Sunday, September 29, 2013

இரவு!!!

இரவு!!!


நிலவுப்பெண்ணை
வட்டமிடும்
நட்சத்திர
ரோமியோக்கள்.

பயந்து
ஓடி ஒளிந்துக்கொண்ட
சூரிய முறைமாமன்!!!

தாகம்!!!

தாகம்!!!


தண்ணீர்
வற்றிப்போன
கிணற்றின்
தாகம்

அதில்
தண்ணீர் குடித்த
மனிதர்களுக்கு
எங்கே
தெரியப்போகிறது???

மறதி!!!

மறதி!!!எங்கே வைத்து தொலைத்து மறந்தேன் என்று தெரியவில்லை
கடைசியாய் எப்போது வைத்திருந்தேன் என்பதும் நினைவில் இல்லை

காலையில் இருந்தமாதிரி புத்திக்கு பட்டது
ராமசாமி வீட்டுக்கு போனபோது இருந்ததாய் ஞாபகம்

பரண் மீதி இருக்குமோ?
இல்லை...அங்கிருக்க வாய்ப்பில்லை

சுவற்றில் பழைய போட்டோவுக்கு பின்னாடி?
அங்கும் இருக்க வாய்ப்பில்லை

முற்றத்து கூரை இடுக்கில் இருக்க வாய்ப்புண்டு
ம்ம்ம்...அங்கும் இல்லையே

ஓடிசென்று வெளியில்
பத்மினி டாஷ்போர்டின் மேல் தடவிப்பார்த்தேன்
சூடுதான் இருந்தது

டிரங்கு பெட்டியை திறக்கவேயில்லை
மஞ்சள் பையில் சுத்தமாய் இல்லை
சாலிடர் டிவிக்கு மேலும் இல்லை
மர்பி ரேடியோவுக்கு கீழும் இல்லை

ச்சே....
வயதானாலே இப்படித்தான்
வைத்ததை மறந்துவிடுகிறேன்
மறந்ததை கண்டாலும் எடுக்காமல் விடுகிறேன்

மறுபடியும்...
முற்றத்து மேல் கூரையில் மெதுவாய் தேடினேன்
கையில் தூசுதான் கிடைத்தது

என் பரபரப்பை பார்த்து மனைவி கேட்டாள்...

"என்னத்த தொலைச்சீங்க....தேடிகிட்டு இருக்கீங்க?"

ஆமா...எதை தேடுகிறேன்???
கைகள் தானாய் தலையை சொறிந்தது
தேடிய பொருளை யோசிக்க ஆரம்பித்தேன்!!!

Thursday, September 26, 2013

அப்பாக்கள் அதிகாரம்

1_அப்பாக்கள் அதிகாரம்!!!சின்ன வயதிலிருந்தே எனக்கு ஒரு கெட்ட பழக்கம். அசிங்கம் என்று ஒன்றை நினைத்துட்டால் அதை அறவே வெறுப்பேன்.

நான் வெஜ் சாப்பிட மாட்டோம் என்பதால் மீன் கடைகளிலோ, கறி கடைகளையோ பார்ப்பதைக்கூட வெறுப்பவன் நான்.

எனக்கும் என அண்ணனுக்கும் சண்டை வந்தால் சரியாக சாப்பிடும் நேரத்தில் மூக்கை "கொர்" என்று மேல் மூச்சில் சளியை இழுப்பான்....எனக்கு சளி ஞாபகம் வரும்...சாப்பிடாமல் தூங்கிவிடுவேன்.

சில நேரங்களில் சரியாக சாப்பிடும் நேரத்தில் என் அண்ணன் "டேய் ஊட்டியில் ஒரு கறி கடையில் ஆட்டை வெட்டி...உவ்வே....என்பான்" எனக்கு அந்த கறி ஞாபகம் வந்து சாப்பிடாமல் செல்வேன்.

இப்படி ஒரு வித கஷ்டத்தில் இருந்தேன். இதை பல வருடங்கள் மாற்ற முடிந்தும் முடியாமல் தவிப்பேன்.

நீயெல்லாம் எப்படித்தான் வாழப்போறையோ என அம்மாவும் கிண்டலடிப்பார்கள்.

எனக்கு கல்யாணம் ஆகி மகன் பிறந்த சமையம்... சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்...மனைவியும் அவசர வேலையாக இருந்ததால் நான்கு மாத குழந்தை ரிஷியை என் கையில் கொடுத்தாள். இரண்டு பருக்கை வாயில் வைத்து சாப்பிட்டேன்.

திடீரென்று என் இடது கையில் சூடாய் வெது வெதுப்பாய் ஏதோ உணர்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது ரிஷி என் கையில் "ஆய்" போயிருந்தான். அந்த ஸ்மெல்லும் மிக மோசமாக இருந்தது.

ஆனால் எனக்கு அசிங்கமாகவோ, கோபமோ ஏற்ப்படவில்லை. ரிஷியை கொடுத்துவிட்டு இடது கையை கழுவிவிட்டு மீண்டும் சாப்பிடத்தொடர்ந்தேன்.

இப்போதெல்லாம் அசிங்கமா??? அப்படியென்றால் என்ன??? என கேட்கிறேன்.

என்னை மாற்றிய மகனுக்கு நன்றி!!!


2_அப்பாக்கள் அதிகாரம்!!!

என் காதில் வலி ஏற்ப்பட்டதால் ஹாஸ்பிடல் சென்றிருந்தோம். நான் என் மனைவி மற்றும் 8 வயது மகன்.
ஹாஸ்பிடலில் டாக்டரிடம் கன்சல்ட் செய்யும்போது ரிஷி அதை உற்று கவனித்துக்கொண்டிருந்தான்.

மிக ஆர்வமாக டாக்டரிடம் என் வலியைப்பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். டாக்டரும் மருந்து சீட்டையும் சில அட்வைஸ்களை சரியாக சொல்லி அனுப்பிவிட்டார்.

வெளியில் வந்துவிட்டு நடந்துக்கொண்டிருக்கும்போது மனைவியிடம் " எனக்கென்னமோ அந்த டாக்டர் சரியில்லை...அவ்வளவாக திறமை இருக்கிறவர் மாதிரி தெரியல...இவரெல்லாம் எப்படி டாக்டர் ஆனாரோ" என புலம்பினேன்.

சட்டென்று என் மகன் ரிஷி "அப்பா, உலக நியதி உனக்கு தெரியுமா?" என்றான்.

நானும் "முழித்தேன்"...ஏன் சம்பந்தமில்லாமல் இதைக்கேட்கிறான் என நினைத்தேன்.

முழிப்பதை பார்த்துவிட்டு அவன் சொன்னான் "ஒருத்தர் முன்னாடி அவரை புகழ்ந்துவிட்டு அவருக்கு பின்னாடி அவரை தப்பாக பேசக்கூடாது" இதுவும் ஒரு உலக நியதி என்றான்.

எனக்கு சுருக்கென்று தைத்தது நான் செய்த தவறு. ரிஷியிடம் மன்னிப்பும் கேட்டேன்...இனி அந்த மாதிரி செய்யவும் மாட்டேன் என்றேன்.

என் மகனின் பாடம் என்னை திருத்தியது!!! நன்றி மகனே!!! பெருமைப்படுகிறேன் உன்னை பெற்றதற்க்காக!!!


3_அப்பாக்கள் அதிகாரம்!!!


ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்தேன். மணி இரவு 8 இருக்கும். திடீரென்று எனக்கும் மகனுக்கும் சண்டை...எந்த விஷத்திற்க்காக என்பது சரியாக நினைவில் இல்லை. கிட்டத்தட்ட் தொடர்ந்து இரண்டு மூன்று நிமிடங்கள் அவனை திட்டிக்கொண்டிருந்தேன். மிக மிக ஆக்ரோஷமாக ரிஷியை திட்டிவிட்டேன்.

அவனும் பெட்ரூம் சென்று கதவை சாத்திக்கொண்டான். அவனுடனே என் மனைவியும் உள்ளே சென்றுவிட்டாள்.

கிட்டத்தட்ட இரு மணிநேரம் கழித்து எனக்கு பசித்ததால் மனைவியை அழைக்க உள்ளே சென்றேன்... இருவரும் அழுதுக்கொண்டிருந்தார்கள்...தாரை தாரையா கண்ணீருடன். எனக்கு தூக்கி வாறிப்போட்டது.

பின்னர்தான் புரிந்தது நான் சொன்ன "சாகற வரைக்கும் உன் கூட பேசமாட்டேன்" என்று நான் சொன்ன வார்த்தைதான் இந்த அழுகைக்கு காரணம். அவனை வெகுவாக பாதித்துவிட்டது நான் அவசரத்தில் சொன்ன அந்த வார்த்தை.

ஆபீஸ் வேலையாக கம்ப்யூட்டரிலும், ஃபேஸ் புக்கில் மூழ்கிவிட்டிருந்த எனக்கு அவனை பார்த்து சொன்ன அந்த வார்த்தை அவ்வளவு கொடுமையானது என்பது அப்போது புரிந்திருக்க வில்லை. ஆனால் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நான் சொன்ன வார்த்தையின் "கடுமை தன்மை" புரிந்து அவனிடம் மன்னிப்புக்கேட்டேன்.

இனி அந்த மாதிரி பேசமாட்டேன் என்று உறுதியும் கூறினேன்.

இப்போதெல்லாம் எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் யோசித்துவிட்டுத்தான் வார்த்தைகளை பிரயோகிக்கிறேன்.

சில நேரங்களில் அப்பாக்கள் குழந்தைகளாகி, குழந்தைகள் அப்பாக்களாகிவிடுகிறார்கள்...நல்ல செயல்களால்!!!

Wednesday, September 18, 2013

#2_நான்_சின்ன_கொழந்தையா_இருக்கச்சே!!!முதல் பஸ்ஸும், கர்ணன் படமும்!!!

1983 வருடம் என நினைக்கிறேன்...

எங்கள் ஊருக்கு அப்போதுதான் முதன் முதலில் எங்கள் ஊருக்கும், ஊட்டி மற்றும் குன்னூருக்கும் அரசு பேருந்து(பஸ்) பயணம் தொடங்கப்பட்டது.

முதன் முதலில் ஊருக்கு பஸ் வந்ததால் ஊரே கொண்டாட்டமாக இருந்தது. இஉதி தேர்வு முடிந்து லீவில் இருந்ததால் நானும் நண்பர்களும் கிரவுண்டில் கோலி விளையாடிக்கொண்டிருந்தோம். என் உடை அழுக்காகவும், பேண்ட்டின் பின் பகுதி கிழிந்தௌம் இருந்தது. கோலி விளையாடியதில் கைகளில் மண் அப்பி அழுக்காய் விளையாடிக்கொண்டிருந்தேன்.

புதிய பஸ்ஸுக்கு பூஜை முடிந்து முதல் சவாரியை ஆரம்பிக்க தயாராய் இருந்தது. எங்கள் ஊர் தலைவரும் முதல் நாள் என்பதால் இலவசமாக கொஞ்ச தூரம் ஊர் மக்களை கூட்டிப்போய் வாருங்கள் என சொல்ல ஓட்டுனரும் சந்தோஷத்துடன் தலையாட்டினார்.

அண்ணா ஒருவர் எங்களுக்கு பூஜை செய்த தேங்காய் துண்டுகளை கொடுத்துவிட்டு இன்னிக்கி பஸ் டிக்கெட் பைசா வாங்கமாட்டார்கள், ஃபிரீயா போலாம் என்று சொல்ல கிரவுண்டில் இருந்த பாதிக்கூட்டம் பஸ்ஸில் ஏறிக்கொண்டது.

நான் ஆசையுடன் பஸ்ஸின் அருகில் நின்றுக்கொண்டிருக்க என் அப்பாவின் நண்பர் "கோகுலா வாப்பா டவுணை சுத்தி காட்டுறாங்க" என சொல்ல நானும் யோசிக்காமல் ஏறிவிட்டேன். பஸ் ஏறியப்பின்தான்  புரிந்தது அப்பா வேலைக்கு சென்றுள்ளதால் அம்மாவுக்கும், ஏன் யாருக்கும் சொல்லாமல் ஏறிவிட்டோம் என்று. அம்மாவும் என்னை தேட ஆரம்பித்திருந்தார்கள். பஸ் புறப்பட பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் ஆராவார் கூச்சலிட அந்த ஆர்வத்தில் நானும் என்னை மறந்தேன்.

பஸ் அடுத்த அரை மணி நேரத்தில் ஊருக்கு அடுத்து இருந்த சிறிய டவுணில் (சேலாஸ்) எல்லோரையும் இறக்கி விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக நானும் இறங்கினேன். பாக்கெட்டை துளாவியபோது இரண்டு 25 பைசா நாணயங்கள் தட்டுப்பட்டது.

பஸ்ஸில் இருந்து ஒவ்வொருவராக இறங்க ஆரம்பிக்க பெரியவர்கள் பலர் அருகில் அங்கிருக்கும் தியேட்டருக்கு சென்றனர். நான் பஸ் அருகில் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்த என்னை கூட்டிவந்த அண்ணா "வாடா படத்துக்கு போகலாம்" என்றழைத்தார்...நானும் தயங்க திரும்பி போகவும் வழியில்லாததால் அங்கேயே நின்றேன். "அப்பாகிட்டே நான் சொல்லிக்கிறேன்" என்று அவர் சொல்ல தைரியம் வந்து அவருடன் சென்றேன்.

கர்ணன் படம்...ஆராவார கூச்சலில் படம் ஆரம்பித்து அனைத்தையும் மறந்து ரசிக்கலானேன். இண்ட்ரவலும் வந்தது. எல்லோரும் டீ குடிக்க, தம் அடிக்க வெளியே வர...நானும் அப்பாவின் நண்பருடன் வந்தேன். அவரும் எனக்கு ஒரு கடலை பர்பியும் டீயும் வாங்கிக்கொடுத்தார். என்னை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு அவர் பாத்ரூம் போக அந்தப்பக்கம் சென்றார். ஆசையாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனின் முதுகில் பொளீர் என அறை விழவே...திடுக்கிட்டு திரும்பினேன்....

அங்கே என் பாட்டியும் (அம்மாவின் அம்மா), என் அண்ணனும் (அவன் மட்டும் பாட்டி வீட்டில்தான் வளர்ந்தான்) நின்றுக்கொண்டிருந்தார்கள். என் அழுக்கு உடையையும், கிழிந்த பேண்ட்ட்டையும் பார்த்து அவர்களின் கோபம் இன்னும் அதிகமாக....பக்கத்தில் என் அம்மாவின் ஊர்க்காரர்கள் எல்லோரும் டிப் டாப்பாய் புதிய உடைகளுடன் வந்திருக்க, என் அண்ணனும் டவுனுக்கான உடையில் ஜொலிக்க...என் உடையும், கோலமும் என் பாட்டியின் ஸ்டேட்டஸை வெகுவாக அவர்கள் முன் குறைத்துவிட கோபத்துடன் என்னை தரதரவென இழுத்துச்சென்றார்கள்.

முதல் பாதியுடன் நாங்கள் மூன்று பேரும் திரும்பி விட போகும்போதெல்லாம் என்னை திட்டிக்கொண்டே வந்தார்கள் பாட்டி. அதுவும் படத்தை பாதியில் விட்டுவிட்டு வந்தது இன்னும் அவர்களை கோபப்படவைத்தது. வீட்டுக்கு சென்ற எனக்கு இரண்டு நாட்கள் விழுந்த உதைக்கு அளவே இல்லை. என் அம்மா என்னை ரவுண்டு கட்டி அடித்தார்கள்.

"நான் அந்த அண்ணாகூடத்தான் சென்றேன்" என எவ்வளவோ சொல்லியும் அம்மா கேட்காமல் என்னை பிரித்து மேய்ந்தார்கள் (அம்மாவுக்கு கர்ணன் படம் போகாததும் காரணமாக இருக்கலாம்).

