Monday, March 24, 2014

குக்கூ!!!(சென்னையில் எனக்கும் கண் தெரியாத மூன்று நண்பர்கள் உண்டு (ராஜு கோபி, பொன்மலர், அய்யாகண்ணு)...இதே கோடம்பாக்கம், எக்மோர் சந்திப்பில் அவர்களிடம் கிட்டத்தட்ட 4 வருடம் பழகியிருக்கிறேன். பல நூறு மணி நேரங்கள் செலவழித்திருக்கிறேன்...!!!)

குறைகளை மட்டும் ஹைலைட் பண்ணனும்க்குற அவசியம் எனக்கு இல்லை...இன்னும் பெட்டரா இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும் என்கிற ஆதங்கம்தான்.

பொதுவாக நெரிசலான ரயில் பயணங்களில் இவர்களை சந்திக்ககூடும். அவர்கள் கண்பார்வை இல்லாதவர்கள் என்று அவ்வளவு ஈசியாக சொல்லிவிடமுடியாது. கண் இருப்பவர்களை விட கண்ணில்லாதவர்களை ஏமாற்றுவது மிகக் கடினம். எப்போதாவது பரிதாபத்தில் பஸ் ரூட் புக்கோ, கிரடிட் கார்ட் கவரோ இல்லை பேனாவோ நாம் வாங்குவதும் உண்டு. ஆனாலும் இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு அதில் சுகம் துக்கம் எல்லாம் இருக்கும் கூடவே அழகான காதலும் இருக்கு என்பதை சொல்லியிருக்கும் படம் குக்கூ. குயிலைப்போலவே படமும் இனிமை. நாம் இதுவரை இப்படி சிந்தித்திருக்க வாய்ப்பில்லை.

கண்பார்வையற்ற இரண்டு காதலர்களின் கதை...அவர்களின் அன்றாட வாழ்க்கையை சொல்லும் படம். இறுதியில் காதல் வென்றதா இல்லையா என்பதை சுலோவான இரண்டாவது பாதியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கட்டாயம் அழுகை வரணும் என்பதற்க்காகவே இரண்டாவது பாதியில் திணிக்கப்பட்ட காட்சிகள் எனினும் நம்மை ரசிக்க வைக்கிறார் பின்னர் கலங்க வைக்கிறார்.

முக்கியமாய் படத்தின் ஹீரோ தினேஷ் அட்டகத்தியில் தன் அபார கேஷுவலான நடிப்பால் கொள்ளைக்கொண்டவர் இந்தப்படத்தில் கண்தெரியாதவராகவே வாழ்ந்திருக்கிறார். ராஜபார்வைக்கு சமமான நடிப்பு. சிறந்த கலைஞனை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. யதார்த்த நடிப்பு இவருக்கு பக்காவாய் வருகின்றது.

நாயகி...புதுமுகம் மாளவிகா. புதுமுகமா என வியக்கவைக்கிறார். நீங்க தமிழ் சினிமாவில் நல்லா ரவுண்டு ஒண்ணு வரணும்.வாழ்துக்கள்.

முதல்பாதியில் வரும் இளையாராஜா பாடல்கள்...கதையோடு ஒன்றி நம்மை ரசிக்கவைக்கிறது. முதல்பாதியில் இடையிடையே வரும் காமெடி டயலாக்குகள், நண்பர்களின் அரட்டைகள் என கலகலப்பாக போகிறது.

ஆடுகளம் முருகதாஸ், மற்ற நண்பர்கள் என கலகலப்பான கூட்டம் மட்டுமல்லாது விஜய், அஜித்தையும் ஏகத்துக்கு கலாய்த்திருக்கிறார்கள் படத்தில்.

பத்திரிகையாளர், இயக்குனர் ராஜூ முருகன் அங்காடி தெரு பார்ட் டூ எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் அங்காடித்தெருவில் இருந்த ஒரிஜினாலிட்டி இதில் இல்லை. காரணம் ஆடியன்ஸுக்கு சோகம் அதிகம் வந்து படத்தோடு ஒன்றவேண்டும் என்பதற்க்காக லாஜிக்குகளை கண்டுக்கொள்ளாமல் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காட்சிகளாய் இரண்டாவது பாதி. ஆனாலும் கடைசி காட்சிகளில் நாம் கண் கலங்குவது உண்மை. காட்சியமைப்பிலும் எடிட்டிங்கிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் சமீப காலங்களில் வந்த சிறந்த படங்களில் ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

ஒரே ஒரு காட்சியில் பெயருக்காக நாயகன் டார்ச்லைட் விற்க்கிரார்!!!

காதலைனைத்தேடி வெறும்கையுடன் எஸ்கேப் ஆகும் நாயகிக்கு கடைசி காட்சியில் கரும் அப்பாவின் அந்த கடிகாரம் எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை???

மூன்று லட்ச ரூபாயை அவ்வளவு சீக்கிரம் ஒரே நாளில் ஒரு சாதாரண எலக்ட்ரிக் ரயிலில் விற்ப்பவனால் புரட்ட முடியுமா???

கண்பார்வை இல்லாதவர்களிடமும் போலீஸ் இப்படி நடந்துக்கொள்ளுமா??? அதுமட்டுமல்லாது இரவில் இப்படியா நடுரோட்டில் விட்டுவிட்டு போவார்கள்???

