Thursday, February 20, 2014

பாலுமகேந்திராவும் நானும்.
ஆமா இவரு பெரிய இவரு, பாலுமகேந்திராவும் நானும் தலைப்பை போட்டுட்டாரு என்று புலம்புவது கேட்கிறது.

உங்களுக்கெல்லாம் பாலுமகேந்திராவை அவர் பிரபலமானபின்னோ அல்லது நீங்கள் வளர்ந்தப்பின்னோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் என் கதை வேறு என் 13 வயதில் பாலுமகேந்திரா என்னும் இயக்குனர் என்னுள் ஆழமாய் வேறூன்றிப்போனார்....விஷயம் அப்படியொன்றும் சந்தோஷப்படக்கூடியது அல்ல...

கீழே படியுங்கள்.

1987 அல்லது 1988 என நினைக்கிறேன் எனக்கு பணிரண்டு வயது இருக்கும் என் சித்தப்பாவின் கல்யாணம். குன்னூரில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. நாங்களும் இரண்டு நாள் முன்பே ஊரிலிருந்து குடும்பம் மொத்தமும் குன்னூருக்கு வந்து மண்டபத்தில் செட்டில் ஆயாயிற்று.

நானும் என் இரட்டையரும், பெரியப்பா மற்றும் மாமன் மகன்கள் என எல்லோரும் கிட்டத்தட்ட 10 லிருந்து 14 வயதுக்குள் ஐந்து பேர் இருந்தோம்.

அப்போதுதான் குன்னூரில் டிவிடி டெக் (தமிழ் பெயர் தெரியவில்லை) மிகப்பிரபலம். யாராவது ஊரில் ஒருவர் அதை வாடகைக்கு வாங்கிவந்து ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்து கருப்பு வெள்ளை டிவியில் படம் போட்டு சம்பாதிக்கும் காலம்.

என் அப்பா சொல்ல அன்று இரவு மண்டபத்தில் படம் போட குன்னூர் டவுனில் இருக்கும் வீடியோ கடைக்கு சென்றோம். போகும்போதே என்ன படம் வாங்கலாம் என்று பேசிக்கொண்டே போனோம்.

என் பாட்டி திருவிளையாடலும், பாசமலரும் கட்டாயம் வேண்டுமென்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்றாவது நான்காவது படங்கள் எங்கள் சாய்ஸ் என்பதால்...ரஜினி படமோ கமல் படமோ வாங்கவேண்டும் என்று சீரியஸ் டிஸ்கஷனில் கடைக்கு சேர்ந்தோம்.

கடைக்காரர் எங்கள் ஐந்து பேரையும் பார்த்ததும் அன்று வெள்ளிகிழமை என்பதாலும் எங்கள் வீடுகளில் யாரும் இல்லைப்போலிருக்கு என் நினைத்துவிட்டார் போலும். நாங்களும் கல்யாண மண்டபத்துக்கு என்று சொல்லவில்லை. டெக் 50 ரூபாயும், டிவி 25 ரூபாயும் ஒரு கேசட் 10 ரூபாய் என விலை சொன்னார்.

நானும் ஆர்வதுடன் ஒரு பாசமலர் இண்ணொண்ணு திருவிளையாடல் எனகேட்டேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே எடுத்துக்கொடுத்த கடைக்காரர் "உங்களுக்கு ஏதும் வேணாமா?" என்றார்...அவர் கேட்ட அர்த்தம் புரியாமல் அண்ணே புதுசா வந்திருக்கிற படம் ஏதாவது கொடுங்க கமல், ரஜினி நடிச்சது என்றேன்.

அண்ணே சூப்பரா இருக்கணும், எங்களுக்கு ஏத்த படமா இருக்கணும் என்றான் என் தம்பி.

அவரும் இந்தாங்க இந்த படம் ரொம்ப நல்லா இருக்கும் இதைப்பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்று ஒரு கேசட்டை கொடுத்தார்...சட்டென்ற அவசரத்தில் அதன் பெயரைக்கூட பார்க்காமல் இன்னொரு ரஜினி படமும் வாங்கிக்கொண்டு மண்டபம் வந்து சேர்ந்தோம்.

எங்களுக்கு பல நாள் கழித்து படம் பார்ப்பதால் பயங்கர ஆவல்...இரவில் டின்னர் முடித்து எல்லோரும் ஒவ்வொருவராக ஆஜரானார்கள். கிட்டத்தட்ட பத்து பதினைந்து பெரியவர்கள், பாட்டிமார்கள், தாத்தாக்கள், எங்கள் அம்மா அப்பாக்கள், அண்ணங்கள் என மண்டபத்தில் சுமார் நாப்பது பேர் இருப்போம்.

என் அப்பா வேறு என்னை பாராட்டினார்...இவங்கிட்டே ஒரு வேலை சொன்னா போதும் கரெக்டா சரியா செய்வான். பலரும் தலையாட்ட நான் ஆபரேட்டர் ஆனேன். பாட்டிகள் முதலில் திருவிளையாடம் கேட்க "நாங்க குழந்தைங்க, ரொம்ப நேரம் பார்க்கமாட்டோம், முதல்ல புது படத்தை போடுவோம்" என அடம் பிடித்தோம். கொஞ்சம் சலசலப்புக்கிடையே எல்லோரும் எங்களுக்காக புது படத்தை போட ஒப்புக்கொண்டார்கள்.

