Thursday, February 20, 2014

பாலுமகேந்திராவும் நானும்.
ஆமா இவரு பெரிய இவரு, பாலுமகேந்திராவும் நானும் தலைப்பை போட்டுட்டாரு என்று புலம்புவது கேட்கிறது.

உங்களுக்கெல்லாம் பாலுமகேந்திராவை அவர் பிரபலமானபின்னோ அல்லது நீங்கள் வளர்ந்தப்பின்னோ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் என் கதை வேறு என் 13 வயதில் பாலுமகேந்திரா என்னும் இயக்குனர் என்னுள் ஆழமாய் வேறூன்றிப்போனார்....விஷயம் அப்படியொன்றும் சந்தோஷப்படக்கூடியது அல்ல...

கீழே படியுங்கள்.

1987 அல்லது 1988 என நினைக்கிறேன் எனக்கு பணிரண்டு வயது இருக்கும் என் சித்தப்பாவின் கல்யாணம். குன்னூரில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்தது. நாங்களும் இரண்டு நாள் முன்பே ஊரிலிருந்து குடும்பம் மொத்தமும் குன்னூருக்கு வந்து மண்டபத்தில் செட்டில் ஆயாயிற்று.

நானும் என் இரட்டையரும், பெரியப்பா மற்றும் மாமன் மகன்கள் என எல்லோரும் கிட்டத்தட்ட 10 லிருந்து 14 வயதுக்குள் ஐந்து பேர் இருந்தோம்.

அப்போதுதான் குன்னூரில் டிவிடி டெக் (தமிழ் பெயர் தெரியவில்லை) மிகப்பிரபலம். யாராவது ஊரில் ஒருவர் அதை வாடகைக்கு வாங்கிவந்து ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்து கருப்பு வெள்ளை டிவியில் படம் போட்டு சம்பாதிக்கும் காலம்.

என் அப்பா சொல்ல அன்று இரவு மண்டபத்தில் படம் போட குன்னூர் டவுனில் இருக்கும் வீடியோ கடைக்கு சென்றோம். போகும்போதே என்ன படம் வாங்கலாம் என்று பேசிக்கொண்டே போனோம்.

என் பாட்டி திருவிளையாடலும், பாசமலரும் கட்டாயம் வேண்டுமென்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்றாவது நான்காவது படங்கள் எங்கள் சாய்ஸ் என்பதால்...ரஜினி படமோ கமல் படமோ வாங்கவேண்டும் என்று சீரியஸ் டிஸ்கஷனில் கடைக்கு சேர்ந்தோம்.

கடைக்காரர் எங்கள் ஐந்து பேரையும் பார்த்ததும் அன்று வெள்ளிகிழமை என்பதாலும் எங்கள் வீடுகளில் யாரும் இல்லைப்போலிருக்கு என் நினைத்துவிட்டார் போலும். நாங்களும் கல்யாண மண்டபத்துக்கு என்று சொல்லவில்லை. டெக் 50 ரூபாயும், டிவி 25 ரூபாயும் ஒரு கேசட் 10 ரூபாய் என விலை சொன்னார்.

நானும் ஆர்வதுடன் ஒரு பாசமலர் இண்ணொண்ணு திருவிளையாடல் எனகேட்டேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே எடுத்துக்கொடுத்த கடைக்காரர் "உங்களுக்கு ஏதும் வேணாமா?" என்றார்...அவர் கேட்ட அர்த்தம் புரியாமல் அண்ணே புதுசா வந்திருக்கிற படம் ஏதாவது கொடுங்க கமல், ரஜினி நடிச்சது என்றேன்.

அண்ணே சூப்பரா இருக்கணும், எங்களுக்கு ஏத்த படமா இருக்கணும் என்றான் என் தம்பி.

அவரும் இந்தாங்க இந்த படம் ரொம்ப நல்லா இருக்கும் இதைப்பார்த்து எஞ்சாய் பண்ணுங்க என்று ஒரு கேசட்டை கொடுத்தார்...சட்டென்ற அவசரத்தில் அதன் பெயரைக்கூட பார்க்காமல் இன்னொரு ரஜினி படமும் வாங்கிக்கொண்டு மண்டபம் வந்து சேர்ந்தோம்.