நாயகிக்கு நாயகனுடன் காதல் வரும் வேளை...ஏதோ அவள் நினைத்தவனுக்கு கல்யாணம் ஆகிவிட சும்மா இருக்கும் நாயகனை தேர்ந்தெடுத்ததுப்போல் மனதோடு ஒட்டவில்லை.

கண்ணில்லாதவர்களும் அடிக்கடி குடிப்பதுப்போல் காட்டியிருப்பது மனதை உறுத்துகின்றது. அப்படியே குடிப்பவர்களாய் இருந்தாலும் அதை தவிர்த்திருக்கலாம்...இதை ஒரிஜினாலிட்டி என்று சொல்பவர்கள் திணிக்கப்பட்ட கிளைமாக்ஸை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை...கிளைமாக்ஸில் நாயகனின் செய்கைகள் அப்படியே மூன்றாம் பிறையின் கிளைமாக்ஸை நினைவூட்டுகின்றன.

கண்ணிருப்பவர்களாலேயே மும்பையிலோ, பூனேயிலோ இருப்பவர்களை கண்டுப்பிடிப்பது கஷ்டமான விஷயம் இவர்கள் மட்டும் ஈஸியாய் ஒரே பயணத்தில் சந்திப்பது என்பது முடியாத காரியம். அதுவும் சுரத்தில்லாத இரண்டாவது பாதியில் கொஞ்சம் போர் அடிப்பது உண்மை.

சென்னையில் எனக்கும் கண் தெரியாத மூன்று நண்பர்கள் உண்டு (ராஜு கோபி, பொன்மலர், அய்யாகண்ணு)...இதே கோடம்பாக்கம் எக்மோர் சந்திப்பில் அவர்களிடம் கிட்டத்தட்ட 6 வருடம் பழகியிருக்கிறேன்...அவர்களின் மேனரிசங்களும், அவர்களின் செயல்களையும் நன்றாக அறிந்தவன் என்பதாலும்...இந்தப்படத்தில் பல காட்சிகளில் நாயகியின் கை அசைவுகளும் நாயகனின் முக அசைவுகளும் கொஞ்சம் அதிகமாகவே பட்டது. பொதுவாக அவர்கள் வாசத்தை வைத்து மற்றவர்களின் வருகையை கண்டுப்பிடிப்பதில்லை...(செண்ட்டு ஒரு டப்பா 150 ரூவா என்பது மட்டுமல்ல ரயில் ஒரு நாள் போய்வாருங்கள் சென்னையில் வியர்வை நாத்தம்தான் வரும்) அவர்கள் தங்களுக்கே உரித்தான சங்கேத சவுண்டுகளினாலோ அல்லது சப்தமாக பேசுவதனாலோ தங்களின் அவருகையை அறிவிப்பார்கள். கருவாட்டு குழம்பு மணம் வேண்டுமானால் பத்தடிக்கு வாசம் வீசும்.

பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் மொபைல் போன்கள் அவர்களுக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டது. அதில் எந்த எண்ணை அழுத்தினாலும் அந்த எண் ஒரு பெண்குரலிலோ அல்லது ஆண்குரலிலோ ஒலியாய் கேட்கும். இந்த படத்தில் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் தெளிவாக காட்டப்படவில்லை.

இந்தமாதிரி சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் படம் நல்ல படம் எல்லோரும் பார்க்கவேண்டிய படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

குக்கூ...சோகக் குயிலின் பாடல்!!!

செய்வீர்களா??? செய்வீர்களா??? செய்வீர்களா???

முன்பெல்லாம் ஒரு தெருவுக்கு ஒரு கார் இருக்கும் அல்லது இரண்டு மூன்று பைக் இருக்கும்.
இப்போதெல்லாம் ஒரு வீட்டுக்கு இரண்டு பைக்கும் இரண்டு காரும் இருக்கு.
அதில் வேடிக்கை வீட்டில் இருப்பவர்கள் தனித்தனியாக தனித்தனி வண்டியில் போவார்கள்.
டிராஃபிக் ஜாம் ஆகாம என்ன செய்யும்???

பின்ன பெட்ரோல் விலை ஏறாதா???

முன்பெல்லாம் பத்தடி தோண்டினா தண்ணீர் வரும்
இப்போதெல்லாம் நூறு அடி தோண்டினாக்கூட வெறும் காத்துதான் வருது.
வீட்டை கழுவதோடு மட்டுமல்லாது உங்க வண்டியை கழுவணும் தண்ணிய வீணாக்கணும்.
மரத்தை வெட்டுவீங்க, காட்டை அழிப்பீங்க, காற்றை மாசு படுத்தி மழைய தடுப்பீங்க
அட...வீட்டுக்கு வீடு மழைநீர் சேமிப்பு இருக்கா??? சரியான டிரைனேஜ் சிஸ்டம் இருக்கா???
அப்படியே மழை பெய்தாலும் முக்கா வாசி தண்ணி சாக்கடையிலும், கடலிலும்தான் கலக்குது.

பின்ன தண்ணி கஷ்டம் வராமலா இருக்கும்???

