Sunday, September 8, 2013

நம்பர் எட்டும் என் அன்பு மகனும்!!!நம்பர் எட்டும் என் அன்பு மகனும்!!!

இது எனக்கும் நம்பர் எட்டுக்குமான உறவுக்கதை. எனக்கு சின்னவயசிலிருந்தே நம்பர் எட்டு பிடிக்காது. காரணம் எட்டு ராசியில்லாத நம்பர் என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். எட்டில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எதையும் கஷ்டப்பட்டு அடைவார்கள் அல்லது தோல்வியடைவார்கள் என பலர் சொல்லக்கேட்டும் இருக்கிறேன்.

அதனாலோ என்னவோ எட்டு எனக்குப்பிடிக்காமல் போய்விட்டது. நல்ல காரியம் செய்தாலும், புதிதாய் ஏதாவது செய்தாலும் எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டுத்தொகை எட்டில் வந்தாலோ அதை தவிர்த்துவிடுவேன் அல்லது அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து விடுவேன்.

ஆனாலும் நன் மாட்டப்போகும் நாளுக்காக நம்பர் எட்டு எனக்காக காத்துக்கொண்டிருந்தான். அந்த நாளும் கூடவே வந்தது...

2004ஆம் வருடம் என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். சரியாக டாக்டரும் டிசம்பர் 20ஆம் தேதி நாள் குறித்திருந்தார். பெங்களூரில் வேலைசெய்துக்கொண்டிருந்த நான் டிசம்பர் 2ஆம் தேதி இரண்டு வார விடுமுறையில் ஊருக்கு சென்றேன். மனைவி அம்மா வீட்டில் பிரசவத்துக்காக இருந்ததால் நானும் அங்கு சென்றேன்.

அதற்க்கு முன்னமே பலவகையில் சாமியை வேண்டிக்கொண்டிருந்தேன். எட்டில் மட்டும் குழந்தைப்பிறக்க கூடாது என்று. பல கணக்குகளில் போட்டதில் கட்டாயம் பிரசவம் எட்டாம் தேதிக்கு பின்னர்தான் ஆகும் என்பதால் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன்.

எட்டாம் தேதி காலையில் இன்னும் பிரசவத்திற்க்கு 12 நாட்கள் இருக்க கடைசி மருத்துவ செக்கப்பிற்க்கு மனைவியும் நானும் செல்ல வேண்டி இருந்தது. நானும் எவ்வளவோ சொல்லியும் மனைவி வீட்டில் "குழந்தை பிறக்க இன்னும் பல நாள் இருக்கு டெஸ்ட்டுக்குத்தானே போகிறீர்கள் போய் வாருங்கள்" என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

மச்சானின் ஜீப்பில் ஊட்டி மருத்துவ மனைக்கு சென்றோம். போகும் வழியில் மச்சானை மெதுவாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு போகச்சொன்னேன். ஆஸ்பிடல் வந்ததும் டோக்கன் வாங்கிவிட்டு உட்கார்ந்தோம்.

சிறுது நேரத்தில் மனைவி வலியால் முனக ஆரம்பித்தாள்....சாதாரண வலிதான் என்று நினைத்த வேளையில் அது பிரசவ வலி என்று டாக்டர் சொன்னதும் எனக்கு தலை சுத்தியது. வலியால் துடிக்கும் மனைவியை கடிந்தும் கொண்டேன். "இன்று வேண்டாம் என்று சொன்னால் கேட்டால்தானே" என்று செல்ஃபிஷ்ஷாகவும் நடந்துக்கொண்டேன். பாவம் அவள் என்ன செய்வாள்.

சிறிது நேரத்தில் மனையின் வீட்டு சொந்தங்களும், என் வீட்டு சொந்தங்களும் ஆஸ்பிடல் வந்து சேர...எல்லோரும் குழந்தை நல்ல படியாய் பிறக்க வேண்டும் என நினைத்து பிரார்த்திக்க நான் மட்டும் இன்று எட்டாம் தேதி குழந்தை வேண்டாம் கடவுளே என்றுதான் வேண்டினேன்.

