Thursday, September 26, 2013

அப்பாக்கள் அதிகாரம்

1_அப்பாக்கள் அதிகாரம்!!!சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அசிங்கம் என்று ஒன்றை நினைத்துட்டால் அதை அறவே வெறுப்பேன்.

நான் வெஜ் சாப்பிட மாட்டோம் என்பதால் மீன் கடைகளிலோ, கறி கடைகளையோ பார்ப்பதைக்கூட வெறுப்பவன் நான்.

எனக்கும் என அண்ணனுக்கும் சண்டை வந்தால் சரியாக சாப்பிடும் நேரத்தில் மூக்கை "கொர்" என்று மேல் மூச்சில் சளியை இழுப்பான்....எனக்கு சளி ஞாபகம் வரும்...சாப்பிடாமல் தூங்கிவிடுவேன்.

சில நேரங்களில் சரியாக சாப்பிடும் நேரத்தில் என் அண்ணன் "டேய் ஊட்டியில் ஒரு கறி கடையில் ஆட்டை வெட்டி...உவ்வே....என்பான்" எனக்கு அந்த கறி ஞாபகம் வந்து சாப்பிடாமல் செல்வேன்.

இப்படி ஒரு வித கஷ்டத்தில் இருந்தேன். இதை பல வருடங்கள் மாற்ற முடிந்தும் முடியாமல் தவிப்பேன்.

நீயெல்லாம் எப்படித்தான் வாழப்போறையோ என அம்மாவும் கிண்டலடிப்பார்கள்.

எனக்கு கல்யாணம் ஆகி மகன் பிறந்த சமையம்... சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்...மனைவியும் அவசர வேலையாக இருந்ததால் நான்கு மாத குழந்தை ரிஷியை என் கையில் கொடுத்தாள். இரண்டு பருக்கை வாயில் வைத்து சாப்பிட்டேன்.

திடீரென்று என் இடது கையில் சூடாய் வெது வெதுப்பாய் ஏதோ உணர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது ரிஷி என் கையில் "ஆய்" போயிருந்தான். அந்த ஸ்மெல்லும் மிக மோசமாக இருந்தது.

ஆனால் எனக்கு அசிங்கமாகவோ, கோபமோ ஏற்ப்படவில்லை. ரிஷியை கொடுத்துவிட்டு இடது கையை கழுவிவிட்டு மீண்டும் சாப்பிடத்தொடர்ந்தேன்.

இப்போதெல்லாம் அசிங்கமா??? அப்படியென்றால் என்ன??? என கேட்கிறேன்.

என்னை மாற்றிய மகனுக்கு நன்றி!!!


2_அப்பாக்கள் அதிகாரம்!!!

என் காதில் வலி ஏற்ப்பட்டதால் ஹாஸ்பிடல் சென்றிருந்தோம். நான் என் மனைவி மற்றும் 8 வயது மகன்.
ஹாஸ்பிடலில் டாக்டரிடம் கன்சல்ட் செய்யும்போது ரிஷி அதை உற்று கவனித்துக்கொண்டிருந்தான்.

மிக ஆர்வமாக டாக்டரிடம் என் வலியைப்பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். டாக்டரும் மருந்து சீட்டையும் சில அட்வைஸ்களை சரியாக சொல்லி அனுப்பிவிட்டார்.

வெளியில் வந்துவிட்டு நடந்துக்கொண்டிருக்கும்போது மனைவியிடம் " எனக்கென்னமோ அந்த டாக்டர் சரியில்லை...அவ்வளவாக திறமை இருக்கிறவர் மாதிரி தெரியல...இவரெல்லாம் எப்படி டாக்டர் ஆனாரோ" என புலம்பினேன்.

சட்டென்று என் மகன் ரிஷி "அப்பா, உலக நியதி உனக்கு தெரியுமா?" என்றான்.

நானும் "முழித்தேன்"...ஏன் சம்பந்தமில்லாமல் இதைக்கேட்கிறான் என நினைத்தேன்.

முழிப்பதை பார்த்துவிட்டு அவன் சொன்னான் "ஒருத்தர் முன்னாடி அவரை புகழ்ந்துவிட்டு அவருக்கு பின்னாடி அவரை தப்பாக பேசக்கூடாது" இதுவும் ஒரு உலக நியதி என்றான்.

எனக்கு சுருக்கென்று தைத்தது நான் செய்த தவறு. ரிஷியிடம் மன்னிப்பும் கேட்டேன்...இனி அந்த மாதிரி செய்யவும் மாட்டேன் என்றேன்.

என் மகனின் பாடம் என்னை திருத்தியது!!! நன்றி மகனே!!! பெருமைப்படுகிறேன் உன்னை பெற்றதற்க்காக!!!


3_அப்பாக்கள் அதிகாரம்!!!


ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்தேன். மணி இரவு 8 இருக்கும். திடீரென்று எனக்கும் மகனுக்கும் சண்டை...எந்த விஷத்திற்க்காக என்பது சரியாக நினைவில் இல்லை. கிட்டத்தட்ட் தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்கள் அவனை திட்டிக்கொண்டிருந்தேன். மிக மிக ஆக்ரோஷமாக ரிஷியை திட்டிவிட்டேன்.

அவனும் பெட்ரூம் சென்று கதவை சாத்திக்கொண்டான். அவனுடனே என் மனைவியும் உள்ளே சென்றுவிட்டாள்.

கிட்டத்தட்ட இரு மணிநேரம் கழித்து எனக்கு பசித்ததால் மனைவியை அழைக்க உள்ளே சென்றேன்... இருவரும் அழுதுக்கொண்டிருந்தார்கள்...தாரை தாரையா கண்ணீருடன். எனக்கு தூக்கி வாறிப்போட்டது.

பின்னர்தான் புரிந்தது நான் சொன்ன "சாகற வரைக்கும் உன் கூட பேசமாட்டேன்" என்று நான் சொன்ன வார்த்தைதான் இந்த அழுகைக்கு காரணம். அவனை வெகுவாக பாதித்துவிட்டது நான் அவசரத்தில் சொன்ன அந்த வார்த்தை.

ஆபீஸ் வேலையாக கம்ப்யூட்டரிலும், ஃபேஸ் புக்கில் மூழ்கிவிட்டிருந்த எனக்கு அவனை பார்த்து சொன்ன அந்த வார்த்தை அவ்வளவு கொடுமையானது என்பது அப்போது புரிந்திருக்க வில்லை. ஆனால் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நான் சொன்ன வார்த்தையின் "கடுமை தன்மை" புரிந்து அவனிடம் மன்னிப்புக்கேட்டேன்.

இனி அந்த மாதிரி பேசமாட்டேன் என்று உறுதியும் கூறினேன்.

இப்போதெல்லாம் எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் யோசித்துவிட்டுத்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறேன்.

சில நேரங்களில் அப்பாக்கள் குழந்தைகளாகி, குழந்தைகள் அப்பாக்களாகிவிடுகிறார்கள்...நல்ல செயல்களால்!!!

No comments:

Post a Comment