Wednesday, July 31, 2013

நம் மனம் சொல்வது என்ன? செய்வது சரியா???


நம் மனம் சொல்வது என்ன? செய்வது சரியா???

நிகழ்வு 1:

என் மகன் பள்ளியில் விளையாடுகிறான். அதில் கால் வழுக்கி விழுகிறான். அதனால் வலது முட்டியில் இருந்து இரத்தம் வடிகிறது ஆனாலும் வலியை பொறுத்துக்கொள்கிறான். வலி அவனை வாட்டுகிறது...ஆனாலும் அழவில்லை.

நிகழ்வு 2:

பள்ளியில் மகன் நடந்துக்கொண்டிருக்கிறான். பின்னார் வேகமாக ஓடிவரும் ஒரு மாணவன் என் மகனை தள்ளிவிட்டு அவனும் விழுகிறான். சிறிய வலி காலில் ஆனால் மகன் அழத்தொடங்குகிறான்...அந்த மாணவன் மன்னிப்பு கேட்டும் மகன் நிறுத்தாமல் அழுகிறான்.

வீட்டுக்கு வந்தவுடன் என்னிடம் கம்ப்ளெயிண்ட் செய்தான். பொறுமையாக கேட்ட நான் அவனிடம் சொன்னேன்.

போன வாரம் விழுந்து இரத்தம் வந்ததே ஏன் அழவில்லை என்று கேட்டேன்???

மகன் முழித்தான்.

நான் இதற்குண்டான உளவியல் விஷயத்தை சொல்கிறேன் என்று சொல்லி விளக்க ஆரம்பித்தேன்.

நாமாக விழுந்தால் நமக்கு வலித்தாலும், இரத்தம் வந்தாலும் கையால் தேய்த்துவிட்டு எழுந்து சென்றுவிடுகிறோம்.

ஆனால் அடுத்தவர் மூலமாக ஏதாவது நிகழ்ந்தால் நாம் அழுகிறோம் அல்லது அவரை மற்றவர்கள் அழைத்து கண்டிக்கும் வரை வலிப்பதாக நடிப்போம் அப்படியே வலித்தாலும் அதை பெரிய விபத்தாக காட்டிக்கொள்வோம்.

காரணம்...நாமாக ஏற்ப்படுத்திக்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நாமே பொறுப்பு என்பதால்தான் இந்த அமைதி. நம்மையே நாம் கண்டிப்பதில்லை.
அதே நேரத்தில் காயம் அடுத்தவரால் அறியாமல் செய்த தவறாக இருந்தாலும் நாம் அவரை விடுவதில்லை. காரணம் கை காட்ட ஒரு ஆள் கிடைத்துவிட்டதால்.

மகனுக்கு புரிந்ததா என்பது எனக்கு தெரியவில்லை!!!

அதனால் சொல்ல வருவது என்ன வென்றால் நம்மால் நமக்கு பிரச்சனை என்கிறபோது சும்மா இருக்கும் நாம், நம் பிரச்சனைக்கு அடுத்தவர் காரணமெனில் அதை பெரிய விஷயமாக நினைத்து அதை வளர்த்துவிட்டு வேடிக்கைப்பார்க்கிறோம் மனசாட்சி இல்லாமல்!!!

Thursday, July 25, 2013

நடிகன் ஆகணும்!!!
நான்கு வருட போராட்டத்திற்க்குப்பின்
நடிக்க வாய்ப்பு வந்தது
நடிகனாய் "வாழ"

இயக்குனர் அழைத்திருந்தார்
கேமராக் கோணங்களில்
அழகழகாய் அளவெடுத்தார்.

உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?
உனக்கு கார் ஓட்ட தெரியுமா?
உனக்கு நீச்சல் தெரியுமா?
உனக்கு கராத்தே தெரியுமா?
உனக்கு ஆட தெரியுமா?
உனக்கு பாட தெரியுமா?
உனக்கு ஓட தெரியுமா?

எல்லாவற்றிர்க்கும் ஆம் என்றேன்
சந்தோஷத்துடன் முதுகில் தட்டி
"யு ஆர் செலெக்டட்" என்றார்
சந்தோசத்துடன் வெளியில் வந்தேன்.

கடைசி வரை அவர் கேட்கவே இல்லை
"உனக்கு நடிக்க தெரியுமா???" என்று!!!

Monday, July 22, 2013

தம்பி...நீ இன்னும் வளரணும்!!!


முழுக்க முழுக்க காமெடிக்குத்தான்...யார் மனதையும் புண்படுத்த அல்ல.


சார்....