ஒரு வழியாய் எல்லாம் மறந்துப்போன போது இரண்டு நாள் கழித்து அந்த அப்பாவின் நண்பரை வீட்டருகில் பார்த்தேன். வீட்டுக்கு வந்தவர் " சொல்ல மறந்துட்டேங்க...நான்தான் கோகுலை கூட்டிட்டு போனேன், ஆமா இண்ட்ரவலுக்கு அப்புறம் நீ எங்கே போனே" என சாதாரணமாய் கேட்டுவிட்டு அவரும் போய்விட்டார். மீண்டும் என் அம்மா முதலிலிருந்து அடிக்க தொடங்க....ஊரின் முதல் பஸ் பயணத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

அந்த சிறிய தியேட்டர் இப்போது டீ பேக்டரியாகி பத்து வருடத்திற்க்கு மேல் ஆகிறது. இன்னும் அந்த சாலையை எப்போதாவது கடக்கும்போது மேல் சொன்ன அனுபவம் என் நினைவில் வந்து மறையும். கிட்டத்தட்ட "கர்ணன்" படத்தின் விடுபட்ட இரண்டாவது பாதியை 1998ல் டிவியில் தான் பார்த்தேன் அதுவும் சென்னையில்.

#1_நான்_சின்ன_கொழந்தையா_இருக்கச்சே!!!


பேச்சு போட்டியும் நானும்!!!

ஆறாவது படிக்கும்போது என நினைக்கிறேன். குழந்தைகள் தின விழாவுக்காக பேச்சு போட்டி பள்ளியில் நடந்தது. 1988ல் நடந்ததக ஞாபகம்.

நானும் ஆர்வத்துடன் போட்டிக்கு பெயரை கொடுத்ததால்...ஒரு வாரமாக பாடங்களை மறந்துவிட்டு பக்கத்து வீட்டு அண்ணா எழுதிக்கொடுத்த கட்டுரையை மனப்பாடம் செய்துக்கொண்டிருந்தேன். அதை அவர் சொந்தமாக எழுதியதாக கூறினார். அவரும் நண்பர்கள் மத்தியில் அழகாக பேசுவார். அதனால் அவரை நான் நம்பியதில் தவறேதும் இல்லை. அவர் எழுதிக்கொடுத்ததை யாரிடமும் காட்டவில்லை. யாராவது ஒருத்தருக்கு காட்டிவிட்டால் நான் எழுதியது மற்றவர்களுக்கு தெரிந்து அவர்களும் அதையே பேசிவிடுவார்கள் என்கிற கவலைதான் காரணம்.முதன் முறையாக மேடை ஏறப்போவதால் எனக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அந்த நாளும் வந்தது. பேச்சுப்போட்டிக்காக முதல் மாணவரை மைக்கில் அழைத்தார்கள்.

அவரும் பேச தொடங்கினார்...."மேடையில் அமர்ந்திருக்கும்..." என பொதுவான வணக்கங்களை சொல்லிவிட்டு..."ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர், அதில் நேருவின் நண்பர் அடித்த பந்து ஓரத்தில் இருந்த பொந்துக்குள் விழுந்தது. பலர் பலவகையில் முயன்று பந்தை எடுக்கப்பார்த்தார்கள் முடியவில்லை, கையில் ஒரு தடியை கொண்டு எடுக்கப்பார்த்தார்கள் முடியவில்லை, மிகவும் ஆழமாக இருந்ததால் அந்த குழிக்குள் இறங்க யாரும் தயாராக இல்லை. இப்படியாக எல்லோரும் பந்தை எடுக்க கஷ்டப்படும்போது நேரு புத்திசாலித்தனத்தாலும், தனது கூர்மையான அறிவாலும் குழிக்குள் நீரை ஊற்றினார் சிறிது நேரத்தில் பந்து மேலே மிதந்து வந்தது. அதை சுலபமாக எடுத்து மீண்டும் விளையாட சென்றார்கள். அவரது அறிவை நினைத்து நண்பர்கள் நேருவை பாராட்டினார்கள்..."(கொஞ்சம் ஷார்ட்டாக சொல்லியிருக்கிறேன்) என அவர் பேசப்பேச எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

காரணம் நான் எழுதியதும் அதே வரிகள்தான் அதே சம்பவத்தைத்தான். அந்த அண்ணா சொந்தமாக யோசித்து எழுதியதாக சொன்னாரே???

கொஞ்சம் கலங்கி என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது அடுத்த மாணவரையும் பேச அழைத்தார்கள். அவரும்..." ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்......" என அதே வரிகளை படிக்க எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. நாமும் அதேவரிகளைத்தான் படிக்க போகிறோம் என்பதால் எனக்கு துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் பெயரை அழைத்தப்பின் போகாமலும் இருக்க முடியாது...என் உயரம் சுமாராக இருந்ததால் கூட்டத்தில் முதல் வரிசையில் உட்காரவைத்ததில் பாதியில் எழுந்து போவதும் கடினம். குழம்பிப்போனேன்.

மூன்றாவது ஒரு பெண் மாணவியும் பேசப்போனார் அவரும்...."ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் வீட்டுக்கு அருகில் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர்......" என ஆரம்பிக்க மொத்த கூட்டமும் சிரிக்க தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் வழிந்தார்கள். சீப் கெஸ்ட்டும் கட்டுப்படுத்தமுடியாமல் சிரித்துவிட்டார்.

அடுத்து கோகுல கிருஷ்ணன், 6த் பி என என் பெயரை அழைக்க....கால்கள் நடுக்கத்தால் பின்ன ஆரம்பித்தது...அரை டவுசர் போட்டிருந்ததால் கால்கள் நடுங்குவது நன்றாகவே தெரிந்தது.

மேடைக்கு சென்றேன்....பக்கத்தில் எனது கிளாஸ் டீச்சர் நின்றுக்கொண்டிருந்தார்... நீயாவது வேற ஏதாவது எழுதி இருக்கியா? என்றார்கள். ஆல் த பெஸ்ட் சொன்னார்கள்.

நானும் எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு "ஒரு நாள் நேருவும் அவரது நண்பர்களும் பந்து......" என ஆரம்பித்தேன்...மொத்தக்கூட்டமும் பலமாய் சிரிக்க முற்படும்போது...இப்படியெல்லாம் நானும் பேசுவேன் என்றுதானே நினைத்தீர்கள்??? என கூடத்தைப்பார்த்து கேட்டேன்....

கூட்டம் அமைதியாகிவிட்டது. தொடர்ந்தேன்...."நேரு நண்பர்களுடன் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்...சிரமமான பதில்களை மாணவர்கள் படித்தபோது மற்றவர்களுக்கு சந்தேகம் வந்தது அதை நேரு தனது அறிவால் தீர்த்துவைத்தார். நேரு விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரர். நாமும் அவரை மாதிரி விளையாட்டிலும், படிப்பிலும்...." என இன்னும் கொஞ்சம் அளந்துவிட்டேன்.

பிறகென்ன மற்றவர்களைவிட வித்தியாசமான நேருவை சொன்னதால் எனக்கு முதல் பரிசாக கிரிக்கெட் பால் தந்தார்கள்!!!

அதற்க்குப்பிறகு எந்த ஒரு பேச்சுப்போட்டிக்கும் எழுதிக்கொண்டு போனதில்லை....சொந்தமாக ஏதாவது உளறிவிட்டு வருவேன். முதல் பரிசும் எனக்குத்தான்.

Sunday, September 8, 2013

சொல்லிவிடாதே!!!


சொல்லிவிடாதே!!!

இறுகிப்போன உன் இதயத்திற்க்குள்
கருகிப்போன நம் நினைவுகள்.
பழகிப்போன என் கால்கள்
விலகிப்போன உன் வீதிவரை - தினமும்
கலங்கிப்போய் வந்து நிற்க்கும்!!!

கடற்க்கரை பனி
பூங்காவின் வெறுமை
மத்தியான குளிர்
மாலையின் வெயில்
இரவின் வெளிச்சம் - உன்னால்
பித்தானது என் மனம்!!!

மூன்று முறை வந்துவிட்டேன்
சன்னலோர முகம் இல்லை
மொட்டைமாடி பார்வை இல்லை
உன் வீட்டு தெருவெங்கும் - நீ
விட்டுப்போன வாசம் மட்டும்!!!

என்னை....
ஸ்கூட்டரில் கடந்துப்போன உன் அப்பா
பின் இருக்கையின் உன் இடம் காலியாய்
படபடத்த பாவி என் மனம்
இல்லாத உன்னை இருப்பதாய்
வளையில் தாண்டியபோது - தானாய்
வளையும் என் கழுத்து!!!

இனி...
எப்போதாவது சந்திக்க கூடும்
நீ உன் கணவன் குழந்தையுடன்
நான் மட்டும் தனி மரமாய்
தயவு செய்து சொல்லிவிடாதே...
உன் குழந்தைக்கு என் பெயர் வைத்ததாய்
என்னையே மறந்த உனக்கு - வீணாய்
என் பெயர் இனி எதற்க்கு???

நம்பர் எட்டும் என் அன்பு மகனும்!!!நம்பர் எட்டும் என் அன்பு மகனும்!!!

இது எனக்கும் நம்பர் எட்டுக்குமான உறவுக்கதை. எனக்கு சின்னவயசிலிருந்தே நம்பர் எட்டு பிடிக்காது. காரணம் எட்டு ராசியில்லாத நம்பர் என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். எட்டில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எதையும் கஷ்டப்பட்டு அடைவார்கள் அல்லது தோல்வியடைவார்கள் என பலர் சொல்லக்கேட்டும் இருக்கிறேன்.

அதனாலோ என்னவோ எட்டு எனக்குப்பிடிக்காமல் போய்விட்டது. நல்ல காரியம் செய்தாலும், புதிதாய் ஏதாவது செய்தாலும் எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டுத்தொகை எட்டில் வந்தாலோ அதை தவிர்த்துவிடுவேன் அல்லது அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து விடுவேன்.

ஆனாலும் நன் மாட்டப்போகும் நாளுக்காக நம்பர் எட்டு எனக்காக காத்துக்கொண்டிருந்தான். அந்த நாளும் கூடவே வந்தது...

2004ஆம் வருடம் என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். சரியாக டாக்டரும் டிசம்பர் 20ஆம் தேதி நாள் குறித்திருந்தார். பெங்களூரில் வேலைசெய்துக்கொண்டிருந்த நான் டிசம்பர் 2ஆம் தேதி இரண்டு வார விடுமுறையில் ஊருக்கு சென்றேன். மனைவி அம்மா வீட்டில் பிரசவத்துக்காக இருந்ததால் நானும் அங்கு சென்றேன்.

அதற்க்கு முன்னமே பலவகையில் சாமியை வேண்டிக்கொண்டிருந்தேன். எட்டில் மட்டும் குழந்தைப்பிறக்க கூடாது என்று. பல கணக்குகளில் போட்டதில் கட்டாயம் பிரசவம் எட்டாம் தேதிக்கு பின்னர்தான் ஆகும் என்பதால் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன்.

எட்டாம் தேதி காலையில் இன்னும் பிரசவத்திற்க்கு 12 நாட்கள் இருக்க கடைசி மருத்துவ செக்கப்பிற்க்கு மனைவியும் நானும் செல்ல வேண்டி இருந்தது. நானும் எவ்வளவோ சொல்லியும் மனைவி வீட்டில் "குழந்தை பிறக்க இன்னும் பல நாள் இருக்கு டெஸ்ட்டுக்குத்தானே போகிறீர்கள் போய் வாருங்கள்" என்று கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

மச்சானின் ஜீப்பில் ஊட்டி மருத்துவ மனைக்கு சென்றோம். போகும் வழியில் மச்சானை மெதுவாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு போகச்சொன்னேன். ஆஸ்பிடல் வந்ததும் டோக்கன் வாங்கிவிட்டு உட்கார்ந்தோம்.

சிறுது நேரத்தில் மனைவி வலியால் முனக ஆரம்பித்தாள்....சாதாரண வலிதான் என்று நினைத்த வேளையில் அது பிரசவ வலி என்று டாக்டர் சொன்னதும் எனக்கு தலை சுத்தியது. வலியால் துடிக்கும் மனைவியை கடிந்தும் கொண்டேன். "இன்று வேண்டாம் என்று சொன்னால் கேட்டால்தானே" என்று செல்ஃபிஷ்ஷாகவும் நடந்துக்கொண்டேன். பாவம் அவள் என்ன செய்வாள்.

சிறிது நேரத்தில் மனையின் வீட்டு சொந்தங்களும், என் வீட்டு சொந்தங்களும் ஆஸ்பிடல் வந்து சேர...எல்லோரும் குழந்தை நல்ல படியாய் பிறக்க வேண்டும் என நினைத்து பிரார்த்திக்க நான் மட்டும் இன்று எட்டாம் தேதி குழந்தை வேண்டாம் கடவுளே என்றுதான் வேண்டினேன்.

10 மணிக்கு ஆஸ்பிடல் வந்த நாங்கள் மணி 12 ஆகியும் குழந்தை பிறக்க வில்லை....அவளின் கதறல் எனக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. எல்லோரும் டென்ஷனில் இருக்க நான் மட்டும் எட்டு டென்ஷனில் இருந்தேன்.

மணி 2 ஆகியும் பிரசவம் ஆகாதலால் டாக்டர் "குழந்தையின் தலை திரும்பி இருப்பதாகவும் சிசேரியன் செய்யவேண்டும்" எனவும் கூறினார்கள். நான் மறுத்துவிட்டேன். அந்த சிசேரியனை நாளை செய்யுங்கள் என்று சொன்னதில் டாக்டர் டென்ஷனாகி "படிச்சவருதானே நீங்க?" எனக்கேட்டு விட்டு வேகமாக சென்றுவிட்டார்....

எல்லோரும் என்னை கடிந்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் முட்டாள் தனமாக முரண்டு பிடித்துக்கொண்டிருந்தேன். மணி மூன்றரை ஆக..."உங்க மனைவியை உயிரோடு பார்க்கணும்னா ஆபரேஷன் பண்ணியாகணும்" என்று சொன்னதால் வேறு வழியில்லாமல் கையெழுத்துப்போட்டேன். ஆபரேஷன் தியேட்டருக்குள் மனைவியை கொண்டு போனார்கள்.

அன்றைய எட்டாம் தேதி சுமார் 4 மணிக்கு என் அம்மா டவல் சுற்றிய குழந்தையுடன் அறைக்குள் வந்தாள்.

ஆசையால் என் அப்பா கேட்டார் " என்ன குழந்தை?"

என் அம்மாவும் கிண்டலாய் "ம்ம்ம்ம்...பொண்ணு" என்றாள்.

என் அப்பாவும் ஓடிப்போய் குழந்தையை வாங்கி " பொய் சொன்னயா...பையந்தான் பொறந்திருக்கான்" என்றார்.

என் கையில் அன்பு மகன் வந்து தவழ்ந்த போது எவ்வளவு பெரிய தவறை செய்துவ்விட்டோம் என நினைத்தேன். ஒரு சாதாரண நம்பருக்காக மோசமாக நடந்துக்கொண்டோமே என என்னையே கடிந்துக்கொண்டேன்.

இதில் ஒரு ஆச்சர்யம்....

மகன் பிறந்தது 8ஆம் தேதி

மகன் பிறந்த நேரம் மாலை 04:04 - கூட்டுத்தொகை 8

8ஆம் நாள் ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனோம்

08/12/2004 கூட்டினால் 17 - அதுவும் கூட்டுதொகையில் 8 தான் வருகிறது.(ஆக பிறந்த தேதியும் எட்டு, பிறந்த நேரமும் எட்டு, பிறந்த தேதி, மாத, வருட கூட்டுத்தொகையும் எட்டு!!!).

ஆக ஒரு எட்டு வேண்டாம் என்று நினைத்த எனக்கு எல்லாமே எட்டில் வந்து முடிந்தது. இதுதான் கடவுளின் செயல்.

கொசுறு: இப்போதெல்லாம் எட்டை வெறுப்பதில்லை. எட்டில் எந்த வேலை வந்தாலும் செய்கிறேன். சினிமாவுக்கு டிக்கெட் புக் செய்தாலோ, பஸ்ஸில் சீட் காலியாய் இருந்தாலோ எட்டில்தான் உட்காருவேன். எட்டாம் நம்பர் கடையில்தான் சரக்குமடிப்பேன். அவ்வளவு ஏன்....35 சைசில் பேண்ட்டை தேடிக்கொண்டிருக்கிறேன், மாலியில் கிடைக்கிறது. சமீபத்தில் எட்டாம் தேதிதான் வெளிநாட்டு வேலையிலும் ஜாய்ன் செய்தேன்.

நானும் எட்டும் ராசியாகிவிட்டோம் என் மகனால்!!!


