Friday, March 14, 2014

வாழ்ந்து கெட்ட குடும்பம்!!!வாழ்ந்து கெட்ட குடும்பம்!!!


எல்லா ஊர்களிலும் ஏதாவது ஒரு குடும்பத்தையாவது யாராவது நமக்கு உதாரணம் காட்டி இருப்பார்கள். ஆமாம்..."வாழ்ந்து கெட்ட குடும்பம்" இது என்று ஒரு வீட்டையாவது நமக்கு காண்பித்து இருப்பார்கள்.

பெரிய வீடாக இருந்தாலும் கதவுகள் கரையான் அரித்து, சுவர்களில் வெடிப்பு விழுந்து வண்ணங்கள் அற்று ஆங்காங்கே செடிகள் துளிர்விட்டு ஏதோ பாழடைந்த மண்டபமாய் காட்சித்தந்துக்கொண்டிருக்கும். அந்த மாதிரி வீடுகளைப்பார்த்தால் அதை கடப்பவர்கள் உச்சுக்கொட்டாமல் போகமாட்டார்கள்.

எங்கள் ஊரிலும் அப்படித்தான் எங்கள் வீட்டுக்கு நான்கு தெருவுக்கு மேல் ஒரு வீடு...பெரிய வாசலும் மூன்று அடுக்களுமாய் இருந்தாலும் அதிக நடமாட்டமற்ற ஒரு பேய் பங்களாவையே எனக்கு நினைவூட்டும். என் ஊரில் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன் "ம்ம்ம்...வாழ்ந்து கெட்ட வீடு" என்று. ஒவ்வொருமுறை அந்த மாடி வீட்டை கடக்கும்போதும் என் பார்வை அந்த வீட்டை ஆச்சரியமாகவே பார்த்து பழகிவிட்டது.

திருவிழாக்களில் எல்லா வீடுகளும் வண்ணம் பூச்சு பூசி ஜொலிக்கும், சொந்தங்களின் கூட்டம் ஆர்ப்பரிக்கும், கல கலவென சப்தம் கேட்டுக்கொண்டிருக்கும்...ஆனால் அந்த வீடு மட்டும் மாயான அமைதியில் எப்போதாவது அதன் துருப்பிடித்த கேட் திறந்து மூடும் "கீய்ங்க்....கீய்ங்க்" ஒலி மட்டும்.

யாருடனாவது போகும்போது அந்த வீட்டை கடந்தால் அவர்கள் சொல்லும் கதை ஒன்றும் நம் செவிகளை துளைக்கும்....

"அவரு சின்ன வயசுல காலேஜ் படிக்கும்போது என்ன சட்டை போடுறாரோ அதே கலர் காரில்தான் போவார்"

நானும் வாயைப்பிளந்துக்கேட்பேன்.

"அவங்க கல்யாணம் மொத்தம் ஏழு நாள் தடபுடலா நடந்துச்சு, ஊருல யாருமே ஒரு வாரம் ஒல வெக்கல"

அம்மாடியோவ்....என் கண்கள் அகல விரியும்.

"அந்தக்காலத்துலேயே மெட்ராஸில் அவங்க மருமக பொண்ணு படிச்சி டிகிரி வாங்குனாங்க, ஊருல முதல்ல டிகிரி வாங்குன பொண்ணு அவிங்கதான்"

அதற்க்கு அடுத்த முறை அந்த அம்மாவை பார்க்கும்போது பொறாமையாய் இருந்தது எனக்கு.

பல முறை அந்த வீட்டுக்குள் போக நினைத்ததுண்டு...ஆனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது...முன் ஹாலில் பெரிய இரண்டு சோபாக்கள் சாயம் வெளுத்துப்போய் இரண்டு மூன்று இடங்களில் லெதர் பிய்ந்து அழுக்கு மஞ்சள் நிற ஸ்பாஞ் துருத்திக்கொண்டிருந்தது, அந்தக்காலத்து கதவு டிவி படம் தெரியுமா என்பது சந்தேகமே,  சுவர்களில் பெரிய பெரிய போட்டாக்கள் அதில் அவர்களின் அப்பன் பாட்டன்கள் கம்பீரமாய், நீள துப்பாக்கி, மான் கொம்பு என பழைய படத்தில் வரும் வில்லங்களின் வீடுகளை நியாபகப்படுத்தினாலும் மெலிதாய் இழையோடும் சோகம் வீடெங்கும். ஒட்டடை அடித்து வெள்ளை பூசினால் இது கட்டாயம் அரண்மனைதான்..

பழைய போட்டோக்களில் இருந்த அந்த வீட்டு மருமகள் உருமாறி மெலிந்து நைந்த உடையுடன் பார்த்தபோது அவர்கள் மேல் எனக்கு தனிப்பசம் வந்தது.என் அம்மா கொடுத்துவிட்ட பலகாரத்தை கையில் கொடுத்துவிட்டு அவர்களின் முகம் பார்க்காமல் ஓடி வந்துவிட்டேன்.