எங்களுக்கு பல நாள் கழித்து படம் பார்ப்பதால் பயங்கர ஆவல்...இரவில் டின்னர் முடித்து எல்லோரும் ஒவ்வொருவராக ஆஜரானார்கள். கிட்டத்தட்ட பத்து பதினைந்து பெரியவர்கள், பாட்டிமார்கள், தாத்தாக்கள், எங்கள் அம்மா அப்பாக்கள், அண்ணங்கள் என மண்டபத்தில் சுமார் நாப்பது பேர் இருப்போம்.

என் அப்பா வேறு என்னை பாராட்டினார்...இவங்கிட்டே ஒரு வேலை சொன்னா போதும் கரெக்டா சரியா செய்வான். பலரும் தலையாட்ட நான் ஆபரேட்டர் ஆனேன். பாட்டிகள் முதலில் திருவிளையாடம் கேட்க "நாங்க குழந்தைங்க, ரொம்ப நேரம் பார்க்கமாட்டோம், முதல்ல புது படத்தை போடுவோம்" என அடம் பிடித்தோம். கொஞ்சம் சலசலப்புக்கிடையே எல்லோரும் எங்களுக்காக புது படத்தை போட ஒப்புக்கொண்டார்கள்.

நானும் கவரை திறந்து படத்தை பார்த்தேன். கேசட்டில் "அழியாத கோலங்கள்" என்று கருப்பு கண்ணாடிபோட்ட கமலின் படம் பெரிதாய் இருந்தது. ஆவலாய் படம் போட்டு விளக்கெல்லாம் அணைத்தாயிற்று.

படம் தொடங்கியதும் முணு விடலைப்பசங்களின் களியாட்டங்கள் ஆரம்பமானது. டீச்சரை கரெக்ட் பண்ணுவதும் கையில் நிரோத் வைத்துக்கொண்டு துரத்துவதும் புகைப்பிடிப்பதும் என படத்தில் ஏகப்பட்ட கசமுசா சமாச்சாரங்கள் (அண்ணன் சொல்லித்தான் அது நிரோத் என்கிற விஷயம் அடுத்தநாளில் எனக்கு தெரிந்தது!!!).

ஒரு கட்டத்தில் வெண்ணிரை ஆடை மூர்த்தி ஒரு பெண்ணை பாழடைந்த மண்டபத்துக்கு அழைத்துச்சென்று முதுகுப்புரம் கேமரா இருக்க ஒவ்வொரு துணியாய் கழட்ட ஆரம்பிக்க...

படம் பார்க்கும் பெரியவர்கள் நெளிவது தெரிந்தது...எனக்கும் திக் என்றது...யாராவது சொல்லுவார்கள் ஆஃப் செய்துவிடலாம் என இருந்தேன்...யார் முதலில் வாயைத்திறப்பது...அதற்க்குள் அந்த பெண் தனது பிராவையும் அவிழ்க்க....என் பாட்டி கத்தியே விட்டாள் "என்ன கருமத்தை வாங்கிவந்திருக்கீங்கடா" என்று நானும் இதுதான் நேரம் என்று சட்டென்று ஆப் செய்துவிட்டேன்.

அதற்க்குப்பின் எங்களுக்கு அடுத்த அரைமணினேரம் அர்ச்சனையை தந்துவிட்டு பாசமலர்கள் பார்க்க தொடங்கிவிட்டார்கள் பெருசுகள். அப்போதுதான் என அண்ணன் சொன்னான் டேய் இது அந்தமாதிரி படம்டா...இதை ஏண்டா வாங்கிவந்தீங்க என கேட்டுவிட்டு நைசாக அந்த கேசட்டையும் வாங்கிப்போய்விட்டார். கடைசி வரை கமலை பார்க்காத வருத்தம்வேறு எனக்கு...

மறுநாள் என் அம்மா மற்றும் யார் முகத்தையும் பார்க்கமுடியாமல்...நெளிந்து கூனிக்குறுகி எஸ்கேப் ஆனது வேறு விஷயம்.அப்போதுதான் என் மாமா சொன்னார் இது பாலு மகேந்திரா படம் என்று.

