Wednesday, September 18, 2013

#2_நான்_சின்ன_கொழந்தையா_இருக்கச்சே!!!முதல் பஸ்ஸும், கர்ணன் படமும்!!!

1983 வருடம் என நினைக்கிறேன்...

எங்கள் ஊருக்கு அப்போதுதான் முதன் முதலில் எங்கள் ஊருக்கும், ஊட்டி மற்றும் குன்னூருக்கும் அரசு பேருந்து(பஸ்) பயணம் தொடங்கப்பட்டது.

முதன் முதலில் ஊருக்கு பஸ் வந்ததால் ஊரே கொண்டாட்டமாக இருந்தது. இஉதி தேர்வு முடிந்து லீவில் இருந்ததால் நானும் நண்பர்களும் கிரவுண்டில் கோலி விளையாடிக்கொண்டிருந்தோம். என் உடை அழுக்காகவும், பேண்ட்டின் பின் பகுதி கிழிந்தௌம் இருந்தது. கோலி விளையாடியதில் கைகளில் மண் அப்பி அழுக்காய் விளையாடிக்கொண்டிருந்தேன்.

புதிய பஸ்ஸுக்கு பூஜை முடிந்து முதல் சவாரியை ஆரம்பிக்க தயாராய் இருந்தது. எங்கள் ஊர் தலைவரும் முதல் நாள் என்பதால் இலவசமாக கொஞ்ச தூரம் ஊர் மக்களை கூட்டிப்போய் வாருங்கள் என சொல்ல ஓட்டுனரும் சந்தோஷத்துடன் தலையாட்டினார்.

அண்ணா ஒருவர் எங்களுக்கு பூஜை செய்த தேங்காய் துண்டுகளை கொடுத்துவிட்டு இன்னிக்கி பஸ் டிக்கெட் பைசா வாங்கமாட்டார்கள், ஃபிரீயா போலாம் என்று சொல்ல கிரவுண்டில் இருந்த பாதிக்கூட்டம் பஸ்ஸில் ஏறிக்கொண்டது.

நான் ஆசையுடன் பஸ்ஸின் அருகில் நின்றுக்கொண்டிருக்க என் அப்பாவின் நண்பர் "கோகுலா வாப்பா டவுணை சுத்தி காட்டுறாங்க" என சொல்ல நானும் யோசிக்காமல் ஏறிவிட்டேன். பஸ் ஏறியப்பின்தான்  புரிந்தது அப்பா வேலைக்கு சென்றுள்ளதால் அம்மாவுக்கும், ஏன் யாருக்கும் சொல்லாமல் ஏறிவிட்டோம் என்று. அம்மாவும் என்னை தேட ஆரம்பித்திருந்தார்கள். பஸ் புறப்பட பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் ஆராவார் கூச்சலிட அந்த ஆர்வத்தில் நானும் என்னை மறந்தேன்.

பஸ் அடுத்த அரை மணி நேரத்தில் ஊருக்கு அடுத்து இருந்த சிறிய டவுணில் (சேலாஸ்) எல்லோரையும் இறக்கி விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக நானும் இறங்கினேன். பாக்கெட்டை துளாவியபோது இரண்டு 25 பைசா நாணயங்கள் தட்டுப்பட்டது.

பஸ்ஸில் இருந்து ஒவ்வொருவராக இறங்க ஆரம்பிக்க பெரியவர்கள் பலர் அருகில் அங்கிருக்கும் தியேட்டருக்கு சென்றனர். நான் பஸ் அருகில் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்த என்னை கூட்டிவந்த அண்ணா "வாடா படத்துக்கு போகலாம்" என்றழைத்தார்...நானும் தயங்க திரும்பி போகவும் வழியில்லாததால் அங்கேயே நின்றேன். "அப்பாகிட்டே நான் சொல்லிக்கிறேன்" என்று அவர் சொல்ல தைரியம் வந்து அவருடன் சென்றேன்.

கர்ணன் படம்...ஆராவார கூச்சலில் படம் ஆரம்பித்து அனைத்தையும் மறந்து ரசிக்கலானேன். இண்ட்ரவலும் வந்தது. எல்லோரும் டீ குடிக்க, தம் அடிக்க வெளியே வர...நானும் அப்பாவின் நண்பருடன் வந்தேன். அவரும் எனக்கு ஒரு கடலை பர்பியும் டீயும் வாங்கிக்கொடுத்தார். என்னை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு அவர் பாத்ரூம் போக அந்தப்பக்கம் சென்றார். ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் முதுகில் பொளீர் என அறை விழவே...திடுக்கிட்டு திரும்பினேன்....

அங்கே என் பாட்டியும் (அம்மாவின் அம்மா), என் அண்ணனும் (அவன் மட்டும் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்) நின்றுக்கொண்டிருந்தார்கள். என் அழுக்கு உடையையும், கிழிந்த பேண்ட்ட்டையும் பார்த்து அவர்களின் கோபம் இன்னும் அதிகமாக....பக்கத்தில் என் அம்மாவின் ஊர்க்காரர்கள் எல்லோரும் டிப் டாப்பாய் புதிய உடைகளுடன் வந்திருக்க, என் அண்ணனும் டவுனுக்கான உடையில் ஜொலிக்க...என் உடையும், கோலமும் என் பாட்டியின் ஸ்டேட்டஸை வெகுவாக அவர்கள் முன் குறைத்துவிட கோபத்துடன் என்னை தரதரவென இழுத்துச்சென்றார்கள்.

முதல் பாதியுடன் நாங்கள் மூன்று பேரும் திரும்பி விட போகும்போதெல்லாம் என்னை திட்டிக்கொண்டே வந்தார்கள் பாட்டி. அதுவும் படத்தை பாதியில் விட்டுவிட்டு வந்தது இன்னும் அவர்களை கோபப்படவைத்தது. வீட்டுக்கு சென்ற எனக்கு இரண்டு நாட்கள் விழுந்த உதைக்கு அளவே இல்லை. என் அம்மா என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.

"நான் அந்த அண்ணாகூடத்தான் சென்றேன்" என எவ்வளவோ சொல்லியும் அம்மா கேட்காமல் என்னை பிரித்து மேய்ந்தார்கள் (அம்மாவுக்கு கர்ணன் படம் போகாததும் காரணமாக இருக்கலாம்).

ஒரு வழியாய் எல்லாம் மறந்துப்போன போது இரண்டு நாள் கழித்து அந்த அப்பாவின் நண்பரை வீட்டருகில் பார்த்தேன். வீட்டுக்கு வந்தவர் " சொல்ல மறந்துட்டேங்க...நான்தான் கோகுலை கூட்டிட்டு போனேன், ஆமா இண்ட்ரவலுக்கு அப்புறம் நீ எங்கே போனே" என சாதாரணமாய் கேட்டுவிட்டு அவரும் போய்விட்டார். மீண்டும் என் அம்மா முதலிலிருந்து அடிக்க தொடங்க....ஊரின் முதல் பஸ் பயணத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அந்த சிறிய தியேட்டர் இப்போது டீ பேக்டரியாகி பத்து வருடத்திற்க்கு மேல் ஆகிறது. இன்னும் அந்த சாலையை எப்போதாவது கடக்கும்போது மேல் சொன்ன அனுபவம் என் நினைவில் வந்து மறையும். கிட்டத்தட்ட "கர்ணன்" படத்தின் விடுபட்ட இரண்டாவது பாதியை 1998ல் டிவியில் தான் பார்த்தேன் அதுவும் சென்னையில்.

No comments:

Post a Comment