10 மணிக்கு ஆஸ்பிடல் வந்த நாங்கள் மணி 12 ஆகியும் குழந்தை பிறக்க வில்லை....அவளின் கதறல் எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லோரும் டென்ஷனில் இருக்க நான் மட்டும் எட்டு டென்ஷனில் இருந்தேன்.

மணி 2 ஆகியும் பிரசவம் ஆகாதலால் டாக்டர் "குழந்தையின் தலை திரும்பி இருப்பதாகவும் சிசேரியன் செய்யவேண்டும்" எனவும் கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அந்த சிசேரியனை நாளை செய்யுங்கள் என்று சொன்னதில் டாக்டர் டென்ஷனாகி "படிச்சவருதானே நீங்க?" எனக்கேட்டு விட்டு வேகமாக சென்றுவிட்டார்....

எல்லோரும் என்னை கடிந்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் முட்டாள் தனமாக முரண்டு பிடித்துக்கொண்டிருந்தேன். மணி மூன்றரை ஆக..."உங்க மனைவியை உயிரோடு பார்க்கணும்னா ஆபரேஷன் பண்ணியாகணும்" என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் கையெழுத்துப்போட்டேன். ஆபரேஷன் தியேட்டருக்குள் மனைவியை கொண்டு போனார்கள்.

அன்றைய எட்டாம் தேதி சுமார் 4 மணிக்கு என் அம்மா டவல் சுற்றிய குழந்தையுடன் அறைக்குள் வந்தாள்.

ஆசையால் என் அப்பா கேட்டார் " என்ன குழந்தை?"

என் அம்மாவும் கிண்டலாய் "ம்ம்ம்ம்...பொண்ணு" என்றாள்.

என் அப்பாவும் ஓடிப்போய் குழந்தையை வாங்கி " பொய் சொன்னயா...பையந்தான் பொறந்திருக்கான்" என்றார்.

என் கையில் அன்பு மகன் வந்து தவழ்ந்த போது எவ்வளவு பெரிய தவறை செய்துவ்விட்டோம் என நினைத்தேன். ஒரு சாதாரண நம்பருக்காக மோசமாக நடந்துக்கொண்டோமே என என்னையே கடிந்துக்கொண்டேன்.

இதில் ஒரு ஆச்சர்யம்....

மகன் பிறந்தது 8ஆம் தேதி

மகன் பிறந்த நேரம் மாலை 04:04 - கூட்டுத்தொகை 8

8ஆம் நாள் ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனோம்

08/12/2004 கூட்டினால் 17 - அதுவும் கூட்டுதொகையில் 8 தான் வருகிறது.(ஆக பிறந்த தேதியும் எட்டு, பிறந்த நேரமும் எட்டு, பிறந்த தேதி, மாத, வருட கூட்டுத்தொகையும் எட்டு!!!).

ஆக ஒரு எட்டு வேண்டாம் என்று நினைத்த எனக்கு எல்லாமே எட்டில் வந்து முடிந்தது. இதுதான் கடவுளின் செயல்.

கொசுறு: இப்போதெல்லாம் எட்டை வெறுப்பதில்லை. எட்டில் எந்த வேலை வந்தாலும் செய்கிறேன். சினிமாவுக்கு டிக்கெட் புக் செய்தாலோ, பஸ்ஸில் சீட் காலியாய் இருந்தாலோ எட்டில்தான் உட்காருவேன். எட்டாம் நம்பர் கடையில்தான் சரக்குமடிப்பேன். அவ்வளவு ஏன்....35 சைசில் பேண்ட்டை தேடிக்கொண்டிருக்கிறேன், மாலியில் கிடைக்கிறது. சமீபத்தில் எட்டாம் தேதிதான் வெளிநாட்டு வேலையிலும் ஜாய்ன் செய்தேன்.

நானும் எட்டும் ராசியாகிவிட்டோம் என் மகனால்!!!


No comments:

Post a Comment