அடுத்த நடந்த பல சுப காரியங்களுக்கு டிவி,டெக் வாங்க குடும்பத்தில் என்னை அனுப்பவே இல்லை. எந்த நிகழ்வு நடந்தாலும் முதலில் என் பாட்டி சொல்லும் வார்த்தை "படம் கோகுலு வாங்கிட்டுவந்தாமாதிரி இருக்காதே?" என்பதே. பாலுமகேந்திராமீது எனக்கு தீராக்கோபம் உருவாகி இருந்தது.

நானும் சென்னைக்கு வரும்வரை பாலுமகேந்திரா என்பவர் ஒரு சீன் பட (செக்ஸ் பட இயக்குனர்) என்றே நினைத்திருந்தேன்.
அவர் மட்டும் என் கண்ணில் மாட்டினால் காலிசெய்துவிடுவேன் என்று பலமுறை நண்பர்களிடம் சொல்லி அலப்பரை செய்ததுண்டு. படம் என்னமே நல்ல படம்தான் அதை பார்த்த இடமும், நேரமும்தான் சரியில்லை. இப்போதுதான் புரிந்தது கடைக்காரர் கேட்ட "உங்களுக்கு ஏதும் வேணாமா?" என்பதின் அர்த்தம்.

பின்னர் 2004ல் அவரை நேரடியாக இரண்டுமுறை சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது. இரண்டாவது முறை சந்தித்தபோது அவரிடம் இந்த சம்பவத்தைப்பகிர்ந்தேன்.

கொஞ்சமாய் சிரித்துவிட்டு..."நல்ல வேளை அடிவாங்காம தப்பிச்சீங்களே மண்டபத்தில்" என்று முடித்துக்கொண்டார். பின்னர் பல காலகட்டங்களில் அவரின் படங்கள் பலவகையான பாசிடிவ் தாக்குதல்களை ஏற்ப்படுத்தியிருந்தாலும் அவரின் "அழியாத கோலங்கள்" படத்தினால் ஏற்ப்பட்ட அனுபவம் என்னுள் இன்னுமழியாமல் இருக்கின்றது.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!!!

  

பண்ணையாரும் ஊதா கலரு ஜீப்பும்!!!

நேற்று "பண்ணையாரும் பத்மினியும்" படம் பார்த்தவுடன் நானும் கொஞ்சம் பின்னோக்கி போகவேண்டியதாற்று.

பிளாஷ்பேக்தான்......

எல்லோரும் தலையை வடக்கில் ஒரு 20 செமீ தூக்கி ஓரக்கண்ணால மேலே கூரைய பாருங்க!!!

டொய்....டொய்ங்க்...டொய்ங்க்...டொய்ங்க்...டொய்ங்க்.....(சுத்திட்டீங்களா??? போதும் சுத்துனது)

எங்கள் ஊரிலும் ஒரு பண்ணை இருந்தார். ஆனால் அவரிடம் பத்மினிக்கு பதில் ஜீப்தான் இருந்தது. அதுவும் ஊதாகலரு ஜீப்பு.
அவரும் பண்ணையாருகளுக்கே உரித்தான கொஞ்சம் வெயிட்டான உடம்பும், பெரிய அறுவா மீசையும், பளிச் முகமுமென எப்போதும் பிரஷ்ஷாய் இருப்பார்.

நான் சொல்லப்போவது 80களின் தொடக்கத்தில்...பொதுவாக ஊட்டியில் இருக்கும் பணக்காரர்கள் கட்டாயம் ஜீப் வைத்திருப்பார்கள். மலைகளை கடக்கவும் மேடு பள்ளங்களில் பயணம் போகவும் ஜீப்தான் பெஸ்ட்.

