Saturday, December 22, 2012

கும்கி :- திரைப்பட விமர்சனம்.கும்கி :- திரைப்பட விமர்சனம்.

நீதானே என் பொன்வசந்தமா இல்லை கும்கியா என யோசிக்கும்போது கும்கியை தேர்ந்தெடுத்ததற்க்கு காரணம், ஒன்று பிரபு சாலமன் இன்னொன்று சிவாஜியின் வாரிசு. ஆனால் முதலாமவர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

என்னடா இது ஃபேஸ்புக்கில் எல்லோரும் இந்த படத்தை பாராட்டும்போது நீங்கள் மட்டும் எப்படி இப்படி பேசலாம் என்று கேட்பது புரிகின்றது. காரணம் நான் எழுதப்போவது நல்ல விமர்சனம் (கௌதமையும், ஜீவாவையும் பிடிக்காததால்தான் கும்கியை புகழ்ந்தார்களோ என்று தோன்றுகின்றது!).

காட்டு யானைகளின் அட்டகாசதிற்க்கு, என்ன காரணம் என்பதை ஒரே ஒரு வசனத்தில் மட்டும் மேலோட்டமாய் சொல்லிவிட்டு, காட்டு யானைகள்தான் மனிதர்களுக்கு எதிரிகள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கும் படம். உண்மையிலேயே வில்லன்கள் காட்டு யானைகளா? இல்லை மக்களா.....???

சரி கதைக்கு வருவோம்.....

பொம்மன் எனும் காட்டுயானையின் அட்டகாசத்தை (இந்த படத்தில் மட்டும்தான் காட்டு யானை சிங்கிளாக வருகின்றது!) மூன்று ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து (ஒரு ஊரைத்தான் காட்டுகிறார்கள் அதுவும் மொத்தம் 10 12 வீடுகளின் செட்) கும்கி யானை வரவைத்து காட்டு யானையை விரட்ட அழைத்துவருகிறார்கள். அவசரத்தில் கும்கியானை கிடைக்காததால் விக்ரம் பிரபு (இவரும் பொம்மன்) தனது செல்ல வீட்டு மாணிக்கம் என்கிற யானையை  கும்கியானை என்று சொல்லி அழைத்துவருகிறார். விக்ரம் பிரபு ஊர் தலைவரின் மகள் அல்லியை கண்டவுடன் காதல் கொள்ள (வழக்கம்போல்தான்...!) காதல் கை கூடியதா,  யானைகளின் நிலை என்ன மற்றும் காதல் கனிந்ததா என்பதை பச்சை பசேல் வெள்ளித்திரையில் காண்க.


முக்கியமான இன்னொரு கேரக்டர் விக்ரம் பிரபுவின் மாமாவாக வரும் தம்பி ராமைய்யா....முதன் முதலாக சோலோ காமெடியனாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் இரட்டை அர்த்த வசனங்களும், மற்றவர்களின் மனதை புண்படுத்தும் விதமான வசனங்களும் நம்மை சிரிக்க வைப்பதை விட கொஞ்சம் எரிச்சல் அடைய செய்கிறார். அவரின் எடுபிடியாக "உண்டியல்" அவினாஷ் நல்லாவே செய்திருக்கிறார்.

நல்ல கதையை அரைவேக்காட்டாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தில் திருப்பங்கள் ஏதும் இன்றி கொஞ்சம் மெதுவாகவே கதை நகர்கிறது (முதல் பாதி படு ஸ்லோ). சட்டென்று முடிந்துவிடும் சொதப்பல் கிளைமாக்ஸ்....உண்மையாக காரணத்தை ஆராயாமல் முழுப்பழியையும் காட்டு யானைகள் மீது சுமத்தி இருக்கிறார். வழக்கம்போல் இந்த படத்திலும் போலீஸாரும், அரசாங்க ஊழியர்களும் கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். (இந்த இயக்குனர்கள் கதாநாயகர்களை போலீஸ் வேடத்தில் போட்டால் மட்டும் போலீஸ் துறையை உயர்த்தி காட்டுவார்கள்..இல்லையென்றால் அசிங்கப்படுத்தி மொக்கையாக்குவார்கள்).

படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு தனது முதல் படத்திலேயே சிவாஜியின் பேரன் என்பதை நிரூபித்து இருக்கிறார். ஆறரை அடி ஆஜான பாகுவான உடலமைப்பில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்புண்டு. அதுவும் யானையின் தந்தங்களை இரண்டு கைகளால் பிடித்து நெற்றியில் முத்தமிடும் காட்கிகள் அழகு. ஆனாலும் அவரின் நீளமான மூக்கு கொஞ்சம் மைனஸ்தான். முதல் படத்தில் தன் வேலையை சிறப்பாக செய்ததில் நல்ல ஹீரோவாக வர வாய்ப்புண்டு (கிளைமாக்ஸ் காட்சியின் நடிப்பு ஒன்றே சாட்சி).