முன்பெல்லான் நல்ல காற்றோட்டமா வீடு கட்டுனீங்க
வாடகை வருதூன்னு நெருக்கமா வீடு கட்டுறீங்க,
வெண்டிலேஷன் சுத்தமா இல்ல, வெளிச்சம் இல்லை
நாள் முழுக்க லைட்டு போடணும், ஃபேன் சுத்தணும், ஏசியும் கூட்டணும்
ஆறு மொபைலு, வீட்டுக்கு நாலு லேப்டாப்பு, ரெண்டு டிவி, ஒரு கம்ப்யூட்டரு
விளையாட நேரமில்லாம எலக்ட்ரானிக் கெஜெட்ஸ்டே கதி
மின்சாரம் சிக்கனமில்லாமல் போச்சு...கரண்ட்டும் கட்டாகிப்போச்சு

பின்ன மின்சாரம் என்ன சுலபமாவா கிடைக்குது???

இந்தமாதிரி ஆயிரம் விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்போதைக்கு பெட்ரோல், தண்ணி, மின்சாரம் மட்டும் சொல்லியிருக்கேன்
எல்லாவற்றிர்க்கும் அரசாங்கம் மட்டுமல்ல நாமும்தான் காரணம்.
இரண்டு கை தட்டினால்தான் ஓசை அரசும் கை கொடுக்கணும் நாமும் ஒத்துழைக்கணும்

செய்வீர்களா??? செய்வீர்களா??? செய்வீர்களா???

மழை!!!மழை!!!

உனக்கு
அப்படியென்ன அவசரம்...!!!

எறும்புகள் வரிசை
உணவை சுமந்து
வீட்டுக்குப்போவதற்க்குள்???

Thursday, March 20, 2014

சிட்டு குருவி!!!சிட்டு குருவி!!!

சிட்டுக்குருவிகளின்
இன்றைய நிலைப்போலவே

போன வருடம் எழுதிய
சிட்டுக்குருவி கவிதையையும்
காணவில்லை!!!

ஓய்வு!!!எத்தனை பேரை சுமந்திருக்கும்

ஆசுவாசப்படுத்திக்கொண்டவர்
அமைதியாய் இருந்தவர்
யோசிக்க நினைத்தவர்
மூச்சுவாங்க ஓடிவந்தவர்
வலியால் துடித்தவர்
படிக்க அமர்ந்தவர்
படிக்காமல் தூங்கியவர்
பரண் ஏற மிதித்தவர்
உலரிய துணிகளை கொட்டியவர்
காயாத உள்ளாடைகளை போர்த்தியவர்
தூக்கிவந்த சுமையை சுமத்தியவர்
பாலீஷ் போட ஷூ காலை வைத்தவர்
கோபத்தில் உதைத்தவர்
அடைய வேண்டி சண்டைப்போட்டவர்
தரதரவென இழுத்துப்போனவர்
பிணமாய் கிடத்தப்பட்டவர்

என...

அத்தனைப்பேரையும் சுமந்துவிட்டு
பிறர்க்காக தன் காலையும்,
தன்னையும் உடைத்துக்கொண்டு
ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்
தீண்டப்படாத இப்போது வேண்டப்படாத
நேற்றைய சுமைதாங்கி

பாவம்...

யாரும்கண்டுக்கொள்ளாமல்
ஒரு ஓரமாய்!!!

Friday, March 14, 2014

தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட்!!! "The Wolf of Wall Street." Money. Power. Women. Drugs!!!தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்டிரீட்!!!

"The Wolf of Wall Street." Money. Power. Women. Drugs!!!


லியனர்டோ டிகாப்ரியோவின் ஆஸ்கார் கனனவை நெறுங்கி கடைசியில் தகர்த்த படம். அதனால் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தப்படம் (வேறொரு காரணமும் இருந்தது :)!!!

கிட்டத்தட்ட இரண்டை மூன்று மணிநேரம் ஓடும் படம். 80 களில் மில்லயினராக துடிக்கும் ஒரு இளைய நடுத்தர குடும்பத்து வாலிபன் கதை. 90 சதவீத கதை  முழுக்க ஷேர் மார்க்கெட் ஆபீசுக்குள் எடுக்கப்பட்ட கதை. டிகாப்ரியோ ஒரு தயாரிப்பாளராக புரடியூசும் செய்திருக்கிறார்.

ஷேர் மார்க்கெட் புரோக்கராக சேரும் ஹீரோ எப்படி தனது பேச்சு திறமையாலும், பிரிலியண்ட்டான ஏமாற்றுதலாலும் ஐந்தே வருடத்தில் எப்படி மில்லியனர் ஆகிறார் என்பதுதான் கதை. இடையில் டிரக் அடிக்ட் ஆவதும், பல பெண்களை உடலுறவு கொள்வதுமென படமுழுக்க கொக்கய்னும், பொண்ணுங்களுமாய் திரியும் படம்.

