Saturday, December 1, 2012

லைப் ஆப் பை (ஹிந்தி) - திரைப்பட விமர்சனம்.
லைப் ஆப் பை (ஹிந்தி) - திரைப்பட விமர்சனம்.

ஜங்கிள் புக் தொடங்கி இந்திய வாழ்வியலை மைய்யமாக வைத்து பல திரைப்படங்கள் ஹாலிவுட்டில் இதுவரை வெளிவந்துள்ளன. ஏன் இந்தியாவை சார்ந்த சத்யஜித் ரே முதல் தமிழ் நாட்டில் பாலா போன்ற இயக்குனர்கள் இந்தியாவை ஒரு அழுக்கு நாடாகவும், ஏழ்மை நாடாகவும் காட்டியே உலக அளவில் பெயர் வாங்கியிருக்கின்றனர்.

ஆனால் ஒரு சில படங்களில்தான் இந்தியாவின் கலாச்சாரத்தையும், அழகையும் காட்டி இருக்கின்றனர். அந்த வகையில் நாவலை(கனடாவை சேர்ந்த யான் மார்டல் என்பவர் எழுதி கடந்த 2001ம் ஆண்டில் வெளிவந்த நாவல்தான் லைஃப் ஆஃப் பை. மிகவும் பிரபலமடைந்த இந்த நாவல் ‘புக்கர் பரிசு’ உட்பட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்தது) மையமாக வைத்து ஆஸ்கார் இயக்குனர் பாண்டிசேரியிலும், மெக்ஸிகோவிலும், கனடாவிலும் லை ஆப் பை என்னும் படத்தை உருவாக்கியிருக்கிறார். சீன இயக்குனருக்கும் (ஆங் லீ), கதை ஆசிரியருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும். முக்கியமாய் கடவுள் இருக்கிறார் என்பதையும் சொன்னதற்க்காக. இன்னொரு சிறப்பு மூன்று நான்கு பேரைத்தவிர மற்ற எல்லோருமே இந்திய நடிகர்கள்தான்.கதை என்ன?

பாண்டிச்சேரியில் மிருக காட்சி சாலை வைத்திருக்கும் நாயகன் பையின் தந்தை தொழில் நசிந்ததால் எல்லா விலங்குகளையும்  கனடாவுக்கு விற்க்க பெரிய சரக்கு கப்பலில் பயணிக்கிறார்கள். திடீரென்று தாக்கும் புயலில் கப்பல் சிக்கிவிட ஒரு படகில் நாயகன் பையும்(சூரஜ் ஷர்மா), சிம்பன்சி குரங்கும், ஒரு வரிக்குதிரையும், ஒரு ஓநாயும் தப்பிக்க முயல்கிறார்கள். நடுக்கடலில் ஓனாய் வரிக்குதிரையை தாக்கி கொன்று தின்கிறது. சிம்பன்சியையும் தாக்கி கொல்கிறது. திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக போட்டுக்குள் இருந்து விளியே வருகின்றது ரிச்சர்ட் பார்க்கர் எனும் பெங்கால் புலி. நாயகனுக்கும், புலிக்கும் இடையே நடக்கும் வாழ்வியல் போராட்டம் தான் அடுத்த முக்கால் மணிநேரம் ரசிகர்களை பதைபதைப்பாகவும், ஆச்சர்யமாகவும் கடைசியில் ஆனந்த கண்ணீருடன் கைதட்ட வைக்கும் இந்த லைப் ஆஃப் பை.

உலகின் உயிர் வாழ்வியலை தெளிவாக சொல்கிறது படம். ஒன்றை அழித்துதான் இன்னொன்று வாழ வேண்டும் என்கிற நிலையில் அந்த புலிக்கும், பையுக்குமான கடைசி தருணங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. விலங்குகளுக்கும் மனம் உண்டு, கருணை உண்டு என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த படம். கிட்டத்தட்ட 247 நாட்காள் இவர்களின் கடல் பயண நாட்களை அழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கடலில் திமிங்கிலத்தின் பாய்ச்சலாகட்டும், மெக்ஸிகோவின் ஹைலண்ட் காட்சியாகட்டும், கடவுளாக ஏதோ ஒரு சக்தி இவர்களை காப்பாற்றுவதிலாகட்டும், கொஞ்சம் கொஞ்சமாக புலிக்கும், நாயகனுக்கும் ஏற்ப்படும் மன மாறுதல்களும், இறுதிக்காட்சியில் பார்க்கர்  நோய்வாய்ப்பட இருவரின் பாசப்போராட்டமாகட்டும் இப்படி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் ஏராளம்.

எல்லா மதத்தையும், எல்லா மத கடவுள்களையும் நம்பும் நாயகனை காட்டியதன்மூலம். கடவுள் ஒன்று, கடவுள் உண்டு என்று ஆணித்தரமாக சீன இயக்குனர் சொல்லியிருக்கிறார். இதுவரை இந்தியாவை மையப்படுத்தி வந்த படங்களில் இனி லைப் ஆஃப் பைக்கு ஒரு தனி இடம் நிச்சயம் இருக்கும்.


