Thursday, September 20, 2012

பர்ஃபி - ஹிந்தி திரைப்பட விமர்சனம்.பர்ஃபி - ஹிந்தி திரைப்பட விமர்சனம்.

மீண்டும் ஒரு ஹிந்திப்படம். "பர்ஃபி" மூன்று வித்தியாசமான இதயங்களின் அழகான கவிதை கோர்வைதான் இந்த பர்ஃபி.

எடுத்த எடுப்பில் ஒரு போலீஸ் சேஸிங்குடன் ஆரம்பிக்கின்றது படம். வாய் பேச முடியாத குறும்புதனமிகுந்த அழகான வாலிபன் தான் ரன்பீர். மலைப்பிரதேசமான டார்ஜிலிங்கில் ஜாலியாய் பொழுதை கழிக்கிறான். அங்கே வரும் இலியானாவை கண்டதும் நட்பு கொண்டு இருவரும் ஊர் சுற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் இலியானாவுக்கு ரன்பீருடன் காதல் வர,இலியானா இன்னொருவருக்கு நிச்சயமான பெண் என்பது தெரிந்ததும் ரன்பீர் விலகுகிறான். அதே வேளையில் ரன்பீரின் தந்தை டிரைவராய் வேளை பார்க்கும் இடத்தில் மனநலம் பாதித்த குழந்தைத்தனமான பெண்ணாய் பிரியங்கா சோப்ரா. பிரியங்காவின் தாத்தா எல்லா சொத்துகளையும் பிரியங்காவின் பேரில் எழுதிவிடுகிறார்.

ரன்பீரின் தந்தை திடீரென்று நோய்வாய் பட ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதால் பிரியங்காவை கடத்த நினைக்கிறார் ரன்பீர். அதற்க்குள் யாரோ பிரியங்காவை கடத்திவிட அவர்களிடமிருந்து பிரியங்காவை காப்பாற்றி வேறு இடத்திற்க்கு செல்கின்றனர். அங்கே வேலைசெய்யும் இடத்தில் திடீரென்று இலியானாவை சந்திக்கின்றான் ரன்பீர், இதை பிடிக்காத பிரியங்கா காணாமல் போய்விட போலீஸும், பிரியங்காவின் அப்பாவும் ரன்பீரை துரத்த, கணவனுடன் பிரிந்து இலியானாவும் ரன்பீருடன் வருகிறாள். கடைசியில் ரன்பீரும் இலியானாவுன் இணைந்தார்களா? இல்லை ரன்பீரும் பிரியங்காவும் மணந்தார்களா என்பதே மீதிக்கதை.

படம் முழுதும் கிட்டத்தட்ட 70 களின் பிளாஸ்பேக்காக சொல்லப்பட்டுள்ளது. நம்ம ஊர் படங்களைப்போல் பழைய காஸ்ட்டியூம், கிருதா அலங்காரங்கள் என அதிகம் மெனக்கெடாமல் சிம்பிளான உடைகளிலும், லொகேஷன்களிலும் படத்தில் அந்த காலத்தை கண் முன் கொண்டு வந்திருக்கின்றார்கள். படத்தோடு இணைந்த காமெடிக்காட்சிகள் நம்மை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டுசெல்கின்றன. சின்ன சின்ன வித்தியாசமான காட்சியமைப்புகளில் இயக்குனர் அனுராக் பாசு பின்னி பெடலெடுக்கிறார்.

ரன்பீர் :

இவர் நம்ம ஊர் இளைய ஹீரோக்கள் மாதிரி இல்லை. வித்தியாசமான படங்களில் நடிப்பதிலேயே ஆர்வம். இலியானாவை கவர்வதிலாகட்டும், போலீஸ்காரர்களுக்கு டிமிக்கி கொடுப்பதில் ஆகட்டும், பின்பாதியில் பிரியங்காவுடன் கஷ்டப்படுவதிகாட்டும் நம்மை கனக்க வைக்கிறார். நடிப்பில் இன்னொரு பரிமாணம். கட்டாயம் அவார்டுகள் குவியும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. இறுதிக்காட்சியிகளில் வரும் அந்த வயதான மேக்கப் ஒன்றே போதும். பிரில்லியண்ட்.

இலியானா :

முதல் பாதியில் ரன்பீரை கொள்ளைகொள்கிறார். ரன்பீருக்கு கொடுக்கும் அந்த உதட்டு முத்தம் ஏ ஒன். பின் பாதியில் பிரியங்காவுக்காக விட்டுகொடுத்து தியாகி ஆகிறாள். ஆனாலும் இறுதிக்காட்சிகளில் இவரின் நடிப்பில் நம் கண்கள் குளமாவது உறுதி.