அவர்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள்...இரண்டு டம்ளர் அரிசி கேட்கவோ, அரை மூடி சர்க்கரை கேட்கவோ அல்லது இருபது ரூபாய் பணம் கேட்கவோ...என் அம்மாவும் மறுக்காமல் கொடுப்பார்கள். திருப்பி தருவதாய் சொல்லிவிட்டு வாங்கிப்போவார்கள்...திருப்பி தந்ததாய் ஞாபகம் இல்லை. அவர்களும் வெட்கத்தை விட்டு இருபது ரூபாயை கூனிக்குறுகு கேட்கும்போது எனக்கு கண்ணில் கண்ணீர் முட்டும்.

அவர்களுக்கு தோட்டங்கள் கொஞ்சம் இருந்தாலும் எல்லாவற்றையும் லீசுக்குக்கொடுத்திருப்பதால்...இனி அவர்களால் அதை திருப்பி வாங்கவே முடியாது...அப்படி வாங்கவே முடியாமலிருந்த சொத்துக்கள் ஏராளம். வாழ்க்கையில் எங்கள் வீட்டிலும் கஷ்டம் வந்து பார்த்திருக்கிறேன்...ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக வந்ததை அவர்களிடம்தான் பார்த்தேன்.

பொதுவாக சொல்லுவார்கள்...பணமும், சேர்த்த ஆஸ்தியும் மூன்று தலைமுறைக்குத்தான் தங்கும் என்று...அவர்களின் அப்பாக்கள் வரை சுகத்தை அனுபவித்தவர்கள் மகன்களும் பேரன்களும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நிறைய யோசித்துப்பார்த்தேன்...இவர்களின் சொத்துக்கள் எப்படி அழிந்துப்போனது என்று...அதற்க்கு யாரிடமும் சரியான பதில் இல்லை...இத்தனைக்கும் அவர் குடித்தோ, சூதாடியோ சொத்தை அழிக்கவில்லை என்பது நிஜம்.

என் அப்பாக்காலத்தில் அவர்களைப்பார்த்தாலே மரியாதையுடன் ஒதுங்கும் மக்கள்...இப்போதெல்லாம் அவர்கள் வந்தாலே ஓடி ஒளிகிறார்கள்...தங்களிடம் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று...இதுதான் உலகம்.

அழகான பெண்ணை பெற்றும் 30 வயது வரை பணம் இல்லாமல் இரண்டாவது மனைவியாக கட்டிக்கொடுத்து, மகனுக்கு திறமை இருந்தும் சரியான கல்வியை தரமுடியாமலும், குழந்தைகள் இருவரின் வழி தடம் மாறி சென்றதை சொல்வதா? இல்லை பாலும், பழமும், தேனும் சாப்பிட்டு வளர்ந்த குடும்பம் ஒரு படி அரிசிக்காக கையேந்தி நிற்ப்பதை சொல்வதா? இல்லை ஊரின் திடீர்ப்பணக்காரர்கள் அவர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு அபகரித்துக்கொள்வதை சொல்வதா? ஆயிரம் உண்டு சொல்ல.

செல்வத்தில் திளைத்துவிட்டு திடீரென்று எல்லாம் மாயமாகி நடுத்தெருவுக்கு வந்தால்.. அதை நினைத்துப்பார்க்கவே பயமாய் இருக்கின்றது. பல வருடங்கள் பூஜை செய்யும்போதெல்லாம் அவர்களின் குடும்பத்துக்கும்சேர்த்து பூஜை செய்திருக்கிறேன். எப்போதாவது ஊருக்கு போகும்போது அவர்களுக்கும் ஏதாவது வாங்கிப்போவேன். அவையெல்லாம் அவர்களின் கஷ்டத்தை எந்த விததிலும் போக்காது எனினும் எனக்கான ஆறுதல். என்னதான் அவர்களிடம் இப்போது பணம் இல்லையென்றாலும் சிம்பிளான உடையிலும் "ராஜ களை" என்பார்களே அது அவர்களிடம் பார்த்தேன் எப்போதும்.

இதோ வருடங்க்கள் உருண்டோடி..எண்பதுகள் வரை சுகமாய் வாழ்ந்தவர்கள் இந்த முப்பது ஆண்டுகளில் முழுசாய் வாழ்ந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. இன்று அந்த பாழடைந்த வீடு மட்டும் உண்டு...போன முறை அம்மாவிடம் கேட்டேன்...அவர்கள் இறந்துவிட்டதாய் சொன்னார்கள். இறப்பாவது அவர்களுக்கு நிம்மதியை தரட்டும்!!!

இதைப்படித்து விட்டு உங்கள் ஊரில் இப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். காரணம் அவர்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம்.

1 comment:

  1. ￰இதுதான் உண்மையான வாழ்கை அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் பாட்டன் முப்பாட்டன் கையில் அல்ல அவர்கள் இழந்ததையே நினைத்து பார்த்து நிகழ் காலத்தில் குழம்பி போய் விட்டார்கள் அதற்க்கு சமுகமாகிய நாமும் ஒரு காரணம் ஒரு வேளை நாம் அவர்களை வாழ்ந்து கெட்ட குடும்பம் என முத்திரை போட்டதாலும் இருக்கலாம் இல்லையா?

    ReplyDelete