இயக்குனர் ஆஸ்காரை வாங்கியவர், தனது முந்தியப்படங்களான (Crouching Tiger, Hidden Dragon, Hulk, Lust, Caution) இவைகளின் மூலம் தனியிடத்தை தக்க வைத்தவர். அதுவும் பல இயக்குனர்கள் நாவலை படமாக எடுக்கும்போது தோற்றுவிடுகின்றனர். ஆனால் இவர் சத்தியமாய ஜெயித்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக தபூ, நாயகன் வளர்ந்த பிறகு இர்பான் கான் இந்த இரண்டு முகங்கள்தான் படத்தில் பரிச்சியமானவை. சென்னை பெண் ஆர்த்தி, இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனசை கொள்ளைகொள்கிறாள். சின்ன வயது நாயகனும், வளர்ந்து போட்டில் தவிப்பவராகவும், பின்னர் இந்த கதையை ஜப்பானிய அதிகாரிக்கு தன் பிளாஷ்பேக் கதையாக சொல்லும் இர்பான் கானாகவும் மூன்று பருவங்களில் காட்டியிருக்கிறார்கள். இர்பானின் யதார்த்த நடிப்பும், போட்டில் கஷ்டப்படும் அசாதாரண வாலிபனின் நடிப்பும், சிறுவனின் ஆர்வமான நடிப்பும்....நல்ல நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

அடுத்ததாய் கிராஃபிக்ஸ் மற்றும் ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும். கடலின் பிரம்மாண்டத்தையும், தவிக்கும் படகு காட்சிகளில் நம்மையும் படகில் ஏற்றி பதைபதைக்க வைக்கிறார்கள். திமிங்கிலத்தில் துள்ளல் ஆகட்டும், இரவில் தெரியும் கடவுளாகட்டும், மெக்ஸிகோ தீவின் அழகாகட்டும் இப்படியும் இந்த பூமியில் இடங்கள் உள்ளனவா என வாயைப்பிளப்பது நிஜம். இசை படத்தின் மிகப்பெரிய பலம். பாடல்கள் இல்லாமல் படத்தோடு ஒன்றச்செய்கிறது. இர்பான் பாத்திரத்தின் டைமிங் ஜோக்குகளையும் ரசிக்கலாம்.

ரொம்ப பழைய படங்களிலும், ராமநாராயணன் படங்களிலும் விலங்குகளை நடிக்கவைத்து பார்த்திருக்கிறோம்.பெங்கால் புலியை எப்படி இப்படி நடிக்க வைத்தார்கள் என்பது இன்னும் எனக்கு விளங்கவில்லை. எல்லா வித முகபாவங்களையும் நாயகனுக்கு சரி சமமாக காட்டுகிறது இந்த புலி.அதுவும் அந்த படகில் ஓநாயின் அட்டகாசத்தையும் சொல்லியாக வேண்டும். அமர்க்களம்.

மைனஸ்:

அவ்வளவாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சில காட்சிகளில் கண்டினியூட்டி மிஸ் ஆகிறது. கப்பல் விபத்தில் மற்ற யாரையும்  காட்டாமல் நாயகனை மைய்யப்படுத்தியது, இன்னும் ஒன்று இரண்டு காட்சிகள் கப்பலில் மற்றவர்களின் போராட்டத்தையும் காட்டியிருந்தால் இன்னும் கதையோடு ஒன்றியிருப்போம். இறந்த விலங்குகள் திடீரென்று படகில் காணாமல் போவதும், ஒரு காட்சியில் நூற்றுக்கணக்கான மீன்கள் படகுக்குள் விழுவதும் அடுத்த காட்சியில் படகு படு சுத்தமாய் இருப்பதும், கடவுள் தோன்றும் காட்சியை இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்தி இருக்கலாம். கடைசியாக அந்த சிறிய படகில் கிட்டத்தட்ட அத்த்னை நாட்கள் பயணம் செய்து தப்பிக்கமுடியுமா என்பது தெரியவில்லை. திமிங்கிலங்களினாலோ, சுறாக்களினாலோ எந்த வித அச்சுறுத்தலும் வராதது ஆச்சர்யம்!

ஒரு வெளிநாட்டு இயக்குனர் இந்தியாவின்  கலாச்சாரத்தின் மீதும், இந்திய மைத்தாலஜி கதைகளை பற்றி கொண்ட அறிவும், பரத நாட்டிய விளக்கமும், இந்தியத்தனம் மாறாத கதை சொல்லிய தெளிவும்....ம்ம்ம்ம் நம்ம இந்திய இயக்குனர்கள் இவர்களிடம் உண்மையிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றப்படி இந்த லைஃப் ஆஃப் பை....உங்களை இன்னொரு உலகத்துக்கு அழைத்து செல்லும். அந்த உலகம் உங்களை ஆனந்தப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குடும்பத்துடன் செல்லுங்கள். ஆச்சர்யம் காத்திருக்கின்றது!


No comments:

Post a Comment