பிரியங்கா :

சவாலான வேடங்கள் ஏற்ப்பதில் பிரியங்கா ஆல்வேய்ஸ் கிரேட். பல காட்சிகளில் ரன்பீரை தனது அசாத்திய நடிப்பால் ஓரம் கட்டுகிறார். குழந்தை தனமான அந்த நடிப்பில் பிரியங்காவின் முதிர்ச்சி தெரிகின்றது. சுண்டு விரலில் ரன்பீரை பிடிப்பதிலாகட்டும், இலியானா ரன்பீரை பார்த்து பொறாமை படுவதிலாகட்டும், சுசூ போக ரன்பீரின் உதவியை கேட்கும் இடங்களில் நம் கண்ணீரை பரிசாய் பெறுகிறார். இமேஜை பற்றி கவலைப்படாமல் நடிக்கும் இவர்களின் நடிப்பு கட்டாயம் இவர்களை உச்சத்தில் கொண்டு செல்லும் என்பதில் அய்யமில்லை.

அனுராக் பாஸு :

2004 ல் மர்டர் படத்தை கொடுத்தவரிடமிருந்து யாருமே எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சி.
வித்தியாசமான படங்களை கொடுத்து தன்னை வித்தியாசமாய் வெளிக்காட்டியவர். இந்த படத்தின் மூலம் இன்னொரு கவிதைத்தனமான படத்தையும் கொடுத்திருக்கின்றார். கிரியேட்டிவான பல விஷயங்களை காமெடி கலந்து கொண்டுபோய் கடைசியில் கண்ணீருடன் முடித்திருக்கின்றார். வாய் பேச முடியாதவர்களிடம் இந்த அளவுக்கு திறமைகள் இருக்கும் என்பது இந்த படத்தை பார்த்தபின்தான் புரிகின்றது. குளு குளு மலை பிரதேசங்களில் இவரின் கதா பாத்திரங்கள் இன்னும் நம்மை குளிர்விக்கின்றன. பர்பி பெயருக்கான காரணத்தையும் (மர்ஃபி ரேடியோ),  மற்ற எல்லா காட்சிகளிலும் வித்தியாசமான கலவைகளுடன் காமெடி கலந்து விருந்து வைத்திக்கிறார்.

போலீஸ் காரராக வரும் சுவரப் சுக்லா, பிரியங்காவின் தந்தையாகவும் கிட்டத்தட்ட வில்லனாகவும் வ்ரும் ஆஷிஷ் வித்யார்த்தி, ரன்பீரின் அப்பாவாக வருபவர், பிரியங்காவின் தாத்தா என அனைவருமே பர்ஃபியை செதுக்கி இருக்கின்றார்கள்.

இசை பிரிதம் சக்ரோபர்த்தி நம்மை 1972ம் ஆண்டுக்கு கொண்டுபோகிறார். பின்னணி இசையும் படத்திற்க்கு பலம். நம்ம ஊர் ரவி வர்மனின் சினிமாட்டோகிராஃபி கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.

கதை சொன்ன விஷயத்தில் கொஞ்சம் புதுமை.எல்லா படங்களிலும் காட்சிகளை வைத்துவிட்டு டிவிஸ்ட் வைப்பார்கள். ஆனால் இந்த படத்தில் டிவிஸ்ட்டுகளை காட்டிவிட்டு கதைகளை பின்னோக்கி காட்டுகிறார்கள். அதற்க்குண்டான எடிட்ங் அருமை.

மைனஸ் :

அவ்வளவாக இல்லை எனினும் இனிலியா அன்பான கணவரை மறந்து ரன்பீரிடம் வருவதற்க்கு சரியான காரணம் இல்லை. மனநலம் குன்றிய நிலையில் பிரியங்காவுக்கு ரன்பீரிடம் காதல் வருவது சாத்தியமானதாக தெரியவில்லை...காரணம் ஒன்றையும் புரியாத நிலையில் காதல் மட்டும் எப்படி அவளுக்கு புரியும். மனநிலை பாதித்தவரும், ஊமையும் வாழ்வில் இணைவதென்பது பிராக்டிகலாய் கடினம். ஆனால் இங்கே அதை ஈஸியாய் சொல்லி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் பஃப்ரி கல் மனதையும் குளிர்விக்கும் குல்ஃபி. இந்தியாவின் இந்த ஆண்டின் சிறந்த படம் என்பதில் வேறு கருத்து இல்லை.

No comments:

Post a Comment