Sunday, November 11, 2012

பாவப்பட்ட பெண்களும் வெளிநாட்டு வேலையும்.
பாவப்பட்ட பெண்களும் வெளிநாட்டு வேலையும்.

(படம் நன்றி கூகுள்).

இந்த இயந்திரமான வாழ்க்கையில் ஆண்களாகிய நாமே இவ்வளவு இன்னல்களை படும்போது பெண்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். சொந்த நாட்டிலேயே பலவகையான பிரச்சனைகள் இருக்கும்போது வெளிநாடுகளில் வேலைக்காக போன அபலைகளின் வாழ்வை என்றாவது நாம் நினைத்து பார்க்கின்றோமா?

படித்த பெண்களானாலும், படிக்காத பெண்களானாலும் பிரச்சனைகள் ஒன்றுதான். இன்னும் ஆணாதிக்க உலகத்தால் எங்கோ ஒரு மூலையில் நமக்கு தெரியாமல் பல பெண்களின் வாழ்வுகள் வாசமிழந்து நசுக்கப்படுகிறது.

படித்த பெண்கள் ஒரு நல்ல வேலையில் இருப்பதாலும், விஷயங்கள் அறிந்ததாலும் பல நேரங்களில் தப்பிக்க வாய்ப்புண்டு.

ஆனால்....

குழந்தைகளுக்காகவும், வீட்டுக்காககவும் கடல் கடந்து நர்சுகளாகவும், வீட்டு வேலைகள் செய்வதற்க்கும், ஏன் இன்னும் பல வகையான வேலைகளுக்காகவும் விவரம் அறியாமலும், தெரியாமலும் ஏஜண்ட்களிடம் சிக்கி தங்கள் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் ஏராளம்.

பாஷைகள் தெரியாமல், ஊர் பேர் தெரியாமல் அறிமுகமில்லா பணக்காரர்களிடம் பணம் கொடுக்குறார்கள் என்பதற்க்காக விட்டில் பூச்சிகளாய் வீழ்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. முக்கியமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள் அல்லது தெரிந்தே கடத்தப்படுகிறார்கள். அதில் எத்தனை பேர் சந்தோஷமான வாழ்வை அனுபவிக்கிறார்கள்? எத்தனைப்பேரின் கஷ்டங்களை நம்மால் அறியமுடியும்?

பணக்கார தாத்தாக்களுக்கு ஹோம் நர்சுகளாகவும், பல குடும்பங்களுக்கு வீட்டு வேலை செய்திட வேண்டும் என்கிற தகவலின் கீழ் செல்லும் பல பெண்கள் அங்கே மனத்தாலும் உடலாலும் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அரேபு ஷேக்குகளின் கீழ்த்தரமான பாலியல் தொந்தரவுகளாலும், அமெரிக்க பணக்கார கிழடுகளின் சேவை என்கிற பேரில் உடல் சம்பந்தமான தாக்குதல்களாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு உயிருடன் வாழும் ஜடமாகத்தான் பெண்கள் அங்கே வாழ்ந்து சாகிறார்கள் என நினைக்கிறேன். இன்னும் மோசமாக தாய்லாந்து விபசார விடுதிகளுக்கு விற்ப்பதும் நடக்கத்தான் செய்கின்றது.

எல்லா பெண்களுக்கும் இந்த நிலைதான் என்று சொல்ல வரவில்லை...அதனால் வெளிநாட்டில் வேலை செய்யும் அனைத்து பெண்களையும் இந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் பத்தில் ஐந்து பெண்களுக்கு இந்த நிலைதான் என்பதை ஆய்வுகளும், பத்திரிகை செய்திகளும் நமக்கு காட்டுகின்றன.

எனக்கு தெரிந்த இரண்டு பெண்களின் நிலமை எனக்கு தெரிய நேர்ந்ததால்தான் இந்த பதிவை இடுகிறேன்.

வெளிநாட்டு வாழ் இந்திய மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணாய் போன பலரின் நிலமையே மோசமானதாக இருக்கும்போது.....வீட்டு வேலை செய்யப்போகும் பெண்களின் இன்னல் பற்றி சொல்லவும்வேண்டுமா?

வேலைக்காக செல்லும் பெண்களின் பாஸ்போர்ட்களை தங்களிடம் வாங்கி வைத்துக்கொண்டு ஓனர்களும், ஏஜண்ட்களும் இந்த பெண்களை எப்படியெல்லாம் துன்புறுத்த முடியுமோ அந்த அலளவுக்கு படுத்தி எடுக்கின்றனர்.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கத்தான் வேண்டுமா? அதுவும் வெளிநாடுகளுக்கு போவோர் தயவுசெய்து சரியான ஏஜண்ட்களிடம் சென்று அல்லது அரசாங்க்கத்தின் அனுமதிபெற்றவர்களிடம் சென்று தங்களை தங்கள் வாழ்வை சரியானபடி அமைத்துக்கொள்ளலாம். நாற்பதாயிரம் பணத்திற்க்காக வாழ்வை இழப்பதைவிட நம் நாட்டில் நாற்ப்பதாயிரம் தொழில்கள் இருப்பதை மறந்துவிடவேண்டாம்.

ஆனால் இந்திய அரசாங்கமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிற மாதிரி தெரியவில்லை. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலங்களில் அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை. இந்திய அரசுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் அதிகமான டாலர்களை பெறுவதோடு அரசின் கடமை நின்றுவிடுவது கொடுமையிலும் கொடுமை.

வெளிநாடுகள் பார்ப்பதற்க்கு சொற்கம்தான்...வாழ்ந்தால்தான் தெரியும் இந்தியாவின் மகிமை. வெறும் பணத்திற்க்காக பிணங்களாய் வாழத்தான் வேண்டுமா???

கடைசியாக....நம்மால் இன்னும் அவதிப்பட்டுகொண்டிருக்கும் அபலைகளுக்காக பிராத்தனையும், புதிதாய் வெளிநாடு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பாய் செல்லுங்கள் என்பதை மட்டுமே சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

ஷேர் செய்யுங்கள்.....அவர்களுக்காக!

No comments:

Post a Comment