Friday, December 14, 2012

காப்பீடு திட்டங்களும் - வாய்ப்பாடு கட்டங்களும்.

காப்பீடு திட்டங்களும் - வாய்ப்பாடு கட்டங்களும்.

பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கட்டுரை.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு மத்தியான வேளையில் ஆபீஸில் இருக்கும்போது பலரின் மொபைல் போன்கள் அலறும். எடுத்து பேசினால் அழகான பெண்ணின் குரல்கள் உங்களை இடைமறிக்கும். சார்..நாங்க "...." இன்சுரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம்...உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துக்காகவும் இன்ஸ்யூர் பண்ணுங்க சார் என்று குழையும். வேண்டாம் என்றாலும் பல காரணங்களை சொல்லி நம்மை கட்டிப்போட்டு அடுத்த நாளே டை கட்டிய பிரதிநிதியை வீட்டுக்கு அனுப்பி செக்கையும், போட்டோவையும் வாங்கி விடுவார்கள். கூடவே 10 பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொள்ளுவார்கள். "கியாரண்டியா... டபுளாகும் சார்...உங்க பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்திடலாம் சார்...பையனுக்கு எஞ்சினியர் சீட் நிச்சயம் இந்த பணத்துலே தான் சார்" என்று கட்டம் போட்டு கணக்கு போட்டு உங்களுக்கு பல லட்சம் கிடைக்கும் என்று ஆசை காட்டுவார். அவர் பங்குக்கும் கொஞ்சம் தூவி விட்டு செக்கை வாங்கிவிட்டு போவார்.

அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பி வருடா வருடம் கஷ்டப்பட்டு உழைத்த சிறுக சிறுக சேர்த்த பணங்களை, பாலிசி காலம் முடிந்து எடுக்கலாம் என்று போனால் அந்த ஆபீஸில் முப்பது பல்லையும் காட்டிக்கொண்டு வணக்கம் வைத்து வரவேற்க்கும் அழகான ரிசப்ஷனிஸ்ட் பெண் கொஞ்ச நேரத்தில் அழகான ராட்சஷி ஆவாள். இதுவரை நாம் கட்டிய 40,000 ரூபாய் டபுளாகி இருக்கின்றது என நினைத்தால் அது நாம் கட்டியதை விட 18,000 குறைவாகவே இருக்கும்.

பலருக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்...."என்னங்க நான் கட்டிய பணம் கூட இல்லையே என்றால்"...."சார்...நாங்க என்ன பண்றது? மார்க்கெட் டல்" என்கிற ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொள்ளுவார்கள்.

"வேறே என்னதான் வழி" என்று கவலையுடன் கேட்டால்...சிம்பிளாய் சொல்லுவார்கள் "இன்னொரு நல்ல பாலிசி இருக்கு போடுறீங்களா?"

"நான் பாலிசி போட்டபோது மார்க்கெட் 17000 ஆயிரத்தில் இருந்ததே...2010 வாக்கில் 22 ஆயிரத்தை தொட்டது...இப்போது கூட 19500க்கும் மேல்தானே உள்ளது என கேட்டால்"...."ஹி ஹி...என்று வழிவார்கள். எங்க மானேஜர் இல்லை அடுத்தவாரம் வாங்க" என்பார்கள்.

அட...நாம் தான் ஏமாந்துவிட்டோம் என்றால் நம்மளை மாதிரி பல பேர் ஆங்காங்கே ஆபீசில் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஆண்கள், பெண்கள், படித்தவர், விஷயமுள்ளவர், பால்காரர், பிச்சைக்காரர்,முதலாளி, தொழிளாளி என்று பாரபட்சனையில்லாமல் ஏமாந்து இருக்கிறார்கள்.கிட்டத்தட்டா கால்வாசி இந்தியா ஏமாந்துவிட்டு...டிவியில் "சார்... கட்டி மூணு வருஷம் ஆச்சு...டபுளாகும்னு சொன்னாங்க...ஆனா பாதி கூட கிடைக்கலே..." என்று அதே டை கட்டியவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். மீன் மார்க்கெட்டை விட அதிக சப்தமானதாக இருக்கும்.

பின்னர் ஞானம் வந்து...அடுத்த பாலிசி போடலாம் என்றால் "டிரடிஷனல் பாலிசிதான் சார் கேரண்டி, மத்ததெல்லாம் வேஸ்ட் என்பார்கள்"

என்னதான் நடக்குது இங்கே?

பாலிசி கம்பெனிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு டை யப் செய்து சந்து பொந்தெல்லாம் கம்பெனிகள் முளைத்துவிட்டன. வெறு 10 சதவீத மக்கள்தான் தங்களின் வாழ்க்கையை இன்ஸ்யூர் செய்திருக்கிறார்கள் என்கிற நிலையில் இந்தியாவில் இதற்க்குண்டான மார்க்கெட் பரந்து விரிந்து உள்ளது. இதை தன் வசப்படுத்திக்கொண்ட கம்பெனிகள் மக்களை முட்டாளாக்கி நாளுக்கு நாள் ஏமாற்றி வருவது தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது.

