday, April 5, 2014

தேர்தல் கமிஷனும் சொதப்பல் பிளானும்!!!
தேர்தல் கமிஷனும் சொதப்பல் பிளானும்!!!


அது சரி...

அரசாங்கம்...அரசு சார்ந்த/ சாராத எல்லா அலுவலகங்களுக்கும் தேர்தல் அன்று விடுமுறை விட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துவிட்டது.

பெங்களூரிலோ, டில்லியிலோ இருக்கும் ஒருவர் தமிழ்நாடு கிராமத்திற்க்கு சென்று ஓட்டளிக்க, முதல் நாள் இரவு கிளம்புவார் எனில் அடுத்த நாள் ஓட்டுப்போட்டுவிட்டு அன்றே திரும்பி வரமுடியுமா? அல்லது வரத்தான் மனம் வருமா?

இது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை ஏற்ப்படுத்தப்போவதில்லை. முக்கியமாய் நகரங்களில் பாதிக்குமேல் வெளியூர் வாசிகள் என்கிற பட்சத்தில் இது எந்த அளவுக்கு ஓட்டின் எண்ணிக்கையை கூட்டும் என்பது எனக்கு புலப்படவில்லை.

ஒருவேளை தேர்தல் சனிக்கிழமையோ அல்லது வெள்ளிகிழமையோ நடந்தால்தான் இது சாத்தியம்.

ஒன்னும் கொஞ்சம் கொஞ்சம் தீவிரமாய் செயல்பட்டிருந்தால் ஆதார் கார்டுப்போல் நேஷனல் கார்டை சிறப்பானதாக செயல்படுத்தி, சரியான முறையில் ஆராய்ந்து செயல்படுத்தி இந்தியாவின் எந்தமூலையில் இருந்தும் யாரும் எங்கும் ஓட்டுப்போடலாம் என்கிற நிலமையை உருவாக்கியிருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் தேர்தல் ஆணையத்தின் நீண்டகால திட்டங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.

வெறும் 50 லிருந்து 60 சதம் வரை ஓட்டளிக்கும் மக்களினால் சிறப்பான அரசை தேர்ந்தெடுக்க முடியாது. உங்களின் ஒரு நூறு ஓட்டுகளினால் அரசாங்கமே மாற வாய்ப்புண்டு.

இது மட்டுமல்லாது ஓட்டு இயந்திரத்தின் நண்பகத்தன்மையும் கேள்விக்குறியே...காரணம் அதை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தவும் வாய்ப்புண்டு. அதாவது எந்த சின்னத்தை அமுக்கினாலும் ஒரு கட்சிக்கே ஓட்டு செல்லக்கூடிய வசதியையும் இதில் மாற்றலாம்.

இப்போதிருக்கும் தேர்தல் அட்டையில் பரவலாக குளருபடிகள்...சரியான கார்டுகளோ அல்லது தெளிவான புகைப்படங்களோ இருப்பதில்லை. இதனால் கள்ள ஓட்டுகள் பெருகும்.

அடுத்ததாக அரசியல் கட்சிகளின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்வதில்லை. தனிப்பட்ட அங்கமாக தேர்தல் ஆணையம் இருந்தாலும் குற்றம் செய்யும் அரசியல் வாதிகளையும், ஊழல்வாதிகளையும் இவர்களால் இன்னும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வேதனை. இப்போது இரவிலும் பிரச்சாரம் செய்யலாம் என்கிறது இந்த தேர்ஹல் கமிஷன்.

பெரிய ஜனநாயக நாடு, உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா...மேல் சொன்ன விஷயங்களை செய்வதில் சிரமம் உண்டுதான் மறுப்பதற்க்கில்லை. ஆனாலும் இன்னும் சிறப்பானதாக இருந்தால் அதைவிட சந்தோஷ விஷயம் வேறேதும் இல்லை.

49 ஓ எந்த அளவுக்கு இந்த தேர்தலில் பயனடையப்போகிறது என்பதும் தெளிவாகத்தெரியவில்லை. ஏற்கனவே பணக்கஷ்டத்திலும் பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு மீண்டும் பல தேர்தல்கள் 49 ஓ வினால் வந்தால் பிரச்சனையே. அதற்க்குப்பதில் அனைவரும் ஓட்டளித்து மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமைக்காமல் ஒரு கட்சியையாவது மெஜாரிட்டியுடன் தேர்ந்தெடுக்கும் கடமையும் நம்மிடம் உண்டு.

காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் அதுவும் உங்கள் பணம்தாம் மூடர்களே...ஆனால் வாங்கிய காசுக்காக ஓட்டுப்போடாதீர்கள், காசு வாங்காத ஆளை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுங்கள்.

(கொசுறு: கடந்த ஆண்டுகளில் இந்தியாவில் இருந்தாலும் எனது ஓட்டர் கார்டின் குளருபடிகளால் இரண்டு தேர்தல்களில் என்னால் ஓட்டளிக்க முடியவில்லை. வாழ்வாதார பிரச்சனையில் மாநிலம் மாநிலமாக அலைந்ததில் ஓட்டளிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலை உங்களுக்கும் வேண்டாம்)

அனைவரும் ஓட்டளிப்போம் இந்தியாவை காப்போம்.


                                                                               இப்படிக்கு,
                         ஓட்டளிக்க முடியாத வெளிநாட்டில் உழைக்கும் இந்திய பிரஜை!!!