நானும் கவரை திறந்து படத்தை பார்த்தேன். கேசட்டில் "அழியாத கோலங்கள்" என்று கருப்பு கண்ணாடிபோட்ட கமலின் படம் பெரிதாய் இருந்தது. ஆவலாய் படம் போட்டு விளக்கெல்லாம் அணைத்தாயிற்று.

படம் தொடங்கியதும் முணு விடலைப்பசங்களின் களியாட்டங்கள் ஆரம்பமானது. டீச்சரை கரெக்ட் பண்ணுவதும் கையில் நிரோத் வைத்துக்கொண்டு துரத்துவதும் புகைப்பிடிப்பதும் என படத்தில் ஏகப்பட்ட கசமுசா சமாச்சாரங்கள் (அண்ணன் சொல்லித்தான் அது நிரோத் என்கிற விஷயம் அடுத்தநாளில் எனக்கு தெரிந்தது!!!).

ஒரு கட்டத்தில் வெண்ணிரை ஆடை மூர்த்தி ஒரு பெண்ணை பாழடைந்த மண்டபத்துக்கு அழைத்துச்சென்று முதுகுப்புரம் கேமரா இருக்க ஒவ்வொரு துணியாய் கழட்ட ஆரம்பிக்க...

படம் பார்க்கும் பெரியவர்கள் நெளிவது தெரிந்தது...எனக்கும் திக் என்றது...யாராவது சொல்லுவார்கள் ஆஃப் செய்துவிடலாம் என இருந்தேன்...யார் முதலில் வாயைத்திறப்பது...அதற்க்குள் அந்த பெண் தனது பிராவையும் அவிழ்க்க....என் பாட்டி கத்தியே விட்டாள் "என்ன கருமத்தை வாங்கிவந்திருக்கீங்கடா" என்று நானும் இதுதான் நேரம் என்று சட்டென்று ஆப் செய்துவிட்டேன்.

அதற்க்குப்பின் எங்களுக்கு அடுத்த அரைமணினேரம் அர்ச்சனையை தந்துவிட்டு பாசமலர்கள் பார்க்க தொடங்கிவிட்டார்கள் பெருசுகள். அப்போதுதான் என அண்ணன் சொன்னான் டேய் இது அந்தமாதிரி படம்டா...இதை ஏண்டா வாங்கிவந்தீங்க என கேட்டுவிட்டு நைசாக அந்த கேசட்டையும் வாங்கிப்போய்விட்டார். கடைசி வரை கமலை பார்க்காத வருத்தம்வேறு எனக்கு...

மறுநாள் என் அம்மா மற்றும் யார் முகத்தையும் பார்க்கமுடியாமல்...நெளிந்து கூனிக்குறுகி எஸ்கேப் ஆனது வேறு விஷயம்.அப்போதுதான் என் மாமா சொன்னார் இது பாலு மகேந்திரா படம் என்று.

அடுத்த நடந்த பல சுப காரியங்களுக்கு டிவி,டெக் வாங்க குடும்பத்தில் என்னை அனுப்பவே இல்லை. எந்த நிகழ்வு நடந்தாலும் முதலில் என் பாட்டி சொல்லும் வார்த்தை "படம் கோகுலு வாங்கிட்டுவந்தாமாதிரி இருக்காதே?" என்பதே. பாலுமகேந்திராமீது எனக்கு தீராக்கோபம் உருவாகி இருந்தது.

நானும் சென்னைக்கு வரும்வரை பாலுமகேந்திரா என்பவர் ஒரு சீன் பட (செக்ஸ் பட இயக்குனர்) என்றே நினைத்திருந்தேன்.
அவர் மட்டும் என் கண்ணில் மாட்டினால் காலிசெய்துவிடுவேன் என்று பலமுறை நண்பர்களிடம் சொல்லி அலப்பரை செய்ததுண்டு. படம் என்னமே நல்ல படம்தான் அதை பார்த்த இடமும், நேரமும்தான் சரியில்லை. இப்போதுதான் புரிந்தது கடைக்காரர் கேட்ட "உங்களுக்கு ஏதும் வேணாமா?" என்பதின் அர்த்தம்.

பின்னர் 2004ல் அவரை நேரடியாக இரண்டுமுறை சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. இரண்டாவது முறை சந்தித்தபோது அவரிடம் இந்த சம்பவத்தைப்பகிர்ந்தேன்.

கொஞ்சமாய் சிரித்துவிட்டு..."நல்ல வேளை அடிவாங்காம தப்பிச்சீங்களே மண்டபத்தில்" என்று முடித்துக்கொண்டார். பின்னர் பல காலகட்டங்களில் அவரின் படங்கள் பலவகையான பாசிடிவ் தாக்குதல்களை ஏற்ப்படுத்தியிருந்தாலும் அவரின் "அழியாத கோலங்கள்" படத்தினால் ஏற்ப்பட்ட அனுபவம் என்னுள் இன்னுமழியாமல் இருக்கின்றது.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!!!

  

No comments:

Post a Comment