முகநூலில் பிரபலம் ஆகணும்னா என்ன செய்யணும்??? - முகநூல் நண்பர்
அய்யோ....இதை ஏன் எங்கிட்ட கேக்குறீங்க? - நான்
உங்களுக்குத்தான் 30 லிருந்து 35 லைக்கு விழுதே...அதனாலதான் கேட்டேன்.
தம்பி...நீ முகநூலுக்கு புதுசா??? 300, 400 லைக் வாங்குறவங்க எல்லாம் இருக்காங்க, அவிங்க கிட்ட கேளுங்க - நான்
ம்ம்ம்...அவங்க பதில் சொன்னா உங்களை நான் ஏன் கேக்கபோறேன்!!! - நண்பர்
சரி...நான் கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லு, சரியா சொன்னா நீயும் பிரபலம் ஆகலாம் -நான்
நண்பரும் ஆவலுடன் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

சரி...இந்தியாவில பிரபலம் ஆகணுமா? தமிழ்நாட்டுல பிரபலம் ஆகணுமா? - நான்
நமக்கு தமிழ் மட்டும்தான் வரும்....தமிழ் நாட்டுல ஆனா போதும் - நண்பர்


1. உனக்கு அம்மாவை பிடிக்குமா??? - நான்
ரொம்ப பிடிக்கும் சார்.... - நண்பர்
நான் சொன்னது உங்க சொந்த அம்மா இல்ல....தமிழ்நாட்டு அம்மா!!!


2. உனக்கு கருணாநிதியை பிடிக்குமா??? - நான்
பிடிக்கும் சார்.... - நண்பர்
அப்படின்னா உன்னால இந்த ஜன்மத்தில முகநூல் பிரபலம் ஆகமுடியாது - நான்


2. உனக்கு பிரபாகரனை பிடிக்குமா??? - நான்
இல்ல சார்.... - நண்பர்
அட....நீ முகநூலில் போராளி கூட ஆகமுடியாது - நான்


3. உனக்கு பிஜேபி பிடிக்குமா??? - நான்
பிடிக்கும் சார்... - நண்பர்
கிழிஞ்சது...முகநூலில் நீ ஒண்ணும் கிழிக்கவும் முடியாது - நான்.


4. இளிச்சவாயன் கெடச்சா என்ன பண்ணுவ - நான்
பாவம் சார் அவிங்க....சும்மா விட்டுடுவேன் - நண்பர்
இளிச்சவாயன் கிடச்சா நம்ம மேதாவித்தனத்தை காட்டி அவன கதற கதற கமெண்டுகளில் கலாய்க்கணும் - நான்


5. தமிழ்நாட்டு பிரபலம் யாரைவாவது தெரியுமா? நான்
இல்ல சார்....
சும்மாவாவது அவங்களை வம்புக்கு இழுத்து பேமஸ் ஆகணும்

6. உலக அறிவு இருக்கா??? இல்ல வெளிநாட்டுல வேலை பண்றியா???
புரியலையே சார்....நண்பர்
அமெரிக்காவில் குண்டு வெடிச்சா உடனே அலறணும், இலங்கையில பிரச்சனைன்னா துடிக்கணும், அவ்ளோ ஏன் தில்லியில கற்பழிப்புன்னா "ஐ சப்போர்ட்" ந்னு போட்டோ போடணும்....ஆனா தமிழ்நாட்டுல ஒண்ணுன்னா கண்டுக்காம இருக்கணும். மழை ஸ்டேட்டஸ் போட்டு ஜாலியா இருக்கணும்.


7.சரி கடைசியா ஒண்ணு...மானம் ரோஷம் இருக்கா - நான்
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க....சோத்துல உப்பு போட்டு சாப்புடறேன் -  நண்பன்
வெள்ளந்தி....இதுக்கு நீ சரிபட்டு வரமாட்டே...போய் ஆபீஸ் வேலையை பாரு...முகனூல் எல்லாம் உனக்கு வேணாம்!!!

நண்பர் - ங்கே.......

Thursday, July 18, 2013

இனி
வாலியில்லா தமிழ்
"வாயி" ல்லா தமிழ் ஆகும்.

தமிழ் பாடல்
பா "டல்" ஆகும்

கவிதையில்
க "விதை" வீரியம் இழக்கும்

வாலியை இழந்ததால்
"வலி"  தான் மிஞ்சியது!!!

Saturday, July 13, 2013

காலை நேரத்து பெங்களூர் கதை!!!