தேசிங்கு ராஜா - திரை விமர்சனம்


தேசிங்கு ராஜா - திரை விமர்சனம்

மனங்கொத்தி பறவைக்குப்பின் எழிலின் அடுத்த குயிக்கான படைப்பு இந்த தேசிங்கு ராஜா. சமீபத்தில் பார்த்த படங்களில் லாஜிக்கை பற்றி கவலைப்படாமல் சிரிக்க வைக்கவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம் இது என நினைக்கிறேன்.

சூரி மற்றும் சிங்கம்புலியின் காமெடியில் படம் கொஞ்சம் எழுந்து நிற்க்கிறது. ஜாலியா படம் பார்க்க வர்ரவங்களுக்காக சுமாரான கதையையைக்கொண்டு வலுவில்லாத காட்சி அமைப்புகளால் சுமாராக எடுக்கப்பட்ட "நல்ல" சிரிப்பு படம் இந்த தேசிங்கு ராஜா!!!

கதை...

அதே அரதபழசான பழிவாங்கும் கதை. இரண்டு குடும்பங்களுக்குள் ஜன்ம் பகை இருக்க அந்த வீட்டு நாயகனும், இந்த வீட்டு நாயகியும் காதலிக்க குடும்பங்கள் எதிர்க்க, நாயகியின் அப்பா இறக்க நாயகன் தாலியையை கட்டி நாயகியை வீட்டுக்கு அழைத்துவர, நாயகனை பழிவாங்க நாயகி நாயகனுடன் வர...கடைசியில் உண்மை தெரிந்து சுபம் என்று மங்களம் பா(ஆ)டுகிறார்கள் "ச்சியர் கேர்ள்ஸ்". இதில் வழக்கம்போல் நாயகியை ஒறுதலையாய் காதலிக்கும் தறுதலை அத்தைமகன் சூரி...பயங்கர வில்லனாய் காட்டி அட்டகத்தி வில்லன் ஆகியிருக்கும் நாயகியின் சித்தப்பா, பல நாட்களுக்கு பின்னர் திறையில் வந்திருக்கும் கர கர வினுசக்ரவர்த்தி, அடி வாங்கிக்கொண்டே இருக்கும் சிங்கம்புலி, சுமாரான கதையில் சுமாராய் நடித்திருக்கும் நாயகன் விமல், எல்லோரையும் தூக்கி சாப்பிட்டிருக்கும் அழகு தேவதை பிந்து மாதவி....!!!

கேடிபில்லா..கிலாடி ரங்காவை விட இந்த படத்தில் பிந்துவுக்கு அழகு கூடி இருக்கின்றது. புடவையும், அவளின் உயரமும் அழகு தேவதைதான். விமல் அதே அறைகுறை தாடியுடன் உப்பு சப்பில்லாத நடிப்பை தந்துவிட்டு போகிறார் (இண்ட்ரஸ்ட் இல்லாமல் நடித்தாமாதிரி இருக்கிறார்....எக்ஸப்ட் அந்த லிப் டு லிப் கிஸ் தவிர)

சூரியும், சிங்கம்புலியும் இல்லையென்றால் படம் படுத்திருக்கும். அவ்வப்போது அவர்களின் சிரிப்பலையில் படம் நம்மை உட்காரவைக்கிறது (ஆனால் வடிவேலுவின் கல்யாண காமெடியை ரீ டெலிகாஸ்ட் செய்திருக்கிறார்கள்). அதுவும் அந்த கடைசி கிளைமாக்ஸ் படு அபத்தம். பி அண்டு சி ஆடியன்சை குறிவைத்து தாக்கி இருக்கிறார் இயக்குனர் எழில். அதில் கிட்டத்தட்ட வெற்றியும் கூட.

இசை இமானா??? நம்ப முடியவில்லை.

பிளஸ் :
காமெடி, பிந்து.

மைனஸ் :
மற்ற எல்லாமே...

பன்ச் : ஆடியன்ஸ் மூளையை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்த காட்சிகளை போட்டு கொஞ்சம் சிரிப்பையும் வரவைத்து குழப்பி லாஜிக்கை மறக்கடித்திருக்கிறார் எழில்.

ஆக மொத்தத்தில்....

"தேசிங்கு ராஜா - மண் குதிரையில்!!!"

Sunday, September 1, 2013

ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்.


ஆதலால் காதல் செய்வீர் - விமர்சனம்.

ராஜபாட்டை படுதோல்விக்குப்பின் சுசீந்திரனின் ரீ எண்ட்ரீ இந்த ஆ கா செ. எங்க பிடித்தார் என்று தெரியவில்லை படத்தின் ஹீரோவை. யாராவது புரடியூசரின் மகனாக இருக்கலாம் அல்லது சுசீந்திரனின் தம்பியாகவும் இருக்கலாம்....நடிக்கவும் வரவில்லை, ரசிக்கவும் முடியவில்லை.

ஏதோ சமூகத்திற்க்கு நல்ல கருத்தை சொல்கிறேன் என்பதற்க்காக ஒரு ஆவணப் பட ஸ்டைலில் இருக்கின்றது ஆ கா செ. சினிமாவுக்கு தேவையான பல விஷயங்கள் இங்கே மிஸ்ஸிங்...காதல் வருவது, காதலிப்பது என எல்லாமே ஏன் எதுவுமே இண்ட்ரஸ்டிங் ஆக இல்லை (படித்த இளைஞர்களை இந்த அளவுக்கு முட்டாளாக வேறு எந்த படத்திலும் காட்டியதில்லை...நம்ம ஊரு பசங்களை தப்பாக எடைப்போட்டுவிட்டார் சுசீந்திரன், டேட்டிங் போகிறவர்களை அசிங்கப்படுத்திவிட்டார்... இந்த அளவுக்கா அறிவில்லாமல் போய்விட்டார்கள் நம்ம இளைஞர் சமுதாயம்...யாரை ஏமாற்றுகிறீர்கள் மிஸ்ட்டர் சுசீந்திரன். இந்த காலத்தில் எல்லாரும் பக்கா பிளான் செய்துவிட்டு போகிறபோது உங்கள் படத்தில் மட்டும் அதுவும் 21 ஆவது நூற்றாண்டில் இப்படி அடி முட்டாளாக காட்டினால் நாங்கள் ஏமாந்துவிடுவோமா??? இது நீங்கள் இளைய சமுதாயத்தின் திறமைக்கு ஏற்ப்படுத்திய அழுக்கு என சொல்லலாம்!!!)

கதை என்ன?

நடுத்தர வர்கத்தை சேர்ந்த ஒரு அழகான பெண்ணும், ஒரு மொக்கை பையனும் காதலிக்கிறார்கள்...பொய் சொல்லுகிறார்கள்...மஹாபலிபுரம் போகிறார்கள்....கர்ப்பமாகிறாள் மாணவி (பாவம் மஹாபலிபுரம் கெட்டுப்போனவர்கள் எல்லாம் அங்கேதான் போகிறார்கள் கோடம்பாக்க படங்களில்)...வீட்டுக்கு தெரிய இரண்டு வீட்டிலும் ஒத்துவராததால்....தைரியமில்லாதவன் அவன் என்று பெண் வெறுக்க...சுயனலவாதி என்று ஆண் மறுக்க குழந்தையும் பிறக்கிறது....பின் தாய்மார்களை கலங்க வைக்கும் அசாத்திய கிளைமாக்ஸுடன் முடிகிறது படம். இரண்டரை மணி நேரத்தில் வழக்கம்போல் தப்பு பண்ணாதீங்க மாணவர்களே என்று தப்புகள் செய்ய பல நூறு ஐடியாக்களை கொடுத்துவிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் அதனால் ஏற்ப்படும் பாதிப்பைக்காட்டி செண்டிமெண்ட்டாக முடித்து படத்தை வெற்றி படமாக்கியிருக்கிறார் சிசீந்திரன். நம் ரசிகர்களும் அழுதுக்கொண்டே வெளியே வந்து பாவம் அந்த கொழந்தை, ஆண்டவந்தான் காப்பத்தணும் என்று டிவி மைக்குகளில் பேட்டியும் கொடுக்கின்றனர்.


பிளஸ் :

படத்தின் பிளஸ் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு - கடைசி இரண்டு நிமிடம் வரும் அந்த குழந்தை...சபாஷ் இயல்பாய் அசத்தி இருக்கின்றது.

இரண்டு - ஹீரோயினின் நடிப்பு. அவ்வளவே!!!

மைனஸ்: மெதுவாக நகரும் கதை, நடிக்க எந்த தகுதியும் இல்லாத ஹீரோ, இரண்டாவது பாதியில் வரும் இரண்டு குடும்பங்களின் பிட்டு பிட்டான செயல்பாடுகள், வலுவில்லாத வசனங்கள், கல்லூரி மாணவர்களை விவரமில்லாதவரகளாக காட்டியது...வெறும் நாப்கின்னை வைத்து மகள் கற்பமானதை கண்டுபிடிக்கும் அம்மா, பிள்ளைகளின் வாழ்க்கையில் அக்கரை காட்டாத பெற்றோர்கள்...யுவனின் ரசிக்க வைக்காத பழைய டியூன்களை காப்பி யடித்த பாடல்கள் (இறுதி பாடலை தவிர)...வேண்டாம் இதற்க்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

பன்ச் : மக்களுக்கு அறிவுறை வழங்கறாமதிரி ஒரு கிளை நல்ல மாக்ஸை எடுத்துக்கொண்டு அதற்க்காக வலுவில்லாத கதையை ரிவர்சில் யோசித்திருக்கிறார் சுசீந்திரன். அனாதைகள் இப்படித்தான் உருவாகிறார்கள் என்று கல்லூரி மாணவர்களை கை காட்டிவிட்டு நடையைக்கட்டிவிட்டார் இயக்குனர்(எம்மாப் பெரிய கண்டிபிடிப்பு!!!). கடைசி ஐந்து நிமிடத்திற்க்காக இரண்டு மணி நேரத்தை வீணாக்கி இருக்கிறார். அதனால் வழக்கமாக இரண்டு பக்கம் விமர்சனம் எழுதும் நான் இன்று அரைப்பக்கத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

கடைசியாக சுசீந்திரனின் தத்துவம்....

ஆதலால் காதல் செய்வீர்
ஆதலால் காமம் கொள்வீர்
ஆதலால் கவசம் அணிவீர்!!!வாங்க சரக்கடிக்கலாம்!!!வாங்க சரக்கடிக்கலாம்!!!

(நீங்கள் சிரிக்காவிட்டால் அதற்க்கு நான் பொறுப்பல்ல!!!)

கூடிய சீக்கிரம் டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் மூடப்படும் என்பதால்....பழக்க மில்லாதவர்கள் நான் செய்த தவறை செய்யாமல் இதைப்படித்து நல்லறிவு பெற வேண்டி எழுதப்பட்ட உண்மை நிகழ்வு. "மது, அல்லது சோம பானம்" என்று கொச்சையாய் அழைப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை அதனால் "சரக்கு" என்றே சுத்தமான, அழகான தமிழ் பாழையில் அழைப்பதில் பெறுமைகொள்கிறேன்.

முதலில் எனக்கு சரக்குக்கான உறவு கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் ஒரு மினி பீரில் தொடங்கியது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஒரே ஒரு மினி பீரில் நான் மட்டை ஆகிவிடுவேன். இதுவரை வாழ்நாளில் ஹாட் அடித்ததில்லை என்பது கூடுதல் தகவல் (தைரியம் இல்லை). ஆனால் நாளடைவில் மிக துல்லியமான பயிற்சியின் மூலம் இப்போதெல்லாம் ஒரு பாட்டில் பீர் வரை குடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனாலும் இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை ஒரு கிங் பிஷர் பிரீமியம் பீர் குடிப்பதுதான் என் அதிக பட்ச சாதனை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!!! பல வருடங்கள் பீரை கிளாசில் ஊற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லி கால் கிளாஸ் பீரும் முக்கா கிளாஸ் நுறையும் இருக்க...இப்போதெல்லாம் பயிற்சியின் காரணமாக முக்கா பீரும் கால் நுறையும் ஆனது. அதன் சுவை அப்படியென்றும் சொல்லும்படி இல்லை.

(மிக குளோசான நண்பர்களை தவிர்த்து நான் பீர் அடிப்பேன் என்றால் யாரும் என்னை நம்புவதில்லை. அதுக்கு நான் சரிப்பட்டு வரம்மாட்டேன் எனவோ அல்லது என் மூஞ்சி சரக்கடிக்கும் தகுதியில் இல்லை என்றோ அவர்கள் நினைத்திருக்க கூடும். அதனால் நண்பர்கள் பாருக்கு போனாலும் என்னை அழைக்க மாட்டார்கள். அவர்களுக்கு மீதம் வைக்காமல் சினாக்ஸ்களை வேகமாக தின்றுவிடுவேன் என்பது என் மீது விழுந்த குற்ற்ச்சாட்டு).

பொதுவாக பார்களிலோ, பப்புகளிலோ நான் அவ்வளவாக குடிப்பதில்லை...காரணம் அரை பீரை குடித்தவுடன் நான் புலம்ப ஆரம்பித்துவிடுகிறேனாம் (நம்பமாட்டேன்...நான் இதுவரை புலம்பி கேட்டதில்லை). அதனால் என் மனைவி இரண்டு மாதத்திற்க்கு ஒரு முறை வீட்டில் மகன் தூங்கிய பிறகு சரக்கடிக்க சம்மத்தித்தாள். ஆனாலும் பீர் வாங்கும் செலவைவிட அதற்க்காக வாங்கும் ஸ்நாக்ஸ் செலவு அதிகமாகிறதாக கோபித்தும் கொண்டாள். ஒரு 90 ரூபாய் பீருக்கு ஒரு பாக்கெட் மசாலா கடலை, உருளைகிழங்கு சிப்ஸ், மிக்சர், வீட்டிலிருக்கும் ஆப்பிள் பழம் மற்றும் முறுக்கு என கிட்டத்தட்ட 200 ரூபாய் வரையும், என்னமோ பத்து பேர் உட்கார்ந்து சரக்கடிக்குமளவுக்கு நொறுக்கு தீனிகளை வாங்கிக்கொள்கிறேன். இந்த பிலடப்பை எல்லாம் என் மனைவி சகித்துக்கொண்டது பெரிய விஷயம்.

அதுவும் வரும் சனிக்கிழமை இரவு சரக்கடிக்க நினைத்துவிட்டால் புதன் கிழமையிலிருந்தே பயங்கரமாய் தயாராகிவிடுவேன். எல்லா அப்பாயிண்ட்மெண்ட்களையும் கேன்சல் செய்துவிடுவேன். ஆபீஸில் இருந்து வேகமாய் வந்து டாஸ்மாக்கில் நண்பரை அனுப்பி ஒளிந்துக்கொண்டு வாங்கிய ஒரு பீரை பையில் வைத்து சயின்ஸ் லாப்பில் ரசாயனக்கலவை குடுவையை பத்திரமாக எடுத்து வருவது போல் எடுத்து வருவேன். மகன் இருக்கானா எனப்பார்த்து ஃபிரீசரில் வைப்பதற்க்குள் டாவு கிழிந்துவிடும். அதும் அன்றைக்கு பார்த்து தினமும் 8 மணிக்கு தூங்கிவிடும் மகன் தூங்காமல் முரண்டு பிடிப்பான். எனக்கு ஒரு பீரை அடிக்க கிட்டத்தட்ட 2 முதல் 3 மணிநேரம் தேவைப்படுவதால் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து தூங்க வைப்பதற்க்குள் சரக்கடிக்கும் ஆசையே குறைந்துவிடும்.

இப்படியாக இரவு 11:30 வரை சரக்கடிக்கும் நான் அதற்க்கு பின் செய்யும் புலம்பல்களை மறு நாள் மனைவி சொல்லக்கேட்கும்போது முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு "அப்படியா", "நானா" என்று இரு வார்த்தைகளில் எஸ்கேப் ஆகிவிடுகிறேன்.

சரக்கடித்தப்பின் என்ன மாதிரி புலம்புகிறேன் என்று கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பார்க்கையில் சரியான காரணம் எனக்கு பிடிபடவில்லை. மண்டைக்குள் ஏதோ இசை கேட்கும், கொஞ்சம் தைரியம் வரும், சுற்றத்தை பற்றி கவலையில்லையாமல் பேசிக்கொண்டே இருப்பேன், சுதந்திரத்தை உணர்வேன், ஹீரோவாக இருப்பேன்...எதிரிகளையும்  என்னை ஏமாற்றியர்களின் ஞாபகம் வந்து அவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுப்பேன்...முடிந்தால் எட்டு கட்டையில் பாட்டும் பாடுவேன் கடைசியில் எனை மறந்து கொஞ்சம் மிதப்பேன்!!! இப்படியெல்லாம் சும்மா வேணா சொல்லிக்கலாம்.

