Thursday, February 20, 2014

பண்ணையாரும் ஊதா கலரு ஜீப்பும்!!!

நேற்று "பண்ணையாரும் பத்மினியும்" படம் பார்த்தவுடன் நானும் கொஞ்சம் பின்னோக்கி போகவேண்டியதாற்று.

பிளாஷ்பேக்தான்......

எல்லோரும் தலையை வடக்கில் ஒரு 20 செமீ தூக்கி ஓரக்கண்ணால மேலே கூரைய பாருங்க!!!

டொய்....டொய்ங்க்...டொய்ங்க்...டொய்ங்க்...டொய்ங்க்.....(சுத்திட்டீங்களா??? போதும் சுத்துனது)

எங்கள் ஊரிலும் ஒரு பண்ணை இருந்தார். ஆனால் அவரிடம் பத்மினிக்கு பதில் ஜீப்தான் இருந்தது. அதுவும் ஊதாகலரு ஜீப்பு.
அவரும் பண்ணையாருகளுக்கே உரித்தான கொஞ்சம் வெயிட்டான உடம்பும், பெரிய அறுவா மீசையும், பளிச் முகமுமென எப்போதும் பிரஷ்ஷாய் இருப்பார்.

நான் சொல்லப்போவது 80களின் தொடக்கத்தில்...பொதுவாக ஊட்டியில் இருக்கும் பணக்காரர்கள் கட்டாயம் ஜீப் வைத்திருப்பார்கள். மலைகளை கடக்கவும் மேடு பள்ளங்களில் பயணம் போகவும் ஜீப்தான் பெஸ்ட்.

அவரும் தினமும் காலையில் சுமார் 8 மணிக்கு ஜீப்பில் முன் சீட்டில் கையை வெளியே நீட்டி உட்கார வளைவு ரோடுகளில் ஹாரனடித்துக்கொண்டே பறக்கும். மழைக்காலமானாலும் ரோட்டின் ஓரத்தில் யாராவது நடந்து சென்றாலும் மெதுவாகவேபோகாது அந்த ஜீப். சேற்றை தெறிக்க மலை ரோடுகளில் சப்தத்துடன் பறக்கும். ஊருக்கு அடிக்கடி பேருந்து இல்லையென்றாலும் ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தால் ஒன்றிரண்டு வேறு ஊர் பஸ்கள் குன்னூருக்கோ, ஊட்டிக்கோ போகும்.

பல நேரங்களில்...மெயின் ரோட்டுக்கு நடந்து போகும்போது பலமான ஹாரனுடன் அந்த ஜீப் எங்களை கடந்துப்போகும். அல்லது திரும்பி வரும்போது பல நேரங்களில் எங்களை தாண்டிப்போகும். அவரின் இடதுகையால் ஜீப்பின் கதவையும் தட்டுவார்....மோதிரம் பட்டு சப்தம் பலமாய் கேட்க திடுக்கிட்டு விலகி ஊரம் நிற்ப்பதும் உண்டு.

வண்டிக்குள் டிரைவரையும் அவரையும் தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை. சின்ன வயதிலிருந்து ரோட்டில் காலியாக அந்த ஜீப் போனாலும் ஒரு முறை கூட ஏறியதில்லை...அவர்களும் ஏற்றியதில்லை. எப்போதாவது நப்பாசையுடன் கையைக்காட்டி ஜீப்பை நிறுத்துவதும் உண்டு...ஆனாலும் ஊருக்கும் இருக்கும் ஒற்றை வழியில் போனாலும் "இல்ல தம்பி வண்டி ஊருக்கு போகல" என இடது கையால் சைகை காட்டிக்கொண்டே வேகமெடுத்துவிடும். அடுத்த பத்து நிமிஷத்தில் ஊருக்கு நடந்து போனால் ஊரின் மைதான ஓரத்தில் வண்டியை துடைத்துக்கொண்டிருப்பார் டிரைவர்.

யாரும் இல்லாத மாலை வேளைகளில் ரோட்டில் எப்போதாவது நிற்க்கும் அந்த ஊதாக்கலரை ஜீப்பை தொட்டுப்பார்ப்பதே அலாதி சுகம். புசு புசுவென இருக்கும் அந்த அழுக்காகாத ஆலிவ் கிரீன் இருக்கைகள் கொள்ளை அழகு. சின்னப்பசங்களை ஏத்துறதில்லை வரந்து பெரியவனானா வண்டியில ஏத்திப்பாங்க என்று நண்பன் சொன்னதை நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் வளர்ந்து பெரியவன் ஆனபின்னும் அந்த ஜீப்பில் ஏறும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை.