இந்த படத்திற்க்கு ஆஸ்கார் வாங்கும் தகுதில்லை (சிறந்த ஆஸ்கார் நடிகர் 2014 Matthew McConaughey (Dallas Buyers Club). ஐந்தாவது முறையும் பாவம் இவரை ஏமாற்றிவிட்டது. காரணம் டிவிஸ்ட் அண்டு டர்ன்ஸ் ஏதுமில்லாமல் ஒரே திசையில் நகரும் கதை. பிரமாதமான நடிப்பு இல்லையெனினிம் கேஷுவலாக அசத்தியிருக்கிறார் ஹீரோ. அதுவும் ஷேர் மார்க்கெட் காரர்கள் மக்களை எப்படி முட்டாளாக்குகிறார்கள் என்பதுதான் மையக்கரு எனினும்...வெறும் பேச்சு திறமையால் மட்டும் இப்படியெல்லாம் சாதிக்க முடியுமா எனும் ஐயமும் எழுகிறது. அடுத்து சுவிஸ் பேங்குக்கு பல மில்லியன் பணத்தை கடத்துவதும் பக்கா சினிமாத்தனம்.

ஆனால், போதை மருந்தை உட்கொண்டு தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வரும் காட்சியிலும், போனில் ஷேரில் பணம் போடச்சொல்லி ஒருவரிடம் பேசும்போது இவர் செய்யும் சேஷ்டைகள் அற்ப்புதம். ஆஸ்கார் மயிரிழையில் தப்பினால் என்ன அடுத்த வருடம் கட்டாயம் இவரே வாங்கட்டும்.

படத்தில் முக்கியமான  இரண்டு விஷயங்கள் கிட்டத்தட்ட வார்த்தைக்கு வார்த்தை "   " என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். சந்தோஷம் வந்தாலும், கோபம் வந்தாலும் ஏன் சோகமான காட்சிகளில் கூட "     " தான். எனக்குத்தெரிந்து இந்த வார்த்தையை மிக அதிக முறை பயன்படுத்திய படம் இதுவாகத்தான் இருக்கும். "   " இந்த வார்த்தைக்கு புது அர்த்தமே கொடுத்திருக்கிறார்கள் படத்தில். இரண்டாவதாய்...அளவுக்கதிகமான சாப்ட் பார்ன் காட்சிகள்.

ஷேர் மார்க்கெட் ஆபீஸ் இப்படியெல்லாம் இருக்குமா? என்பதும் மிக அதிகப்படியான செக்ஸ் காட்சிகளாலும் படத்தை கட்டாயம் குடும்பத்துடன் பார்ப்பது கஷ்டம் (நம்ம இந்திய குடும்பங்களை சொன்னேன்).
போரடிக்காமல் போகிறது அவ்வளவே!!!

வாழ்ந்து கெட்ட குடும்பம்!!!வாழ்ந்து கெட்ட குடும்பம்!!!


எல்லா ஊர்களிலும் ஏதாவது ஒரு குடும்பத்தையாவது யாராவது நமக்கு உதாரணம் காட்டி இருப்பார்கள். ஆமாம்..."வாழ்ந்து கெட்ட குடும்பம்" இது என்று ஒரு வீட்டையாவது நமக்கு காண்பித்து இருப்பார்கள்.

பெரிய வீடாக இருந்தாலும் கதவுகள் கரையான் அரித்து, சுவர்களில் வெடிப்பு விழுந்து வண்ணங்கள் அற்று ஆங்காங்கே செடிகள் துளிர்விட்டு ஏதோ பாழடைந்த மண்டபமாய் காட்சித்தந்துக்கொண்டிருக்கும். அந்த மாதிரி வீடுகளைப்பார்த்தால் அதை கடப்பவர்கள் உச்சுக்கொட்டாமல் போகமாட்டார்கள்.

எங்கள் ஊரிலும் அப்படித்தான் எங்கள் வீட்டுக்கு நான்கு தெருவுக்கு மேல் ஒரு வீடு...பெரிய வாசலும் மூன்று அடுக்களுமாய் இருந்தாலும் அதிக நடமாட்டமற்ற ஒரு பேய் பங்களாவையே எனக்கு நினைவூட்டும். என் ஊரில் பலர் சொல்லி கேட்டிருக்கிறேன் "ம்ம்ம்...வாழ்ந்து கெட்ட வீடு" என்று. ஒவ்வொருமுறை அந்த மாடி வீட்டை கடக்கும்போதும் என் பார்வை அந்த வீட்டை ஆச்சரியமாகவே பார்த்து பழகிவிட்டது.

திருவிழாக்களில் எல்லா வீடுகளும் வண்ணம் பூச்சு பூசி ஜொலிக்கும், சொந்தங்களின் கூட்டம் ஆர்ப்பரிக்கும், கல கலவென சப்தம் கேட்டுக்கொண்டிருக்கும்...ஆனால் அந்த வீடு மட்டும் மாயான அமைதியில் எப்போதாவது அதன் துருப்பிடித்த கேட் திறந்து மூடும் "கீய்ங்க்....கீய்ங்க்" ஒலி மட்டும்.

யாருடனாவது போகும்போது அந்த வீட்டை கடந்தால் அவர்கள் சொல்லும் கதை ஒன்றும் நம் செவிகளை துளைக்கும்....

"அவரு சின்ன வயசுல காலேஜ் படிக்கும்போது என்ன சட்டை போடுறாரோ அதே கலர் காரில்தான் போவார்"

நானும் வாயைப்பிளந்துக்கேட்பேன்.

"அவங்க கல்யாணம் மொத்தம் ஏழு நாள் தடபுடலா நடந்துச்சு, ஊருல யாருமே ஒரு வாரம் ஒல வெக்கல"

அம்மாடியோவ்....என் கண்கள் அகல விரியும்.