2000 மற்றும் 2003 ஆண்டுகளில் பெங்களூரில் நான் கண்ட சம்பவம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

அப்போதுதான் புதிதாக சென்னையிலிருந்து பெங்களூரில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். முதல் மாதம் சம்பளம் வாங்கி ஊருக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவில் ஊரிலிருந்து கிளம்பி திங்கட்கிழமை காலையில் சுமார் 5.00 மணிக்கு மெஜஸ்டிக் பஸ்டேண்ட் வந்து சேர்ந்தேன்.

புதிய இடம் என்பதால் அவ்வளவு பழக்கமாகாத பெங்களூர் பரபரப்பாய் இருந்தது. ஒருவரின் செயல் மட்டும் பஸ்டேண்டில் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அந்த பக்கம் இந்தபக்கம் என மிகவும் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தார். என் பஸ் வர நேரமானதால் தொடர்ந்து அவரை கவனித்தேன்.

பெண்கள் இருக்கும் இடங்களில் பொதுவாய் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு பெண்ணிடம் ஏதோ பேசினார்...பின்னர் நகர்ந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாய் அங்கும் இங்கும் சுற்றியவர் திடீரென கண்ணில் இருந்து மறைந்து போனார். பின்னர் கால்மணி நேரத்தில் மீண்டும் என் கண்ணில் பட்டவர்...கூட ஒரு இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதைப்பார்த்தேன்.

நானும் அந்த பெண்ணைத்தான் தேடியிருப்பார் என நினைத்து அந்த பெண்ணை கவனித்தேன். சின்ன பெண் ஊரில் வந்திருப்பாள்....கண்களை அங்கும் இங்கும் அலையவிட்டு வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டே அவருடன் போய்க்கொண்டிருந்தாள்.

அடுத்த மாதம்....

அதே மாதிரி காலை வேளை ஊரிலிருந்து திரும்பினேன். அதே மெஜஸ்டிக் பஸ்டேண்ட்....சட்டென்று என் கண்ணில் பட்டார் அதே ஆள். இன்றும் பரக்க பரக்க அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.....என்னடா இது இன்றும் இவர் கண்ணில் படுகிறாரே என கவனித்தேன்.

சட்டென்று கொஞ்சம் நேரம் கழித்து இன்னொரு பெண்ணுடன் நகர்ந்து போனார். அவரின் செயல் எனக்கு வித்தியாசமாக பட்டதால்....ஒரு முடிவு செய்தேன். அந்த பெண்ணையும் நன்றாகவே கவனித்தேன்.....

அடுத்தநாள் பெங்களூர் வீட்டிலிருந்து 5 மணிக்கு காலையில் மெஜஸ்டிக் வந்தேன். இப்போது அந்த ஆளை நான் தேட ஆரம்பித்தேன்.

அதிசியம்....இன்றும் என் கண்ணில் பட்டார். அதே பரபரப்பாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.

எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. நீங்கள் நம்ப மாட்டீர்கள் மறுநாளும் இதே போல் வந்தேன். அன்றும் அந்த ஆளை பார்த்தேன். ஆனால் பாவம் அன்று அவன் அலைந்தான்...கடைசியில் பெண்கள் யாரும் அவனுடன் செல்லவில்லை.

கொஞ்ச நாளில் இந்த நிகழ்வை மறந்து போனேன். அதற்க்குப்பிறகு அங்கு இருந்த மூன்று வருடத்தில் இரண்டுமுறை ஊரிலிருந்து திரும்பும்போது அவனை பார்த்திருக்கிறேன். ஆனால் கவனிப்பதை விட்டுவிட்டேன்.

ஆனால்....கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து ஒரு மாலை வேளையில் மெஜஸ்டிக்கில் ஒரு பெண்ணை பார்த்தேன். கையில் பிளாஸ்டிக் பையுடன் தலையுல் பூ வைத்து அப்பட்டமாக தான் ஒரு "அந்த மாதிரி பெண்" என்பதை காட்டிக்கொண்டிருந்தாள்.

சட்டென்று என் தலையில் பொறி தட்டியது....யோசித்தேன்....சட்டென்று கிடைத்தது பதில் அந்த பெண் "நான் முதன் முதலில் அந்த ஆளுடன் பார்த்த் பெண்". எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அனாலும் அதை உறுதி செய்ய அவளருகில் போனேன். என்னைப்பார்த்ததும் "200 ருப்பி பர்த்தியா" என்றாள். பொதுவிடத்தில் நான் அவளுடன் நிற்பதை பலரும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே போனார்கள்.

