Sunday, September 1, 2013

வாங்க சரக்கடிக்கலாம்!!!வாங்க சரக்கடிக்கலாம்!!!

(நீங்கள் சிரிக்காவிட்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல!!!)

கூடிய சீக்கிரம் டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் மூடப்படும் என்பதால்....பழக்க மில்லாதவர்கள் நான் செய்த தவறை செய்யாமல் இதைப்படித்து நல்லறிவு பெற வேண்டி எழுதப்பட்ட உண்மை நிகழ்வு. "மது, அல்லது சோம பானம்" என்று கொச்சையாய் அழைப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை அதனால் "சரக்கு" என்றே சுத்தமான, அழகான தமிழ் பாழையில் அழைப்பதில் பெறுமைகொள்கிறேன்.

முதலில் எனக்கு சரக்குக்கான உறவு கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் ஒரு மினி பீரில் தொடங்கியது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒரே ஒரு மினி பீரில் நான் மட்டை ஆகிவிடுவேன். இதுவரை வாழ்நாளில் ஹாட் அடித்ததில்லை என்பது கூடுதல் தகவல் (தைரியம் இல்லை). ஆனால் நாளடைவில் மிக துல்லியமான பயிற்சியின் மூலம் இப்போதெல்லாம் ஒரு பாட்டில் பீர் வரை குடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை ஒரு கிங் பிஷர் பிரீமியம் பீர் குடிப்பதுதான் என் அதிக பட்ச சாதனை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!!! பல வருடங்கள் பீரை கிளாசில் ஊற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லி கால் கிளாஸ் பீரும் முக்கா கிளாஸ் நுறையும் இருக்க...இப்போதெல்லாம் பயிற்சியின் காரணமாக முக்கா பீரும் கால் நுறையும் ஆனது. அதன் சுவை அப்படியென்றும் சொல்லும்படி இல்லை.

(மிக குளோசான நண்பர்களை தவிர்த்து நான் பீர் அடிப்பேன் என்றால் யாரும் என்னை நம்புவதில்லை. அதுக்கு நான் சரிப்பட்டு வரம்மாட்டேன் எனவோ அல்லது என் மூஞ்சி சரக்கடிக்கும் தகுதியில் இல்லை என்றோ அவர்கள் நினைத்திருக்க கூடும். அதனால் நண்பர்கள் பாருக்கு போனாலும் என்னை அழைக்க மாட்டார்கள். அவர்களுக்கு மீதம் வைக்காமல் சினாக்ஸ்களை வேகமாக தின்றுவிடுவேன் என்பது என் மீது விழுந்த குற்ற்ச்சாட்டு).

பொதுவாக பார்களிலோ, பப்புகளிலோ நான் அவ்வளவாக குடிப்பதில்லை...காரணம் அரை பீரை குடித்தவுடன் நான் புலம்ப ஆரம்பித்துவிடுகிறேனாம் (நம்பமாட்டேன்...நான் இதுவரை புலம்பி கேட்டதில்லை). அதனால் என் மனைவி இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை வீட்டில் மகன் தூங்கிய பிறகு சரக்கடிக்க சம்மத்தித்தாள். ஆனாலும் பீர் வாங்கும் செலவைவிட அதற்க்காக வாங்கும் ஸ்நாக்ஸ் செலவு அதிகமாகிறதாக கோபித்தும் கொண்டாள். ஒரு 90 ரூபாய் பீருக்கு ஒரு பாக்கெட் மசாலா கடலை, உருளைகிழங்கு சிப்ஸ், மிக்சர், வீட்டிலிருக்கும் ஆப்பிள் பழம் மற்றும் முறுக்கு என கிட்டத்தட்ட 200 ரூபாய் வரையும், என்னமோ பத்து பேர் உட்கார்ந்து சரக்கடிக்குமளவுக்கு நொறுக்கு தீனிகளை வாங்கிக்கொள்கிறேன். இந்த பிலடப்பை எல்லாம் என் மனைவி சகித்துக்கொண்டது பெரிய விஷயம்.

அதுவும் வரும் சனிக்கிழமை இரவு சரக்கடிக்க நினைத்துவிட்டால் புதன் கிழமையிலிருந்தே பயங்கரமாய் தயாராகிவிடுவேன். எல்லா அப்பாயிண்ட்மெண்ட்களையும் கேன்சல் செய்துவிடுவேன். ஆபீஸில் இருந்து வேகமாய் வந்து டாஸ்மாக்கில் நண்பரை அனுப்பி ஒளிந்துக்கொண்டு வாங்கிய ஒரு பீரை பையில் வைத்து சயின்ஸ் லாப்பில் ரசாயனக்கலவை குடுவையை பத்திரமாக எடுத்து வருவது போல் எடுத்து வருவேன். மகன் இருக்கானா எனப்பார்த்து ஃபிரீசரில் வைப்பதற்க்குள் டாவு கிழிந்துவிடும். அதும் அன்றைக்கு பார்த்து தினமும் 8 மணிக்கு தூங்கிவிடும் மகன் தூங்காமல் முரண்டு பிடிப்பான். எனக்கு ஒரு பீரை அடிக்க கிட்டத்தட்ட 2 முதல் 3 மணிநேரம் தேவைப்படுவதால் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து தூங்க வைப்பதற்க்குள் சரக்கடிக்கும் ஆசையே குறைந்துவிடும்.