மறு நாள் லேட்டாய் எழுந்திருப்பேன். மனைவி ஏதும் பேசமாட்டாள். அவளின் கோபம் ஒரு இரண்டு நாட்களுக்கு தொடரும்.

என் வீட்டை சுற்றி இருப்பவர்களுக்கோ, பக்கத்து வீட்டுக்காரருக்கோ நான் சரக்கடிப்பதில்லை என்றே சொல்லியிருக்கிறேன். காரணம் அவர்களும் ஒரு ரவுண்டு வேண்டும் என்று உட்கார்ந்துவிட்டாள் என்ன செய்வது என்கிற கவலை. ஆனால் உண்மையில் நான் சரக்கடிப்பதில்லை என்று சொல்லும்போது மற்றவர்களின் பார்வையில் நாம் பல படிகள் உயர்ந்து நிற்போம் பாருங்கள் அந்த பார்வைக்காகத்தான் சரக்கடிப்பதை ரகசியமாக வைத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாது சரக்கடிக்காதவர்கள் "நல்லவர்கள்" என்கிற கூற்றும் இங்கே காலங்காலமாக உண்டு.

அதைவிட பெரிய கூத்து சரக்கடித்தப்பின் மறுநாள் வீட்டை சுத்தம் செய்து பீர் வாசனை போக ரூம் ஃபிரஷ்னர் அடித்து சரக்கடித்த தடயமே இல்லாமல் செய்துவிடுவேன். அப்படியும் ஒரு முறை மூலையில் ஒளித்து வைத்த பீர் பாட்டில் மகன் கண்ணில் பட்டுவிட நான் சமாளித்த சமாளிப்புக்கு ஆஸ்கரே கொடுக்கலாம். பத்து நிமிடம் மகனுக்கு அது மருந்து என்கிற மாதிரி மெயிண்டெய்ன் செய்ய அவனும் ஒரே வார்த்தையில் "பீராப்பா" எனக்கேட்டுவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி விளையாட சென்றுவிட்டான்.

சரக்கடித்த பீர் பாட்டிலை இரண்டு மாதம் கழித்து பேப்பர்காரனுக்கு போடும் போது ரொம்ப உஷாராக மெதுவாக கதவை திறந்து எட்டிப்பார்த்து மற்ற கதவுகள் சாத்தியிருக்க, பக்கத்து வீடுகளுக்கு பாட்டிலின் சப்தம் வராமல் வேஸ்ட் துணியில் சுற்றி பேப்பர் பைக்குள் வைத்து "இதுக்கு காசு வேணாம், காசை நீயே வெச்சுக்கப்பா" என்று மெதுவாய் சொல்லி கொடுக்க....அவனும் கொஞ்சம் சப்தமாய் "என்ன சார் இந்த பீர் பாட்டில் மாதிரி வேற பாட்டில்ஸ் இருக்கா?" என்று என் மானத்தை ஒரு முறை கப்பலேற்றிவிட பிளாட்டில் இரண்டு நாட்கள் நான் யார் கண்ணிலும் படாமல் இருந்தது வேறு கதை.

அடுத்த முறை என் பேகை அக்குளோடு அணைத்துக்கொண்டு பம்மி பம்மி போகையில் "என்ன சார் வீக்கெண்ட் பார்ட்டியா?" என்று நமட்டு சிரிப்புடன் பக்கத்து வீட்டு பெருசு இப்போதெல்லாம் கேட்பார். நானும் வழிந்துக்கொண்டே நகர்ந்துவிடுவேன்.

Monday, August 19, 2013

தலைவா - திரைப்பட விமர்சனம்தலைவா - திரைப்பட விமர்சனம்

முகநூலில் தலைவா படத்தையும் அடுத்து மொத்தமாக விஜயையும் மைனஸ் கமெண்டுகளால் புரட்டி போட்ட புரட்சியாளர்களின் ஸ்டேட்டஸ்களின் எண்ணிக்கைகளால் எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றிதான் படத்தை பார்த்தேன்.

இப்போதுதான் புரிகின்றது அவர்கள் அத்தனை பேரும் அஜித்தின் ரசிகர்களாகவும் (அவங்க ரெண்டுபேரும் நல்லாத்தான் இருக்காங்க), அம்மாவின் அடிபொடிகளாகவும் இருக்கிறார்கள் என்று. ஆனால் பாவம் அவர்களுக்கு தெரியாது இந்த படம் தமிழ்நாட்டில் வெளியானால்  நல்ல வரவேற்ப்பு கட்டாயம் இருக்கும் என்று.

படத்தை தமிழ் நாட்டில் வெளியிட செய்யாததற்க்கு படத்தின் மூன்று வசனங்கள்....

1. நம்ம ஊர் அரசியலில் சேர எல்லா அம்சமும் வந்துருச்சு உனக்கு என்று விஜயை பார்த்து சந்தானம் சொல்வது.

2. தலைவன் பட்டம் நம்மள தேடி வர்ர விஷயம்...நாமளா தேடிப்போறதில்லை.

3. கொஞ்சம் விட்டா இன்னும் நல்லா வருவான் - வில்லன் விஜயை பார்த்து சொல்வது.

இன்னும் நிறைய இருந்தாலும் இது யாருக்கோ புளியை கரைத்திருக்கின்றது என்பது நிஜம்.

அப்படியென்றும் மோசமான கதையோ அல்லது போரடிக்கும் படமோ அல்ல என்பதுதான் நிஜம். இவர்கள் சொல்வது மாதிரி நாயகன், தளபதி, தேவர்மகன் போன்ற படங்களின் சாயல்கள் இல்லை (அப்பரண்டிஸ்களா இந்த படங்களே வெளிநாட்டு படங்களின் காப்பிதானேபா!!!). மும்பை தமிழர் வாழும் பகுதி தாதாவையோ அல்லது மக்களுக்காக தலைவனாகும் ஒருவனை பற்றிய கதையை சொன்னால் அது கட்டாயம் நாயகனின் வேலுநாயக்கரைத்தான் நம் கண் முன் நிறுத்தும் அல்லது பால் தாக்கரேயை ஞாபகப்படுத்தும். அதற்க்காக முதல் 20 நிமிடங்கள் வரும் சத்யராஜின் காட்சிகளையும், அதை தொடர்ந்து விஜயின் காட்சிகளை அந்த படங்களின் காப்பி என்றால் எப்படி???

அப்படியெனில் ரவுடிகள் எல்லோரும் கொலை செய்கிறார்கள், கஷ்டப்படுத்துகிறார்கள், கற்பழிக்கிறார்கள் அதற்க்காக ரவுடிகள் வந்தால் அதை மற்றொரு ரவுடிகளின் படத்தோடு கம்பேர் செய்வது லூசுத்தனம்.

சரி கதைக்கு வருவோம்....

நாசர் மும்பை தமிழர் பகுதியின் தலைவன். ஒரு கட்டத்தில் அவர் சாகும்போது தனக்கு அடுத்த நிலையில் இருக்கும் சத்யராஜிடம் தனது மகனை ஒப்படைத்துவிட்டு இறக்கிறார். சத்யராஜ் தலைவனாகவேண்டிய கட்டாயம், நாசரை கொன்ற இன்னொரு தாதாவின் கதையை  முடித்து அவரின் மகனை கொல்லாமல் விடுகிறார் பின்னர் கொல்லாமல் விட்ட வில்லனின் மகனால் தனது மனைவியையும் பறிகொடுக்கிறார்...இதனால் தன் மகனையும், நாசரின் மகனையும் ஆஸ்திரேலியாவில் யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறார். விஜய் சந்தானம் ஆஸ்திரேலியாவில் நடன டீம் வைத்து கூடவே வாட்டர் பிசினஸும் செய்கிறார்கள். விஜயிடம் நடனம் கற்க வரும் அமலாபாலை காதலிக்க தனது அப்பாவுக்கு தெரியாமல் அமலாபாலின் அப்பா சுரேஷின் கட்டாயத்தால் மும்பைக்கு வருகிறார்கள். இங்கே யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு முதல் டிவிஸ்ட்.... சத்யராஜ் சிறை செல்ல அந்த ஜீப்பும் வில்லனின் சதியால் வெடிக்க அவரது மகன் தலைவனாகிறான்...பின்னர் நடக்கும் கதைதான் இரண்டாவது பாதி "தலைவா".

முக்கியமாக படத்தில் வரும் இரண்டு டுவிஸ்ட்டுகள் யாரும் எதிர்ப்பார்க்காதது, அதற்க்காக இயக்குனர் விஜயை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இரண்டாவது பாதியின் முற்பகுதிகளில் கொஞ்சம் மெதுவாக கதை நகர்ந்தாலும் ஆங்காங்கே வரும் சந்தானத்தின் நகைச்சுவை நம்மை ரிலாக்ஸ் செய்கிறது. வேறு என்ன செய்ய மும்பை தலைவனை பற்றி கதை சொன்னால் நாயகன் சாயல்தான் வரும்...காரணம் அது இயக்குனரின் திறமையின்மை அல்ல....தலைவன்கள் போலீஸ் செய்யாததை செய்பவர்கள், மக்களுக்கு உதவி செய்பவர்கள், சில நேரங்களில் சட்டத்தை கையெலெடுப்பவர்கள் கடைசியுல் எட்டப்பன்களால் சாகடிக்கப்படுவார்கள் இதை விடுத்து வித்தியாசம் காட்ட முடியாது என்பதால் அதே பாணியில் பயணித்து இருக்கிறார் இயக்குனர் விஜய்.

தலைவா....தளபதியின் நடிப்பில் எதார்த்தம் அதிகம், மிகவும் கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார். முன் பாதியில் அமலாபாலுடம் ஆடும் டான்ஸிலும், பின்னர் காதலிலும். ஜாலியான விஜய் பின்பாதியில் சீரியஸ் ஆகி விடுகிறார். பின் பாதியில் கொஞ்சம் காஸ்ட்டியூம் மாற்றியிருக்கலாம்...அவ்வளவாக கதையோடு ஒட்டவில்லை.

சந்தானம் காமெடிகள் அவ்வளவாக இல்லையென்றாலும் சந்தானம் வரும் இடங்களில் சிரிக்காமல் விட்டதில்லை. அமலா பாலை காதலித்து பல்பு வாங்குவதிலும் விஜயை கிண்டலடித்து அவரின் டான்ஸ் மூவ்மெண்ட் காட்டுவதிலும் நக்கலும் நையாண்டியும் அதே.....ஆனால் சித்தார்த்துக்கு லவ் ஐடியா சொல்லும் "மோக்கியா" இந்த படத்தில் விஜயிடம் லவ் ஐடியா கேட்பது கொஞ்சம் ஓவர்.

சத்யராஜ் பால் தாக்கரேயை நினைவூட்டினாலும் அவரின் நடிப்பு சூப்பர். கொஞ்ச நேரம் வந்தாலும் கம்பீரமாய் தெரிகிறார்.

அமலாபால்....அழகான காதலி திடீரென்று போலீஸ் அவதாரம் எடுத்து படத்தில் முக்கிய திருப்பத்தை தருகிறார். கடைசியில் விஜய்க்கு பல வகையில் ஒத்தாசையாக இருந்து தலைவனை தயாராக்குவது படத்துக்கு பலம்.

முக்கிய வேடத்தில் பொன்வண்ணன். கடைசி நேரத்து அதிர்ச்சிக்கும் படத்தின் இறுதி பரபரப்புக்கும் வலுசேர்க்கிறார்.

வழக்கம் போல் வில்லன்...இந்திக்காரர் கர்ஜிக்கிறார், செத்துப்போகிறார்....

படத்தில் இன்னும் ஏகப்பட்ட நடிகர்கள்....அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

சரி மைனஸ்களை பார்ப்போமா???

நாசரின் வேடத்தில் இருக்கும் ஓட்டை

சத்யராஜை கொல்லவந்தவர்கள் சத்யராஜின் மனைவி குறுக்கே பாய அவளை கொன்றுவிட்டு துப்பாக்கிகளில் தோட்டாக்கள் இருந்தும் சத்யராஜை கொல்லாமல் போகிறார்கள்....அது ஏன் என்று புரியவில்லை....ஒரு வேளை தமிழ் திரைப்பட நியதியாய் இருக்குமோ???

மிகப்பெரிய தலைவனான சத்யராஜின் மனைவியின் திதியின் போது திதி செய்யும் சாமி கேட்பார் "பிண்டம் வைக்க இறந்தவங்களோட பையன் இருந்தா வர்ச்சொல்லுங்கோ"...தேவையில்லாத வசனம் இது!!! அந்த ஏரியாவின் தலைவனான சத்யராஜுக்கு வருடா வருடம் திதி செய்யும் அந்த ஏரியா சாமிக்கு தெரியாததா என்ன?

அமலாபாலின் பின்னாடி சுற்றும் வயதானவர்களை காட்டி வயதானவர்களையும், பெருசுகளையும் கேவலப்படுத்துகிறார்கள். வெளிநாட்டு வாழ் பெருசுகளையும் அசிங்கப்படுத்துகிறார்கள்.

விஜயின் அப்பா ஒரு மிகப்பெரிய தாதா என்பது விஜய்க்கே தெரியாதாம்....ஏன் சார் ஆஸ்திரேலியாவில் தமிழ் பேப்பர் கிடைக்காதா அல்லது இண்ட்டர்னெட் வசதிகள் இல்லையா??? தலைவா விஜய் அந்த அளவுக்கு கரண்ட் நியூஸ் அப்டேட் இல்லாதவரா???

அண்ணா சத்யராஜுக்கு எதிராக ஒரே இரவில் போலீஸ் கட்சி மாறுவது அபத்தம்.

பாடல்கள் அவ்வளவாக படத்தின் வெற்றிக்கு உதவவில்லை. இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.

படத்தில் ஆங்காங்கே முன்னர் வந்த பல படங்களின் சாயல்.

தாதாக்களின் படங்களில் வரும் அதே லஞ்சம் வாங்கும் மொக்கை போலீஸ். சட்டத்தை போலீஸ் இந்த படத்திலும் கழட்டி எறிந்திருக்கிறார்கள்.


பிளஸ் :

எதிர்ப்பாராத பல திருப்பங்கள்.

விஜய் மற்றும் சந்தானம் கூட்டணி.

சத்யராஜ் மற்றும் பொன்வண்ணன்.

அதிக அரசியல் நெடி இல்லாதது படத்துக்கு பிளஸ்.

பன்ச்:

விஜய் எந்த படம் நடித்தாலும் சிலருக்கு அது புடிக்காது அது தெரிஞ்ச விஷயம். ஆனா அவர்களில் சிலர் தங்களின் முகனூல் லைக்குகளுக்காக விஜயை கலாய்ப்பது தேவையற்றது. தலைவா விஜயின் மோசமான படமும் அல்ல, மிகச்சிறந்த படமும் அல்ல. ஏமாற்றாத ஒரு எண்ட்டடெய்னர்!!!

தலைவா - இன்னும் கொஞ்சம் வருடங்கள் காத்திருந்தால் தலைவன் ஆக வாய்ப்புண்டு


மாலத்தீவு எனும் நீலத்தீவு - பயண கட்டுரை!!!மாலத்தீவு எனும் நீலத்தீவு - பயண கட்டுரை!!!

திடீர் பயணம்...சட்டென்று அமைந்ததால் தவிர்க்க முடியாமல் போக வேண்டிய சூழ்நிலை. கிளம்பி வந்துவிட்டேன். முதலில் சென்னையிலிருந்து இலங்கை கொழும்புவிற்க்கு பயணம். ஏர் இந்தியா, கிங் ஃபிஷரை விட மிக சிறந்த கவனிக்கப்படவேண்டிய விமான சேவை. குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணம். முக்கியமாய் அவர்களின் விருந்தோம்பல் அதுவும் சாப்பாட்டை சொல்லியே ஆகவேண்டும்.