எனக்கு மட்டுமல்ல அந்த ஜீப்பில் ஏறியவர்களை ஊரில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர் வண்டியில் யாரையும் ஏற்றவில்லையென்றாலும் ஊரின் பொதுவிஷயங்கள் அவர் இல்லாமல் நடக்காது. அவரைக்கண்டால் பலருக்கு நிச்சயம் பயம். அதனாலேயே ஜீப் போகும்போது யாரும் லிஃப்ட் கேட்பதில்லை என நினைக்கிறேன். அப்படியே லிஃப்ட் கேட்டாலும் "குன்னூரா, ஊட்டியா?" என்பார். நாம் ஊட்டி என்றால் அவர் குன்னூர் போகுது என்றோ, குன்னூர் என்றால் ஊட்டி போகுதோ என்று அவசரமாய் சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வேகமெடுத்துவிடுவார்.

அந்த ஜீப்பில் அவரைத்தவிர, எப்போதாவது அவரின் குடும்பமும் பயணப்படும். குடும்பத்தை தவிற வேறு யாரும் ஜீப்பில் பயணப்பட்டதாய் எனக்கு இதுவரை தெரியவில்லை. ஆண்டவன் சில வண்டிகளை அவர்களின் சொந்த உபயோகத்திற்க்காக மட்டும்தான் கொடுப்பான் என நினைக்கிறேன். 

ஆனால் என் வருத்தமெல்லாம்...ஆயுத பூஜை நாட்களில் பொதுவாக ஊரில் வண்டி வைத்திருக்கும் அனைவரையும் அந்த ஒருநாளாவது அவர்களின் வண்டிகளில் ஏற்றி ஒரு ரவுண்டு வருவார்கள். அன்றும் இந்த ஜீப் அதீத அலங்காரத்துடன் அய்யாவை மட்டுமே ஏற்றிக்கொண்டுப்போகும்.

வெளியில் போய்விட்டு ஊருக்குள் நுழையும்போது...இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மலையில் வண்டி ஏறும்போதே அவர்களின் வீட்டுக்கு சிக்னல் கொடுக்க அவர் அடிக்கும் ஹாரன் மிகப்பிரபலம். அந்த சப்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். உடனே அவர்கள் வீட்டிலும் அலர்ட் ஆகி  அய்யாவுக்காக காப்பியோ, சுடு தண்ணியோ தயார் செய்து தயாராய் இருப்பார்கள் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.

வருடம் ஒரு முறை எஃப்சி செய்யப்பட்டு பளபளவென மின்னி ஊருக்கு வரும் அந்த அழகிய ஜீப். என் வாழ்நாளில் அந்த ஜீப் ரிப்பேர் ஆனதாகவோ அல்லது ஒரு நாள் கூட ஊட்டி குன்னூர் செல்லாமல் இருந்ததாகவோ நினைவில் இல்லை. ஆனாலும் அய்யாவுக்கு அப்படியொன்றும் முக்கியவேலைகள் தினமும் இருந்ததாகவும் தெரிந்ததில்லை.

பல வருடங்கள் கழித்து போன இரண்டு மூன்று வருடங்களில் எனக்கென்னமோ எங்கள் ஊர் சாலை வெறிச்சோடிக்கிடப்பதுப்போல் ஒரு பிரம்மை...அந்த ஊதாக்கலரு ஜீப்பை நானும் கண்டதில்லை. ஊரில் எத்தனையோ வண்ண நிறங்களில் காஸ்ட்லி வண்டிகள் நின்றிருந்தாலும் அந்த ஊதாகக்கலருக்கு ஈடாகாது. இப்போது காஸ்ட்லி கார் இருந்தாலும் அந்த ஊதா கலரு ஜீப்தான் என் முதல் பிரமிப்பு.

ஊரில் விசாரித்துப்பார்த்தேன் இன்றை அந்த ஜீப்பின் நிலைகுறித்து சரியான தகவல் இல்லை.

உண்மைதான் நான் இப்போது ஏறாத வண்டியில்லை....விதவிதமான கார்களில் பயணித்தாலும் அந்த ஜீப்பின் ஆசை இன்னும் எனக்கு குறைந்தபாடில்லை.

போன வருடம் ஊருக்குப்போனபோது அந்த அய்யாவைப்பார்த்தேன். சாலையோர டீக்கடையில் நின்றிருந்தார். என் மச்சானின் காரில் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்குப்போய் இறங்கும்போது....

பின்னால் இருந்து ஒரு குரல் "கோகுலு...வண்டி குன்னூரா, ஊட்டியா?" என்று. அவர்தான் அந்த ஊதாக்கலரு ஜீப்பின் சொந்தக்காரர். முகத்தில் கொஞ்சம் தாடி, மெலிந்திருந்தார்...முதன் முறையாக ரோட்டில் அவர் நிற்ப்பதைப்பார்க்கிறேன்..!!! 

என் மச்சானின் காரில் அவர் குன்னூருக்கு லிஃப்ட் கேட்டுப்போனது... அது வேறுகதை!!!

No comments:

Post a Comment