Sunday, December 2, 2012

பேய்க்கதை டூ! True Story

பேய்க்கதை டூ!
தைரிமானவராக இருந்தால் இந்த உண்மைக் கதையை படியுங்கள்.

முதலில் படித்த பேய்க்கதையை விட இந்த கதை இன்னும் பயங்கரமானது. நம்பினால் நம்புங்ககள்.

இதுவும் நிஜக்கதைதான். நான் பெங்களூரில் வேலைசெய்த நேரம். 2001 ல் நடந்தது.

அப்போது நான் தனியாக மஹாலக்ஷ்மி லே அவுட்டில் (இஸ்கான் கோயிலுக்கு கீழ் உள்ள பகுதி) ஒரு அவுட் ஹவுஸில் 3800 ரூபாய் வாடகையில் தங்கியிருந்தேன். பொதுவாக நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்பதால் எப்போதும் வீட்டில் சமைத்து தனியாக இருப்பேன்.கிட்டத்தட்ட 6 மாதமாக இந்த வீட்டில் இருக்கிறேன்.

எனக்கு ஊரில் பெண் பார்த்துக்கொண்டிருந்த நேரம். ஊரில் இருந்து அடுத்த நாள் பெற்றோர்கள் என்னை பார்க்க வருவதாய் சொல்லியிருந்தார்கள்.

நான் இருந்த தெருவில் கிட்டத்தட்ட 15 வீடுகள் இரண்டு பக்கமும் வரிசையாக இருக்கும். மழைக்காலம் முடிந்து இருந்ததால் எந்த வீட்டின் முன் இரும்பு கேட்டை திறந்தாலும் கீ.....ங்க்....கீ.....ங்க்....என்ற சப்தம் வரும்.

நான் இருந்த அவுட் அவுஸ் ஓனர் வீட்டுக்கு பின்புற சந்தில் இருந்தது. ஓனர் வீட்டில் ஒரு தாத்தாவும் அவரின் மனைவியும் மட்டும் இருந்தார்கள்.

பொதுவாய் இரவு 10.30 வரை டிவி பார்த்துவிட்டுத்தான் தூங்குவேன். என் பெற்றோர்கள் நாளை காலை வருவதாக சொன்னதால், அவர்களை கிட்டத்தட்ட ஆறு மாதம் கழித்து பார்ப்பதாலும் எனக்கு தூக்கமே வரவில்லை.அவர்கள் காலையில் கிட்டத்தட்ட 4.30 மணி முதல் 5 மணிக்குள் வரலாம்.

11 மணிக்கு அசதியில் படுத்த நான் கீ...ங்க்...என்று கேட்டின் சப்தம் வர சட்டென்று எழுந்தேன். என் ஹாலில் இருக்கும் ஜன்னலை திறந்து வெளி கேட்டை பார்த்தேன். யாரும் இல்லை...அது ஏதோ...தள்ளியிருக்கும் வீட்டின் கேட்டின் சப்தம். மறுபடியும் மணியை பார்த்தேன் அப்போது மணி 11. 30. பெற்றவர்கள் வரும் ஆவல் என்னை எழுப்பி விட்டது.

மீண்டும் தூங்கினேன். திடீரென்று கீ...ங்க்...கீ.....ங்க்.... சப்தம். சட்டென்று திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன். இந்த முறையும் என் வீட்டு கேட்டின் சப்தம் இல்லை. சலித்துக்கொண்டு மறு படியும் தூங்கும் முன் மணியை பார்த்தேன்  சரியாக இரவு12.00 காட்டியது.

எப்போது தூங்கினேன் என்று எனக்கு தெரியவில்லை. சட்டென்று நான் தூங்கிக்கொண்டிருந்த ஹாலின் கதவு திறந்தது. நானும் தலையை சாய்த்து திரும்பி பார்த்தேன். கதவு திறந்ததால் சிலீர் என்ற வெளி காற்று என் முகத்தில் பட்டு உடல் சிலிர்த்தது....

ஒரு அழகான இளம் பெண் கிளி பச்சை நிற சுடிதாரும், வெளிற் பச்சை நிற துப்பட்டாவும் காலிள் கொலுசு சப்தத்துடன் என்னை தாண்டி என் காலருகில் உட்கார்ந்தாள். என்னை பார்த்து அழகாய் சிரித்தாள்.

எனக்கு கை கால்கள் உதற ஆரம்பித்தது. பேச வரவில்லை....சப்தம் போட்டு கத்தினேன் முடியவில்லை. அவள் தன் நீண்ட கூந்தலை வலது கைகளால் கோதிக்கொண்டு என் காலருகில் நெருங்கி இரண்டு கைகளாலும் அழுத்தி என் மீது நெருங்கினாள். என்னால் திமிற முடியவில்லை...கால்களை அசைக்க நினைத்தேன். அவளின் அழுத்தம் அதிகமாய் இருந்தது என்னை நோக்கி சிரித்துக்கொண்டே என் முகமருகில் வந்தாள். என் கழுத்தில் இருந்த ருத்திராட்ச கொட்டையை கைகளால் அழுத்தி பிடித்து முருகா...முருகா...என சொல்லிக்கொண்டு பலம் கொண்ட மட்டும் அழுத்தி அவளை எட்டி உதைத்தேன். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அவள் நிலை தடுமாறி என் காலுக்கு அடுத்து இருந்த கம்ப்யூட்டர் டேபிளில் மேல் விழுந்தாள். அதனால் பக்கத்தில் இருந்த இரண்டு ஸ்பீக்கர்களும் கீழே விழுந்தது.