சூடான சாதத்துடன் கத்திரிக்காய் பொரியல் செய்து நம்மை அசத்தினார்கள். ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழையும் குழைத்து பேசியது அழகோ அழகு. ஒன்றரை மணி நேர பயணத்தில் கொழும்பு வந்தடைந்தவுடன் ஒரு முக்கால் மணிநேர காத்திருப்புக்குப்பின் மாலத்தீவுக்கு சிறிய விமானத்தில் பயணம் அதே இலங்கை விமான நிறுவனம்தான்.

மறுபடியும் சாப்பாடு இந்தமுறை கிச்சடி. சுவைக்கு பஞ்சமில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் மாலத்தீவின் அருகே வர சன்னல் ஓரத்து இருக்கை என்பதால் கீழே பச்சை நிற நீரில் நுரைகள் தள்ளும் நீல நிறத்தீவுகள் ஆங்காங்கே கடலில் மிதக்கும் சொற்க பூமிகள். மேலிருந்து பார்ப்பது ஆனந்தம். அலைகள் குறைவான கடலும் அதில் மிதக்கும் கப்பல்களாய் தீவுகள். கிட்டத்தட்ட மாலத்தீவில் மட்டும் சுமார் இரண்டு ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட தீவுகள் இருப்பதாய் சொன்னார்கள். அதில் 350 கொஞ்சம் பெரிய தீவுகள் அடக்கம். கிட்டத்தட்ட பல தீவுகளில் வெறும் ரெசார்ட்ஸ் மற்றும் நட்சத்திர பிதக்கும் வாட்டர் ஹோட்டல்கள் மட்டும்தான் இருக்குமாம். அங்கு இந்தியா, இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான் மற்றும் மாலத்தீவைச்சேர்ந்த வேலையாட்கள் எல்லா நிலையிலும் இருப்பார்கள். அந்தந்த தீவுகளுக்கு செல்ல வாட்டர் ஜெட் விமானங்களும் (தண்ணீரில் தரை இறங்கும்), சொகுசு கப்பல்களும் செல்லும். அங்கிருக்கும் பணியாளர்களுக்கு வருடம் ஒரு முறை ஒரு மாத விடுமுறையும், நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் ஒரு வருடம் அந்த தீவுக்குள் மட்டுமே இருக்க முடியும்.சரி மாலத்தீவின் தலைநகரான மாலி வந்துவிட்டது. ஆவலாய் இறங்கினேன். சிறிய விமான நிலையம். எல்லா செக்கிங்களை முடித்துவிட்டு வெளியே வந்தால் இருபதடி தூரத்தில் கடல். விமான நிலையமே ஒரு குட்டி தீவு என்பதால் அங்கிருந்து மாலி நகருக்கு (இரண்டாவது பெரிய நகரம்- மற்றும் தலைநகரம்) சிறிர ரக கப்பலில் அனைவரையும் ஏற்றிக்கொள்கிறார்கள். ஒரு பத்து நிமிட பயணத்தில் மாலி.

அதற்க்குள் இருட்டி விட்டதால் இரவின் ஒளியில் மாலித்தீவு ஜொலித்தது ரம்மியம். எனக்காக தயாராய் இருந்தது ஹோட்டல் அறை. அசதியில் உறங்கிப்போனேன்.

அடுத்த இரண்டு நாட்களில் மாலியை சுற்றியதில் சில தகவல்கள் உங்களுக்காக....பயணம் வருபவர்களுக்கு உதவும் என்பதால்...

பொதுவாக ஒரு பத்து அல்லது பதினைந்து கிலோமீட்டருக்குள் அடங்கிவிடுகிறது மாலி. அழகான கடர்கரை காஸ்ட்லியான போட்டுகள்...வித்தியாசமான வாழ்க்கை சூழல். மிதமான வெப்பம் அவ்வப்போது திடீரென மழை பெய்யும் சூழ்னிலை.

தயவு செய்து மது பானங்களையோ, இலங்கையில் வாங்கும் ஆல்கஹால் பாட்டில்களையோ எடுத்து வரவேண்டாம். இங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது.

எல்லாமே குறுகிய ரோடுகள் அதனால் தெருக்கள் கொஞ்சம் கூட்டமானதாகவே இருக்கும். சந்துகள் அதிகம் என்பதால் நமக்கு ரோடுகள் மறக்க வாய்ப்புண்டு.

முக்கியமாய் கவனித்தது மாலியில் கடைகளில் ஷட்டர்களோ இரும்பு கதவுகளோ இல்லை. கண்ணாடி கதவுகளில் சாதாரண பூட்டுகள்தான் இரவு வேளையிலும்.எப்போதும் காவலர்கள் ரோந்துகள் இருப்பதால் கொஞ்சம் பாதுகாப்பானதாகவே இருக்கின்றது.வியாபாரம் செய்பவர்கள் அடிக்கடி நமாஸ் செய்ய கடையில் "குளோஸ்ட்" போர்டுகளை தொங்க விடுகிறார்கள்.

அடுத்து மிக மிக்கியமான விஷயம் இங்கே வியாபார ஓனர்கள் மாலித்தீவு மக்கள் மட்டுமே. வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் இங்கே வியாபாரம் தொடங்க முடியாது ஆனால் வேலையாட்களாக இருக்கலாம். உண்மையிலேயே இது ஒரு சிறந்த ரூல்.

சாப்பாடு நான்வெஜ் அதிகம் முக்கியமாய் மீன்கள். காய்கறிகள், பழங்கள், பண்டங்கள் என கிட்டத்தட்ட மீன்களை தவிற எல்லாவற்றையும் இந்தியா, இலங்கையிலிருந்து மற்றும் சில முஸ்லீம் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் விலை கொஞ்சம் கூடுதல். ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை மிக குறைவே.

விஜிடேரியன் மக்களுக்கு (என்னய மாதிரி) தால், ரோட்டி, சாதம், சால் என்கிற சாம்பார் கிடைக்கிறது. எல்லா சாப்பாட்டிலும் கூடவே உடைத்த அப்பளங்களைத்தருகிறார்கள். பிரியாணிகளி அதிகமாக முந்திரி பழம் சேர்த்து சுவீட்டாய் தருகிறார்கள்.

பொதுவாக அறிமுகம் இல்லாத இடங்களிலும் கூட்டம் இல்லாத இருட்டான கடல் பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. திருட்டுகள் அங்கே நடக்க வாய்ப்புண்டு.

ஆண்கள் சுருள் முடிகளுடனும், எப்போதும் கையில் சிகரெட்டுடனும் கொஞ்சம் பயமுறுத்தும் தோற்றத்தில் இருக்கிறார்கள். பெண்கள் தலையில் துப்பட்டா மாதிரி துணியை வித்தியாசமாக சுற்றி ஷர்ட் பேண்ட் போட்டிருப்பார்கள் அழகானவர்களும் கூட.பொதுவாக ஆங்கிலம் எல்லோரும் பேசுவதால் மொழி பிரச்சனை இருக்காது. நிறைய மலையாளி பெண்களை பார்க்கலாம். ஆனால் உதவி ஏதும் செய்ய மாட்டார்கள். சந்தேகங்கள் கேட்பின் பட்டும் படாமல் பதில் சொல்லுவார்கள்.

கிட்டத்தட்ட 100 சதம் பணம் வெளிநாட்டு டாலரில் வருவதால் கொஞ்சம் பணக்காரத்தனம் தெரிகின்றது. அதுவும் சீனக்காரர்களின் பங்களிப்பு சுற்றுலாத்துறைக்கு பெரிய உதவியாக இருக்கின்றது. சீனர்களின் முக்கிய சுற்றுலா இடங்களில் மாலி மிக முக்கிய ஒன்று.

மொட்டைமாடிகள் கிடையாது. கட்டாயம் கூரை வைத்து மூடவேண்டும் என்பது அரசின் கட்டளை. அதே மாதிரி தண்ணீர் வீடுகளில் டேங்குகள் இல்லை பொது குழாய் மூலம் எல்லா வீடுகளுக்கும் தண்ணீர் ஒரேமாதிரியான சப்ளைதான்.

அழகழகான வலம்புரி சங்குகள், கடற் பாசிகள், அறிய பல கடல் பொருட்கள் இங்கே குறைவான விலையில். கடல் நீர் சுத்தமாக கீழிருக்கும் நிலம் தெரிவது சூப்பர்.

இந்தியா போன்ற மிகப்பெரிய இடங்களில் இருந்து வருபவர்களுக்கு மாலி ஒரு ஒரு மினியேச்சராகத்தான் தெரியும். மிதமான வெப்பம், அதிக மழை, குளிர் அவ்வளவாக இல்லாத நாடு.

வெள்ளிகிழமைகளில் 80 சதம் கடைகள் திறந்தைருக்க மாட்டார்கள். இத்தனை கேரள மக்கள் இருந்தும் ஒரு நாயர் டீ கடை இல்லை என்பது சோகம். அதுவும் தோசை, இட்லி....ம்ம்ம்ம்ம்...பார்க்கவே முடியாது!!! ஒரே ஒரு ஆத்மா பாலஸில் கிடைக்க வாய்ப்பிருக்கு.

குற்றங்கள் செய்தால் கடுமையாக தண்டனைகள் உண்டு. அதிக சத்தம் எழுப்பினாலோ, சப்தமாக டிவி பார்த்தாலோ போலீஸ் வந்து பிடித்துக்கொண்டு போகும்.

அப்பாடா அழகழகான குட்டி கார்கள் வீதியெங்கும். எல்லாமே மலேசிய இறக்குமதிகள். நிசான் மற்றும் டொயோடா கார்கள் அதிகம். குப்பைகள் அவ்வளவாக இல்லை.

மாலியில் பூனைகள் தவிற வேறு எந்த விலங்குகளையும் காணமுடியாது. மரங்களும் குறைவுதான்.

மாலியில் எங்கு சொல்ல வேண்டுமானாலும் டாக்ஸி கிடைக்கின்றது. 20 ருபியாவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கலாம் மாலியை ஒருமுறை.

நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒரு வாரம் தங்கி சுற்றிப்பார்க்க விமான கட்டணம் உட்பட கிட்டத்தட்ட இந்திய பணத்தில் 1,00,000 செலவாகும். இந்திய பணம் 3.6 ரூபாய்க்கு மாலியின் 1 ருபியா கிடைக்கின்றது.

உங்களின் அடுத்த பட்ஜெட்டில் மாலி பயணம் இருக்க வாழ்த்துக்கள்!!!

Wednesday, July 31, 2013

நம் மனம் சொல்வது என்ன? செய்வது சரியா???


நம் மனம் சொல்வது என்ன? செய்வது சரியா???

நிகழ்வு 1:

என் மகன் பள்ளியில் விளையாடுகிறான். அதில் கால் வழுக்கி விழுகிறான். அதனால் வலது முட்டியில் இருந்து இரத்தம் வடிகிறது ஆனாலும் வலியை பொறுத்துக்கொள்கிறான். வலி அவனை வாட்டுகிறது...ஆனாலும் அழவில்லை.

நிகழ்வு 2:

பள்ளியில் மகன் நடந்துக்கொண்டிருக்கிறான். பின்னார் வேகமாக ஓடிவரும் ஒரு மாணவன் என் மகனை தள்ளிவிட்டு அவனும் விழுகிறான். சிறிய வலி காலில் ஆனால் மகன் அழத்தொடங்குகிறான்...அந்த மாணவன் மன்னிப்பு கேட்டும் மகன் நிறுத்தாமல் அழுகிறான்.

வீட்டுக்கு வந்தவுடன் என்னிடம் கம்ப்ளெயிண்ட் செய்தான். பொறுமையாக கேட்ட நான் அவனிடம் சொன்னேன்.

போன வாரம் விழுந்து இரத்தம் வந்ததே ஏன் அழவில்லை என்று கேட்டேன்???

மகன் முழித்தான்.

நான் இதற்குண்டான உளவியல் விஷயத்தை சொல்கிறேன் என்று சொல்லி விளக்க ஆரம்பித்தேன்.

நாமாக விழுந்தால் நமக்கு வலித்தாலும், இரத்தம் வந்தாலும் கையால் தேய்த்துவிட்டு எழுந்து சென்றுவிடுகிறோம்.

ஆனால் அடுத்தவர் மூலமாக ஏதாவது நிகழ்ந்தால் நாம் அழுகிறோம் அல்லது அவரை மற்றவர்கள் அழைத்து கண்டிக்கும் வரை வலிப்பதாக நடிப்போம் அப்படியே வலித்தாலும் அதை பெரிய விபத்தாக காட்டிக்கொள்வோம்.

காரணம்...நாமாக ஏற்ப்படுத்திக்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நாமே பொறுப்பு என்பதால்தான் இந்த அமைதி. நம்மையே நாம் கண்டிப்பதில்லை.
அதே நேரத்தில் காயம் அடுத்தவரால் அறியாமல் செய்த தவறாக இருந்தாலும் நாம் அவரை விடுவதில்லை. காரணம் கை காட்ட ஒரு ஆள் கிடைத்துவிட்டதால்.

மகனுக்கு புரிந்ததா என்பது எனக்கு தெரியவில்லை!!!

அதனால் சொல்ல வருவது என்ன வென்றால் நம்மால் நமக்கு பிரச்சனை என்கிறபோது சும்மா இருக்கும் நாம், நம் பிரச்சனைக்கு அடுத்தவர் காரணமெனில் அதை பெரிய விஷயமாக நினைத்து அதை வளர்த்துவிட்டு வேடிக்கைப்பார்க்கிறோம் மனசாட்சி இல்லாமல்!!!

Thursday, July 25, 2013

நடிகன் ஆகணும்!!!
நான்கு வருட போராட்டத்திற்க்குப்பின்
நடிக்க வாய்ப்பு வந்தது
நடிகனாய் "வாழ"

இயக்குனர் அழைத்திருந்தார்
கேமராக் கோணங்களில்
அழகழகாய் அளவெடுத்தார்.

உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா?
உனக்கு கார் ஓட்ட தெரியுமா?
உனக்கு நீச்சல் தெரியுமா?
உனக்கு கராத்தே தெரியுமா?
உனக்கு ஆட தெரியுமா?
உனக்கு பாட தெரியுமா?
உனக்கு ஓட தெரியுமா?

எல்லாவற்றிர்க்கும் ஆம் என்றேன்
சந்தோஷத்துடன் முதுகில் தட்டி
"யு ஆர் செலெக்டட்" என்றார்
சந்தோசத்துடன் வெளியில் வந்தேன்.

கடைசி வரை அவர் கேட்கவே இல்லை
"உனக்கு நடிக்க தெரியுமா???" என்று!!!

Monday, July 22, 2013

தம்பி...நீ இன்னும் வளரணும்!!!


முழுக்க முழுக்க காமெடிக்குத்தான்...யார் மனதையும் புண்படுத்த அல்ல.


சார்....

முகநூலில் பிரபலம் ஆகணும்னா என்ன செய்யணும்??? - முகநூல் நண்பர்
அய்யோ....இதை ஏன் எங்கிட்ட கேக்குறீங்க? - நான்
உங்களுக்குத்தான் 30 லிருந்து 35 லைக்கு விழுதே...அதனாலதான் கேட்டேன்.
தம்பி...நீ முகநூலுக்கு புதுசா??? 300, 400 லைக் வாங்குறவங்க எல்லாம் இருக்காங்க, அவிங்க கிட்ட கேளுங்க - நான்
ம்ம்ம்...அவங்க பதில் சொன்னா உங்களை நான் ஏன் கேக்கபோறேன்!!! - நண்பர்
சரி...நான் கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லு, சரியா சொன்னா நீயும் பிரபலம் ஆகலாம் -நான்
நண்பரும் ஆவலுடன் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

சரி...இந்தியாவில பிரபலம் ஆகணுமா? தமிழ்நாட்டுல பிரபலம் ஆகணுமா? - நான்
நமக்கு தமிழ் மட்டும்தான் வரும்....தமிழ் நாட்டுல ஆனா போதும் - நண்பர்


1. உனக்கு அம்மாவை பிடிக்குமா??? - நான்
ரொம்ப பிடிக்கும் சார்.... - நண்பர்
நான் சொன்னது உங்க சொந்த அம்மா இல்ல....தமிழ்நாட்டு அம்மா!!!