நான் அதுக்காக வரவில்லை...எனக்கு ஒரு தகவல் வேண்டும் என்றேன் (நான் கன்னடிகன் என்பதால் கன்னடத்தில்தான் பேசினேன்)

அவள் வித்தியாசமாக பார்த்தாள். போன வருடம் நீங்கள் ஊரிலிருந்து வந்த நாளில் பார்த்திருக்கிறேன்...ஒரு ஆளுடன் போனீர்கள் என்றேன்.

கண்கள் அகல பார்த்தவளை அழைத்துக்கொண்டு ஒரு ரெஸ்ட்டாரண்டுக்கு அழைத்து சென்றேன். அவள் விவரிக்க ஆரம்பித்தாள் தோசை சாப்பிட்டுக்கொண்டே....

அது....

"அந்த ஆள் ஒரு மாமா...ஆனால் சினிமா ஆசையிலோ, நடிகர்களை பார்க்கவோ அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டு பெங்களூர் வரும் பெண்களை சரியாக கண்டுபிடித்து அரை மணிநேரத்தில் அவர்களிடம் நல்லவனாக பேசி அவர்களை அழைத்துக்கொண்டு வந்துவிடுவானாம். பின்னர் நடிப்பாசை காட்டி கடைசியில் பெண்களை இந்த தொழிலுக்கு கொண்டுவருவானாம்...அதற்க்குத்தான் காலை வேலையில் அங்கே அலைகிறானாம்"

எனக்கு நம்ப முடியவில்லை...ஆனாலும் இதே வேலையா முழுநேரமும் இருப்பதால் புதிதாய் வரும் பெண்களை மோப்பம் பிடித்து மடக்கிவிடுவதில் அவன் கில்லாடிதான். இதற்க்காக ஒரு பெரிய நெட்வர்க்கே இருக்கின்றதாம். கொடுமை இதில் அந்த ஏரியா போலீசும் உடந்தை.

அவள் கையில் 500 ரூபாயை திணித்துவிட்டு ஊர் போய் சேருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவள் போகமாட்டாள் என்பது வேறு விஷயம்!!!

இதோ....பத்து வருடம் கழிந்துவிட்டது பெங்களூரை விட்டு வந்து....அந்த ஆளுக்கு கொஞ்சம் வயதாகி இருக்கலாம்...ஆனாலும் இன்றும் அங்கே அலைந்து அப்பாவி பெண்களை தேடிக்கொண்டிருக்க வாய்ப்புண்டு!!!

நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புண்டு!!!

Friday, July 5, 2013

ராஞ்சனா - திரை விமர்சனம்.


ராஞ்சனா - திரை விமர்சனம்.

சிங்கம் 2 பார்க்கப்போன நான் சிங்கம் 2 டிக்கெட் ரிலீஸாகும் இன்று சுலபமாக கிடைக்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டு ராஞ்சனா பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

கலர்ஃபுல்லான பனாரஸில் தமிழ் பூசாரியின் துடுக்கு மகன் முகுந்தன் என்கிற தனுஷ், அவனுடன் சின்ன வயதிலிருந்தே இருக்கும் நண்பனும், தனுஷை ஒருதலையாய் காதலிக்கும் பக்கத்து வீட்டு பெண். கடவுள் வேடம் அணிந்து வீடு வீடாக "ஹர் ஹர் மஹாதேவ் சொல்லி" பைசா கலெக்க்ஷன் செய்யுமிடத்தில் முஸ்லிம் பெண் ஸோயாவை பார்த்ததும் லவ்வுகிறான். பள்ளியில் துரத்தி துரத்தி காதல் சொல்லி ஒருவழியாய் அவளையும் ஒத்துக்கொள்ள வைக்கிறான்.

இந்து பய்யனை லவ்வும் விஷயம் வீட்டுக்கு தெரிய அவளை இன்னொரு ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து ஸோயா கல்லூரி பெண்ணாய் வர தன் பழைய காதலை அப்படியே ஃபிரஷ்ஷாக வைத்திருக்கும் தனுஷ் அவள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதை பார்த்து விரக்தி அடைகிறான். பின்னர் ஸோயாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்க அதை தடுத்து நிறுத்த சொல்கிறாள் ஸோயா. அவள் தன்னை காதலிப்பதாய் நினைத்து ஸோயாவின் மாப்பிள்ளையை மாட்டிவைத்து கல்யாண் படலத்தை நிறுத்தும் தனுஷுக்கு அவள் இன்னொருத்தனை காதலிப்பதாய் அதிர்ச்சி கொடுக்கிறாள் ஸோயா...