"அந்தக்காலத்துலேயே மெட்ராஸில் அவங்க மருமக பொண்ணு படிச்சி டிகிரி வாங்குனாங்க, ஊருல முதல்ல டிகிரி வாங்குன பொண்ணு அவிங்கதான்"

அதற்க்கு அடுத்த முறை அந்த அம்மாவை பார்க்கும்போது பொறாமையாய் இருந்தது எனக்கு.

பல முறை அந்த வீட்டுக்குள் போக நினைத்ததுண்டு...ஆனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது...முன் ஹாலில் பெரிய இரண்டு சோபாக்கள் சாயம் வெளுத்துப்போய் இரண்டு மூன்று இடங்களில் லெதர் பிய்ந்து அழுக்கு மஞ்சள் நிற ஸ்பாஞ் துருத்திக்கொண்டிருந்தது, அந்தக்காலத்து கதவு டிவி படம் தெரியுமா என்பது சந்தேகமே,  சுவர்களில் பெரிய பெரிய போட்டாக்கள் அதில் அவர்களின் அப்பன் பாட்டன்கள் கம்பீரமாய், நீள துப்பாக்கி, மான் கொம்பு என பழைய படத்தில் வரும் வில்லங்களின் வீடுகளை நியாபகப்படுத்தினாலும் மெலிதாய் இழையோடும் சோகம் வீடெங்கும். ஒட்டடை அடித்து வெள்ளை பூசினால் இது கட்டாயம் அரண்மனைதான்..

பழைய போட்டோக்களில் இருந்த அந்த வீட்டு மருமகள் உருமாறி மெலிந்து நைந்த உடையுடன் பார்த்தபோது அவர்கள் மேல் எனக்கு தனிப்பசம் வந்தது.என் அம்மா கொடுத்துவிட்ட பலகாரத்தை கையில் கொடுத்துவிட்டு அவர்களின் முகம் பார்க்காமல் ஓடி வந்துவிட்டேன்.

அவர்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்கள்...இரண்டு டம்ளர் அரிசி கேட்கவோ, அரை மூடி சர்க்கரை கேட்கவோ அல்லது இருபது ரூபாய் பணம் கேட்கவோ...என் அம்மாவும் மறுக்காமல் கொடுப்பார்கள். திருப்பி தருவதாய் சொல்லிவிட்டு வாங்கிப்போவார்கள்...திருப்பி தந்ததாய் ஞாபகம் இல்லை. அவர்களும் வெட்கத்தை விட்டு இருபது ரூபாயை கூனிக்குறுகு கேட்கும்போது எனக்கு கண்ணில் கண்ணீர் முட்டும்.

அவர்களுக்கு தோட்டங்கள் கொஞ்சம் இருந்தாலும் எல்லாவற்றையும் லீசுக்குக்கொடுத்திருப்பதால்...இனி அவர்களால் அதை திருப்பி வாங்கவே முடியாது...அப்படி வாங்கவே முடியாமலிருந்த சொத்துக்கள் ஏராளம். வாழ்க்கையில் எங்கள் வீட்டிலும் கஷ்டம் வந்து பார்த்திருக்கிறேன்...ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக வந்ததை அவர்களிடம்தான் பார்த்தேன்.

பொதுவாக சொல்லுவார்கள்...பணமும், சேர்த்த ஆஸ்தியும் மூன்று தலைமுறைக்குத்தான் தங்கும் என்று...அவர்களின் அப்பாக்கள் வரை சுகத்தை அனுபவித்தவர்கள் மகன்களும் பேரன்களும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நிறைய யோசித்துப்பார்த்தேன்...இவர்களின் சொத்துக்கள் எப்படி அழிந்துப்போனது என்று...அதற்க்கு யாரிடமும் சரியான பதில் இல்லை...இத்தனைக்கும் அவர் குடித்தோ, சூதாடியோ சொத்தை அழிக்கவில்லை என்பது நிஜம்.

என் அப்பாக்காலத்தில் அவர்களைப்பார்த்தாலே மரியாதையுடன் ஒதுங்கும் மக்கள்...இப்போதெல்லாம் அவர்கள் வந்தாலே ஓடி ஒளிகிறார்கள்...தங்களிடம் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று...இதுதான் உலகம்.

அழகான பெண்ணை பெற்றும் 30 வயது வரை பணம் இல்லாமல் இரண்டாவது மனைவியாக கட்டிக்கொடுத்து, மகனுக்கு திறமை இருந்தும் சரியான கல்வியை தரமுடியாமலும், குழந்தைகள் இருவரின் வழி தடம் மாறி சென்றதை சொல்வதா? இல்லை பாலும், பழமும், தேனும் சாப்பிட்டு வளர்ந்த குடும்பம் ஒரு படி அரிசிக்காக கையேந்தி நிற்ப்பதை சொல்வதா? இல்லை ஊரின் திடீர்ப்பணக்காரர்கள் அவர்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு அபகரித்துக்கொள்வதை சொல்வதா? ஆயிரம் உண்டு சொல்ல.