2. உனக்கு கருணாநிதியை பிடிக்குமா??? - நான்
பிடிக்கும் சார்.... - நண்பர்
அப்படின்னா உன்னால இந்த ஜன்மத்தில முகநூல் பிரபலம் ஆகமுடியாது - நான்


2. உனக்கு பிரபாகரனை பிடிக்குமா??? - நான்
இல்ல சார்.... - நண்பர்
அட....நீ முகநூலில் போராளி கூட ஆகமுடியாது - நான்


3. உனக்கு பிஜேபி பிடிக்குமா??? - நான்
பிடிக்கும் சார்... - நண்பர்
கிழிஞ்சது...முகநூலில் நீ ஒண்ணும் கிழிக்கவும் முடியாது - நான்.


4. இளிச்சவாயன் கெடச்சா என்ன பண்ணுவ - நான்
பாவம் சார் அவிங்க....சும்மா விட்டுடுவேன் - நண்பர்
இளிச்சவாயன் கிடச்சா நம்ம மேதாவித்தனத்தை காட்டி அவன கதற கதற கமெண்டுகளில் கலாய்க்கணும் - நான்


5. தமிழ்நாட்டு பிரபலம் யாரைவாவது தெரியுமா? நான்
இல்ல சார்....
சும்மாவாவது அவங்களை வம்புக்கு இழுத்து பேமஸ் ஆகணும்

6. உலக அறிவு இருக்கா??? இல்ல வெளிநாட்டுல வேலை பண்றியா???
புரியலையே சார்....நண்பர்
அமெரிக்காவில் குண்டு வெடிச்சா உடனே அலறணும், இலங்கையில பிரச்சனைன்னா துடிக்கணும், அவ்ளோ ஏன் தில்லியில கற்பழிப்புன்னா "ஐ சப்போர்ட்" ந்னு போட்டோ போடணும்....ஆனா தமிழ்நாட்டுல ஒண்ணுன்னா கண்டுக்காம இருக்கணும். மழை ஸ்டேட்டஸ் போட்டு ஜாலியா இருக்கணும்.


7.சரி கடைசியா ஒண்ணு...மானம் ரோஷம் இருக்கா - நான்
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க....சோத்துல உப்பு போட்டு சாப்புடறேன் -  நண்பன்
வெள்ளந்தி....இதுக்கு நீ சரிபட்டு வரமாட்டே...போய் ஆபீஸ் வேலையை பாரு...முகனூல் எல்லாம் உனக்கு வேணாம்!!!

நண்பர் - ங்கே.......

Thursday, July 18, 2013

இனி
வாலியில்லா தமிழ்
"வாயி" ல்லா தமிழ் ஆகும்.

தமிழ் பாடல்
பா "டல்" ஆகும்

கவிதையில்
க "விதை" வீரியம் இழக்கும்

வாலியை இழந்ததால்
"வலி"  தான் மிஞ்சியது!!!

Saturday, July 13, 2013

காலை நேரத்து பெங்களூர் கதை!!!


2000 மற்றும் 2003 ஆண்டுகளில் பெங்களூரில் நான் கண்ட சம்பவம்.நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

அப்போதுதான் புதிதாக சென்னையிலிருந்து பெங்களூரில் வேலைக்கு சேர்ந்திருந்தேன். முதல் மாதம் சம்பளம் வாங்கி ஊருக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவில் ஊரிலிருந்து கிளம்பி திங்கட்கிழமை காலையில் சுமார் 5.00 மணிக்கு மெஜஸ்டிக் பஸ்டேண்ட் வந்து சேர்ந்தேன்.

புதிய இடம் என்பதால் அவ்வளவு பழக்கமாகாத பெங்களூர் பரபரப்பாய் இருந்தது. ஒருவரின் செயல் மட்டும் பஸ்டேண்டில் எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அந்த பக்கம் இந்தபக்கம் என மிகவும் பரபரப்பாய் ஓடிக்கொண்டிருந்தார். என் பஸ் வர நேரமானதால் தொடர்ந்து அவரை கவனித்தேன்.

பெண்கள் இருக்கும் இடங்களில் பொதுவாய் எல்லோரையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஒரு பெண்ணிடம் ஏதோ பேசினார்...பின்னர் நகர்ந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாய் அங்கும் இங்கும் சுற்றியவர் திடீரென கண்ணில் இருந்து மறைந்து போனார். பின்னர் கால்மணி நேரத்தில் மீண்டும் என் கண்ணில் பட்டவர்...கூட ஒரு இளம் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதைப்பார்த்தேன்.

நானும் அந்த பெண்ணைத்தான் தேடியிருப்பார் என நினைத்து அந்த பெண்ணை கவனித்தேன். சின்ன பெண் ஊரில் வந்திருப்பாள்....கண்களை அங்கும் இங்கும் அலையவிட்டு வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டே அவருடன் போய்க்கொண்டிருந்தாள்.

அடுத்த மாதம்....

அதே மாதிரி காலை வேளை ஊரிலிருந்து திரும்பினேன். அதே மெஜஸ்டிக் பஸ்டேண்ட்....சட்டென்று என் கண்ணில் பட்டார் அதே ஆள். இன்றும் பரக்க பரக்க அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.....என்னடா இது இன்றும் இவர் கண்ணில் படுகிறாரே என கவனித்தேன்.

சட்டென்று கொஞ்சம் நேரம் கழித்து இன்னொரு பெண்ணுடன் நகர்ந்து போனார். அவரின் செயல் எனக்கு வித்தியாசமாக பட்டதால்....ஒரு முடிவு செய்தேன். அந்த பெண்ணையும் நன்றாகவே கவனித்தேன்.....

அடுத்தநாள் பெங்களூர் வீட்டிலிருந்து 5 மணிக்கு காலையில் மெஜஸ்டிக் வந்தேன். இப்போது அந்த ஆளை நான் தேட ஆரம்பித்தேன்.

அதிசியம்....இன்றும் என் கண்ணில் பட்டார். அதே பரபரப்பாய் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.

எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. நீங்கள் நம்ப மாட்டீர்கள் மறுநாளும் இதே போல் வந்தேன். அன்றும் அந்த ஆளை பார்த்தேன். ஆனால் பாவம் அன்று அவன் அலைந்தான்...கடைசியில் பெண்கள் யாரும் அவனுடன் செல்லவில்லை.

கொஞ்ச நாளில் இந்த நிகழ்வை மறந்து போனேன். அதற்க்குப்பிறகு அங்கு இருந்த மூன்று வருடத்தில் இரண்டுமுறை ஊரிலிருந்து திரும்பும்போது அவனை பார்த்திருக்கிறேன். ஆனால் கவனிப்பதை விட்டுவிட்டேன்.

ஆனால்....கிட்டத்தட்ட இரண்டு வருடம் கழித்து ஒரு மாலை வேளையில் மெஜஸ்டிக்கில் ஒரு பெண்ணை பார்த்தேன். கையில் பிளாஸ்டிக் பையுடன் தலையுல் பூ வைத்து அப்பட்டமாக தான் ஒரு "அந்த மாதிரி பெண்" என்பதை காட்டிக்கொண்டிருந்தாள்.

சட்டென்று என் தலையில் பொறி தட்டியது....யோசித்தேன்....சட்டென்று கிடைத்தது பதில் அந்த பெண் "நான் முதன் முதலில் அந்த ஆளுடன் பார்த்த் பெண்". எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அனாலும் அதை உறுதி செய்ய அவளருகில் போனேன். என்னைப்பார்த்ததும் "200 ருப்பி பர்த்தியா" என்றாள். பொதுவிடத்தில் நான் அவளுடன் நிற்பதை பலரும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே போனார்கள்.

நான் அதுக்காக வரவில்லை...எனக்கு ஒரு தகவல் வேண்டும் என்றேன் (நான் கன்னடிகன் என்பதால் கன்னடத்தில்தான் பேசினேன்)

அவள் வித்தியாசமாக பார்த்தாள். போன வருடம் நீங்கள் ஊரிலிருந்து வந்த நாளில் பார்த்திருக்கிறேன்...ஒரு ஆளுடன் போனீர்கள் என்றேன்.

கண்கள் அகல பார்த்தவளை அழைத்துக்கொண்டு ஒரு ரெஸ்ட்டாரண்டுக்கு அழைத்து சென்றேன். அவள் விவரிக்க ஆரம்பித்தாள் தோசை சாப்பிட்டுக்கொண்டே....

அது....

"அந்த ஆள் ஒரு மாமா...ஆனால் சினிமா ஆசையிலோ, நடிகர்களை பார்க்கவோ அல்லது வீட்டில் கோபித்துக்கொண்டு பெங்களூர் வரும் பெண்களை சரியாக கண்டுபிடித்து அரை மணிநேரத்தில் அவர்களிடம் நல்லவனாக பேசி அவர்களை அழைத்துக்கொண்டு வந்துவிடுவானாம். பின்னர் நடிப்பாசை காட்டி கடைசியில் பெண்களை இந்த தொழிலுக்கு கொண்டுவருவானாம்...அதற்க்குத்தான் காலை வேலையில் அங்கே அலைகிறானாம்"

எனக்கு நம்ப முடியவில்லை...ஆனாலும் இதே வேலையா முழுநேரமும் இருப்பதால் புதிதாய் வரும் பெண்களை மோப்பம் பிடித்து மடக்கிவிடுவதில் அவன் கில்லாடிதான். இதற்க்காக ஒரு பெரிய நெட்வர்க்கே இருக்கின்றதாம். கொடுமை இதில் அந்த ஏரியா போலீசும் உடந்தை.

அவள் கையில் 500 ரூபாயை திணித்துவிட்டு ஊர் போய் சேருங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவள் போகமாட்டாள் என்பது வேறு விஷயம்!!!

இதோ....பத்து வருடம் கழிந்துவிட்டது பெங்களூரை விட்டு வந்து....அந்த ஆளுக்கு கொஞ்சம் வயதாகி இருக்கலாம்...ஆனாலும் இன்றும் அங்கே அலைந்து அப்பாவி பெண்களை தேடிக்கொண்டிருக்க வாய்ப்புண்டு!!!

நீங்களும் பார்த்திருக்க வாய்ப்புண்டு!!!

Friday, July 5, 2013

ராஞ்சனா - திரை விமர்சனம்.


ராஞ்சனா - திரை விமர்சனம்.

சிங்கம் 2 பார்க்கப்போன நான் சிங்கம் 2 டிக்கெட் ரிலீஸாகும் இன்று சுலபமாக கிடைக்கவே வேண்டாம் என்று சொல்லிவிட்டு ராஞ்சனா பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

கலர்ஃபுல்லான பனாரஸில் தமிழ் பூசாரியின் துடுக்கு மகன் முகுந்தன் என்கிற தனுஷ், அவனுடன் சின்ன வயதிலிருந்தே இருக்கும் நண்பனும், தனுஷை ஒருதலையாய் காதலிக்கும் பக்கத்து வீட்டு பெண். கடவுள் வேடம் அணிந்து வீடு வீடாக "ஹர் ஹர் மஹாதேவ் சொல்லி" பைசா கலெக்க்ஷன் செய்யுமிடத்தில் முஸ்லிம் பெண் ஸோயாவை பார்த்ததும் லவ்வுகிறான். பள்ளியில் துரத்தி துரத்தி காதல் சொல்லி ஒருவழியாய் அவளையும் ஒத்துக்கொள்ள வைக்கிறான்.

இந்து பய்யனை லவ்வும் விஷயம் வீட்டுக்கு தெரிய அவளை இன்னொரு ஊருக்கு அனுப்பி வைக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து ஸோயா கல்லூரி பெண்ணாய் வர தன் பழைய காதலை அப்படியே ஃபிரஷ்ஷாக வைத்திருக்கும் தனுஷ் அவள் கண்டுக்கொள்ளாமல் இருப்பதை பார்த்து விரக்தி அடைகிறான். பின்னர் ஸோயாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் நடக்க அதை தடுத்து நிறுத்த சொல்கிறாள் ஸோயா. அவள் தன்னை காதலிப்பதாய் நினைத்து ஸோயாவின் மாப்பிள்ளையை மாட்டிவைத்து கல்யாண் படலத்தை நிறுத்தும் தனுஷுக்கு அவள் இன்னொருத்தனை காதலிப்பதாய் அதிர்ச்சி கொடுக்கிறாள் ஸோயா...

ஸ்மார்ட்டான மாணவர் தலைவனும், ஸோயாவின் காதலனுமான அபய் தியோலின் எண்ட்ரி...பின்னர் கதை எங்கெங்கோ பயணித்து இறுதியில் அரசியலின் கோரப்பிடியில் சிக்கி ஒருவழியாய் முடிகிறது.  ஸோயா யாரை கல்யாணம் செய்தாள் தனுஷின் நிலை என்ன என்பதை காஸ்ட்லி மல்டிபிளக்ஸ் திரையில் காண்க!!!

தனுஷ்....முதலில் பாலிவுட்டில் காலெடுத்து வைக்கிறார். சதைகளையும், ஆஜானுபாகுவான சிக்ஸ் பேக் வெள்ளை ஹீரோக்களையும் பார்த்து பழகிப்போன பாலிவுட் கட்டாயம் தனுஷின் பக்கத்து வீட்டு பையன் இமேஜ் மற்றும் இயல்பான நடிப்பில் கொஞ்சம் அசந்துபோயிருப்பது உண்மை!!! மனிதர் அதுவும் முதல் பாதியில் பனாரஸில் அடிக்கும் லூட்டிகள் கண்களை விட்டு அகல மறுக்கின்றன. தன்னை விரும்பும் பக்கத்து வீட்டு பெண்ணை கலாய்ப்பதிலும், ஸோயாவை ரசிப்பதிலும் நல்ல ஸ்கோர் செய்கிறார். அதுவும் ஹிந்தி வார்த்தை உச்சரிப்புகள் "பஹூத் அச்சா ஹை" சொல்ல வைக்கின்றது,

அனில் கபூரின் மகள் சோனம் கபூரின் முதிர்ச்சியான நடிப்பும் படத்திற்க்கு பிளஸ். துனுஷை தன் பின்னால் சுற்றவைத்து, அதைக்கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலும், தனுஷின் காதலை புரிந்துக்கொள்ளாமல் இருப்பதிலும், அதுவும் அந்த இறுதிக்காட்சிகளில் வில்லியாக மாறிடுவாளோ என நம்மை கொஞ்சம் கவலைப்பட வைத்து நடிப்பில் ஸ்கோர் செய்கிறாள்.

அபய் தியோல் ஸ்மார்ட்டான மற்றும் முக்கியமாக பாத்திரத்தில் மின்னுகிறார்.ஆனாலும் சட்டென்று இறந்துபோவது கொஞ்சம் உறுத்துகிறது.

முக்கியமாக தனுஷை ஒருதலையாய் காதலிக்கும் பெண்ணும் (ஸ்வர பாஸ்கர்), தியோலின் அக்கா (ஷில்பி மார்வாஹா), தனுஷின் நண்பராக வருபவரும் (தீபக்) உண்மையிலேயே பாராட்ட வேண்டியவர்கள்.

அனந்த் ராய்...முதல் பாதியில் நம்மை கிறங்கடித்தவர் இரண்டாவது பாதியில் கொஞ்சம் தடுமாறி அரசியல் பக்கம் போனதால் இரண்டாவது பாதி மனதில் ஒட்ட மறுக்கின்றது. அதுவும் திருப்பங்கள் ஏதும் இல்லாத கொஞ்சம் சுலோவான இரண்டாவது பாதி போர் அடிப்பதாகவே தோன்றுகிறது. அவர்களின் முன் பருவ காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகமான காட்சிகளாக வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இசை ரஹ்மான். அதில் குறை சொல்ல என்ன இருக்கு. அனாலும் இரண்டு பாடல்கள் தவிற மற்ற இரண்டும் மனதில் பதியவில்லை...பின்னணி இசை என் காதுகளில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

குறைகள் என பார்த்தால்....

சம்பந்தமில்லாத இரண்டாவது பாதியும், தனுஷ் தமிழ் பையன் என்பதற்க்கு அவ்வளவாக அடையாளம் ஏதும் இல்லை (தனுஷின் கல்யாண இரவில் அவரின் தந்தை பேசும் ஒரு வரி வசனத்தை தவிர). தனுஷ் அவளை உருகி உருகி காதலித்தாலும் ஸோயா இன்னொருவனை காதலிப்பதால் தனுஷ் மீது பச்சாதாபம் வரவில்லை அல்லது தனுஷின் செயல்களுக்கு அர்த்தம் இல்லாமல் போகிறது, தியோலின் சடன் டெத், ரொம்ப ஈஸியாக காட்டப்பட்டிருக்கும் மாணவர்களின் அரசியல் காட்சிகளும், செயல்பாடுகளும், பொதுவாகவே இரண்டாவது பாதி காட்சிகள்....இப்படி சில....

