Wednesday, September 18, 2013

#1_நான்_சின்ன_கொழந்தையா_இருக்கச்சே!!!


பேச்சு போட்டியும் நானும்!!!

ஆறாவது படிக்கும்போது என நினைக்கிறேன். குழந்தைகள் தின விழாவுக்காக பேச்சு போட்டி பள்ளியில் நடந்தது. 1988ல் நடந்ததக ஞாபகம்.

நானும் ஆர்வத்துடன் போட்டிக்கு பெயரை கொடுத்ததால்...ஒரு வாரமாக பாடங்களை மறந்துவிட்டு பக்கத்து வீட்டு அண்ணா எழுதிக்கொடுத்த கட்டுரையை மனப்பாடம் செய்துக்கொண்டிருந்தேன். அதை அவர் சொந்தமாக எழுதியதாக கூறினார். அவரும் நண்பர்கள் மத்தியில் அழகாக பேசுவார். அதனால் அவரை நான் நம்பியதில் தவறேதும் இல்லை. அவர் எழுதிக்கொடுத்ததை யாரிடமும் காட்டவில்லை. யாராவது ஒருத்தருக்கு காட்டிவிட்டால் நான் எழுதியது மற்றவர்களுக்கு தெரிந்து அவர்களும் அதையே பேசிவிடுவார்கள் என்கிற கவலைதான் காரணம்.முதன் முறையாக மேடை ஏறப்போவதால் எனக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அந்த நாளும் வந்தது. பேச்சுப்போட்டிக்காக முதல் மாணவரை மைக்கில் அழைத்தார்கள்.

அவரும் பேச தொடங்கினார்...."மேடையில் அமர்ந்திருக்கும்..." என பொதுவான வணக்கங்களை சொல்லிவிட்டு..."ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர், அதில் நேருவின் நண்பர் அடித்த பந்து ஓரத்தில் இருந்த பொந்துக்குள் விழுந்தது. பலர் பலவகையில் முயன்று பந்தை எடுக்கப்பார்த்தார்கள் முடியவில்லை, கையில் ஒரு தடியை கொண்டு எடுக்கப்பார்த்தார்கள் முடியவில்லை, மிகவும் ஆழமாக இருந்ததால் அந்த குழிக்குள் இறங்க யாரும் தயாராக இல்லை. இப்படியாக எல்லோரும் பந்தை எடுக்க கஷ்டப்படும்போது நேரு புத்திசாலித்தனத்தாலும், தனது கூர்மையான அறிவாலும் குழிக்குள் நீரை ஊற்றினார் சிறிது நேரத்தில் பந்து மேலே மிதந்து வந்தது. அதை சுலபமாக எடுத்து மீண்டும் விளையாட சென்றார்கள். அவரது அறிவை நினைத்து நண்பர்கள் நேருவை பாராட்டினார்கள்..."(கொஞ்சம் ஷார்ட்டாக சொல்லியிருக்கிறேன்) என அவர் பேசப்பேச எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

காரணம் நான் எழுதியதும் அதே வரிகள்தான் அதே சம்பவத்தைத்தான். அந்த அண்ணா சொந்தமாக யோசித்து எழுதியதாக சொன்னாரே???

கொஞ்சம் கலங்கி என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது அடுத்த மாணவரையும் பேச அழைத்தார்கள். அவரும்..." ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்......" என அதே வரிகளை படிக்க எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. நாமும் அதேவரிகளைத்தான் படிக்க போகிறோம் என்பதால் எனக்கு துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் பெயரை அழைத்தப்பின் போகாமலும் இருக்க முடியாது...என் உயரம் சுமாராக இருந்ததால் கூட்டத்தில் முதல் வரிசையில் உட்காரவைத்ததில் பாதியில் எழுந்து போவதும் கடினம். குழம்பிப்போனேன்.

மூன்றாவது ஒரு பெண் மாணவியும் பேசப்போனார் அவரும்...."ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்......" என ஆரம்பிக்க மொத்த கூட்டமும் சிரிக்க தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் வழிந்தார்கள். சீப் கெஸ்ட்டும் கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்துவிட்டார்.

அடுத்து கோகுல கிருஷ்ணன், 6த் பி என என் பெயரை அழைக்க....கால்கள் நடுக்கத்தால் பின்ன ஆரம்பித்தது...அரை டவுசர் போட்டிருந்ததால் கால்கள் நடுங்குவது நன்றாகவே தெரிந்தது.

மேடைக்கு சென்றேன்....பக்கத்தில் எனது கிளாஸ் டீச்சர் நின்றுக்கொண்டிருந்தார்... நீயாவது வேற ஏதாவது எழுதி இருக்கியா? என்றார்கள். ஆல் த பெஸ்ட் சொன்னார்கள்.

நானும் எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு "ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் பந்து......" என ஆரம்பித்தேன்...மொத்தக்கூட்டமும் பலமாய் சிரிக்க முற்படும்போது...இப்படியெல்லாம் நானும் பேசுவேன் என்றுதானே நினைத்தீர்கள்??? என கூடத்தைப்பார்த்து கேட்டேன்....

கூட்டம் அமைதியாகிவிட்டது. தொடர்ந்தேன்...."நேரு நண்பர்களுடன் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்...சிரமமான பதில்களை மாணவர்கள் படித்தபோது மற்றவர்களுக்கு சந்தேகம் வந்தது அதை நேரு தனது அறிவால் தீர்த்துவைத்தார். நேரு விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரர். நாமும் அவரை மாதிரி விளையாட்டிலும், படிப்பிலும்...." என இன்னும் கொஞ்சம் அளந்துவிட்டேன்.

பிறகென்ன மற்றவர்களைவிட வித்தியாசமான நேருவை சொன்னதால் எனக்கு முதல் பரிசாக கிரிக்கெட் பால் தந்தார்கள்!!!

அதற்க்குப்பிறகு எந்த ஒரு பேச்சுப்போட்டிக்கும் எழுதிக்கொண்டு போனதில்லை....சொந்தமாக ஏதாவது உளறிவிட்டு வருவேன். முதல் பரிசும் எனக்குத்தான்.

3 comments: