Sunday, September 29, 2013

இரவு!!!

இரவு!!!


நிலவுப்பெண்ணை
வட்டமிடும்
நட்சத்திர
ரோமியோக்கள்.

பயந்து
ஓடி ஒளிந்துக்கொண்ட
சூரிய முறைமாமன்!!!

தாகம்!!!

தாகம்!!!


தண்ணீர்
வற்றிப்போன
கிணற்றின்
தாகம்

அதில்
தண்ணீர் குடித்த
மனிதர்களுக்கு
எங்கே
தெரியப்போகிறது???

மறதி!!!

மறதி!!!எங்கே வைத்து தொலைத்து மறந்தேன் என்று தெரியவில்லை
கடைசியாய் எப்போது வைத்திருந்தேன் என்பதும் நினைவில் இல்லை

காலையில் இருந்தமாதிரி புத்திக்கு பட்டது
ராமசாமி வீட்டுக்கு போனபோது இருந்ததாய் ஞாபகம்

பரண் மீதி இருக்குமோ?
இல்லை...அங்கிருக்க வாய்ப்பில்லை

சுவற்றில் பழைய போட்டோவுக்கு பின்னாடி?
அங்கும் இருக்க வாய்ப்பில்லை

முற்றத்து கூரை இடுக்கில் இருக்க வாய்ப்புண்டு
ம்ம்ம்...அங்கும் இல்லையே

ஓடிசென்று வெளியில்
பத்மினி டாஷ்போர்டின் மேல் தடவிப்பார்த்தேன்
சூடுதான் இருந்தது

டிரங்கு பெட்டியை திறக்கவேயில்லை
மஞ்சள் பையில் சுத்தமாய் இல்லை
சாலிடர் டிவிக்கு மேலும் இல்லை
மர்பி ரேடியோவுக்கு கீழும் இல்லை

ச்சே....
வயதானாலே இப்படித்தான்
வைத்ததை மறந்துவிடுகிறேன்
மறந்ததை கண்டாலும் எடுக்காமல் விடுகிறேன்

மறுபடியும்...
முற்றத்து மேல் கூரையில் மெதுவாய் தேடினேன்
கையில் தூசுதான் கிடைத்தது

என் பரபரப்பை பார்த்து மனைவி கேட்டாள்...

"என்னத்த தொலைச்சீங்க....தேடிகிட்டு இருக்கீங்க?"

ஆமா...எதை தேடுகிறேன்???
கைகள் தானாய் தலையை சொறிந்தது
தேடிய பொருளை யோசிக்க ஆரம்பித்தேன்!!!

Thursday, September 26, 2013

அப்பாக்கள் அதிகாரம்

1_அப்பாக்கள் அதிகாரம்!!!சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அசிங்கம் என்று ஒன்றை நினைத்துட்டால் அதை அறவே வெறுப்பேன்.

நான் வெஜ் சாப்பிட மாட்டோம் என்பதால் மீன் கடைகளிலோ, கறி கடைகளையோ பார்ப்பதைக்கூட வெறுப்பவன் நான்.

எனக்கும் என அண்ணனுக்கும் சண்டை வந்தால் சரியாக சாப்பிடும் நேரத்தில் மூக்கை "கொர்" என்று மேல் மூச்சில் சளியை இழுப்பான்....எனக்கு சளி ஞாபகம் வரும்...சாப்பிடாமல் தூங்கிவிடுவேன்.

சில நேரங்களில் சரியாக சாப்பிடும் நேரத்தில் என் அண்ணன் "டேய் ஊட்டியில் ஒரு கறி கடையில் ஆட்டை வெட்டி...உவ்வே....என்பான்" எனக்கு அந்த கறி ஞாபகம் வந்து சாப்பிடாமல் செல்வேன்.

இப்படி ஒரு வித கஷ்டத்தில் இருந்தேன். இதை பல வருடங்கள் மாற்ற முடிந்தும் முடியாமல் தவிப்பேன்.

நீயெல்லாம் எப்படித்தான் வாழப்போறையோ என அம்மாவும் கிண்டலடிப்பார்கள்.

எனக்கு கல்யாணம் ஆகி மகன் பிறந்த சமையம்... சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்...மனைவியும் அவசர வேலையாக இருந்ததால் நான்கு மாத குழந்தை ரிஷியை என் கையில் கொடுத்தாள். இரண்டு பருக்கை வாயில் வைத்து சாப்பிட்டேன்.

திடீரென்று என் இடது கையில் சூடாய் வெது வெதுப்பாய் ஏதோ உணர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது ரிஷி என் கையில் "ஆய்" போயிருந்தான். அந்த ஸ்மெல்லும் மிக மோசமாக இருந்தது.

ஆனால் எனக்கு அசிங்கமாகவோ, கோபமோ ஏற்ப்படவில்லை. ரிஷியை கொடுத்துவிட்டு இடது கையை கழுவிவிட்டு மீண்டும் சாப்பிடத்தொடர்ந்தேன்.

இப்போதெல்லாம் அசிங்கமா??? அப்படியென்றால் என்ன??? என கேட்கிறேன்.

என்னை மாற்றிய மகனுக்கு நன்றி!!!


2_அப்பாக்கள் அதிகாரம்!!!

என் காதில் வலி ஏற்ப்பட்டதால் ஹாஸ்பிடல் சென்றிருந்தோம். நான் என் மனைவி மற்றும் 8 வயது மகன்.
ஹாஸ்பிடலில் டாக்டரிடம் கன்சல்ட் செய்யும்போது ரிஷி அதை உற்று கவனித்துக்கொண்டிருந்தான்.

மிக ஆர்வமாக டாக்டரிடம் என் வலியைப்பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். டாக்டரும் மருந்து சீட்டையும் சில அட்வைஸ்களை சரியாக சொல்லி அனுப்பிவிட்டார்.

வெளியில் வந்துவிட்டு நடந்துக்கொண்டிருக்கும்போது மனைவியிடம் " எனக்கென்னமோ அந்த டாக்டர் சரியில்லை...அவ்வளவாக திறமை இருக்கிறவர் மாதிரி தெரியல...இவரெல்லாம் எப்படி டாக்டர் ஆனாரோ" என புலம்பினேன்.

சட்டென்று என் மகன் ரிஷி "அப்பா, உலக நியதி உனக்கு தெரியுமா?" என்றான்.

நானும் "முழித்தேன்"...ஏன் சம்பந்தமில்லாமல் இதைக்கேட்கிறான் என நினைத்தேன்.

முழிப்பதை பார்த்துவிட்டு அவன் சொன்னான் "ஒருத்தர் முன்னாடி அவரை புகழ்ந்துவிட்டு அவருக்கு பின்னாடி அவரை தப்பாக பேசக்கூடாது" இதுவும் ஒரு உலக நியதி என்றான்.

எனக்கு சுருக்கென்று தைத்தது நான் செய்த தவறு. ரிஷியிடம் மன்னிப்பும் கேட்டேன்...இனி அந்த மாதிரி செய்யவும் மாட்டேன் என்றேன்.

என் மகனின் பாடம் என்னை திருத்தியது!!! நன்றி மகனே!!! பெருமைப்படுகிறேன் உன்னை பெற்றதற்க்காக!!!


3_அப்பாக்கள் அதிகாரம்!!!


ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்தேன். மணி இரவு 8 இருக்கும். திடீரென்று எனக்கும் மகனுக்கும் சண்டை...எந்த விஷத்திற்க்காக என்பது சரியாக நினைவில் இல்லை. கிட்டத்தட்ட் தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்கள் அவனை திட்டிக்கொண்டிருந்தேன். மிக மிக ஆக்ரோஷமாக ரிஷியை திட்டிவிட்டேன்.

அவனும் பெட்ரூம் சென்று கதவை சாத்திக்கொண்டான். அவனுடனே என் மனைவியும் உள்ளே சென்றுவிட்டாள்.

கிட்டத்தட்ட இரு மணிநேரம் கழித்து எனக்கு பசித்ததால் மனைவியை அழைக்க உள்ளே சென்றேன்... இருவரும் அழுதுக்கொண்டிருந்தார்கள்...தாரை தாரையா கண்ணீருடன். எனக்கு தூக்கி வாறிப்போட்டது.

பின்னர்தான் புரிந்தது நான் சொன்ன "சாகற வரைக்கும் உன் கூட பேசமாட்டேன்" என்று நான் சொன்ன வார்த்தைதான் இந்த அழுகைக்கு காரணம். அவனை வெகுவாக பாதித்துவிட்டது நான் அவசரத்தில் சொன்ன அந்த வார்த்தை.

ஆபீஸ் வேலையாக கம்ப்யூட்டரிலும், ஃபேஸ் புக்கில் மூழ்கிவிட்டிருந்த எனக்கு அவனை பார்த்து சொன்ன அந்த வார்த்தை அவ்வளவு கொடுமையானது என்பது அப்போது புரிந்திருக்க வில்லை. ஆனால் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நான் சொன்ன வார்த்தையின் "கடுமை தன்மை" புரிந்து அவனிடம் மன்னிப்புக்கேட்டேன்.

இனி அந்த மாதிரி பேசமாட்டேன் என்று உறுதியும் கூறினேன்.

இப்போதெல்லாம் எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் யோசித்துவிட்டுத்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறேன்.

சில நேரங்களில் அப்பாக்கள் குழந்தைகளாகி, குழந்தைகள் அப்பாக்களாகிவிடுகிறார்கள்...நல்ல செயல்களால்!!!

Wednesday, September 18, 2013

#2_நான்_சின்ன_கொழந்தையா_இருக்கச்சே!!!முதல் பஸ்ஸும், கர்ணன் படமும்!!!

1983 வருடம் என நினைக்கிறேன்...

எங்கள் ஊருக்கு அப்போதுதான் முதன் முதலில் எங்கள் ஊருக்கும், ஊட்டி மற்றும் குன்னூருக்கும் அரசு பேருந்து(பஸ்) பயணம் தொடங்கப்பட்டது.

முதன் முதலில் ஊருக்கு பஸ் வந்ததால் ஊரே கொண்டாட்டமாக இருந்தது. இஉதி தேர்வு முடிந்து லீவில் இருந்ததால் நானும் நண்பர்களும் கிரவுண்டில் கோலி விளையாடிக்கொண்டிருந்தோம். என் உடை அழுக்காகவும், பேண்ட்டின் பின் பகுதி கிழிந்தௌம் இருந்தது. கோலி விளையாடியதில் கைகளில் மண் அப்பி அழுக்காய் விளையாடிக்கொண்டிருந்தேன்.

புதிய பஸ்ஸுக்கு பூஜை முடிந்து முதல் சவாரியை ஆரம்பிக்க தயாராய் இருந்தது. எங்கள் ஊர் தலைவரும் முதல் நாள் என்பதால் இலவசமாக கொஞ்ச தூரம் ஊர் மக்களை கூட்டிப்போய் வாருங்கள் என சொல்ல ஓட்டுனரும் சந்தோஷத்துடன் தலையாட்டினார்.

அண்ணா ஒருவர் எங்களுக்கு பூஜை செய்த தேங்காய் துண்டுகளை கொடுத்துவிட்டு இன்னிக்கி பஸ் டிக்கெட் பைசா வாங்கமாட்டார்கள், ஃபிரீயா போலாம் என்று சொல்ல கிரவுண்டில் இருந்த பாதிக்கூட்டம் பஸ்ஸில் ஏறிக்கொண்டது.

நான் ஆசையுடன் பஸ்ஸின் அருகில் நின்றுக்கொண்டிருக்க என் அப்பாவின் நண்பர் "கோகுலா வாப்பா டவுணை சுத்தி காட்டுறாங்க" என சொல்ல நானும் யோசிக்காமல் ஏறிவிட்டேன். பஸ் ஏறியப்பின்தான்  புரிந்தது அப்பா வேலைக்கு சென்றுள்ளதால் அம்மாவுக்கும், ஏன் யாருக்கும் சொல்லாமல் ஏறிவிட்டோம் என்று. அம்மாவும் என்னை தேட ஆரம்பித்திருந்தார்கள். பஸ் புறப்பட பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் ஆராவார் கூச்சலிட அந்த ஆர்வத்தில் நானும் என்னை மறந்தேன்.

பஸ் அடுத்த அரை மணி நேரத்தில் ஊருக்கு அடுத்து இருந்த சிறிய டவுணில் (சேலாஸ்) எல்லோரையும் இறக்கி விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக நானும் இறங்கினேன். பாக்கெட்டை துளாவியபோது இரண்டு 25 பைசா நாணயங்கள் தட்டுப்பட்டது.

பஸ்ஸில் இருந்து ஒவ்வொருவராக இறங்க ஆரம்பிக்க பெரியவர்கள் பலர் அருகில் அங்கிருக்கும் தியேட்டருக்கு சென்றனர். நான் பஸ் அருகில் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்த என்னை கூட்டிவந்த அண்ணா "வாடா படத்துக்கு போகலாம்" என்றழைத்தார்...நானும் தயங்க திரும்பி போகவும் வழியில்லாததால் அங்கேயே நின்றேன். "அப்பாகிட்டே நான் சொல்லிக்கிறேன்" என்று அவர் சொல்ல தைரியம் வந்து அவருடன் சென்றேன்.

கர்ணன் படம்...ஆராவார கூச்சலில் படம் ஆரம்பித்து அனைத்தையும் மறந்து ரசிக்கலானேன். இண்ட்ரவலும் வந்தது. எல்லோரும் டீ குடிக்க, தம் அடிக்க வெளியே வர...நானும் அப்பாவின் நண்பருடன் வந்தேன். அவரும் எனக்கு ஒரு கடலை பர்பியும் டீயும் வாங்கிக்கொடுத்தார். என்னை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு அவர் பாத்ரூம் போக அந்தப்பக்கம் சென்றார். ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் முதுகில் பொளீர் என அறை விழவே...திடுக்கிட்டு திரும்பினேன்....

அங்கே என் பாட்டியும் (அம்மாவின் அம்மா), என் அண்ணனும் (அவன் மட்டும் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்) நின்றுக்கொண்டிருந்தார்கள். என் அழுக்கு உடையையும், கிழிந்த பேண்ட்ட்டையும் பார்த்து அவர்களின் கோபம் இன்னும் அதிகமாக....பக்கத்தில் என் அம்மாவின் ஊர்க்காரர்கள் எல்லோரும் டிப் டாப்பாய் புதிய உடைகளுடன் வந்திருக்க, என் அண்ணனும் டவுனுக்கான உடையில் ஜொலிக்க...என் உடையும், கோலமும் என் பாட்டியின் ஸ்டேட்டஸை வெகுவாக அவர்கள் முன் குறைத்துவிட கோபத்துடன் என்னை தரதரவென இழுத்துச்சென்றார்கள்.

முதல் பாதியுடன் நாங்கள் மூன்று பேரும் திரும்பி விட போகும்போதெல்லாம் என்னை திட்டிக்கொண்டே வந்தார்கள் பாட்டி. அதுவும் படத்தை பாதியில் விட்டுவிட்டு வந்தது இன்னும் அவர்களை கோபப்படவைத்தது. வீட்டுக்கு சென்ற எனக்கு இரண்டு நாட்கள் விழுந்த உதைக்கு அளவே இல்லை. என் அம்மா என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.

"நான் அந்த அண்ணாகூடத்தான் சென்றேன்" என எவ்வளவோ சொல்லியும் அம்மா கேட்காமல் என்னை பிரித்து மேய்ந்தார்கள் (அம்மாவுக்கு கர்ணன் படம் போகாததும் காரணமாக இருக்கலாம்).

ஒரு வழியாய் எல்லாம் மறந்துப்போன போது இரண்டு நாள் கழித்து அந்த அப்பாவின் நண்பரை வீட்டருகில் பார்த்தேன். வீட்டுக்கு வந்தவர் " சொல்ல மறந்துட்டேங்க...நான்தான் கோகுலை கூட்டிட்டு போனேன், ஆமா இண்ட்ரவலுக்கு அப்புறம் நீ எங்கே போனே" என சாதாரணமாய் கேட்டுவிட்டு அவரும் போய்விட்டார். மீண்டும் என் அம்மா முதலிலிருந்து அடிக்க தொடங்க....ஊரின் முதல் பஸ் பயணத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அந்த சிறிய தியேட்டர் இப்போது டீ பேக்டரியாகி பத்து வருடத்திற்க்கு மேல் ஆகிறது. இன்னும் அந்த சாலையை எப்போதாவது கடக்கும்போது மேல் சொன்ன அனுபவம் என் நினைவில் வந்து மறையும். கிட்டத்தட்ட "கர்ணன்" படத்தின் விடுபட்ட இரண்டாவது பாதியை 1998ல் டிவியில் தான் பார்த்தேன் அதுவும் சென்னையில்.

#1_நான்_சின்ன_கொழந்தையா_இருக்கச்சே!!!


பேச்சு போட்டியும் நானும்!!!

ஆறாவது படிக்கும்போது என நினைக்கிறேன். குழந்தைகள் தின விழாவுக்காக பேச்சு போட்டி பள்ளியில் நடந்தது. 1988ல் நடந்ததக ஞாபகம்.

நானும் ஆர்வத்துடன் போட்டிக்கு பெயரை கொடுத்ததால்...ஒரு வாரமாக பாடங்களை மறந்துவிட்டு பக்கத்து வீட்டு அண்ணா எழுதிக்கொடுத்த கட்டுரையை மனப்பாடம் செய்துக்கொண்டிருந்தேன். அதை அவர் சொந்தமாக எழுதியதாக கூறினார். அவரும் நண்பர்கள் மத்தியில் அழகாக பேசுவார். அதனால் அவரை நான் நம்பியதில் தவறேதும் இல்லை. அவர் எழுதிக்கொடுத்ததை யாரிடமும் காட்டவில்லை. யாராவது ஒருத்தருக்கு காட்டிவிட்டால் நான் எழுதியது மற்றவர்களுக்கு தெரிந்து அவர்களும் அதையே பேசிவிடுவார்கள் என்கிற கவலைதான் காரணம்.முதன் முறையாக மேடை ஏறப்போவதால் எனக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அந்த நாளும் வந்தது. பேச்சுப்போட்டிக்காக முதல் மாணவரை மைக்கில் அழைத்தார்கள்.

அவரும் பேச தொடங்கினார்...."மேடையில் அமர்ந்திருக்கும்..." என பொதுவான வணக்கங்களை சொல்லிவிட்டு..."ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர், அதில் நேருவின் நண்பர் அடித்த பந்து ஓரத்தில் இருந்த பொந்துக்குள் விழுந்தது. பலர் பலவகையில் முயன்று பந்தை எடுக்கப்பார்த்தார்கள் முடியவில்லை, கையில் ஒரு தடியை கொண்டு எடுக்கப்பார்த்தார்கள் முடியவில்லை, மிகவும் ஆழமாக இருந்ததால் அந்த குழிக்குள் இறங்க யாரும் தயாராக இல்லை. இப்படியாக எல்லோரும் பந்தை எடுக்க கஷ்டப்படும்போது நேரு புத்திசாலித்தனத்தாலும், தனது கூர்மையான அறிவாலும் குழிக்குள் நீரை ஊற்றினார் சிறிது நேரத்தில் பந்து மேலே மிதந்து வந்தது. அதை சுலபமாக எடுத்து மீண்டும் விளையாட சென்றார்கள். அவரது அறிவை நினைத்து நண்பர்கள் நேருவை பாராட்டினார்கள்..."(கொஞ்சம் ஷார்ட்டாக சொல்லியிருக்கிறேன்) என அவர் பேசப்பேச எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

காரணம் நான் எழுதியதும் அதே வரிகள்தான் அதே சம்பவத்தைத்தான். அந்த அண்ணா சொந்தமாக யோசித்து எழுதியதாக சொன்னாரே???

கொஞ்சம் கலங்கி என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது அடுத்த மாணவரையும் பேச அழைத்தார்கள். அவரும்..." ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்......" என அதே வரிகளை படிக்க எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. நாமும் அதேவரிகளைத்தான் படிக்க போகிறோம் என்பதால் எனக்கு துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் பெயரை அழைத்தப்பின் போகாமலும் இருக்க முடியாது...என் உயரம் சுமாராக இருந்ததால் கூட்டத்தில் முதல் வரிசையில் உட்காரவைத்ததில் பாதியில் எழுந்து போவதும் கடினம். குழம்பிப்போனேன்.

மூன்றாவது ஒரு பெண் மாணவியும் பேசப்போனார் அவரும்...."ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்......" என ஆரம்பிக்க மொத்த கூட்டமும் சிரிக்க தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் வழிந்தார்கள். சீப் கெஸ்ட்டும் கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்துவிட்டார்.

அடுத்து கோகுல கிருஷ்ணன், 6த் பி என என் பெயரை அழைக்க....கால்கள் நடுக்கத்தால் பின்ன ஆரம்பித்தது...அரை டவுசர் போட்டிருந்ததால் கால்கள் நடுங்குவது நன்றாகவே தெரிந்தது.

மேடைக்கு சென்றேன்....பக்கத்தில் எனது கிளாஸ் டீச்சர் நின்றுக்கொண்டிருந்தார்... நீயாவது வேற ஏதாவது எழுதி இருக்கியா? என்றார்கள். ஆல் த பெஸ்ட் சொன்னார்கள்.

நானும் எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு "ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் பந்து......" என ஆரம்பித்தேன்...மொத்தக்கூட்டமும் பலமாய் சிரிக்க முற்படும்போது...இப்படியெல்லாம் நானும் பேசுவேன் என்றுதானே நினைத்தீர்கள்??? என கூடத்தைப்பார்த்து கேட்டேன்....

கூட்டம் அமைதியாகிவிட்டது. தொடர்ந்தேன்...."நேரு நண்பர்களுடன் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்...சிரமமான பதில்களை மாணவர்கள் படித்தபோது மற்றவர்களுக்கு சந்தேகம் வந்தது அதை நேரு தனது அறிவால் தீர்த்துவைத்தார். நேரு விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரர். நாமும் அவரை மாதிரி விளையாட்டிலும், படிப்பிலும்...." என இன்னும் கொஞ்சம் அளந்துவிட்டேன்.

பிறகென்ன மற்றவர்களைவிட வித்தியாசமான நேருவை சொன்னதால் எனக்கு முதல் பரிசாக கிரிக்கெட் பால் தந்தார்கள்!!!

அதற்க்குப்பிறகு எந்த ஒரு பேச்சுப்போட்டிக்கும் எழுதிக்கொண்டு போனதில்லை....சொந்தமாக ஏதாவது உளறிவிட்டு வருவேன். முதல் பரிசும் எனக்குத்தான்.

Sunday, September 8, 2013

சொல்லிவிடாதே!!!


சொல்லிவிடாதே!!!

இறுகிப்போன உன் இதயத்திற்க்குள்
கருகிப்போன நம் நினைவுகள்.
பழகிப்போன என் கால்கள்
விலகிப்போன உன் வீதிவரை - தினமும்
கலங்கிப்போய் வந்து நிற்க்கும்!!!

கடற்க்கரை பனி
பூங்காவின் வெறுமை
மத்தியான குளிர்
மாலையின் வெயில்
இரவின் வெளிச்சம் - உன்னால்
பித்தானது என் மனம்!!!

மூன்று முறை வந்துவிட்டேன்
சன்னலோர முகம் இல்லை
மொட்டைமாடி பார்வை இல்லை
உன் வீட்டு தெருவெங்கும் - நீ
விட்டுப்போன வாசம் மட்டும்!!!

என்னை....
ஸ்கூட்டரில் கடந்துப்போன உன் அப்பா
பின் இருக்கையின் உன் இடம் காலியாய்
படபடத்த பாவி என் மனம்
இல்லாத உன்னை இருப்பதாய்
வளையில் தாண்டியபோது - தானாய்
வளையும் என் கழுத்து!!!

இனி...
எப்போதாவது சந்திக்க கூடும்
நீ உன் கணவன் குழந்தையுடன்
நான் மட்டும் தனி மரமாய்
தயவு செய்து சொல்லிவிடாதே...
உன் குழந்தைக்கு என் பெயர் வைத்ததாய்
என்னையே மறந்த உனக்கு - வீணாய்
என் பெயர் இனி எதற்க்கு???

நம்பர் எட்டும் என் அன்பு மகனும்!!!நம்பர் எட்டும் என் அன்பு மகனும்!!!

இது எனக்கும் நம்பர் எட்டுக்குமான உறவுக்கதை. எனக்கு சின்னவயசிலிருந்தே நம்பர் எட்டு பிடிக்காது. காரணம் எட்டு ராசியில்லாத நம்பர் என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். எட்டில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எதையும் கஷ்டப்பட்டு அடைவார்கள் அல்லது தோல்வியடைவார்கள் என பலர் சொல்லக்கேட்டும் இருக்கிறேன்.

அதனாலோ என்னவோ எட்டு எனக்குப்பிடிக்காமல் போய்விட்டது. நல்ல காரியம் செய்தாலும், புதிதாய் ஏதாவது செய்தாலும் எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டுத்தொகை எட்டில் வந்தாலோ அதை தவிர்த்துவிடுவேன் அல்லது அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து விடுவேன்.

ஆனாலும் நன் மாட்டப்போகும் நாளுக்காக நம்பர் எட்டு எனக்காக காத்துக்கொண்டிருந்தான். அந்த நாளும் கூடவே வந்தது...

2004ஆம் வருடம் என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். சரியாக டாக்டரும் டிசம்பர் 20ஆம் தேதி நாள் குறித்திருந்தார். பெங்களூரில் வேலைசெய்துக்கொண்டிருந்த நான் டிசம்பர் 2ஆம் தேதி இரண்டு வார விடுமுறையில் ஊருக்கு சென்றேன். மனைவி அம்மா வீட்டில் பிரசவத்துக்காக இருந்ததால் நானும் அங்கு சென்றேன்.

அதற்க்கு முன்னமே பலவகையில் சாமியை வேண்டிக்கொண்டிருந்தேன். எட்டில் மட்டும் குழந்தைப்பிறக்க கூடாது என்று. பல கணக்குகளில் போட்டதில் கட்டாயம் பிரசவம் எட்டாம் தேதிக்கு பின்னர்தான் ஆகும் என்பதால் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன்.

எட்டாம் தேதி காலையில் இன்னும் பிரசவத்திற்க்கு 12 நாட்கள் இருக்க கடைசி மருத்துவ செக்கப்பிற்க்கு மனைவியும் நானும் செல்ல வேண்டி இருந்தது. நானும் எவ்வளவோ சொல்லியும் மனைவி வீட்டில் "குழந்தை பிறக்க இன்னும் பல நாள் இருக்கு டெஸ்ட்டுக்குத்தானே போகிறீர்கள் போய் வாருங்கள்" என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

மச்சானின் ஜீப்பில் ஊட்டி மருத்துவ மனைக்கு சென்றோம். போகும் வழியில் மச்சானை மெதுவாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு போகச்சொன்னேன். ஆஸ்பிடல் வந்ததும் டோக்கன் வாங்கிவிட்டு உட்கார்ந்தோம்.

சிறுது நேரத்தில் மனைவி வலியால் முனக ஆரம்பித்தாள்....சாதாரண வலிதான் என்று நினைத்த வேளையில் அது பிரசவ வலி என்று டாக்டர் சொன்னதும் எனக்கு தலை சுத்தியது. வலியால் துடிக்கும் மனைவியை கடிந்தும் கொண்டேன். "இன்று வேண்டாம் என்று சொன்னால் கேட்டால்தானே" என்று செல்ஃபிஷ்ஷாகவும் நடந்துக்கொண்டேன். பாவம் அவள் என்ன செய்வாள்.

சிறிது நேரத்தில் மனையின் வீட்டு சொந்தங்களும், என் வீட்டு சொந்தங்களும் ஆஸ்பிடல் வந்து சேர...எல்லோரும் குழந்தை நல்ல படியாய் பிறக்க வேண்டும் என நினைத்து பிரார்த்திக்க நான் மட்டும் இன்று எட்டாம் தேதி குழந்தை வேண்டாம் கடவுளே என்றுதான் வேண்டினேன்.

10 மணிக்கு ஆஸ்பிடல் வந்த நாங்கள் மணி 12 ஆகியும் குழந்தை பிறக்க வில்லை....அவளின் கதறல் எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லோரும் டென்ஷனில் இருக்க நான் மட்டும் எட்டு டென்ஷனில் இருந்தேன்.

மணி 2 ஆகியும் பிரசவம் ஆகாதலால் டாக்டர் "குழந்தையின் தலை திரும்பி இருப்பதாகவும் சிசேரியன் செய்யவேண்டும்" எனவும் கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அந்த சிசேரியனை நாளை செய்யுங்கள் என்று சொன்னதில் டாக்டர் டென்ஷனாகி "படிச்சவருதானே நீங்க?" எனக்கேட்டு விட்டு வேகமாக சென்றுவிட்டார்....

எல்லோரும் என்னை கடிந்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் முட்டாள் தனமாக முரண்டு பிடித்துக்கொண்டிருந்தேன். மணி மூன்றரை ஆக..."உங்க மனைவியை உயிரோடு பார்க்கணும்னா ஆபரேஷன் பண்ணியாகணும்" என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் கையெழுத்துப்போட்டேன். ஆபரேஷன் தியேட்டருக்குள் மனைவியை கொண்டு போனார்கள்.

அன்றைய எட்டாம் தேதி சுமார் 4 மணிக்கு என் அம்மா டவல் சுற்றிய குழந்தையுடன் அறைக்குள் வந்தாள்.

ஆசையால் என் அப்பா கேட்டார் " என்ன குழந்தை?"

என் அம்மாவும் கிண்டலாய் "ம்ம்ம்ம்...பொண்ணு" என்றாள்.

என் அப்பாவும் ஓடிப்போய் குழந்தையை வாங்கி " பொய் சொன்னயா...பையந்தான் பொறந்திருக்கான்" என்றார்.

என் கையில் அன்பு மகன் வந்து தவழ்ந்த போது எவ்வளவு பெரிய தவறை செய்துவ்விட்டோம் என நினைத்தேன். ஒரு சாதாரண நம்பருக்காக மோசமாக நடந்துக்கொண்டோமே என என்னையே கடிந்துக்கொண்டேன்.

இதில் ஒரு ஆச்சர்யம்....

மகன் பிறந்தது 8ஆம் தேதி

மகன் பிறந்த நேரம் மாலை 04:04 - கூட்டுத்தொகை 8

8ஆம் நாள் ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனோம்

08/12/2004 கூட்டினால் 17 - அதுவும் கூட்டுதொகையில் 8 தான் வருகிறது.(ஆக பிறந்த தேதியும் எட்டு, பிறந்த நேரமும் எட்டு, பிறந்த தேதி, மாத, வருட கூட்டுத்தொகையும் எட்டு!!!).

ஆக ஒரு எட்டு வேண்டாம் என்று நினைத்த எனக்கு எல்லாமே எட்டில் வந்து முடிந்தது. இதுதான் கடவுளின் செயல்.

கொசுறு: இப்போதெல்லாம் எட்டை வெறுப்பதில்லை. எட்டில் எந்த வேலை வந்தாலும் செய்கிறேன். சினிமாவுக்கு டிக்கெட் புக் செய்தாலோ, பஸ்ஸில் சீட் காலியாய் இருந்தாலோ எட்டில்தான் உட்காருவேன். எட்டாம் நம்பர் கடையில்தான் சரக்குமடிப்பேன். அவ்வளவு ஏன்....35 சைசில் பேண்ட்டை தேடிக்கொண்டிருக்கிறேன், மாலியில் கிடைக்கிறது. சமீபத்தில் எட்டாம் தேதிதான் வெளிநாட்டு வேலையிலும் ஜாய்ன் செய்தேன்.

நானும் எட்டும் ராசியாகிவிட்டோம் என் மகனால்!!!


தேசிங்கு ராஜா - திரை விமர்சனம்


தேசிங்கு ராஜா - திரை விமர்சனம்

மனங்கொத்தி பறவைக்குப்பின் எழிலின் அடுத்த குயிக்கான படைப்பு இந்த தேசிங்கு ராஜா. சமீபத்தில் பார்த்த படங்களில் லாஜிக்கை பற்றி கவலைப்படாமல் சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் இது என நினைக்கிறேன்.

சூரி மற்றும் சிங்கம்புலியின் காமெடியில் படம் கொஞ்சம் எழுந்து நிற்க்கிறது. ஜாலியா படம் பார்க்க வர்ரவங்களுக்காக சுமாரான கதையையைக்கொண்டு வலுவில்லாத காட்சி அமைப்புகளால் சுமாராக எடுக்கப்பட்ட "நல்ல" சிரிப்பு படம் இந்த தேசிங்கு ராஜா!!!

கதை...

அதே அரதபழசான பழிவாங்கும் கதை. இரண்டு குடும்பங்களுக்குள் ஜன்ம் பகை இருக்க அந்த வீட்டு நாயகனும், இந்த வீட்டு நாயகியும் காதலிக்க குடும்பங்கள் எதிர்க்க, நாயகியின் அப்பா இறக்க நாயகன் தாலியையை கட்டி நாயகியை வீட்டுக்கு அழைத்துவர, நாயகனை பழிவாங்க நாயகி நாயகனுடன் வர...கடைசியில் உண்மை தெரிந்து சுபம் என்று மங்களம் பா(ஆ)டுகிறார்கள் "ச்சியர் கேர்ள்ஸ்". இதில் வழக்கம்போல் நாயகியை ஒறுதலையாய் காதலிக்கும் தறுதலை அத்தைமகன் சூரி...பயங்கர வில்லனாய் காட்டி அட்டகத்தி வில்லன் ஆகியிருக்கும் நாயகியின் சித்தப்பா, பல நாட்களுக்கு பின்னர் திறையில் வந்திருக்கும் கர கர வினுசக்ரவர்த்தி, அடி வாங்கிக்கொண்டே இருக்கும் சிங்கம்புலி, சுமாரான கதையில் சுமாராய் நடித்திருக்கும் நாயகன் விமல், எல்லோரையும் தூக்கி சாப்பிட்டிருக்கும் அழகு தேவதை பிந்து மாதவி....!!!

கேடிபில்லா..கிலாடி ரங்காவை விட இந்த படத்தில் பிந்துவுக்கு அழகு கூடி இருக்கின்றது. புடவையும், அவளின் உயரமும் அழகு தேவதைதான். விமல் அதே அறைகுறை தாடியுடன் உப்பு சப்பில்லாத நடிப்பை தந்துவிட்டு போகிறார் (இண்ட்ரஸ்ட் இல்லாமல் நடித்தாமாதிரி இருக்கிறார்....எக்ஸப்ட் அந்த லிப் டு லிப் கிஸ் தவிர)

சூரியும், சிங்கம்புலியும் இல்லையென்றால் படம் படுத்திருக்கும். அவ்வப்போது அவர்களின் சிரிப்பலையில் படம் நம்மை உட்காரவைக்கிறது (ஆனால் வடிவேலுவின் கல்யாண காமெடியை ரீ டெலிகாஸ்ட் செய்திருக்கிறார்கள்). அதுவும் அந்த கடைசி கிளைமாக்ஸ் படு அபத்தம். பி அண்டு சி ஆடியன்சை குறிவைத்து தாக்கி இருக்கிறார் இயக்குனர் எழில். அதில் கிட்டத்தட்ட வெற்றியும் கூட.

இசை இமானா??? நம்ப முடியவில்லை.

பிளஸ் :
காமெடி, பிந்து.

மைனஸ் :
மற்ற எல்லாமே...

பன்ச் : ஆடியன்ஸ் மூளையை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்த காட்சிகளை போட்டு கொஞ்சம் சிரிப்பையும் வரவைத்து குழப்பி லாஜிக்கை மறக்கடித்திருக்கிறார் எழில்.

ஆக மொத்தத்தில்....

"தேசிங்கு ராஜா - மண் குதிரையில்!!!"

Sunday, September 1, 2013

ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்.


ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்.

ராஜபாட்டை படுதோல்விக்குப்பின் சுசீந்திரனின் ரீ எண்ட்ரீ இந்த ஆ கா செ. எங்க பிடித்தார் என்று தெரியவில்லை படத்தின் ஹீரோவை. யாராவது புரடியூசரின் மகனாக இருக்கலாம் அல்லது சுசீந்திரனின் தம்பியாகவும் இருக்கலாம்....நடிக்கவும் வரவில்லை, ரசிக்கவும் முடியவில்லை.

ஏதோ சமூகத்திற்க்கு நல்ல கருத்தை சொல்கிறேன் என்பதற்க்காக ஒரு ஆவணப் பட ஸ்டைலில் இருக்கின்றது ஆ கா செ. சினிமாவுக்கு தேவையான பல விஷயங்கள் இங்கே மிஸ்ஸிங்...காதல் வருவது, காதலிப்பது என எல்லாமே ஏன் எதுவுமே இண்ட்ரஸ்டிங் ஆக இல்லை (படித்த இளைஞர்களை இந்த அளவுக்கு முட்டாளாக வேறு எந்த படத்திலும் காட்டியதில்லை...நம்ம ஊரு பசங்களை தப்பாக எடைப்போட்டுவிட்டார் சுசீந்திரன், டேட்டிங் போகிறவர்களை அசிங்கப்படுத்திவிட்டார்... இந்த அளவுக்கா அறிவில்லாமல் போய்விட்டார்கள் நம்ம இளைஞர் சமுதாயம்...யாரை ஏமாற்றுகிறீர்கள் மிஸ்ட்டர் சுசீந்திரன். இந்த காலத்தில் எல்லாரும் பக்கா பிளான் செய்துவிட்டு போகிறபோது உங்கள் படத்தில் மட்டும் அதுவும் 21 ஆவது நூற்றாண்டில் இப்படி அடி முட்டாளாக காட்டினால் நாங்கள் ஏமாந்துவிடுவோமா??? இது நீங்கள் இளைய சமுதாயத்தின் திறமைக்கு ஏற்ப்படுத்திய அழுக்கு என சொல்லலாம்!!!)

கதை என்ன?

