Friday, December 14, 2012

விஷ்வரூபம் கமல் செய்யப்போவது சரியா?
விஷ்வரூபம் கமல் செய்யப்போவது சரியா?

கடந்த மூன்று நாட்களில் சினிமா ரசிகர்களுக்கு விஷ்வரூபத்தின் அடுத்தடுத்த அதிர்ச்சி தரும் அறிக்கைகள் நம்மை அசத்திக்கொண்டிருக்கின்றது. பல பேர் பலவிதமாக கருத்துக்கள் சொன்னாலும் உண்மையான காரணம் என்ன என்பதை கொஞ்சம் அலசுவோம்.

கடந்த மூன்றுமாதங்களாகவே கமலின் படம் முடிந்துவிட்ட நிலையில் இதோ அதோ என்று ஒருவழியாக ஜனவரி இரண்டாவது வாரத்தில்(ஜனவரி 11ம் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகலாம் என்கிற கருத்தும், அதற்க்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

ஆனால் திடீரென்று கமல் விஷ்வரூபம் டிடிஎச்(கேபிள் தொலைக்காட்சி) மூலம் முதல் நாள் ஒளிபரப்பப்படும் என்கிற குண்டை தூக்கி போட்டவுடன் மொத்த சினிமாத்துறையும் ஆச்சரியப்பட்டது. தியேட்டர் சங்கமும், தயாரிப்பு சங்கமும் கொதித்து எழுந்தது. காரணம் இவ்வளவு நாள் அவர்கள் ரசிகர்களின் வயிற்றில் அடித்தார்கள் இப்போது கமல் அவர்களின் வயிற்றில் அடிக்க கிளம்பிவிட்டார் என்கிற குமுறல்தான்.

வித்தியாசமான ஒளியமைப்பில்(ஆரோ 3டி) உலகில் இரண்டாவது படமாகவும் விஷ்வரூபம் வெளிவர இருப்பதால் அதற்க்கு வசதியாக தியேட்டர்களின் சவுண்ட் சிஸ்டத்தை மாற்றவும்  தியேட்டர்களில் வேலைகள் ஆரம்பித்துவிட்ட நிலையில் கமலின் அதிரடி அறிவிப்பு பல தியேட்டர் அதிபர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.

படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப கமல் முடிவெடுத்ததற்க்கு காரணம் என்ன? தனது படம் தயாரிப்பு மற்றும் அதற்க்குண்டான விளம்பரம் செய்ததற்க்கான செலவுகள் அதிகம் என்பதால் கமலும் தியேட்டர் உரிமையாளர்களிடமும், வெளியீட்டாளர்களிடமும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், தன் படத்திற்க்கு கிடைக்கும் என நினைத்த 100 கோடி அளவுக்கான பணம் கிடைக்காததால்தான் இப்படி முடிவெடுக்க காரணம் எனவும் கூறப்பட்டது.

படம் வெளிவரும் முன்பு டிடிஎசில் ஒளிபரப்புவது சரிதானா? இது சினிமாத்துறைக்கு நல்லதா இல்லை கெட்டதா என்பதை இப்போது அலசுவோம்.

ரேடியோக்கள் கேட்டுக்கோண்டிருந்த காலத்தில் டிவிக்கள் வந்தது. அதனால் ரேடியோக்கள் அழிந்துவிட்டதா? இல்லை...இன்றும் பல நூறு ரேடியோ நிலையங்கள் நம்மை பாதிநேரம் மூழ்கடித்துக்கொண்டிருக்கின்றது.

லேப்டாப்கள் இருந்தபோது டாப்லட்கள் வந்துவிட்ட காலம். லேப்டாப்கள் அழிந்துவிட்டதா? இல்லையே.

டிவிக்கள் வந்தபோது சினிமா அழிந்துவிடும் என்றார்கள். அழிந்துவிட்டதா?

டிஜிடல் கேமராக்கள் வந்த போது பிலிம் ரோல் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள் கூட இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

அவ்வளவு ஏன்...சினிமாத்துறையில் இன்று வரை ஏகப்பட்ட மாற்றங்கள். கொட்டகைகள், சிங்கிள் தியேட்டர்கள், மினி தியேட்டர்கள், மல்டிபிள்க்ஸ்கள், மற்றும் பெய்ட் பிரிவியூ என அங்கும் மாற்றங்கள் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

தொழில் நுட்பம் வளரும்போது முந்தைய கண்டுபிடிப்புகள் இல்லாமல் போவதும் அல்லது அதன் உபயோகங்கள் குறைவதும் சகஜமான விஷயம்தான்.

எனது விளக்கங்கள்.... 

1. தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலத்தில் படம் டிடிஎச்சில் ஒளிபரப்ப பட்டாலும்....படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கட்டாயம் தியேட்டருக்கு வருவார்கள்.(பல கேபிள் சேனல்களில் "வீடியோ ஆன் டிமாண்ட்" என்று படம் வெளியான சில நாட்களில் குறிப்பிட்ட தொகை கொடுத்து நம் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி வசதிகள் இப்போதும் உள்ளது).