ஸ்மார்ட்டான மாணவர் தலைவனும், ஸோயாவின் காதலனுமான அபய் தியோலின் எண்ட்ரி...பின்னர் கதை எங்கெங்கோ பயணித்து இறுதியில் அரசியலின் கோரப்பிடியில் சிக்கி ஒருவழியாய் முடிகிறது.  ஸோயா யாரை கல்யாணம் செய்தாள் தனுஷின் நிலை என்ன என்பதை காஸ்ட்லி மல்டிபிளக்ஸ் திரையில் காண்க!!!

தனுஷ்....முதலில் பாலிவுட்டில் காலெடுத்து வைக்கிறார். சதைகளையும், ஆஜானுபாகுவான சிக்ஸ் பேக் வெள்ளை ஹீரோக்களையும் பார்த்து பழகிப்போன பாலிவுட் கட்டாயம் தனுஷின் பக்கத்து வீட்டு பையன் இமேஜ் மற்றும் இயல்பான நடிப்பில் கொஞ்சம் அசந்துபோயிருப்பது உண்மை!!! மனிதர் அதுவும் முதல் பாதியில் பனாரஸில் அடிக்கும் லூட்டிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. தன்னை விரும்பும் பக்கத்து வீட்டு பெண்ணை கலாய்ப்பதிலும், ஸோயாவை ரசிப்பதிலும் நல்ல ஸ்கோர் செய்கிறார். அதுவும் ஹிந்தி வார்த்தை உச்சரிப்புகள் "பஹூத் அச்சா ஹை" சொல்ல வைக்கின்றது,

அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் முதிர்ச்சியான நடிப்பும் படத்திற்க்கு பிளஸ். துனுஷை தன் பின்னால் சுற்றவைத்து, அதைக்கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலும், தனுஷின் காதலை புரிந்துக்கொள்ளாமல் இருப்பதிலும், அதுவும் அந்த இறுதிக்காட்சிகளில் வில்லியாக மாறிடுவாளோ என நம்மை கொஞ்சம் கவலைப்பட வைத்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறாள்.

அபய் தியோல் ஸ்மார்ட்டான மற்றும் முக்கியமாக பாத்திரத்தில் மின்னுகிறார்.ஆனாலும் சட்டென்று இறந்துபோவது கொஞ்சம் உறுத்துகிறது.

முக்கியமாக தனுஷை ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணும் (ஸ்வர பாஸ்கர்), தியோலின் அக்கா (ஷில்பி மார்வாஹா), தனுஷின் நண்பராக வருபவரும் (தீபக்) உண்மையிலேயே பாராட்ட வேண்டியவர்கள்.

அனந்த் ராய்...முதல் பாதியில் நம்மை கிறங்கடித்தவர் இரண்டாவது பாதியில் கொஞ்சம் தடுமாறி அரசியல் பக்கம் போனதால் இரண்டாவது பாதி மனதில் ஒட்ட மறுக்கின்றது. அதுவும் திருப்பங்கள் ஏதும் இல்லாத கொஞ்சம் சுலோவான இரண்டாவது பாதி போர் அடிப்பதாகவே தோன்றுகிறது. அவர்களின் முன் பருவ காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகமான காட்சிகளாக வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இசை ரஹ்மான். அதில் குறை சொல்ல என்ன இருக்கு. அனாலும் இரண்டு பாடல்கள் தவிற மற்ற இரண்டும் மனதில் பதியவில்லை...பின்னணி இசை என் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

குறைகள் என பார்த்தால்....

சம்பந்தமில்லாத இரண்டாவது பாதியும், தனுஷ் தமிழ் பையன் என்பதற்க்கு அவ்வளவாக அடையாளம் ஏதும் இல்லை (தனுஷின் கல்யாண இரவில் அவரின் தந்தை பேசும் ஒரு வரி வசனத்தை தவிர). தனுஷ் அவளை உருகி உருகி காதலித்தாலும் ஸோயா இன்னொருவனை காதலிப்பதால் தனுஷ் மீது பச்சாதாபம் வரவில்லை அல்லது தனுஷின் செயல்களுக்கு அர்த்தம் இல்லாமல் போகிறது, தியோலின் சடன் டெத், ரொம்ப ஈஸியாக காட்டப்பட்டிருக்கும் மாணவர்களின் அரசியல் காட்சிகளும், செயல்பாடுகளும், பொதுவாகவே இரண்டாவது பாதி காட்சிகள்....இப்படி சில....

மொத்தத்தில் முதல் பாதியில் பிரியாணியை சாப்பிட கொடுத்துவிட்டு இரண்டாவது பாதியில் ஜீரணம் ஆக கொஞ்சம் கஷாயமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.