நாயகி அல்லியாக லக்ஷ்மி மேனன் கிராமத்து ஆதிவாசி பெண்ணாக அசத்தியிருக்கிறார். அகலமான கண்களால் முதல் காட்சியிலேயே ஹீரோவை அவுட்டாக்கியதில் தப்பேதும் இல்லை. முதலில் யானையை பார்த்து பயப்படும்போதும், பின்னர் அதனுடன் ஒட்டி உறவாடும்போதும் மின்னுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கொஞ்சம் கலங்கடிக்கிறார்.

ஊர் தலைவராக (பெயர் தெரியவில்லை), அவரின் சகோதரராக ஜூனியர் பாலாஜி வித்தியாசமான கெட்டப்பில் ரொம்ப நாள் கழித்து ரீ எண்ட்ரி. ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. காட்டு வாசி மக்களாக அனைவருமே நல்ல தேர்வு....காஸ்ட்டியூமில் கவனம் செலுத்தா விட்டாலும் ஹேர் ஸ்டைலிலும், வித்தியாசமான நடிகர் தேர்விலும் பிரபு சாலமன் வெற்றிப்பெற்றிருக்கிறார்.....

முக்கியமாய் இயக்குனர் பிரபு சாலமன்....

மைனாவில் மயங்கவைத்த இயக்குனர். அடுத்ததாகவும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். லொகேஷனிலும், நடிகர்கள் தேர்விலும், இசைக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் கதையில் செலுத்தியிருக்கலாம். இரண்டு காட்சியில் வீட்டு யானைக்கு ஒரே ஒரு டயலாக்கில் கும்கி யானையாக மாற்றுவதென்பதும், ஒட்டாத காதலும், அறுவெறுப்பான ராமைய்யாவின் காமெடிகளும் நம்மை படத்திலிருந்து அந்நியப்படுத்துவதால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இது மாதிரி சமூகம் சார்ந்த படங்களை எடுக்கும்போது கொஞ்சம் மெனக்கெடல் வேண்டும். சொல்ல வருவதை தெளிவாக சொல்லத்தெரிந்தால் மட்டுமே படம் சரியாகப்போய் சேரும். கடைசியில் யாரையாவது சாவடிக்காமல் படத்தை எடுக்க மாட்டீர்களா? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சாலமன்.

படத்தின் முக்கியான ஹீரோ ஒன்னொருவரும் இருக்கிறார். அவர் இசை இமான். மைனாவில் சிக்ஸர் அடித்தவர் இதிலும் சென்ச்சுரி அடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான பலம் இசையும் பாடல்களும். சினிமாட்டோகிராபியில் பச்சை பசேல் மலைகளும், ரம்மியமான வயல் வெளிகளும் நம்மை குளிர்விப்பது உண்மை. இந்த மாதிரி லொகேஷன்களுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம். கொள்ளை அழகு.

மைனஸ் :-

நிறைய.....முதலில் படத்தின் அரைவேக்காட்டு கதை. படத்தின் முதலிலும், கடைசியிலும் இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே கொம்பன் வருவதால் ஆர்வம் வராத கிளைமாக்ஸ், அவர்கள் ஊரில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் மட்டும்  காடு மலை என காதல் செய்வது, காதல் காட்சிகளில் மட்டும் தாவணி கட்டிக்கொண்டு பாறைக்குள் ஓளித்து வைப்பது, காதல் காட்சிகளில் இரண்டு காட்சிகளில் மட்டும் காதலனும், காதலியும் இணைந்து வருவதால் அவர்கள் பிரியும்போது நமக்கு ஏற்ப்படாத அதன் தாக்கம், சுமாரான கிராபிக் காட்சிகள் (இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஷாட்கள் வைத்திருந்தால் கிராபிக்ஸ் உதவியுடன் பரபரப்பை கூட்டி இருக்கலாம்), மெதுவாக நகரும் திருப்பங்களோ, வித்தியாசங்களோ இல்லாத சுமார் கதை, மொக்கை ரேஞ்சர்ஸ், நம்பிக்கை துரோகம் என்பதை கிளைமாக்ஸில் சொன்ன இயக்குனர் பொது மக்கள் காட்டு யானைகளுக்கு செய்யும் நம்பிக்கியை துரோகத்தை மறந்ததேன்?....இப்படி பல....

பிளஸ்....

யானை மாணிக்கம் கலக்கி இருக்கிறது அனைத்திலும், இசை மற்றும் பாடல்கள், லொகேஷன், விக்ரம் பிரபு, மற்றும் நாயகி.

மொத்தத்தில்...

 ஒட்டாத காதலும் அழுத்தமில்லாத கதையும் நம்மை ஏமாற்றிவிட்டார் பிரபு சாலமன். மைனாவில் வேகமாய் ஒடி வெற்றி கல்லை தொட்ட இயக்குனர், கும்கியில் வேகமாய் ஓடினாலும் குப்புற விழுந்து....ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று டிவிக்களில் கும்கி குழுவின் அலப்பறை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் :- சரியான போட்டி இல்லாததால் இந்த படம் சுமாராக ஓடும் திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமிக்கு கொஞ்சம் லாபமும் தரும்.

கும்கி :- பெரிய யானை சிறிய கதை!

No comments:

Post a Comment