மொத்தத்தில் முதல் பாதியில் பிரியாணியை சாப்பிட கொடுத்துவிட்டு இரண்டாவது பாதியில் ஜீரணம் ஆக கொஞ்சம் கஷாயமும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.


Saturday, April 6, 2013

சேட்டை - திரை விமர்சனம்!!!சேட்டை - திரை விமர்சனம்!!!

(நீ யார்ரா படத்தைப்பற்றி கமெண்ட் சொல்ல என்று கேட்டால்....என் பதில்  நினைவு தெரிந்து 30 வருடங்களாக பல நூறு படங்களை பார்த்திருக்கிறேன், இந்த படத்தை காசு கொடுத்து வேறு பார்த்திருக்குறேன் கமெண்ட் சொல்ல, விமர்சிக்க எனக்கு முழு உரிமையும் உண்டு)

டெல்லி பெல்லி ரொம்பவும் பிடித்துப்போனதால் முதல்நாளே சேட்டையை பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் வந்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது படத்தை பார்த்தபின்தான் தெரிந்தது.

இயக்குனர் கண்ணன்  ஹிட்டடித்த ஹிந்திப்படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்தே பொழப்பை பார்க்கிறவர். ஆனாலும் இவருக்கு அடிக்கும் லக்கில் பெரிய பேனர்கள் மாட்டுவதுதான் இவரின் மச்சம். ஆனாலும் நல்ல படங்களை மொழிமாற்றம் செய்கிறேன் என்று கதையை கதற கதற கற்பழிக்கிறார்!!!

சேட்டை. அதுவும் இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட "டெல்லி பெல்லி" என்கிற ராவான படத்தை தமிழ் மக்களுக்கு ஒத்துவராது என்று தெரிந்தும் படமாய் எடுத்திருக்கிறார். அதற்க்கு தனஞ்சயன் கூட கதையில் ஆலோசனை சொல்லியிருக்கிறராம் (நேரக்கொடுமை!).

கதை : பத்திரிகை ரிப்போர்ட்டர்களாக வேலை செய்யும் இரண்டு நண்பர்கள் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை உலகுக்கு வெளிச்சம் காட்ட துடித்துக்கொண்டிருப்பவர்கள் ரிப்போர்ட்டர் ஆர்யாவும், கார்டூனிஸ்ட் பிரேம்ஜியும் அவர்களுடன் மூன்றாவதாகவும் சந்தானமும் வந்து சேருகிறார். இதில் ஆர்யாவின் காதலியாக வரும் ஹன்ஷிகாவிடம் அவளின் நண்பி வராததால் ஒரு பார்சலை கொடுக்குறார்கள். அதை ஆர்யாவிடம் கொடுத்து கொடுக்கசொன்ன முகவரிக்கு கொடுக்குமாறு சொல்கிறாள்...அதை ஆர்யா சந்தானத்திடம் கொடுக்க, இலியானா சிக்கனை சாப்பிட்டதான் வயிறு சர்யில்லாமல் போக "கக்காவை" லேப் டெஸ்ட்டுக்கு எடுத்துச்செல்லும் போது காதலில் தோல்வியுற்ற பிரேம்ஜியிடம் கொடுக்க அதை பிரேம்ஜி "கக்காவை" வில்லனிடமும், அந்த பார்சலை ஹாஸ்பிடலிலும் மாற்றி கொடுக்க இவர்களை துரத்திக்கொண்டு வரும் தாதா நாசரிடம் மாட்டிக்கொண்டு...இடையில் அஞ்சலியின் காதலும் சேர கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் இரண்டாவது பாதி கதை.

ஹிந்தி படத்தை அச்சு அசலாக எடுத்தவர்கள் அதில் இருந்த வசனத்திற்க்கு மதிப்பு கொடுக்க மறந்துவிட்டார்கள். காமெடி டிராக் சந்தானம் என்றே போர்டு போடுகிறார்கள் அவரின் அந்த காமெடியே ஓவர் டோஸாகி படத்திற்க்கு ஆப்பு வைத்துவுட்டது. அதுவும் பேதியை வீதி வீதியாய் கொண்டு செல்கிறார்.

ஆர்யா....கேஷுவலாய் நடிப்பதாய் நினைத்துவிட்டு ரொம்ப கேஷுவலாய் நடித்திருக்கிறார். நடனங்க்களில் ஒரே மாதிரியான மூவ்மெண்ட், நடிப்பிலும் அதே...!!!

ஹன்ஷிகா...கொஞ்சம் ஒல்லி, குட்டை பாவாடை, பெரிய ஹீல்ஸ் அவ்வளவே!!!

அஞ்சலி....உனக்கு மார்டன் டிரெஸ் சரிப்பட்டு வராதும்மா. அதுவும் பாடல்களில் உன் தொப்பை தெரிவது கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருக்கு. காஸ்ட்டியூமில் கவனம் தேவை அஞ்சலி!!!

பிரேம்ஜி....படு மொக்கையாக நடித்து சாவடிக்கிறார்...அதுவும் காதல் தோல்யின் பாடல் காட்சியில் தியேட்டரே காலியாகிறது....பொண்ணுங்களையும் தம்மடிக்க அனுப்பிடாதீங்க அப்பு, அடுத்த படத்திலாவது பாத்து சூதானமா பண்ணு!!!

சந்தானம்...சார் நீங்க ஹீரோவாவே பண்ணுங்க அதுதான் பெட்டர். ஒரே மாதிரியான வார்த்தைக்கு வார்த்தை பன்ச் கொடுப்பதெல்லாம் போரடிக்கிறது. அதுவும் ஜோக்கடிப்பதாய் நீங்கள் மற்றவர்களை திட்டும் வார்த்தைகள் சகிக்கும்படியாய் இல்லை!!!

வில்லனாக நாசர்....வீணடித்து இருக்கிறார்கள். அவரின் அஸிஸ்டண்ட் எவ்வளவோ தேவலே.

சம்பந்தம் இல்லாமல் இடையில் பாடல்களை சொருகுவது எவ்வளவு பாதிப்பான செயல் என்பதை இந்தப்படத்தைப்பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். பெரிய மைனஸ்...பாடல்கள் படு சுமார்...ஒரே ஒரு பாடலைத்தவிற...!!!

படத்தின் பிளஸ்ஸே அந்த பேச்சுலர் அறைதான். அதை இன்னும் பெட்டராக செட் போட்டிருக்கலாம். கண்ட்டினியுட்டி மிஸ்ஸிங்...உதாரணத்திற்க்கு புது காரின் சைட்மிரரை சுட்டு உடைக்கிறார்கள்...அடுத்த ஷாட்டில் அது உடையாமல் இருக்கிறது...இப்படி பல...

படம் மும்பையில் நடக்கும் கதையாம் இரண்டு காட்சிகளில் கொஞ்சூண்டு வசனங்களின் மூலம் அது தெரிகிறது....கொடுமை....ஒரே ஆறுதல் அவ்வப்போது சிரிக்கவைக்கும் கொஞ்சம் காமெடி.

ஹிந்தி படத்தில்  வில்லன்களிடமிருந்து தப்பிக்க ஹோட்டல் அறையில் நாயகனும் நாயகியும் அடிக்கும் கூத்தும், ஹவுஸ் ஓனரை மடக்க சந்தானம் எடுக்கு கிளு கிளு படங்களின் பாதிப்பு தமிழில் எடுபடவில்லை நடிகர்கள்  பேசும் ராவான வசனங்களும் இதில் இல்லை. திடீரென்று ஹன்ஷிகாவை கழட்டிவிட சொல்லும் காரணம் உகந்ததாக இல்லை...கிளைமாக்ஸில் அர்த்தமில்லாமல்,தேவையில்லாமல் சாகும் போலீஸ்காரர்...தேவையா???

டைரக்டர் கண்ணன்...இனி சொந்த சரக்கில் ஜெயித்தால்தான் உண்டு. யுடிவி தனஞ்செயனுக்கு இன்னொரு அதிர்ச்சி அலராம் இது!!!

மொத்தத்தில்....

சேட்டை - கண்ணன் கட்டிய மனக்கோட்டை!!!

கதையில் கொஞ்சம் ஓட்டை

ஆடியன்சுக்கு நெத்தியில் பட்டை

புரடியூசருக்கு தலையில் மொட்டை!!!


Sunday, March 31, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா....!!!சில பேர் சமூகத்திற்க்காக படம் எடுக்குறேன் என்று படம் எடுத்து படம் எடுத்து நம்மை நோகடிப்பார்கள். சிலர் நம்மை கதற கதற அழவைத்து தியேட்டரை ஒப்பாரி வைக்கும் இடமாக்குவார்கள், சிலர் படமெடுத்து நம்மை பாதியில் ஓட ஓட விரட்டுவார்கள் இன்னும் சிலர் பழைய பதிவுகளை எடுக்கிறேன் என்று சொல்லி நமக்கு பாடம் எடுப்பார்கள். மேற் சொன்ன வகைகள் எல்லாம் "கதையில்லாத கமர்சியல் படங்களிடமும், சிம்பிளான சின்ன படங்களிடமும்" தோற்று போவது காலம் காலமாய் நடக்கும் சினிமாவின் எழுதப்படாத விதி.

இந்த படமும் அப்படித்தான்...சின்ன நடிகர்களையும், ஜாலியான இண்ட்டரஸ்டிக் கதையையும், ரசிக கண்மணிகளை வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் காமெடிகளையும் நம்பி பசங்க பாண்டிராஜ் மெரீனாவில் கொஞ்சம் சறுக்கினாலும் "கேபிகிர"ஆவில் பின்னியெடுத்திருக்கிறார்.

விமல், சிவ கார்திகேயன் மற்றும் சூரியின் கூட்டணி உங்கள் வயிரை பதம் பார்த்து வாயை சுளுக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

கதை : இரண்டு வரி கதை ஊதாரிகளாகத்திரியும் இரண்டு நண்பர்கள் அரசியலில் பெரிய ஆளாகவேண்டும் என்கிற லட்சியத்தில்(மொத்தம் நால்வர் குழு + சரக்கு) காதலில் விழுகிறார்கள். இவர்களின் அப்பாக்களும் பழைய நண்பர்கள் அனால் மகன்களின் செய்கைகளால் எதிரிகளாக மாறுகிறார்கள். இவர்கள் அரசியலில் வென்றார்களா? காதலிகளை அடைந்தார்களா என்பதை படம் முழுக்க காமெடி வசனங்களால் தியேட்டரை குலுங்க வைத்து கடைசி 10 நிமிடத்தில் கலங்க வைத்து நம்மையும் கர்வத்துடன் கொடுத்த காசுக்கு வஞ்சனை செய்யாமல் வெளியே அனுப்புகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் ஸ்டன்னிங் காமெடியும், விமலின் அப்பாவித்தனமான செயல்களும், சூரியின் வீட்டோட மாப்பிள்ளை சீன்களும் படத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்கிறது.

சாம்பிளுக்கு " ஹீரோ எல்லாம் மேட்டர் இல்லே மேட்டர்தான் ஹீரோ, நம்ம மைனஸே நமக்கு பிளஸ்" இப்படி பல...

படம் முழுக்க நெற்றியில் பட்டையுடன் சிவகார்த்திகேயன் மெரினாவுக்கு பின் இதிலும் வழிய வழிய காத்லிக்கும் பழமாய் நடித்திருக்கிறார். காதலியுடன் கொஞ்சல்களில் காதலை விட நக்கல்கள்தான் அதிகம். நண்பருக்காக விட்டுக்கொடுக்காத இவரின் குணமும் சண்டை போட்டாலும் அடுத்த நிமிடமே இணைவதும் அழகு.

அப்பாவியாகவும் ஹீரோயிசம் இல்லாத சாதாரண மனிதனாக நண்பனுக்காக எல்லாம் செய்யும் விமல். அதுவும் தன் காதலியின் ஆகாச பாய்ந்து தாக்கும் அடிகளில் காயம் பட்டு பாவம் நொந்துபோகிறார்.

நாயகிகளாக கண்களால் கவிதை காட்டும் பிந்து மாதவியிம், சிவாவின் மனசை ஸ்கேன் செய்யும் ரெஜினாவும் நல்லாவே அவர்களின் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மற்ற படங்களை மாதிரி கட்டிப்பிடித்து டூயட் பாடுவதோ, நெருங்கி நடிக்கும் காட்சிகளோ எதுவும் இல்லை. கிட்டத்தட்ட சிவ கார்த்திகேயனையும் ,விமலையும் நம்ம டிஆர் ரேஞ்சுக்கு நாயகிகளை தொடாமல் நடிக்க வைத்திருக்கிறார்...என்ன கோபமோ பாண்டிராஜுக்கு!!!

சூரி...சுந்தர பாண்டியனுக்கு பிறகு முழு படத்தில் வந்து கலகலக்க வைக்கிறார். அதுவும் மனைவியிடமும் , மாமனாரிடமும் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் கூலாக போகிறார். எலெக்க்ஷன் காட்சிகளில் அடிவாங்கி அசத்துகிறார்.

விமலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், நான்காவது நண்பராக வருபவர், கார்த்திகேயனின் அப்பாவாக வருபவரும் நடுத்தர குடும்பத்தின் அசல்கள். முக்கியமாக எம்ஏல்ஏ அவரும் சூப்பர்.

அதுவும் அந்த எலக்ஷன் காமெடி கிட்டத்தட்ட நம்மை குறைந்தது 5 நிமிடமாவது தொடர்ந்து சிரிக்க வைக்கிறார்கள் என் கண்களில் சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிட்டது. அதையும் தூக்கி சாப்பிடும் வகையில் கடைசி பத்து நிமிடம் நம் மனதை இயக்குனர் கனக்க செய்துவிடுகிறார்.

படத்தில் சமூகத்துக்கான பாடமோ, சமூகத்தின் அவலங்களை சொல்லும் டாகுமெண்ட்ரியோ எதுவும் இல்லை. இரண்டே கால் மணி நேரம் நம்மை ஜாலியாக வைத்திருந்ததால் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.

படத்தில் இரயில் டிராக்கும், சரக்கும் இரு முக்கியமான கேரக்டர்கள்தான். கிட்டத்தட்ட பாதி படம் டிராக்குக்கு அருகிலும், 15 முறைக்கு மேல் சரக்கடிப்பதும் முக்கிய காரணிகள். சிவ கார்த்திகேயனுக்கு இருக்கும் தாய்மார்களின் ஆதரவு தியேட்டரின் கூட்டத்தில் நன்றாகவே தெரிந்தது.

மைனஸ்:

காட்சிகள் குறைவு, வசனங்கள் அதிகம்...எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதால் கொஞ்சம் திகட்டுகிறது. இரண்டு காதல் காட்சிகளிலும் காதலை விட கிண்டல்கள் அதிகம் இருப்பதால் அந்த கெமிஸ் ட்ரி கொஞ்சம் மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது. இரண்டாவது பாதியின் முன் பாக காட்சிகளை கொஞ்சம் எடிட் செய்திருக்கலாம்.

இசை யுவன் சங்கர் ராஜா....(அவரேதான்) ரொம்ப சுமார் ரகம். பாடல்கள் ஒட்டவே இல்லை.

மொத்தத்தில்...

கேடி பில்லா கில்லாடி ரங்கா
வாங்க கூலா போங்க ஜோரா!!!


Sunday, March 17, 2013

பரதேசி - திரை(சிறை) விமர்சனம்.
பரதேசி - திரை(சிறை) விமர்சனம்.

முதலில் என் வாழ்துக்கள்!!!

நான் கடவுள், அவன் இவன், பரதேசி என்று ஏழைகளின் வாழ்வை விற்று காசாக்கி இந்தியாவில் காஸ்ட்லியான மற்றும் முதலமைச்சர்கள், சூப்பர்ஸ்டார்கள் இருக்கும் சென்னையின் போயஸ் தோட்டத்தெருவில் வீடு வாங்கியதற்க்காக(உண்மைதானா?).