அவரும் தினமும் காலையில் சுமார் 8 மணிக்கு ஜீப்பில் முன் சீட்டில் கையை வெளியே நீட்டி உட்கார வளைவு ரோடுகளில் ஹாரனடித்துக்கொண்டே பறக்கும். மழைக்காலமானாலும் ரோட்டின் ஓரத்தில் யாராவது நடந்து சென்றாலும் மெதுவாகவேபோகாது அந்த ஜீப். சேற்றை தெறிக்க மலை ரோடுகளில் சப்தத்துடன் பறக்கும். ஊருக்கு அடிக்கடி பேருந்து இல்லையென்றாலும் ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர் நடந்து மெயின் ரோட்டுக்கு வந்தால் ஒன்றிரண்டு வேறு ஊர் பஸ்கள் குன்னூருக்கோ, ஊட்டிக்கோ போகும்.

பல நேரங்களில்...மெயின் ரோட்டுக்கு நடந்து போகும்போது பலமான ஹாரனுடன் அந்த ஜீப் எங்களை கடந்துப்போகும். அல்லது திரும்பி வரும்போது பல நேரங்களில் எங்களை தாண்டிப்போகும். அவரின் இடதுகையால் ஜீப்பின் கதவையும் தட்டுவார்....மோதிரம் பட்டு சப்தம் பலமாய் கேட்க திடுக்கிட்டு விலகி ஊரம் நிற்ப்பதும் உண்டு.

வண்டிக்குள் டிரைவரையும் அவரையும் தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை. சின்ன வயதிலிருந்து ரோட்டில் காலியாக அந்த ஜீப் போனாலும் ஒரு முறை கூட ஏறியதில்லை...அவர்களும் ஏற்றியதில்லை. எப்போதாவது நப்பாசையுடன் கையைக்காட்டி ஜீப்பை நிறுத்துவதும் உண்டு...ஆனாலும் ஊருக்கும் இருக்கும் ஒற்றை வழியில் போனாலும் "இல்ல தம்பி வண்டி ஊருக்கு போகல" என இடது கையால் சைகை காட்டிக்கொண்டே வேகமெடுத்துவிடும். அடுத்த பத்து நிமிஷத்தில் ஊருக்கு நடந்து போனால் ஊரின் மைதான ஓரத்தில் வண்டியை துடைத்துக்கொண்டிருப்பார் டிரைவர்.

யாரும் இல்லாத மாலை வேளைகளில் ரோட்டில் எப்போதாவது நிற்க்கும் அந்த ஊதாக்கலரை ஜீப்பை தொட்டுப்பார்ப்பதே அலாதி சுகம். புசு புசுவென இருக்கும் அந்த அழுக்காகாத ஆலிவ் கிரீன் இருக்கைகள் கொள்ளை அழகு. சின்னப்பசங்களை ஏத்துறதில்லை வரந்து பெரியவனானா வண்டியில ஏத்திப்பாங்க என்று நண்பன் சொன்னதை நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் வளர்ந்து பெரியவன் ஆனபின்னும் அந்த ஜீப்பில் ஏறும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை.

எனக்கு மட்டுமல்ல அந்த ஜீப்பில் ஏறியவர்களை ஊரில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர் வண்டியில் யாரையும் ஏற்றவில்லையென்றாலும் ஊரின் பொதுவிஷயங்கள் அவர் இல்லாமல் நடக்காது. அவரைக்கண்டால் பலருக்கு நிச்சயம் பயம். அதனாலேயே ஜீப் போகும்போது யாரும் லிஃப்ட் கேட்பதில்லை என நினைக்கிறேன். அப்படியே லிஃப்ட் கேட்டாலும் "குன்னூரா, ஊட்டியா?" என்பார். நாம் ஊட்டி என்றால் அவர் குன்னூர் போகுது என்றோ, குன்னூர் என்றால் ஊட்டி போகுதோ என்று அவசரமாய் சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் வேகமெடுத்துவிடுவார்.

அந்த ஜீப்பில் அவரைத்தவிர, எப்போதாவது அவரின் குடும்பமும் பயணப்படும். குடும்பத்தை தவிற வேறு யாரும் ஜீப்பில் பயணப்பட்டதாய் எனக்கு இதுவரை தெரியவில்லை. ஆண்டவன் சில வண்டிகளை அவர்களின் சொந்த உபயோகத்திற்க்காக மட்டும்தான் கொடுப்பான் என நினைக்கிறேன். 