இதுதான் இப்படி என்றால் மெடிக்கல் இன்சுரன்ஸ் செய்தவர்களின் நிலமை இன்னும் பாவம். காப்பீட்டு நிறுவனங்கள் எந்த நோய்களுக்கும் நாங்கள் சிகிச்சை கொடுப்போம் அல்லது செலவழித்த பணத்தை தருவோம் என்று சொல்லிவிட்டு  நமக்கு எதிர்பாராத விபத்தோ அல்லது காயங்களோ ஏற்ப்பட்டால் அவர்களின் உண்மையான சுய ரூபத்தை காட்டுவார்கள். அதாவது நமக்கு ஆன செலவை விட 50 சதம் குறைவாகவோ அல்லது இந்த நோய்க்கு சலுகை கிடையாது என்று கை விரிப்பார்கள்.

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இந்திய அரசு நிறுவனமான "எல்ஐசியில் பணம் கட்டி வந்திருக்கிறார். மூன்று வருடம் கழித்து பணம் எடுக்க சென்றால் அவருக்கு பேரதிர்ச்சி...அந்த பாலிசையையே காலாவதி ஆக்கிவிட்டார்களாம்" வேறு வழியின்றி கிடைத்த வரை போதும் என்று மீதிப்பணத்தை எடுத்து வந்திருக்கிறார்.

இதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளாமல் நாம் தலைமை நிறுவனக்களையோ அல்லது ஐஆர்டிஏ மற்றும் ஓம்புடுஸ்மேன் தலைமையையோ அணுகினால் நமக்கு பெரிதாய் கிடைக்கபோவது ஒன்றுமில்லை. செபியும் தனக்கு வரும் கம்ப்ளெய்ண்ட்களை பொதுவாக இன்சுரன்ஸ் கம்பெனிகளுக்கு சாதகமாகவே வழங்கும்.

ஏமாந்தவங்க, ஏமாறப்போறவங்க முக்கியமா கவனியுங்க.... 

1. அரசாங்க நிறுவனமான எல்ஐசியில் மட்டும் கோரப்படாத அல்லது குறைந்த பிரீமியம்கள் கட்டப்பட்டு தொடரப்பாடாத உபரிப்பணங்கள் பல ஆயிரம் கோடிகளை தொடும். எத்தனைப்பேர் இதைப்பற்றி அறிந்திருக்கிறீர்கள்?

2. இவை மட்டுமா...நமக்கு பாலிசி கிடைத்த 15 நாட்களுக்குள் அதன் சாதக பாதங்களை பார்த்து நமக்கு பிடிக்கவில்லையென்றால் கேன்சல் செய்து பணத்தை திரும்ப பெறலாம் என்பதும் எத்தனை பேருக்குத்தெரியும்.

3. மெடிக்கல் கிளைமுக்கு போன பாலிசி தாரரின் அப்ளிகேஷன்கள் நிராகரிக்கப்பட்டதும் அல்லது குறைந்த அளவு பணம் பெறப்பட்டதினால் கொள்ளையடித்த நிறுவனங்களின் பங்கு பல மடங்கு லாபங்கள் அதிகமோ அதிகம்.

4. எந்த இன்சுரன்ஸாவது நஷ்டமானதுண்டா இந்தியாவில்? அதன் பங்குகள் குறைந்ததுண்டா..ஆனால் வாடிக்கையாளர்களின் பணங்கள் மட்டும் குறைந்திருக்கின்றன.

5. கஷ்டமர்களின் கம்ப்ளெய்ண்ட் லெட்டர்களும், தீர்ப்பாயத்திற்க்கு அனுப்பப்பட்ட கடிதங்களில் சுமார் 20% சதம் மட்டுமே இன்சுரன்ஸ் கம்பெனிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன. மற்ற 80% சதம் நிராகரிக்கப்பட்டுள்ளன.

6. பாலிசையை தொடங்கினால் தொடருங்கள் பாதியில் விட வேண்டாம். நன்றாக ஆராய்ந்து ஒன்றுக்கு நான்கு முறை அலசி பின்னர் முடிவெடுங்கள். அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்டு தகுதிக்கு மீறி பாலிசி போடாதீர்கள்.

7. பிரதிநிதிகளின் பொய் வார்த்தைகளையோ, கால் செண்ட்டர் பெண்களின் வார்த்தை ஜாலங்களையோ நம்பி முதலீடு செய்யாதீர்கள்.

8. பின்னால் வரப்போகும் காலத்தை இன்பமானதாய் கழிக்கப்போகும் நிலையில் உங்களின் கஷ்டப்பட்டு சம்பாதித்த சிறு தொகைகளை முதலீடு செய்யும்போது உஷாராய் இருப்பது நலம்.

9. அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது உங்கள் பாலிசிகளின் NAV பண நிலையை அறிந்துக்கொள்ளுங்கள். இன்சுரன்ஸ் கம்பெனிகளின் வெப் சைட்டில் ஆன்லைனில் லாக் இன் செய்து உங்களின் குறிப்பிட்ட பாலிசிகளை கண்காணியுங்கள். தேவைப்பட்டால் "சுவிச் ஆப்" முறையை பயன்படுத்தி உங்களின் பங்குகளை சரியான முதலீட்டில் போடுங்கள்.

கடைசியாய் உங்களின் வாழ்க்கையை இன்ஸூர் செய்கிறேன் என்கிற பேரில் கன்பியூஸ் செய்துகொள்ளாதீர்கள். வடிவேலு பாஷையில் சொல்லணும்னா "எதையுமே...சரியா பிளான் பண்ணி பண்ணனும்..ஓகெ"!

ஷேர் செய்யுங்கள் நண்பர்களுக்காக!

No comments:

Post a Comment