இப்படியாக இரவு 11:30 வரை சரக்கடிக்கும் நான் அதற்க்கு பின் செய்யும் புலம்பல்களை மறு நாள் மனைவி சொல்லக்கேட்கும்போது முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு "அப்படியா", "நானா" என்று இரு வார்த்தைகளில் எஸ்கேப் ஆகிவிடுகிறேன்.

சரக்கடித்தப்பின் என்ன மாதிரி புலம்புகிறேன் என்று கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பார்க்கையில் சரியான காரணம் எனக்கு பிடிபடவில்லை. மண்டைக்குள் ஏதோ இசை கேட்கும், கொஞ்சம் தைரியம் வரும், சுற்றத்தை பற்றி கவலையில்லையாமல் பேசிக்கொண்டே இருப்பேன், சுதந்திரத்தை உணர்வேன், ஹீரோவாக இருப்பேன்...எதிரிகளையும்  என்னை ஏமாற்றியர்களின் ஞாபகம் வந்து அவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுப்பேன்...முடிந்தால் எட்டு கட்டையில் பாட்டும் பாடுவேன் கடைசியில் எனை மறந்து கொஞ்சம் மிதப்பேன்!!! இப்படியெல்லாம் சும்மா வேணா சொல்லிக்கலாம்.

மறு நாள் லேட்டாய் எழுந்திருப்பேன். மனைவி ஏதும் பேசமாட்டாள். அவளின் கோபம் ஒரு இரண்டு நாட்களுக்கு தொடரும்.

என் வீட்டை சுற்றி இருப்பவர்களுக்கோ, பக்கத்து வீட்டுக்காரருக்கோ நான் சரக்கடிப்பதில்லை என்றே சொல்லியிருக்கிறேன். காரணம் அவர்களும் ஒரு ரவுண்டு வேண்டும் என்று உட்கார்ந்துவிட்டாள் என்ன செய்வது என்கிற கவலை. ஆனால் உண்மையில் நான் சரக்கடிப்பதில்லை என்று சொல்லும்போது மற்றவர்களின் பார்வையில் நாம் பல படிகள் உயர்ந்து நிற்போம் பாருங்கள் அந்த பார்வைக்காகத்தான் சரக்கடிப்பதை ரகசியமாக வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது சரக்கடிக்காதவர்கள் "நல்லவர்கள்" என்கிற கூற்றும் இங்கே காலங்காலமாக உண்டு.

அதைவிட பெரிய கூத்து சரக்கடித்தப்பின் மறுநாள் வீட்டை சுத்தம் செய்து பீர் வாசனை போக ரூம் ஃபிரஷ்னர் அடித்து சரக்கடித்த தடயமே இல்லாமல் செய்துவிடுவேன். அப்படியும் ஒரு முறை மூலையில் ஒளித்து வைத்த பீர் பாட்டில் மகன் கண்ணில் பட்டுவிட நான் சமாளித்த சமாளிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம். பத்து நிமிடம் மகனுக்கு அது மருந்து என்கிற மாதிரி மெயிண்டெய்ன் செய்ய அவனும் ஒரே வார்த்தையில் "பீராப்பா" எனக்கேட்டுவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி விளையாட சென்றுவிட்டான்.

சரக்கடித்த பீர் பாட்டிலை இரண்டு மாதம் கழித்து பேப்பர்காரனுக்கு போடும் போது ரொம்ப உஷாராக மெதுவாக கதவை திறந்து எட்டிப்பார்த்து மற்ற கதவுகள் சாத்தியிருக்க, பக்கத்து வீடுகளுக்கு பாட்டிலின் சப்தம் வராமல் வேஸ்ட் துணியில் சுற்றி பேப்பர் பைக்குள் வைத்து "இதுக்கு காசு வேணாம், காசை நீயே வெச்சுக்கப்பா" என்று மெதுவாய் சொல்லி கொடுக்க....அவனும் கொஞ்சம் சப்தமாய் "என்ன சார் இந்த பீர் பாட்டில் மாதிரி வேற பாட்டில்ஸ் இருக்கா?" என்று என் மானத்தை ஒரு முறை கப்பலேற்றிவிட பிளாட்டில் இரண்டு நாட்கள் நான் யார் கண்ணிலும் படாமல் இருந்தது வேறு கதை.

அடுத்த முறை என் பேகை அக்குளோடு அணைத்துக்கொண்டு பம்மி பம்மி போகையில் "என்ன சார் வீக்கெண்ட் பார்ட்டியா?" என்று நமட்டு சிரிப்புடன் பக்கத்து வீட்டு பெருசு இப்போதெல்லாம் கேட்பார். நானும் வழிந்துக்கொண்டே நகர்ந்துவிடுவேன்.

No comments:

Post a Comment