நடுத்தர வர்கத்தை சேர்ந்த ஒரு அழகான பெண்ணும், ஒரு மொக்கை பையனும் காதலிக்கிறார்கள்...பொய் சொல்லுகிறார்கள்...மஹாபலிபுரம் போகிறார்கள்....கர்ப்பமாகிறாள் மாணவி (பாவம் மஹாபலிபுரம் கெட்டுப்போனவர்கள் எல்லாம் அங்கேதான் போகிறார்கள் கோடம்பாக்க படங்களில்)...வீட்டுக்கு தெரிய இரண்டு வீட்டிலும் ஒத்துவராததால்....தைரியமில்லாதவன் அவன் என்று பெண் வெறுக்க...சுயனலவாதி என்று ஆண் மறுக்க குழந்தையும் பிறக்கிறது....பின் தாய்மார்களை கலங்க வைக்கும் அசாத்திய கிளைமாக்ஸுடன் முடிகிறது படம். இரண்டரை மணி நேரத்தில் வழக்கம்போல் தப்பு பண்ணாதீங்க மாணவர்களே என்று தப்புகள் செய்ய பல நூறு ஐடியாக்களை கொடுத்துவிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் அதனால் ஏற்ப்படும் பாதிப்பைக்காட்டி செண்டிமெண்ட்டாக முடித்து படத்தை வெற்றி படமாக்கியிருக்கிறார் சிசீந்திரன். நம் ரசிகர்களும் அழுதுக்கொண்டே வெளியே வந்து பாவம் அந்த கொழந்தை, ஆண்டவந்தான் காப்பத்தணும் என்று டிவி மைக்குகளில் பேட்டியும் கொடுக்கின்றனர்.


பிளஸ் :

படத்தின் பிளஸ் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு - கடைசி இரண்டு நிமிடம் வரும் அந்த குழந்தை...சபாஷ் இயல்பாய் அசத்தி இருக்கின்றது.

இரண்டு - ஹீரோயினின் நடிப்பு. அவ்வளவே!!!

மைனஸ்: மெதுவாக நகரும் கதை, நடிக்க எந்த தகுதியும் இல்லாத ஹீரோ, இரண்டாவது பாதியில் வரும் இரண்டு குடும்பங்களின் பிட்டு பிட்டான செயல்பாடுகள், வலுவில்லாத வசனங்கள், கல்லூரி மாணவர்களை விவரமில்லாதவரகளாக காட்டியது...வெறும் நாப்கின்னை வைத்து மகள் கற்பமானதை கண்டுபிடிக்கும் அம்மா, பிள்ளைகளின் வாழ்க்கையில் அக்கரை காட்டாத பெற்றோர்கள்...யுவனின் ரசிக்க வைக்காத பழைய டியூன்களை காப்பி யடித்த பாடல்கள் (இறுதி பாடலை தவிர)...வேண்டாம் இதற்க்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

பன்ச் : மக்களுக்கு அறிவுறை வழங்கறாமதிரி ஒரு கிளை நல்ல மாக்ஸை எடுத்துக்கொண்டு அதற்க்காக வலுவில்லாத கதையை ரிவர்சில் யோசித்திருக்கிறார் சுசீந்திரன். அனாதைகள் இப்படித்தான் உருவாகிறார்கள் என்று கல்லூரி மாணவர்களை கை காட்டிவிட்டு நடையைக்கட்டிவிட்டார் இயக்குனர்(எம்மாப் பெரிய கண்டிபிடிப்பு!!!). கடைசி ஐந்து நிமிடத்திற்க்காக இரண்டு மணி நேரத்தை வீணாக்கி இருக்கிறார். அதனால் வழக்கமாக இரண்டு பக்கம் விமர்சனம் எழுதும் நான் இன்று அரைப்பக்கத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

கடைசியாக சுசீந்திரனின் தத்துவம்....

ஆதலால் காதல் செய்வீர்
ஆதலால் காமம் கொள்வீர்
ஆதலால் கவசம் அணிவீர்!!!வாங்க சரக்கடிக்கலாம்!!!வாங்க சரக்கடிக்கலாம்!!!

(நீங்கள் சிரிக்காவிட்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல!!!)

கூடிய சீக்கிரம் டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் மூடப்படும் என்பதால்....பழக்க மில்லாதவர்கள் நான் செய்த தவறை செய்யாமல் இதைப்படித்து நல்லறிவு பெற வேண்டி எழுதப்பட்ட உண்மை நிகழ்வு. "மது, அல்லது சோம பானம்" என்று கொச்சையாய் அழைப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை அதனால் "சரக்கு" என்றே சுத்தமான, அழகான தமிழ் பாழையில் அழைப்பதில் பெறுமைகொள்கிறேன்.

முதலில் எனக்கு சரக்குக்கான உறவு கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் ஒரு மினி பீரில் தொடங்கியது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒரே ஒரு மினி பீரில் நான் மட்டை ஆகிவிடுவேன். இதுவரை வாழ்நாளில் ஹாட் அடித்ததில்லை என்பது கூடுதல் தகவல் (தைரியம் இல்லை). ஆனால் நாளடைவில் மிக துல்லியமான பயிற்சியின் மூலம் இப்போதெல்லாம் ஒரு பாட்டில் பீர் வரை குடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை ஒரு கிங் பிஷர் பிரீமியம் பீர் குடிப்பதுதான் என் அதிக பட்ச சாதனை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!!! பல வருடங்கள் பீரை கிளாசில் ஊற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லி கால் கிளாஸ் பீரும் முக்கா கிளாஸ் நுறையும் இருக்க...இப்போதெல்லாம் பயிற்சியின் காரணமாக முக்கா பீரும் கால் நுறையும் ஆனது. அதன் சுவை அப்படியென்றும் சொல்லும்படி இல்லை.

(மிக குளோசான நண்பர்களை தவிர்த்து நான் பீர் அடிப்பேன் என்றால் யாரும் என்னை நம்புவதில்லை. அதுக்கு நான் சரிப்பட்டு வரம்மாட்டேன் எனவோ அல்லது என் மூஞ்சி சரக்கடிக்கும் தகுதியில் இல்லை என்றோ அவர்கள் நினைத்திருக்க கூடும். அதனால் நண்பர்கள் பாருக்கு போனாலும் என்னை அழைக்க மாட்டார்கள். அவர்களுக்கு மீதம் வைக்காமல் சினாக்ஸ்களை வேகமாக தின்றுவிடுவேன் என்பது என் மீது விழுந்த குற்ற்ச்சாட்டு).

பொதுவாக பார்களிலோ, பப்புகளிலோ நான் அவ்வளவாக குடிப்பதில்லை...காரணம் அரை பீரை குடித்தவுடன் நான் புலம்ப ஆரம்பித்துவிடுகிறேனாம் (நம்பமாட்டேன்...நான் இதுவரை புலம்பி கேட்டதில்லை). அதனால் என் மனைவி இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை வீட்டில் மகன் தூங்கிய பிறகு சரக்கடிக்க சம்மத்தித்தாள். ஆனாலும் பீர் வாங்கும் செலவைவிட அதற்க்காக வாங்கும் ஸ்நாக்ஸ் செலவு அதிகமாகிறதாக கோபித்தும் கொண்டாள். ஒரு 90 ரூபாய் பீருக்கு ஒரு பாக்கெட் மசாலா கடலை, உருளைகிழங்கு சிப்ஸ், மிக்சர், வீட்டிலிருக்கும் ஆப்பிள் பழம் மற்றும் முறுக்கு என கிட்டத்தட்ட 200 ரூபாய் வரையும், என்னமோ பத்து பேர் உட்கார்ந்து சரக்கடிக்குமளவுக்கு நொறுக்கு தீனிகளை வாங்கிக்கொள்கிறேன். இந்த பிலடப்பை எல்லாம் என் மனைவி சகித்துக்கொண்டது பெரிய விஷயம்.