ஆனால் என் வருத்தமெல்லாம்...ஆயுத பூஜை நாட்களில் பொதுவாக ஊரில் வண்டி வைத்திருக்கும் அனைவரையும் அந்த ஒருநாளாவது அவர்களின் வண்டிகளில் ஏற்றி ஒரு ரவுண்டு வருவார்கள். அன்றும் இந்த ஜீப் அதீத அலங்காரத்துடன் அய்யாவை மட்டுமே ஏற்றிக்கொண்டுப்போகும்.

வெளியில் போய்விட்டு ஊருக்குள் நுழையும்போது...இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மலையில் வண்டி ஏறும்போதே அவர்களின் வீட்டுக்கு சிக்னல் கொடுக்க அவர் அடிக்கும் ஹாரன் மிகப்பிரபலம். அந்த சப்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். உடனே அவர்கள் வீட்டிலும் அலர்ட் ஆகி  அய்யாவுக்காக காப்பியோ, சுடு தண்ணியோ தயார் செய்து தயாராய் இருப்பார்கள் என சொல்லக்கேட்டிருக்கிறேன்.

வருடம் ஒரு முறை எஃப்சி செய்யப்பட்டு பளபளவென மின்னி ஊருக்கு வரும் அந்த அழகிய ஜீப். என் வாழ்நாளில் அந்த ஜீப் ரிப்பேர் ஆனதாகவோ அல்லது ஒரு நாள் கூட ஊட்டி குன்னூர் செல்லாமல் இருந்ததாகவோ நினைவில் இல்லை. ஆனாலும் அய்யாவுக்கு அப்படியொன்றும் முக்கியவேலைகள் தினமும் இருந்ததாகவும் தெரிந்ததில்லை.

பல வருடங்கள் கழித்து போன இரண்டு மூன்று வருடங்களில் எனக்கென்னமோ எங்கள் ஊர் சாலை வெறிச்சோடிக்கிடப்பதுப்போல் ஒரு பிரம்மை...அந்த ஊதாக்கலரு ஜீப்பை நானும் கண்டதில்லை. ஊரில் எத்தனையோ வண்ண நிறங்களில் காஸ்ட்லி வண்டிகள் நின்றிருந்தாலும் அந்த ஊதாகக்கலருக்கு ஈடாகாது. இப்போது காஸ்ட்லி கார் இருந்தாலும் அந்த ஊதா கலரு ஜீப்தான் என் முதல் பிரமிப்பு.

ஊரில் விசாரித்துப்பார்த்தேன் இன்றை அந்த ஜீப்பின் நிலைகுறித்து சரியான தகவல் இல்லை.

உண்மைதான் நான் இப்போது ஏறாத வண்டியில்லை....விதவிதமான கார்களில் பயணித்தாலும் அந்த ஜீப்பின் ஆசை இன்னும் எனக்கு குறைந்தபாடில்லை.

போன வருடம் ஊருக்குப்போனபோது அந்த அய்யாவைப்பார்த்தேன். சாலையோர டீக்கடையில் நின்றிருந்தார். என் மச்சானின் காரில் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்குப்போய் இறங்கும்போது....

பின்னால் இருந்து ஒரு குரல் "கோகுலு...வண்டி குன்னூரா, ஊட்டியா?" என்று. அவர்தான் அந்த ஊதாக்கலரு ஜீப்பின் சொந்தக்காரர். முகத்தில் கொஞ்சம் தாடி, மெலிந்திருந்தார்...முதன் முறையாக ரோட்டில் அவர் நிற்ப்பதைப்பார்க்கிறேன்..!!! 

என் மச்சானின் காரில் அவர் குன்னூருக்கு லிஃப்ட் கேட்டுப்போனது... அது வேறுகதை!!!

நானும் மசால் தோசையும்!!!
கிட்டத்தட்ட எனது 14 வயதுவரை பலநாட்கள் நடந்த சம்பவம். மசால் தோசையைப்பற்றியது.