செல்வத்தில் திளைத்துவிட்டு திடீரென்று எல்லாம் மாயமாகி நடுத்தெருவுக்கு வந்தால்.. அதை நினைத்துப்பார்க்கவே பயமாய் இருக்கின்றது. பல வருடங்கள் பூஜை செய்யும்போதெல்லாம் அவர்களின் குடும்பத்துக்கும்சேர்த்து பூஜை செய்திருக்கிறேன். எப்போதாவது ஊருக்கு போகும்போது அவர்களுக்கும் ஏதாவது வாங்கிப்போவேன். அவையெல்லாம் அவர்களின் கஷ்டத்தை எந்த விததிலும் போக்காது எனினும் எனக்கான ஆறுதல். என்னதான் அவர்களிடம் இப்போது பணம் இல்லையென்றாலும் சிம்பிளான உடையிலும் "ராஜ களை" என்பார்களே அது அவர்களிடம் பார்த்தேன் எப்போதும்.

இதோ வருடங்க்கள் உருண்டோடி..எண்பதுகள் வரை சுகமாய் வாழ்ந்தவர்கள் இந்த முப்பது ஆண்டுகளில் முழுசாய் வாழ்ந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. இன்று அந்த பாழடைந்த வீடு மட்டும் உண்டு...போன முறை அம்மாவிடம் கேட்டேன்...அவர்கள் இறந்துவிட்டதாய் சொன்னார்கள். இறப்பாவது அவர்களுக்கு நிம்மதியை தரட்டும்!!!

இதைப்படித்து விட்டு உங்கள் ஊரில் இப்படி யாராவது இருந்தால் அவர்களுக்கும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். காரணம் அவர்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம்.

சுல்தான் தி வாரியர்.., ராணா.., கோச்சடையான் ஆன அனிமேஷன் சோக கதை!!!
இதோ படம் முடிந்து ரிலீசுக்காக பரபரப்பாய் காத்திருக்கின்றது. மக்களும் பரபரப்பாய் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆமாம் சூப்பர் ஸ்டார் நடித்து கிட்டத்தட்ட பத்துக்கு மேற்ப்பட்ட மொழிகளில் ஆறாயிரம் தியேட்டர்கள் ரிலீஸ்.

சூப்பர் ஸ்டாரின் வாரிசுகளுக்கு பிசினஸ் செய்ய கற்றுத்தரவா வேண்டும்? மிகப்பெரிய பிராண்ட் ஓசியில் வீட்டிலேயே இருக்கும்போது பின் எதற்க்கு பயம். போட்ட முதலைவிட பல நூறு மடங்கு லாபத்தை முதல் மூன்று நாள் படம் ஓடினாலே எடுத்துவிட முடியும். ஒரு பத்து நாள் அவுஸ்புல்லாக ஓடினால் படத்தின் பிசினஸை நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள்.

அது சரி...கோச்சடையானுக்குப்பின்பக்கம் சென்னையில் இன்னொரு துறையின் சோகமுகம் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் ஒரு இளைஞர் பட்டாளம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது. பல கோடிகள் சம்பளம் பாக்கி, திடீரென்று வேலை காலி...என இந்தியாவின் அனிமேஷனில் முதுகெலும்பாய் இருந்த சென்னை இன்று வாடி வதங்கி நொந்துப்போய் இருக்கின்றது. எனக்குத்தெரிந்து கிட்டத்தட்ட சுமார் 600 பேர் வேலையில்லாமல் தவிக்கிறார்கள் அல்லது இந்த மாதிரி படங்களில் வேலைப்பார்த்துவிட்டு சம்பளம் கிடைக்காமல் பலர் இந்த்துறையைவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் அல்லது ஓடிப்போகவைத்தார்கள்.

ஓவியர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு மிகப்பெரிய மைனஸ் பாய்ண்ட் உண்டு...அது அவர்களின் துறையைத்தவிர மற்றத்துறைகளைப்பற்றி கொஞ்சமும் நாலேட்ஜ் இல்லாமல் இருப்பார்கள் அது பல நேரங்களில் அவர்களுக்கு தெரிந்த துறையில் பாதிப்பு ஏற்ப்பட்டால் வேறெதுவும் செய்யமுடியாமல் வீணாய் போய்விடுவார்கள்.

அப்படித்தான் கோச்கடையானின் கதையும்...அந்த மாவீரனை உருவாக்க சவுந்தர்யாவின் பிசினஸ் மூளையும், அதிகார பலமும் பல அனிமேட்டர்களை தவிக்கவைத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை...!!!

கொஞ்சம் விரிவாகப்பார்ப்போம்...

2006 ல் தனது புதிதாய் தொடங்கி கொஞ்ச காலமே ஆன "ஆக்கர் ஸ்டூடியோ" வில் ரஜினியை வைத்து அனிமேஷன் படம் தயாரிக்க முடிவு செய்து முதற்க்கட்ட வேலைகள் ஆரம்பமாயின. சவுந்தர்யா வெளிநாடு சென்று கொஞ்சம் அனிமேஷன் நாலெட்ஜும் நிறைய பிசினஸ் ஐடியாவும் கற்றுவந்ததால் அப்பாவும் பச்சைக்கொடிக்காட்ட சுமார் 350 பேர் வரை ஆட்கள் எடுத்து வார்னர் பிரதர்ஸ் உடன் இணைந்து பிரமாண்ட சுல்தான் தி வாரியர் தொடங்கப்பட்டது.