2. தியேட்டருக்கு வருபவர்கள் குறைந்தால் வருமானம் குறைந்து தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தை குறைக்கும் வாய்ப்பும் உண்டு. மல்டிபிளக்ஸ் கொள்ளை குறையும் (மினிமம் ஒருவருக்கு 120 ரூபாய் டிக்கெட்டும், பாப்கார்ன், கோலா என்று 200 ரூபாயும், பார்க்கிங்க கட்டணம் என்கிற வகையில் 50 ரூபாயும் கொள்ளையடிக்கிறார்கள். சாமானிய மக்களால் இந்த அளவு செலவுகள் செய்ய இயலுமா?)

3. பெரிய படங்களானாலும், சிறிய படங்களானாலும் நல்ல படங்களாக இருந்தால் கட்டாயம் டிடிஎச்சிலும் வரவேற்ப்பு கட்டாயம் இருக்கும். அதனால் சிறிய தயாரிப்பாளர்களும், சிறிய படங்களும் அழியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

4. முக்கியமான இன்னொரு நன்மை.....தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் பேர் ஒரு மாத்தில் தியேட்டர் வந்து திரைப்படம் பார்ப்பவர்கள் என வைத்துக்கொண்டால்.....டிடிஎச்சில் ஒளிபரப்பினால் காசு கொடுத்து சுமார் 2 கோடி பேராவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் இதனால் திரைப்படத்திற்க்கு ரசிகர்களாகிய மக்கள் எண்ணிக்கை கூடுமே தவிற குறையாது. இதனால் கிடைக்கபோகும் வியாபாரமும் அதிகமாகும்.

கமலின் முயற்சியை குறை சொல்லுபவர்களுக்கு....

படங்கள் வெளியான இரண்டு நாட்களில் திருட்டு விசிடிகளிலும், இணையங்களிலும் வெளிவந்துவிடுவதால் சினிமா அழிந்துவிட்டதா?

சன் டிவியில் எத்தனையோ படங்கள் வெளிவந்து இரண்டு வாரங்களிலும், ஏன் தியேட்டரில் வெளிவராமலும் இருந்த பல படங்கள் சின்ன திரையில் முதன்முறையாகவும் வந்த போது ஏன் பேசவில்லை, ஏன் கோபப்படவில்லை?

படம் நன்றாக இருந்தால் கட்டாயம் தியேட்டர் போய் பார்ப்பார்கள். என்னதான் டிவியில் பார்த்தாலும் சில பிரமாண்டமான  படங்களை தியேட்டரில் பார்த்தால் தான் அதன் அருமை புரியும்.

இந்த விஷயத்தில் தீமையும் இருகின்றது, நன்மையும் இருக்கின்றது. ஆனால் நன்மைகள்தான் அதிகம்.

சிறு தயாரிப்பாளர்கள் இதனால் பாதிக்கப்போவதில்லை. 600 படங்கள் வெளியிடப்படாமல் பெட்டிக்குள் உள்ளதாம். பல படங்கள் டிடிஎச்சில் வருவதின் மூலம் தியேட்டர்கள் ஈயாடும்(!) அப்போது அவர்களின் பார்வை சிறு படங்களின் மீது கட்டாயம் விழும். சிறு படங்களைக்கூட அவர்கள் வெளியிட தயாராவார்கள்.

தியேட்டர்கள் தான் சிறு படங்களுக்கு எதிரியே தவிர கமல் அல்ல. பெரிய நடிகர்களின் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறு படங்களுக்கு தியேட்டர் அதிபர்கள் கொடுப்பதே இல்லை. பெயருக்காக காலை காட்சிகளில் ஒரு காட்சியை ஓடவிட்டு, சரியான நேரங்களை பத்திரிகைகளில் கொடுக்காமல், அல்லது திடீரென்று திரையிடும் நேரங்களை மாற்றியோ அல்லது படத்தை முன்னறிவிப்பின்றி ரத்து செய்தோ சிறு படங்களை அழிக்கிறார்கள். முதலில் இவர்களிடம் ஒற்றுமையில்லாததும் ஒரு சில பெரிய தயாரிப்பாளர்களின் கைப்பாவையாக சினிமா துறையும், தியேட்டர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் இருப்பதால்தான் இந்த நிலமை.

இறுதியாக....டிடிஎச்சால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதால்தான் அவர்கள் இப்படி கூப்பாடு போடுகிறார்கள். கமல் மாதிரி வித்தியாசத்தையும், தொழில் நுட்பத்தையும் நம்புபவர்களின் இந்த மாதிரி புதிய முயற்ச்சிகளை வரவேற்க பழகிக்கொள்ளவேண்டும். அதும் சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே இன்வெஸ்ட் செய்யும் கமலின் முயற்சியை வரவேற்ப்போம். வெற்றி பெற வாழ்த்துவோம்.

வித்தியாசங்களை விரும்பும் தமிழ் சினிமா அடுத்தக்கட்ட தொழில்நுட்பத்தை வரவேற்ப்பதில் தவறில்லை.


No comments:

Post a Comment