எங்களுக்கு உடம்பு சரியில்லையென்றாலோ, மளிகை பொருட்கள் அல்லது ஏதாவது ஒன்றை வாங்கவேண்டுமென்றாலோ ஊரிலிருந்து வடதுபக்கம் 13 கிலோ மீட்டர் தொலைவிருக்கும் ஊட்டிக்கோ அல்லது இடதுபுறம் கிட்டத்தட்ட  அதே தொலைவிருக்கும் குன்னூருக்கோ வரவேண்டும்.

1980 களில் மாதத்தில் இரண்டு நாட்களாவது உடம்பு சரியில்லாமல் போகும் எனக்கு. என் அப்பாவும் ஒரு நாள் பொறுத்துவிட்டு அடுத்தநாள் ஊட்டி அல்லது குன்னூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வார். டாக்டரை பார்த்துவிட்டு ஊசியும் போட்டுவிட்டு ஹோட்டலுக்கு செல்வோம்.

என் அப்பா வங்கியில் வேலைப்பார்த்ததால் ஊட்டி, குன்னூரில் பலருக்கு நல்ல பரிட்சியம் அப்பாவுடன். ஹோட்டல் போனவுடன் வேகமாய் என் அப்பா இட்லி சொல்லுமுன் சர்வரிடம் "மாசால் தோசை" என்பேன். அந்த ஹோட்டலின் மசால் தோசையும் அதன் சுவையும் என்னை பல வருடங்கள் ஏன் இன்றும் கட்டிப்போட்டுள்ளது. வாழ்நாளில் அந்த ஹோட்டல் மசால் தோசை மாதிரி நான் எங்குமே சுவைத்ததில்லை இனி சுவைக்கப்போவதுமில்லை. குன்னூரில் அதை "படிக்கட்டு" ஹோட்டல் என்போம்.

மசால் தோசை சாப்பிட்டு வீட்டுக்கு வந்தவுடன் உடம்பு சரியாகிவிடும். மாதம் இரண்டு முறையாவது மருத்துவரிடம் சென்றுவிட்டு ஹோட்டல் போவதால்....சர்வரே என்னை பார்த்தவுடன் ஆர்டர் செய்யாமல் மசால் தோசையுடன் வருவதும் உண்டு.

பின்னர் சில வருடங்களில் நான் பொய்யாய் நடிக்கிறேன் உண்மையில் எனக்கு ஜுரமில்லை என தெரிந்துக்கொண்டார் அப்பா. எனக்கும் வழக்கம்போல் உடம்பு சரியில்லாமல் போக என் அப்பா என்னை அழைத்துக்கொண்டு குன்னூர் வந்தார். நேராக ஹோட்டலுக்கு சென்று "மசால் தோசை" ஆர்டர் செய்தார்.

நான் ஆவலாய் கேட்டேன் "என்னப்பா சாப்பிட்டிட்டு டக்டரிடம் போறோமா?" என்றேன்.

அப்பா சிரித்துக்கொண்டே கூலாய் சொன்னார் "உனக்கு இதுதாண்டா ஹாஸ்பிடல்" என்றார். பின்னர் பல காலம் ஜுரம் வந்தால் நேரே ஹோட்டலுக்கு செல்வோம்!!! மசால் தோசை சாப்பிட்டால் ஜுரம் காணாமல் போய்விடும். அன்றிலிருந்து என் அப்பாவும் எனக்கு மசால் தோசைப்போல் ரொம்பவும் பிடித்துப்போனார். கடைசிவரை யாரிடமும் இந்த விஷயத்தை சொல்லாதவர் பல வருடம் கழித்து சென்னைக்கு வரும்போது என் அம்மாவிடம் மட்டும் சொல்லியிருக்கிறார்.

இப்போதெல்லாம் என் மகனுடன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போனாலும் அவன் முதலில் ஆர்டர் செய்வது மசால் தோசையை மட்டும்தான்.

சமீபத்தில் அந்த படிக்கட்டு ஹோட்டல் கைமாறி அன்றைய சுவை இப்போதில்லை என கேள்விப்பட்டேன். ஏதோ நெருங்கிய என் நண்பனை இழந்துவிட்ட மனோநிலையில் நான்...!!!