3டி அனிமேஷனும், மோஷன் கிராபிக்ஸ் முறையில் படமும் வளர்ந்தது. ஆனால் சவுந்தர்யாவிடம் இருந்த கூட்டுக்களவாணிகளால் மோஷன் கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக வரவில்லை (அதாவது லைவ் ஆக நடிக்கும் நடிகரின் உடம்பில் இருக்கும் முக்கிய ஜாயிண்ட் (மூட்டுகள்) மார்ரூம் முக்கிய பாகங்கள் கம்ப்யூட்டர் முறையில் தயாரிக்கப்பட்ட 3டி உருவாக்க மாடல்களுடன் சேர்த்தல்). அதாவது லைவ் காட்சிகளை 3டி மாடல்களுடன் இணைக்கும்போது அந்த மாடலின்ஆக்ஷன்கள் கன்னாபின்னாவென்று மாற ஒரு சொதப்பலான படமே அவுட்புட்டாய் வந்தது. அதற்க்குள் பல நூறுக்கோடிகள் தண்டமானது. முதல்முறையாக படம் கைவிடப்பட்டு தள்ளாடிக்கொண்டிருந்த நிலையில்...


ஆக்கர் நிறுனத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் பலர் வேலையிலிருந்து தூக்கப்பட்டனர். பல மாத பாக்கிக்காக அவர்கள் போராட அதில் கோபமாய் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் செட்டில்மெண்ட் கொடுக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ரஜினியே வந்து கெஞ்சியதால் வேலைசெய்தவர்கள் கலைந்துப்போனார்கள். இல்லையெனில் ரஜினியின் மகளால் ரஜினிக்கு பெருத்த அவமானம் ஏற்ப்பட்டிருக்கும்.

இதைக்கண்டு ஓட்டமெடுத்த வார்னர் பிரதர்ஸ்...திரும்பிக்கூட பார்க்கவில்லை. படம் டிராப் ஆகும்வேளையில் சவுந்தர்யாவுக்கு கோவா படத்தை தயாரிக்க தொடங்கினார். இன்னொரு புறம் ரிலையன்சை வளைத்த சவுந்தர்யா சுல்தானை ராணா வாக்கி கொஞ்சம் எடுத்த அனிமேஷனையும் கொஞ்சம் லைவ் ரனியையும் சேர்த்து படமாக்க நினைத்து பூஜைப்போட அந்தோ பரிதாபம் ரஜினிக்கு உடம்பு சரியில்லாமல் சிங்கப்பூர் போகவேண்டியதாகிவிட்டது. கோவாவும் ஊத்திக்கொள்ள இன்னும் சுமை... கோவாவின் ஜகஜால வெங்கட் பிரபு டீம் சவுந்தர்யாவை வளைக்க அவசர கல்யாணமும் அதனால்தான்.

பின்னர் ரிலையன்சும் பிய்த்துக்கொண்டுப்போக பல கோடிகள் செலவழித்ததை எப்படி திருப்பி எடுப்பது என நினைக்கையில் சுல்தானையும், ராணாவையும் மிக்ஸ் செய்து அரைத்த மாவே இந்த கோச்சடையான்.

பின்னர் ஈரோஸ் மற்றும் மீடியாஒன் னும் சேர்ந்து கோச்சடையான் தயாராக தொடங்கியது.

மீடியா ஒன் கோச்சடையான் படத்தை பிரீலான்ஸ் முறையில் சென்னையில் மற்றும்  இந்தியாவில் இருக்கும் பல அனிமேஷன், விஎஃபெக்ஸ் ஸ்டூடியோக்களில் ஒப்பந்த முறையில் அடிமாட்டு விலைக்கு பேச சின்ன சின்ன துக்கடா ஸ்டூடியோக்களில் மிகப்பேரிய கோச்சடையான் வளர்ந்தது. இதனாலேயே படத்தின் குவாலிட்டி படு மோசமானதாகத்தான் இருக்கும்.

இடையில் கே எஸ் ரவிக்குமாரின் விலகல், பணப்பிரச்சனை என கிட்டதட்ட 7 முஹல் 8 வருடம் கழித்து படம் திரைக்கு வருகின்றது.

இதனால் ஒன்றும் இந்திய அனிமேஷன் சந்தை மாறப்போவதில்லை...பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித உதவியும் கிடைக்கப்போவதில்லை....படம் சுமாராக ஓடி இன்னும் சில அனிமேஷன் ஸ்டூடியோக்கள் முளைத்தால் எனக்கு சந்தோஷமே.

ஆனால்...சவுந்தர்யாவின் தவறான அணுகுமுறையும், தவறான திட்டமிடதலும், திறமையான வேலையாட்களை சரியான இடத்தில் வைக்காததுமே இந்த மோசமான அனிமேஷன் குவாலிட்டிக்கு காரணம்.

உடனே இந்திய அனிமேஷன் துறையின் மதிப்பை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்...காரணம் லார்ட் ஆஃப் ரிங்ஸ், ஹாரி போர்ட்டர், ஸ்பைடர்மேன், நார்னியா மற்றும் லைஃப் ஆப் பை என அத்தனை சூப்பர் டூப்பர் படங்களில் வேலைசெய்தவர்கள் சென்னை, மும்பையில் இருக்கும் அனிமேஷன் மற்றும் விஎஃபெக்ஸ் திறமையாளர்கள்தான்.