கோபமான அவள் என்னை தட்டிவிட்டு வெடுக்கென்று வேகமாய் வெளியே சென்றுவிட்டாள். அவள் போன வேகத்தில் என் வெளிக்கதவுகள் இரண்டு முறை வேகமாய் அடித்தது. அவளின் துப்பட்டா என் முகத்தை தடவி சென்றது. எனக்கு வேர்த்து ஒழுகியது. பின் எப்போது படுத்தேன் என்று எனக்கே தெரியவில்லை....தூங்கிப்போனேன்.

மறுபடியும் கீ...ங்க்... என்று சப்தம் கேட்டதால் எழுந்து வெளியே பார்த்தால் என் தந்தையும், அம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்குள் வந்த அவர்கள் என்னடா கதவு திறந்திருக்கே என்றார்கள். விழுந்துகிடந்த ஸ்பீக்கர்களை எடுத்து மேலே வைத்த அம்மா...இதெல்லாம் ஒழுங்கா வைக்க மாட்டியா...என்றார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. நேற்று இரவு நடந்ததை இருவருக்கும் சொன்னேன்.அம்மா நம்பவில்லை.

ஆனால் அப்பா அதை நம்பினார். காரணம் என்னை வெளியே வாசலுக்கு போய் பார்க்க சொன்னார். அங்கே என் மூக்கை தூக்கும் கெட்ட வாசனை....யாரோ எடுத்த வாந்தி மாதிரி இருந்தது.

என்னப்பா அது என கேட்டேன்....

அது நாயின் வாமிட் என சொல்லிவிட்டு மனிதர் கண்களுக்கு தெரியாத அனுமானுஷ்ய உருவங்கள் விலங்குகளுக்கு தெரியும். நேற்று வந்த அந்த மோகினி வீட்டுக்கு பக்கத்தில் இருந்த நாய்க்கு தெரிந்திருக்கு. என்றார். அதனால் பயந்து போன அந்த நாய்தான் பயத்தில் வாமிட் பண்ணியிருக்கு என்றார். நாய்கள் பொதுவாக வாமிட் பண்ணாதாம் அதுகள் வாமிட் பண்ணினால் ஏதோ ஒன்றை பார்த்து பயந்திருக்கு என்பது பின்னர் படித்து தெரிந்து கொண்டேன்.

என் பெற்றோரை பார்க்க வந்த ஓனரும் என்னப்பா நேத்து நைட்டு அவ்ளோ வேகமா கதவை சாத்துரே மிட்நைட்டுலே என்று இன்னும் என்னை குழப்பிவிட்டு போனார். நடந்ததை அவருக்கும் சொன்னேன்...கொஞ்சம் தயங்கியவர் அதெல்லாம் பிரம்மை தம்பி என்றார்.

அடுத்த இரண்டு நாட்கள் என்னுடன் பெற்றோரும் என்னுடன் இருந்ததால் எனக்கு அவ்வளவாக பயம் வரவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் என்னை பயம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் அதற்க்கு பின்னர் அந்த பச்சை சுடிதார் பெண் வரவேயில்லை. ஆனால் அவளின் முகம் மட்டும் என்னை விட்டு அகலவே இல்லை.

அதற்க்கு பின் மூன்று மாதம் கழித்து கல்யாணத்திற்க்கு பின் கொஞ்சம் பெரிய வீடு தேவைப்பட்டதால் வேறு வீட்டுக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. வீட்டை காலிசெய்யும் நேரத்தில் எனக்கு வீட்டு ஓனர் ரெண்டு வீடு தள்ளியிருக்கும் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்....

அங்கே எனக்கு பேரதிர்ச்சி...."தம்பீ நீங்க தனியா இருக்கிறதாலே பயந்திருவீங்கன்னு தான் அன்னக்கி  சொல்லலே. அந்த போட்டோவை பாருங்க என்றார். அந்த வீட்டின் முன் அறையில் அதே பச்சை கலர் சுடிதார் போட்ட பெண் படம் மாலையுடன் இருந்தது. காதல் தோல்வியில் அவள் 9 மாதம் முன் தற்கொலை செய்துக்கொண்டாளாம்".

என் காலின் கீழ் பூமி நழுவிக்கொண்டிருந்தது.....

(முதல் கதையை படிக்காதவர்கள் கீழே லிங்கை சொடுக்கவும்)

http://www.bluehillsbook.blogspot.in/2012/06/blog-post_17.html


No comments:

Post a Comment