படம் ஓடாது என்று தெரிந்து நீங்கள் நடத்திய கடைசி நேர ஸ்டண்ட் அல்லது சீப்பான ஒரு வெளம்பர "அடி" டிரய்லரை பார்த்தவுடன் படத்தை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. நல்ல வேளை படத்தை நீங்களே தயாரித்ததால் தப்பித்தாய் இல்லையென்றால் அந்த அடிகள் புரடுயூசரால் திருப்பி உனக்கே கிடைத்திருக்கும். ஆனாலும் என்ன இனி டிஸ்ட்ரிபூட்டர்கள் அடி கொடுக்க ரெடியாத்தான் இருக்காங்க.

இந்த விமர்சனத்தை படித்துவிட்டு என்னை அதிமேதாவிகள் பலர் பேர் அடிக்கப்போகிறார்கள் அல்லது ரசனை கெட்டவன் என்று என்னை தூற்றப்போவது நிச்சயம்.

அது எப்படி பாலா உங்களால் சொல்லமுடிகிறது.....சோத்துக்கு வழியில்லையென்றாலும் உடல் சுகத்தை மட்டும் திருமணத்திற்க்கு முன்பே விரும்புவார்கள் ஏழைகள் என்று நாயகன், நாயகியின் செயல் மூலம் காட்டமுடிகிறது?

"உங்க மந்திரியைத்தான் கேட்கணும்" என்று ஏழை வீட்டு மனைவிகள் அவ்வளவு சுலபமாக கணவனின் மற்றபெண்களுடனான தொடர்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய மன நிலையை உள்ளவர்கள் என்று???

ஏழைகள் என்ன செய்தாலும் போராட தகுதியற்றவர்கள், அவர்களுக்கு சுய அறிவு இல்லை என்று உங்களால் மீண்டும் அடித்து சொல்லப்பட்டிருக்கின்றது.

உங்களின் கேமராக்கூட முதல் பாதியில் ஏழைகளை டல்லான பிளாக் அண்ட் ஒயிட் நிறத்திலும், இரண்டாம் பாதி எஸ்டேட்களை கொஞ்சம் அதிகப்படியான கலரிலும் காட்டி இருக்கின்றது...அழகியலுக்காக அதை எடுத்துக்கொண்டாலும் இதுவும் ஒரு வகையான நிறவெறிதான்.....!!!

பல நாள் காடு மலை என்று நடக்கையில் அது என்னவோ தெரியவில்லை மீசை, தாடிகள் வளருது காதோரம் முடிகள் மட்டும் அப்படியே மெஷின் போட்டு செதுக்கி வெட்டி படம் முழுக்க வளரவே இல்லை. என்னே அதிசயம்!!!

ஏழைகள் தன்னுடன் வரும் ஊர்க்காரர் பாதி வழியில் பிணமானால்...இப்படி கண்டுக்கொள்ளாமலும் அல்லது ஒரு கேள்விக்கூட கேட்காமாலும் செல்வார்களா? வழியை தொடர்வார்களா???

வெறும் ஏழு பாதுகாவலர்களை வைத்துக்கொண்டு பல நூறு எக்கர் மற்றும் பல நூறு பேரை பாதுகாக்கிறார்களே....இதுவும் ஒரு வகையான அதிசயம்தான்.

அழகான, அருமையான எழுத்தாளர்களின் கதை புத்தகத்தை நம்பி (படிக்க கதை உண்மையிலேயே அருமைதான்) பல முன்னணி இயக்குனர்களே சோடை போன நேரத்தில் அடுத்ததாய் நீங்களுமா அந்த லிஸ்ட்டில்???

வெள்ளை வெளேரென அழகான ஹீரோயின் இருக்கையில் யதார்த்தம் என்கிற பேரில் கரியைப்பூசியிருக்கிறீர்கள். ஏன் ஏழைகள் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடாதா??? அதுவும் படம் முழுக்கு ஒரே அழுக்கு...தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது அதன் தூசிகள் என்மீதும் படிந்திருந்தது!!!

இவைகளை ஒழுங்காய் செய்த நீங்கள் சில காட்சிகளில் ஹீரோயின் கை நகங்களை எப்படி மறந்தீர்கள்? லேசான பிங்க் நிற நெயில் பாலிஷ்!!! சபாஷ்!

கல்யாணத்தன்று இறந்து போன பெரியவரை ஒளித்து வைத்தீர்கள்...பின்னர் எரித்தீர்களா? புதைத்தீர்களா? கடைசிவரை சொல்லவே இல்லை!!!

நானும் மலைப்பிரதேசத்தை சார்ந்தவன் என்பதால் கேட்கிறேன்....மலைப்பிரதேச மக்களின் அதுவும் ஆண்களின் உடை வெற்றுடம்புதானா??? கங்காணி கொடுக்கும் ஒற்றை கம்பளியை தவிர நாயகனை விட்டு மற்றவர்கள் அனைவரும் சிக்ஸ் பேக்குடனே சல்மான் மாதிரி அலைகிறார்கள். மலைப்பிரதேசத்தில் இருந்து இருக்கிறீர்களா...கொஞ்சம் காஸ்ட்டுயூமில் கவனம் செலுத்தி இருக்கலாம்???

அதுவும் அட்டை மேட்டர் கொஞ்சம் ஓவர்...நீங்கள் சொன்னது நிஜம் என்றால் இன்று நீலகிரியில் தேயிலை தோட்டங்களே இருந்திருக்காது. எல்லோரும் அட்டைக்கும் பலியாகி இருப்பர்!!!

ஜிவி பிரகாஷிடம் சொல்லியிருக்கலாம்" கொஞ்சம் "ஆத்தே ஆத்தே" வார்த்தையை குறைக்கச்சொல்லி...நேஷனல் அவார்ட் வாங்கிய பாடலுக்கு இன்னுமா விளம்பரம் செய்துக்கொண்டிருக்கிறார். ஒரு முதிர்ச்சியான இசையமைப்பளரை போட்டிருக்கலாம்???

விஷாலை தவிற உங்களின் படத்தில் நடித்த கதாநாயக நடிகர்கள் பெரிய ஆளாகிவிட்டார்கள். தம்பி அதர்வாவும் விஷால் மாதிரி ஆய்விடாமல் இருக்க வாழ்த்துக்கள்!!!

ஆமாம்...ஏன் இந்த கிரிஸ்துவ சமூகம் உங்களுக்கு எதிராக கொடிப்பிடிக்கவில்லை என்பது இன்னும் விளங்கவில்லை??? எல்லாம் நல்லெண்ணம் தான்...சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுக்காமல் ஓடாத படத்துக்கு எதுக்கு இலவச விளம்பரம் என்று நினைத்திருப்பார்களோ!!!

உங்கள் படத்தில்தான் வெள்ளைக்கார துரை ஆங்கில கலப்பில்லாத சுத்தமான தமிழ் பேசுகிறார்.உங்களின் தமிழ் மீதிருக்கும் பற்றுக்கு நன்றி!!!

இந்த படத்தை பார்த்தால் யாரும் டீ கூட குடிக்கமாட்டாங்களா. தியேட்டரின் ஏசி குளிருக்கு டீதான் அதிகம் சேல்ஸ் ஆனதாம்.

ஆனாலும், பழைய பதிவுகளை காட்டி இருப்பதில் வென்றிருக்கிறீர்கள். ஜனரஞ்சகத்தை தாண்டி பல கதைக்களங்கள் இருப்பதை உணர்த்தி இருக்கிறீர்கள். இன்னும் இந்தியாவில் இந்தமாதிரியான கொத்தடிமைகள் செங்கல் சூளைகளிலும், டீ எஸ்டேட்களிலும், மில்களிலும், துணிக்கடைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. இடை இடையே வரும் நக்கலான வசனங்களில் உங்களின் நகைச்சுவை குணம் தெரிகின்றது.நடிகர்களை நடிக்க வைத்ததை விட வாழவைத்திருக்கிறீர்கள். இரண்டாவது பாதியில் படத்தில் இருந்த அந்த இருண்ட வாழ்க்கை கொஞ்சம் மனதை உலுக்கியது உண்மையே. அதுவும் அதர்வாவின் கடைசிக்கதறல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

இறுதியாக...

இந்த படம் வணிக ரீதியாக ஓடுமா என்பது சந்தேகம்தான் ஆனால் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்தபடத்திலாவது "எ பாலா ஃபிலிம்" என்று போடும்போது எழுந்து நின்று கைத்தட்டும்படியாக படம் எடுங்கள். எங்கள் ஆதரவு கட்டாயம் உண்டு.

மொத்தத்தில் பாலாவின் பரதேசி - ஏகாதிபத்யத்தின் இன்னொரு ரத்தம் படிந்த கதை!!!  


Wednesday, January 16, 2013

எப்போது....?
எப்போது....?


மகளாய்
தங்கையாய்
தோழியாய்
காதலியாய்
மனைவியாய்
அண்ணியாய்
அம்மாவாய்
பாட்டியாய்

எல்லாம் சரி....


எப்போது நீ பெண்ணாய்?

முலாம்

முலாம்

கற்பழிப்பை வன் கொடுமை என்று சொல்லவேண்டும்

பைத்தியத்தை மன நலம் குன்றியவர் என்று சொல்லவேண்டும்

உடல் ஊனமுற்றவரை மாற்றுத்திரணாளி என்று சொல்லவேண்டும்

அரவாணியை திருநங்கை என்றுதான் சொல்லவேண்டும்.

எல்லாம் சரி.....

தமிழில் வார்த்தை ஜாலங்களினால் முலாம் பூசுவதால் மட்டும்

இவர்கள் வாழ்வில் வசந்தங்கள் வந்துவிடுமா???

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்கண்ணா லட்டு தின்ன ஆசையா - திரை விமர்சனம்

ஏவிஎம் ராஜேஷ்வரியில் "ஜன கன மன"வுடன் ஆரம்பிக்கிறது படம் (இரண்டு நிமிடம் தாமதமாக வந்த பின் இருக்கை பெண் ஆர்வத்துடன் கேட்டாள் பக்கத்து சீட்டு காரரிடம் நேஷ்னல் ஆன்த்தம் முடிஞ்சிருச்சா?). மற்ற தியேட்டர்களை கம்பேர் செய்தால் பெரிய டிக்கெட்டே 50 ரூபாய்தான் (நம்புங்கள் உண்மைதான்).

சந்தானத்தின் முதல் தயாரிப்பு. நல்லதுதான் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் போட எத்தனை பேருக்கு மனம் வரும்.

ரிலீஸுக்கு இரண்டு நாள் முன்பு பாக்கியராஜுக்கு சுக்கிர திசை அடிக்க உண்மையான கதை ஆசிரியருக்கு கிடைக்கவேண்டிய பணத்தை பாக்கியராஜ் லவட்டியது வேறு விஷயம். இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்ட காப்பி என்பதால் (அது சரி...இது இன்று போய் நாளை வா வின் கதை என்பது இப்போதுதான் தெரியுதா??? இயக்குனர் மணிகண்டன் இது தன் சொந்த கதை, இயக்கம் என்று சொன்னதாய் ஞாபகம்!).

கதை...

அதுதான் எல்லோருக்கும் தெரிந்த கதை ஆயிற்றே....மூன்று நண்பர்கள் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் அழகான ஒரு பெண்ணுக்காக அடித்துக்கொள்கிறார்கள், அடி வாங்குகிறார்கள். கடைசியில் அந்த பெண்ணை அடைந்தது யார் என்பதுதான் ஒன்லைன் கதை. அதை காமெடி என்கிற பேரில் மோசமான டயலாக்குகளிலும், தனி மனித தாக்குதலாலும் சிரிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

மூன்றுபேரின் (சந்தானம்,சேது மற்றும் அகில உலக பவர் ஸ்டார்) வித்தியாசமான எண்ட்ரியுடன் ஆரம்பிக்கிறது படம். சந்தானத்தின் ஒன் லைன் பன்ச்சுகள் தியேட்டரை அதிர வைக்கின்றது. சிவா... சந்தானம் மற்றும் பவரின் பவர்களுக்குள் காணாமல் போனாலும் கடைசியில் அழகாய் இருக்கிறார் என்பதற்க்காக நாயகியை அள்ளுகிறார். எப்பொவுமே ஸ்மார்ட்டானவங்கதான் ஹீரோயினை லவட்டுகிறார்கள் என்பது இந்த படத்திலும் உறுதியாகிறது.

தன் சொந்த படத்தில் விளையாட்டாய் காமெடிக்காக பவரை சேர்த்திருந்தாலும் சந்தானத்தை விட பவர் அப்ளாஸ் வாங்கி தியேட்டரை அலறவைக்கிறார்.பவருக்கு முன் அனைவரும் பீஸ் போன பல்புதான். ஆனாலும் சொந்த படத்தில் தன் பங்கை குறைத்து பவரை சுற்றியே கதையை நகர்த்திய சந்தானத்தை பாராட்டத்தான் வேண்டும்.

பவர்...பவர்...பவர்.... எனக்கு தெரிந்து ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு பிறகு பலமான கைத்தட்டு வாங்கும் ஒரே நடிகர் பவராகத்தான் இருப்பார். தன்னில் பாதி வயதே உடைய சந்தானத்தின் கீழ்த்தரமான கமெண்டுகளையும், காமெடி என்கிற பெயரில் தன்னை தாக்கும் வார்த்தைகளை பிளஸ் ஆக்கி எல்லோரையும் மனம் விட்டு சிரிக்க வைக்க பவரால்தான் முடியும். அனாலும் மனுஷன் கொஞ்சம் கூட கவலைப்படாமல் நடித்திருக்கிறார். நடிக்கவே தெரியாத நடிப்பும், பாடி லாங்குவேஜ்ஜே வராத பாடியும், சதா ஆடிக்கொண்டே இருக்கும் கைகால்களால் பவர் பின்னியெடுக்கிறார் (ஆனாலும் பவரை இதைவிட அசிங்கப்படுத்த யாராலும் முடியாது என்பது வேறு விஷயம்). தன் மைன்ஸ்களை பிளஸ் ஆக்கி தனித்து நிற்கிறார் பவர்.

மூன்று நண்பர்களுக்கு இடையில் தவிக்கும் நாயகி விசாகா (டல் வித்யாவாக இருந்து தூள் வித்யாவாகி) மிளிர்கிறார். ஆனாலும் சேதுவை தேர்ந்தெடுக்கும் கடைசி காட்சியில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம்.

கோவை சரளாவும், விடிவி கணேஷும் படத்தின் கலகலப்புக்கு கியாரண்டி. வித்தியாசமான நடிகர்களை தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் பாதி வெற்றி உறுதியாகிவிட்டது. தன்னுடன் டிவியில் இருந்த லொள்ளு சபாவின் பலருக்கு ஒவ்வொரு சீனாவது கொடுத்து தனது நன்றி உணர்ச்சியை சந்தானம் காட்டியிருக்கிறார். தேவதர்ஷினி, மாஸ்டர் கணேஷ், பட்டி மன்ற ராஜா இன்னும் பலரும் படத்தில் வந்து போகிறார்கள்.

படத்தின் பிளஸ் : சந்தானம், பவர், ஒன்லைன் காமெடிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு, கலவென இருக்கும் தியேட்டர் கூட்டம்.( பிடித்த சீன்களையும், டயலாக்குகளையும் எழுத ஒரு பக்கம் போதாது)

படத்தின் மைனஸ் : இசை, அவ்வளவாக எடுபடாத பாடல்கள், காமெடி என்கிற பேரில் பவரும், பவரின் குடும்ப பிண்ணனி நிகழ்வுகளை ஓவராய் கலாய்த்ததும், பழைய பாக்கியரராஜ் படத்தின் கதை ஓட்டம் (டச்) மிஸ்ஸிங், கொஞ்சம் நாடகத்தனம் இப்படி சில....

இரண்டு மணி 20 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. மனம் விட்டு சிரித்ததில் மனைவி, மகனுக்கு வாங்கி கொடுத்த பெப்ஸி, பப்ஸ், பாப்கார்ன் செலவுகள் என்னை பாதிக்க வில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்(!). ஆனாலும் தியேட்டரிலிருந்து படம் முடிந்த வெளியே வரும் அனைவரையும் படம் பிடித்திருக்கிறது என்பதை அவர்களின் சந்தோஷ சிரிப்பும், படத்தின் டயலாக்குகளை முணுமுணுத்துக்கொண்டே வருவதும் சாட்சி.

குடும்பத்தோடு போய் குதூகலமாய் போய்வர படம் மட்டுமல்ல நானும் கியாரண்டி தருவேன்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா
கண்ணா லட்டு தின்ன ரொம்ப ஆசைதான்!