புகழும் பணமும் நிறைந்த அப்பாவுக்கு மகளாய் பிறந்து ஒரு துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியாகவே ரஜினிகாந்த் சவுந்தர்யா அஸ்வின் இருந்ததில் எனக்கு வருத்தமே. சரியான திட்டமிடலில் சவுந்தர்யா ஈடுப்பட்டிருந்தால் இந்திய அனிமேஷன் உலகமும், ரஜினி ரசிகர்களும் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்கள்.

வெறும் டிரைலரை மட்டுமே பார்த்து அதன் குவாலிட்டியை எப்படி தீர்மானிக்கலாம் என நீங்கள் கேட்டால்....பொதுவாக படத்தின் பல காட்சிகளை பார்த்தவன் என்கிற உரிமையிலும், படத்தில் வேலை செய்த தொண்ணூறு சதவீத அனிமேஷன் துறையினர் என்னுடன் வேலைப்பார்த்தவர்கள் அல்லது என் நண்பர்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் நான் சொன்னது உண்மையா பொய்யா என்று.

இந்த கட்டுரை எழுத தூண்டுதலாய் இருந்த   க்கும் நன்றிகள் தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...தவறிருப்பின் திருத்திக்கொள்கிறேன்.

ரஜினி ரசிகர்கள் இதை ரஜினிக்கான விமர்சனக்கட்டுரையாக எண்ணாமல் படத்தின் மறுப்பக்க விமர்சனமாக இதை கருதவேண்டும். ரஜினியின் டை ஹார்ட் ரசிகனாக இந்தப்படம் வெற்றிப்பெற வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் 15 வருடமாக அனிமேஷன் துறை சார்ந்தவனாக இருப்பதால்... இந்தப்படம் மிகப்பேரிய வெற்றியடையவேண்டும் எனவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்..

தி இல்லூஷனிஸ்ட்!!!


தி இல்லூஷனிஸ்ட்!!!


2006ல் வந்தப்படம் என நினைக்கிறேன். நீல் பர்கர் இயக்கிய பிரமாதமானப்படம். எட்வர்ட் நார்டர், ஜெசிகா பெல் மற்றும் பால் கியாமடி கலக்கியிருக்கும் படம்.

1889களில் ஹங்கேரியில் வாழ்ந்த ஒரு மேஜிக் நிபுணரின் காதலையும், கலையையும் சொல்லும் ஒரு பீரியட் டிராமா படம். ஆர்ட் டைரக்ஷனில் அந்தக்காலத்தை அப்படியே கொண்டுவந்திருப்பார்கள். டி ஐ கலரிங்கில் பிரமாதப்படுத்திருப்பார் போஸ்ட் புரடக்ஷன் கலரிஸ்ட்.

திடீரென்று ஒரு மேஜிக் தாத்தாவை சந்திக்கிறான் சிறுவன். மேஜிக்கை காட்டிவிட்டு அவன் கண்முன் மறைந்துப்போகிறார் தாத்தா. கொஞ்சம் கொஞ்சமாக மேஜிக்கை கற்க்கும் சிறுவன், அந்த ஊர் ராஜாவின் மகள் இவன் மீது நட்புகொள்கிறாள். இதையறிந்து காவலர்கள் அவளை பிரித்துக்கொண்டுப்போக கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து ஹீரோவை மேஜிக் ஸ்டேஜில் சந்திக்கிறாள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளவரசன் மூலம். முதல் பார்வையில் அவளை கண்டுக்கொள்ளும் ஹீரோ அவளை தன் மேஜிக் மூலம் மீண்டும் நினைவூட்டுகிறான். மீண்டும் இருவருக்கும் காதல் வயப்பட உடலால் இணைகிறார்கள்.

அடுத்த மேஜிக்கில் இளவரசியை மறையவைக்கிறான்...எல்லோரும் பாராட்ட பெரிய மேஜிக் நிபுணராகிறான் ஹீரோ.

பின்னர் இந்தக்காதலை அறிந்த இளவரசன் ஒரு போலீஸ் அதிகாரி மூலம் ஹீரோவை கண்காணிக்க...அவர்கள் இருவரும் ஓடிப்போகப்போகிறார்கள் என விஷயம் இளவரசன் காதுக்கு வருகிறது. இளவரசிக்கும் இளவரசனுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட இளவரசன் கத்தியால் குத்த இளவரசி குதிரையில் ஏறி தப்பி போகிறாள்...இளவரசியை கொன்றது யார் என அதிகாரி துப்பறிய...

இறுதியில் ஹீரோவின் நிலை என்ன இளவரசி உண்மையிலேயே இறந்தாளா என்பதை பரபரப்பாய் மாண்டேஜ் ஷாட்கள் மூலம் சொல்கிறார் இயக்குனர். அந்த கிளைமாக்ஸும் யாரும் எதிர்ப்பார்க்காத சஸ்பென்ஸ்.

அந்தக்காதலும், மேஜிக் ஆச்சர்யங்களும் நிறைந்த படம். உங்களை கட்டாயம் கட்டிப்போடும்...கவரும்!!!