அதுவும் வரும் சனிக்கிழமை இரவு சரக்கடிக்க நினைத்துவிட்டால் புதன் கிழமையிலிருந்தே பயங்கரமாய் தயாராகிவிடுவேன். எல்லா அப்பாயிண்ட்மெண்ட்களையும் கேன்சல் செய்துவிடுவேன். ஆபீஸில் இருந்து வேகமாய் வந்து டாஸ்மாக்கில் நண்பரை அனுப்பி ஒளிந்துக்கொண்டு வாங்கிய ஒரு பீரை பையில் வைத்து சயின்ஸ் லாப்பில் ரசாயனக்கலவை குடுவையை பத்திரமாக எடுத்து வருவது போல் எடுத்து வருவேன். மகன் இருக்கானா எனப்பார்த்து ஃபிரீசரில் வைப்பதற்க்குள் டாவு கிழிந்துவிடும். அதும் அன்றைக்கு பார்த்து தினமும் 8 மணிக்கு தூங்கிவிடும் மகன் தூங்காமல் முரண்டு பிடிப்பான். எனக்கு ஒரு பீரை அடிக்க கிட்டத்தட்ட 2 முதல் 3 மணிநேரம் தேவைப்படுவதால் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து தூங்க வைப்பதற்க்குள் சரக்கடிக்கும் ஆசையே குறைந்துவிடும்.

இப்படியாக இரவு 11:30 வரை சரக்கடிக்கும் நான் அதற்க்கு பின் செய்யும் புலம்பல்களை மறு நாள் மனைவி சொல்லக்கேட்கும்போது முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு "அப்படியா", "நானா" என்று இரு வார்த்தைகளில் எஸ்கேப் ஆகிவிடுகிறேன்.

சரக்கடித்தப்பின் என்ன மாதிரி புலம்புகிறேன் என்று கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பார்க்கையில் சரியான காரணம் எனக்கு பிடிபடவில்லை. மண்டைக்குள் ஏதோ இசை கேட்கும், கொஞ்சம் தைரியம் வரும், சுற்றத்தை பற்றி கவலையில்லையாமல் பேசிக்கொண்டே இருப்பேன், சுதந்திரத்தை உணர்வேன், ஹீரோவாக இருப்பேன்...எதிரிகளையும்  என்னை ஏமாற்றியர்களின் ஞாபகம் வந்து அவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுப்பேன்...முடிந்தால் எட்டு கட்டையில் பாட்டும் பாடுவேன் கடைசியில் எனை மறந்து கொஞ்சம் மிதப்பேன்!!! இப்படியெல்லாம் சும்மா வேணா சொல்லிக்கலாம்.

மறு நாள் லேட்டாய் எழுந்திருப்பேன். மனைவி ஏதும் பேசமாட்டாள். அவளின் கோபம் ஒரு இரண்டு நாட்களுக்கு தொடரும்.

என் வீட்டை சுற்றி இருப்பவர்களுக்கோ, பக்கத்து வீட்டுக்காரருக்கோ நான் சரக்கடிப்பதில்லை என்றே சொல்லியிருக்கிறேன். காரணம் அவர்களும் ஒரு ரவுண்டு வேண்டும் என்று உட்கார்ந்துவிட்டாள் என்ன செய்வது என்கிற கவலை. ஆனால் உண்மையில் நான் சரக்கடிப்பதில்லை என்று சொல்லும்போது மற்றவர்களின் பார்வையில் நாம் பல படிகள் உயர்ந்து நிற்போம் பாருங்கள் அந்த பார்வைக்காகத்தான் சரக்கடிப்பதை ரகசியமாக வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது சரக்கடிக்காதவர்கள் "நல்லவர்கள்" என்கிற கூற்றும் இங்கே காலங்காலமாக உண்டு.

அதைவிட பெரிய கூத்து சரக்கடித்தப்பின் மறுநாள் வீட்டை சுத்தம் செய்து பீர் வாசனை போக ரூம் ஃபிரஷ்னர் அடித்து சரக்கடித்த தடயமே இல்லாமல் செய்துவிடுவேன். அப்படியும் ஒரு முறை மூலையில் ஒளித்து வைத்த பீர் பாட்டில் மகன் கண்ணில் பட்டுவிட நான் சமாளித்த சமாளிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம். பத்து நிமிடம் மகனுக்கு அது மருந்து என்கிற மாதிரி மெயிண்டெய்ன் செய்ய அவனும் ஒரே வார்த்தையில் "பீராப்பா" எனக்கேட்டுவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி விளையாட சென்றுவிட்டான்.

சரக்கடித்த பீர் பாட்டிலை இரண்டு மாதம் கழித்து பேப்பர்காரனுக்கு போடும் போது ரொம்ப உஷாராக மெதுவாக கதவை திறந்து எட்டிப்பார்த்து மற்ற கதவுகள் சாத்தியிருக்க, பக்கத்து வீடுகளுக்கு பாட்டிலின் சப்தம் வராமல் வேஸ்ட் துணியில் சுற்றி பேப்பர் பைக்குள் வைத்து "இதுக்கு காசு வேணாம், காசை நீயே வெச்சுக்கப்பா" என்று மெதுவாய் சொல்லி கொடுக்க....அவனும் கொஞ்சம் சப்தமாய் "என்ன சார் இந்த பீர் பாட்டில் மாதிரி வேற பாட்டில்ஸ் இருக்கா?" என்று என் மானத்தை ஒரு முறை கப்பலேற்றிவிட பிளாட்டில் இரண்டு நாட்கள் நான் யார் கண்ணிலும் படாமல் இருந்தது வேறு கதை.

அடுத்த முறை என் பேகை அக்குளோடு அணைத்துக்கொண்டு பம்மி பம்மி போகையில் "என்ன சார் வீக்கெண்ட் பார்ட்டியா?" என்று நமட்டு சிரிப்புடன் பக்கத்து வீட்டு பெருசு இப்போதெல்லாம் கேட்பார். நானும் வழிந்துக்கொண்டே நகர்ந்துவிடுவேன்.